பங்காளிங்க..

Tuesday, January 3, 2012

திறமையின் திசை இளமையின் விசை

''ருநாள் வேலை இல்லாம இருந்தாக்கூட பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.'' 
''ஒரு சண்டே கிடைச்சா நிம்மதியாத் தூங்கலாம்னு தோணுது. ஆனா, மத்தியானத்துக்கு மேல என்ன செய் யுறதுன்னே தெரியலை!''
வேலை இல்லாத நேரங்களில், வழக்கமான பணி களில் இருந்து ஒதுங்கியிருக்கும் நாட்களில் 'என்ன செய்வது என்றே தெரியவில்லை' என்பது பலருக்கும் இருக்கும் பிரச்னை. இன்னும் சிலருக்குத் தூங்கி எழுந்ததுமே படபடப்பாக இருக்கும். 'அடடா, இவ்வளவு நேரம் தூங்கிட்டேனே... இந்த நேரத்துக்கு அதைச் செய்திருக்கலாமே, இதைச் செய்திருக்கலாமே' என்று கவலை வரும்.
நண்பனோடு போனில் பேசும்போது, டி.வி.பார்க்கும் போது, சினிமாவுக்குப் போகும்போது, உறவினர்வீட்டுக் கல்யாணத்தில் உட்கார்ந்திருக்கும்போது, பஸ்சுக்காகக் காத்திருக்கும்போது... இப்படி நிறைய நேரங்களில் மன சுக்குள் ஓரமாக ஒரு கவலை வரும். 'நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கோமோ?'
இந்தப் பதற்றம் ஒரு வகையில் நியாயமானதுதான். அதற்குக் காரணமும் உண்டு. வழக்கமாகச் செய்யவேண்டிய வேலைகளுக்கு என்று ஒரு செயல் திட்டம் இருப்பதைப்போல, நமக்குப் பிடித்தமான விஷயங்களைத் தேர்வுசெய்து, அதனைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்க ஒரு திட்டம் இருப்பது இல்லை.படிப்பது, பள்ளிக்கூடம் போவது, கல்லூரிக்குப் போவது, வேலைக்குப் போவது, டியூஷன் போவது... இவை தவிர, தனக்குப் பிடித்தமான விஷயம் என்ற ஒன்றைப் பலரும் அடையாளம் கண்டுகொள்வது இல்லை.
உங்களுக்கே உங்களுக்கு என்று பிடித்த விஷயம் எது? கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள். வெகுசிலரைத் தவிர, பலரும் அதை இன்னும் கண்டறியவே இல்லை என்பதுதான் உண்மை. பிடித்த பொழுதுபோக்கு...ஞாபகத்தில் இருக்கலாம். வழக்கமான வேலைகளைத் தவிர, பிடித்த இன்னொரு விஷயம் எது? உதட்டைப் பிதுக்கி 'ம்ஹ§ம்... ஒண்ணும் தோணலை' என்பதேபலரது பதிலாக இருக்கும்.
மனித மனங்கள் பற்றிய ஆழமான ஆய்வு ஒன்று... 'தனக்குப் பிடித்தமான விஷயங்களைக் கண்டறிந்து அதனைச் செய்யாமல் இருப்பவர்கள், வழக்கமாகச்செய்யும் வேலைகளையும் கடனே என்று செய்கிறார்கள்' என்கிறது.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனத் திருப்தி, சுயசந்தோஷம் என்கிற அடிப்படையில் ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபாட்டோடு இருக்கப் பழகுவது இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில்மனசைலேசாக்கு வதற்கு அவசியம்.
அது தேடித் தேடி ஸ்டாம்ப் சேகரிப்பதாக இருக்க லாம்; பழைய நாணயங்களைப் பத்திரப்படுத்துவதாக இருக்கலாம்; ஓவியம், கவிதை, இசை, மலையேறுதல், கிராமங்களுக்குப் பயணித்தல், டென்னிஸ் விளையாடுதல்... இப்படி ஏதோ ஒன்று. ஆனால், அது உங்களுக் காக, உங்கள் சுய சந்தோஷத்துக்காகச் செய்கிற விஷயமாக இருக்க வேண்டும்.
உங்களை மறந்து, உங்களை உங்களுக்குள் தேடுகிற லயிப்பும் வாஞ்சையும் அதற்குள் இருக்க வேண்டும். இப்போது இன்னமும் அழகாக யோசியுங்கள். அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா உங்களிடம்?
