பங்காளிங்க..

Wednesday, November 28, 2012

மருத்துவர்களின் (அ )லட்சியமா ?

ஆயிரம் பேரைக் கொன்னாத்தான் அரை வைத்தியன் என்ற பழமொழியை ஒரு சிலர் எப்படி  நினைத்துக் கொண்டார்களோ என்னவோ? அது உண்மையில் அந்த காலத்தில் இருந்த மூலிகை மருத்துவத்தின் பெருமையை சொல்வதற்காக சொல்லப் பட்டதுதான் இந்த பழமொழி. அதாவது ஆயிரம் வேர்களை கொன்றாலும் அவர் அரை வைத்தியர் என்ற பெருமைக்காக சொல்லப் படுகின்றது. ஆனால் அதுவே இன்று திரிந்து வேர்களை என்பது பேர்களை என்று மாறிப் போனது.

இப்போது எங்கு பார்த்தாலும் 24 மணி நேர அவசர மருத்துவமனைகள் வந்து விட்டது. கடவுளுக்கு அடுத்தபடியாக நினைக்கப்படும் அந்த பெருமை மருத்துவர்களையே சாரும். எத்தனையோ பிரிவுகள், எத்தனையோ திறமைசாலிகள் இங்கே நம்மோடு பணி  செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் தற்போதெல்லாம் அவர்களுக்குள் போட்டிகள் வந்து விட்டது. நோயாளிகளை கவருவதற்காக அவர்கள் பல யுத்திகளை கையாளுகின்றார்கள். அழகான வேலைப்பாடு கொண்ட மருத்துவமனைகள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டிகள் , பஞ்சு மெத்தைப் போன்ற இருக்கைகள் என்று வைத்து நோயாளிகளை தங்கள் பக்கம் இழுக்கின்றார்கள். ஆனால் எது எப்படியாக இருந்தாலும் மருத்துவர் வரவில்லை என்றால் இத்தனை வேலைப்பாடுகள் செய்து என்ன பிரயோசனம்?

சென்னையில் பாதி மருத்துவமனைகளில் இப்படித்தான் நடக்கின்றது! அய்யோ வயிறு வலிக்கின்றது?அய்யோ நெஞ்சு எரிகின்றது என்று சொல்லிக் கொண்டு வரும் நோயாளிகள் மருத்துவரின் வருகைக்காக பல மணி நேரம் ஒதுக்கி அமர வேண்டி இருக்கின்றது. அந்த காத்திருக்கும் நேரத்தில் பல நோயாளிகளுக்கு அவர்களது எண்ண  ஓட்டங்கள் மேலும் வேதனையை தரும்..பலருக்கு ரத்த கொதிப்பு அதிகரித்து விடும்..சிலருக்கு காய்ச்சல் அதிகமாகி விடும்..மாலை 6 முதல் என்று போடப்பட்டிருக்கும், ஆனால் மருத்துவர் 8 மணிக்குத்தான் வருவார். இது எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம் அந்த நேரத்தில்தான் மருத்துவப் பிரதிநிதிகளும் மருத்துவரை காண்பதற்கு நேரம் ஒதுக்கி இருப்பார்கள். நிச்சயம் இது பல நோயாளிகளை முகம் சுழிக்க வைக்கும்.

வீட்டினில் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லை என்று வந்து இருப்பார்கள்? குழந்தையின் அப்பா வேலைகளை விட்டு விட்டு அல்லது அனுமதி வாங்கி கொண்டு வருவார்..இப்படி காத்துக் கொண்டிருக்கும் நேரம் அவர்களுக்கு அன்றைய நாள் வருமானமும் பறி  போகும் நிலை இருக்கின்றது. ஏன் மருத்துவர் 5 மணிக்கே வரக் கூடாதா? நோயாளிகள் காத்திராமல் உடனுக்குடன் பார்த்து சென்றால் இருவருக்குமே பலனுண்டு இல்லையா?

இதைப் பற்றி சமீபத்தில் ஒரு சில மருத்துவர்களிடம் ஆய்வு செய்த  போது, சில அதிர்ச்சி தகவல்கள்...

எங்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றது, குடும்பம் இருக்கின்றது? அவர்களோடு நான் சில மணி நேரம் இருக்க வேண்டாமா? என்று கேட்டார்? நியாயம்தான்...ஆனால் இந்த துறைக்கு வரும்போது உங்களை நம்பி பல குடும்பங்கள் வாசலில் காத்துக் கொண்டு இருக்கின்றதே?