கல்வியின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும், இன்றைக்கு யதார்த்தம் வேறாகத்தான் இருக்கிறது. பள்ளிக் கூடத்தில் படிப்பது, கல்லூரியில் சேர; கல்லூரியில் சேருவது, வேலையைப் பெற; வேலையில் இருப்பது, கல்யாணம் செய்ய; கல்யாணம் பண்ணுவது, குடும்பம் தழைக்க... இப்படி ஒவ்வொரு காரியமும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கிறது. இதில் உங்களுக்கே உங்களுக்கு என்று வாழ்ந்தது எப்போது?
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி, தனது ஊழியர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 'இன்றைய இளைய தலைமுறை வேலையே வாழ்க்கை என்று வாழ்கிறது. 'வாழ்தல்' என்பது வேலை பார்ப்பது மட்டுமல்ல' என்று அழகாகச் சொல்லியிருந்தார் அவர்.
சென்னையின் மிகப் பெரிய கட்டடங்களில் நள்ளிர வுக்குப் பிறகும், பணி நேரத்துக்குப் பிறகும் விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கின்றன. இளைஞர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளிலும் இவர்கள் பணி தொடர்கிறது. வீட்டில் இருப் பதற்குப் பதிலாக ஆபீசுக்குப் போனால் ஏதாவது செய்யலாமே என்று, எப்போதும் வேலைக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். காரணம், வேலையைத் தவிர செய்வதற்கு என்று வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. அலுவலகம், வேலை இதைச் சுற்றியே இவர்களின் வாழ்க்கை நடக்கிறது. 'இரண்டு நாள் லீவில் என்னதான் செய்வது? அதான் ஆபீசுக்கு வந்துடு றோம். விடுமுறை நாளில் இன்னமும் ரிலாக்ஸ்டாக வேலை பார்க்கலாம், தெரியுமா!' என்று விளக்கமும் தருவார்கள்.
நாராயணமூர்த்தி தொடர்கிறார்... 'உங்கள் வேலை நேரத்துக்குள் உங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு ஏனைய நேரத்தை உங்களுக்காகச் செலவிடுங்கள். இசை கற்றுக்கொள்ளுங்கள். புதிதாக எதையாவது பரீட்சித்துப்பாருங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயம் எது என்று கண்டறிந்து அதில் லயித்திருங்கள். அலுவலகத்தையே சுற்றிக்கொண்டு இருக்காதீர்கள்!'
உண்மைதான். இன்றைக்கும் ரிட்டையர்டு ஆகி, வீட் டுக்கு வரும் பெரியவர்களுக்கு அடுத்து என்னசெய்வது என்றே தெரியாமல் போனதற்கு இதுதான் காரணம். 'பிடித்த புத்தகங்களை எல்லாம் படிக்கப் போகிறேன். பேரன், பேத்திகளுடன் சேர்ந்து விளையாடப்போகிறேன். அதிகாலையில் எழுந்து ராகவேந்திரா கோயிலில்பாடப் போகிறேன். மனைவியைக் கூட்டிக்கொண்டு, கோயில் குளமெல்லாம் சுத்தப்போகிறேன். கிராமத்துக்குப் போய் அமைதியாகத் தியானம், யோகா என்று வாழப்போகிறேன்' என ஆயிரம் விஷயங்களை ரிட்டையர்டு ஆகப்போகும் காலத்தில் பலர் சொல்வது உண்டு. ஆனால், இதில் ஒன்றைக்கூடப் பெரும்பாலும் செய்ய முடிவது இல்லை. காரணம், இது எதையுமே இதற்கு முன் அவர்கள் செய்தது இல்லை.
போன தலைமுறைக்காவது ரிட்டையர்ட்மென்ட்டுக்குப் பிறகுதான் இந்தப் பிரச்னை. இன்றைய தலைமுறைக்கோ ஒரு விடுமுறை நாளைக்கூட வேலை இல்லாமல் கழிப்பதற்கான விருப்பத் திட்டம் எதுவும் இல்லை.
நம்மில் பெரும்பாலானோருக்கு வேலை அல்லாமல் செய்யத் தெரிந்த விஷயங்கள்மூன்று தான். ஒன்று, டி.வி. பார்ப்பது; இரண்டாவது, புத்தகம் படிப்பது; மூன்றாவது, நண்பர்களிடம் பேசுவது. இதைத் தாண்டி தனித்துவமாக பிடித்த விஷயம் என்று ஒன்றில்லை.
இப்படி, பிடித்த விஷயம் என்று ஒன்று இல்லாமல் போனதால்தான், நம் குடும்பங்களுக்குள்ளே பேச்சுக்கள் குறைந்துபோயின. சின்ன வயதில் அம்மா, அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்வோம். அதற்குப் பிறகு, தேர்வுசெய்து சொல்ல ஆரம்பித்தோம். வயது அதிகரிக்க அதிகரிக்க, 'அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசுவதற்கு என்று சிறப்பாக ஒன்றும் இல்லை' என்று தோன்ற ஆரம்பிக்கிறது. அதே வேலை, அதே சூழல், டைம் டேபிள் போட்டுவைத்த மாதிரியான வாழ்க்கை. அப்புறம் எதைப் பேசுவது? எதைப் பகிர்ந்துகொள் வது? பேச்சு குறைய ஆரம்பித்தால், நெருக்கமும் குறைய ஆரம்பிக்கிறது. ஒரு நிலையில் அம்மா, அப்பா அந்நியமாகிவிடுகிறார்கள்.
உங்களுக்கே உங்களுக்கு என்று பிடித்த ஒரு விஷயம் இருக்கிறபோது அதை நண்பர்களிடம் மட்டும் அல்ல; குடும்பத்திடமும் பகிர்ந்துகொள்வீர்கள். 'அப்படியா... புதுசா இருக்கே!' என்று நினைக்கலாம். ஒரு சின்ன வாழ்வியல் உதா ரணம் - புதிதாகக் குழந்தை பெற்றுள்ள பெண்களைக் கவனித்து இருப்போம். யாரைப் பார்த்தாலும், யாரிடம் பேசினாலும் தன் குழந்தையைப்பற்றியேபேசு வார்கள். அதன் சிரிப்பு, குறும்பு, விளையாட்டு, கண், காது, மூக்கு இப்படி முழுக்க முழுக்கஅந்தக் குழந்தைதான் அவர்களுக்கு எல்லாமும். அந்த அம்மாவுக்கு குழந்தையிடம் இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
உங்களுக்குப் பிடித்தமான விஷயத்தின்மீது அப்படி ஓர் ஈர்ப்பு இருக்க வேண்டும். பணம், புகழ் இது எல்லாவற்றையும் தாண்டி மனநிறைவைத் தருகிற விஷயமாக அது அமைய வேண் டும்.
இனியும், வேலை இல்லாத நேரங்களில் அலுவலகத்தையே சுற்றிக் கொண்டு இருக்காதீர்கள். கல்லூரி கேட்டில் நின்றுகொண்டு யோசிக்காதீர்கள். அம்மா, அப்பாவை வெளியில் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். அடுக்களையில் அம்மாவுக்கு உதவியாக ஒருநாள் முழுவதும் செலவிடுங்கள். பப்பியை வாக்கிங் கூட்டிக்கொண்டு செல்லுங்கள்.
பழைய பள்ளிக்கூடத்துக்குப் போய் ஆசிரியர்களைச் சந்தியுங்கள். உங்கள் ஏரியா சிறுவர்களோடு கிரிக்கெட் விளையாடுங்கள். கேமரா வைத்திருந்தால், தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு பக்கத்து கிராமத்தில் படபடக்கும் பட்டாம்பூச்சியைப் படம் எடுங்கள். எதிர்வீட்டு அங்கிளுக்கு பேப்பர் வாசித்துக் காட்டுங்கள். ஊரில் இருந்து வந்திருக்கும் அத்தைக்கு கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுங்கள். எங்கேயாவது கித்தார் கற்றுக்கொடுக்கிறார்களா எனப்பார்த்து, 'இளைய நிலா பொழிகிறது' கற்றுக்கொள்ளுங் கள்.
வேலையைச் சுற்றியே திரியாதீர்கள். வேறு ஏதேனும் ஒன்றாவதுஉங்களுக்குப் பிடித்ததைத் தொடர்ந்து செய்யுங்கள். அது உங்கள் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்ய உதவும். மனசை லேசாக்கும். உறவுகளுக்குள் கலந்துரையாடலை அதிகரிக்கும். மனசை இன்னமும் இயல்பாக்கும்.
அதெல்லாம் சரி... வழக்கமாகச் செய்கிற வேலையைத் தவிர, உங்களுக்குப் பிடித்த விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டீர் களா?
முதலில் அந்த வேலையைத் தொடங்குங்கள்!