இன்னொருவர் இதை பற்றி சொல்லும் போது, ஒரு நல்ல மருத்துவரை பார்க்க வரும்போது பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்...அதற்க்கு எதுவும் செய்ய முடியாது என்று சொன்னார்.

மற்றொருவர் இதைப் பற்றி சொல்லும் போது  இதெல்லாம் வியாபார யுத்தி...என் மருத்துவமனை வாசலில் இத்தனை பேர் நிற்கும் போது  வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அடேங்கப்பா இந்த மருத்துவர் ரொம்ப கைராசிக்காரர், அதுதான் இவ்வளவு கூட்டம் என்று பேசப் படுவேன் என்று சொன்னார்.

மற்றொரு மருத்துவர் குறிப்பிடும்போது நான் அரசு மருத்துவர்...அரசாங்க மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சையை முடித்து விட்டு வருகின்ற நேரத்தில் தாமதமாகின்றது...எல்லா நேரத்திலும் இப்படி  நடப்பதில்லை..எப்போதாவது இப்படி நடக்கும், அதற்க்கு நான் என்ன செய்ய முடியும் என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

இது எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று..டோக்கன் சிஸ்டம்...ஒரு துண்டு சீட்டினில் எண்  எழுதிக் கொடுப்பார்கள். அந்த எண்ணை அழைக்கும் நபர் உள்ளே செல்ல வேண்டும். சற்று வசதியானவர்கள் அந்த டோக்கன் நபரை சற்றுக் கவனித்து முதல் ஆளாக மருத்துவரை சந்தித்து விட்டு செல்வார்கள். இதற்கு முழுக்க முழுக்க காரணம் அந்த வாசலில் நிற்கும் வழிகாட்டிதான். ஆனால் அந்த மருத்துவரின் பெயர்தான் கேட்டுப் போகுமே ஒழிய, அந்த உதவியாளரின் பெயர் அல்ல.

ஆகையால் அந்த குறிப்பிட்ட ஒரு சில மருத்துவர்கள் தயவு செய்து உங்களை நம்பி வரும் நோயாளிகளை காப்பாற்றுங்கள்..பணம் சம்பாதிப்பது முக்கியம்தான்...அதைவிட ஆயிரம் இதயங்களை சம்பாதியுங்கள்...ஒவ்வொரு நோயாளியும் குணமடைந்து உங்களை வாழ்த்தும்போது ஆயிரமாயிரம் ஆண்டு காலம் உங்கள் சேவை நிலைத்து நிற்கும் என்பதில் துளியும் சந்தேகமுமில்லையே..

Monday, November 26, 2012

ஆல்கஹாலின் (சரக்கின்) உண்மை பயன்கள்!!!!

"ஆல்கஹால்" குடிச்சான் மட்டையாயிட்டன்னு சொல்றத கேள்விப் பட்டிருப்பீங்க..ஆனால் அந்த சரக்கு யோகாவின் பயிற்சிகளை கத்துக் கொடுக்கின்றது என்பது பலரும் அறியாத ஒன்று. சமீபத்தில் இ.கு.
சங்கம் கண்டுபிடித்த தகவலின் படி, பலவிதமான யோகப் பயிற்சிகளுக்கு மூல காரணமாக அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

சரக்கு தொடர்ந்து குடிப்பவர்களுக்கு யோக கலை எளிதில் கை கொடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை என்பதையே இப்படங்கள் காட்டுகின்றது.  

அதுபோல  தென் தமிழ்நாட்டினில் இருந்து சென்னை வரும் இளைஞர்கள் ஆங்கிலம் கற்பதற்கு, பேசுவதற்கு மிகவும் சிரமப் படுகின்றார்கள். ஆனால் ஆல்கஹாலின் உந்துதலால் இங்கிலாந்தில் உச்சரிக்கும் ஓசையோடு எளிமையாக அவர்களாலும் ஆங்கிலம் பேச முடிகின்றது. அதுவும் அரை மணி நேரத்திற்குள்ளாகவே. முப்பது நாட்களில் ஆங்கிலம் பேச வேண்டுமா? என்ற புத்தகத்தை மூட்டை கட்டி வையுங்கள். முப்பது நிமிடத்தில் ஆங்கிலம் பேசுங்கள்...
வாழ்த்துக்கள்..
குறிப்பு:  மேற்கூறிய அனைத்துமே தவறான வழிகாட்டுதலாகும். அதனால் இந்த மாதிரியான விளம்பரங்களை பார்த்து ஏமாந்து போகாதீர்கள். சரக்கு உங்கள் கவுரவத்தை, உங்கள் உடலை கெடுத்து உங்கள் வாழ்க்கையை நாசமாக்கும் என்பதை மறவாதீர்கள். நன்றி..