5 comments:

  1. உங்களுக்குப் பிடித்தமான விஷயத்தின்மீது அப்படி ஓர் ஈர்ப்பு இருக்க வேண்டும். பணம், புகழ் இது எல்லாவற்றையும் தாண்டி மனநிறைவைத் தருகிற விஷயமாக அது அமைய வேண் டும்.

    மிக மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி .

    ReplyDelete
  2. ஆழமான வார்த்தைகள் கொண்ட பதிவு. ஆனாலும் நமக்கு பிடித்தது வேலை என்று இருக்கும் போது அதைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்க முடியுமா என்ன? தாமஸ் கார்லைல் சொன்ன வாசகம் ஒன்றுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது... ‘தன் கடமையைக் கண்டறிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்...’.... நம்மை இழந்து செய்கிற வேலையை நாம் கண்டுபிடித்துவிட்டாலே போதும்... வாழ்க்கை எப்போதும் சந்தோஷம்தான்...

    ReplyDelete
  3. /// sasikala said...

    உங்களுக்குப் பிடித்தமான விஷயத்தின்மீது அப்படி ஓர் ஈர்ப்பு இருக்க வேண்டும். பணம், புகழ் இது எல்லாவற்றையும் தாண்டி மனநிறைவைத் தருகிற விஷயமாக அது அமைய வேண் டும்.

    மிக மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி . ///

    நன்றி சகோ,

    உண்மைகள் பல தடவை, பல மனிதர்களுக்கு பலவாறு கசக்கும், உங்களுக்கு அது மருந்தை இனித்திருக்கின்றது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. /// HOTLINKSIN.COM said...

    ஆழமான வார்த்தைகள் கொண்ட பதிவு. ஆனாலும் நமக்கு பிடித்தது வேலை என்று இருக்கும் போது அதைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்க முடியுமா என்ன? தாமஸ் கார்லைல் சொன்ன வாசகம் ஒன்றுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது... ‘தன் கடமையைக் கண்டறிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்...’.... நம்மை இழந்து செய்கிற வேலையை நாம் கண்டுபிடித்துவிட்டாலே போதும்... வாழ்க்கை எப்போதும் சந்தோஷம்தான்... ///

    பகிர்விற்கு மிக்க நன்றி. உங்களது கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  5. /// Hotlinksin.com said...

    வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள். ///

    உங்கள் வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி. நான் ஏற்கனவே எனது பதிவுகளை ஹாட்லிங்க்சில் இணைக்க தொடங்கிவிட்டேன். ஆலோசனைக்கும், ஆதரவிற்கும் மீண்டும் நன்றி.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...