Friday, November 23, 2012

சாலையில் ஹீல்ஸ் போட்டு சுற்றும் பெண்களுக்கு எச்சரிக்கை???

ஹீல்சு போட்டு நடக்குறது இப்போ எல்லாம் ரொம்ப பேமஸ் ஆகிடுச்சு..அந்த காலத்துல வெறுங்கால்ல வெகுதூரம் நடந்து போனாங்க..ஆனா இப்போ ஆ, ஊ னா  ஹீல்ஸ் போட்டு நடக்கத்தான் ஆசைப் படுறாங்க...கலாச்சாரம், கஸ்மாலம் எல்லாம் நம்ம பெருசுங்க சொன்னது இதுக்குத்தான்!! பொம்பளைங்க உயரமான செருப்பு போடக் கூடாது. டொக் , டொக் னு குதிரை மாதிரி நடக்க கூடாது...அப்படி இப்படீன்னு சொன்னது எல்லாம் அவங்களோட உடல் நலத்தை மனசில வச்சிக்கிட்டு தான் சொல்லி இருக்காங்க.

உடனே இப்போ உள்ள ஒரு சில பொண்ணுங்க நாங்களும் ஆணுக்கு ஆண் சரிசமம்..எங்களுக்கும் கால் இருக்கு, நாங்களும் நடப்போம், ஒடுவோம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க..உண்மைதான் உங்களுக்கும் கால் இருக்கு...ஆனா ஆண்டவன் உங்களை மென்மையா படைச்சு  தொலைச்சிட்டானே!!! என்ன பண்றது???


40 வயசுக்கு அப்புறம் உங்க முட்டு எலும்பு எல்லாம் தேஞ்சு போயிடுமே...அதுல வேற இந்த ஹீல்ச போட்டுக்கிட்டு நடந்தீங்கன்னா 30 வயசுலேயே முட்டு எலும்பு தேஞ்சு உடைஞ்சே போகுமே..உங்களுக்கு மட்டும் ஏன் முட்டு வலி சீக்கிரம் வருது? 20 லே இருந்து 30 குள்ள நீங்க குழந்தைங்களை பெத்துக்கிறீங்க.அப்போ உங்களோட மொத்த எடையும் கால்களுக்கும், இடுப்புக்கும் மட்டுமே செல்கின்றது.


நீங்க ஏற்கனவே இந்த ஹீல்ச போட்டு நடக்குறதால கால் பாதம் சீக்கிரம் பலம் இழந்து போயிடுது...அதுக்கப்புறம் உங்களை உங்களாலேயே அதிக தூரம் தூக்கிட்டு போக முடியாம போகுது...


உடனே ஆண்கள் எல்லோரும் பெண்களை கேலி பண்ண கிளம்பிராதீங்க...இதுல பாதி பங்கு ஆண்களுக்கும் இருக்கு...காதலி அல்லது மனைவி கேட்டா வாங்கி கொடுக்கிறீங்க...அப்போ தட்ட முடியாது.ஆனா தன்னோட பெருமைக்காக நிறைய தகப்பனுங்க தன்னோட குழந்தைகளுக்கு வாங்கி போட்டு பார்த்து அழகுப் பாக்குறீங்களே  அதுதான் தப்புன்னு சொல்றோம். சின்ன குழைந்தைங்க ஆசைப் படத்தான் செய்வாங்க..ஆனா நாமதான் எடுத்துச் சொல்லணும்...

படத்தை பாருங்க.......விஷயம் புரியும்!!!  உடனே பெண்கள் பாதுகாப்பு சங்கத்துக்கு போயிராதீங்க!!! அய்யோ சத்தியமா மிரட்டலீங்க, உடல் நலத்தை பார்த்துக்கோங்க னு  சொல்ல வந்தேன்...

Thursday, November 22, 2012

"காதல்" கூத்துக்கள்! படங்களோடு!!!

உலகினில் காதல் என்ற போர்வையில் செய்யப்படும் கூத்துக்களை படங்களோடு வழங்குகின்றேன்... பார்த்து சொல்லுங்கள்..காதலின் வலிமையை பற்றி!!! இதுதான் காதலா? 
தொடர்ந்து பாருங்கள்... நாங்களும் பீச்சுல விளையாடுவோம்ல!!!நாங்களும் "லவ்"வுவோமே..னு  சொல்ற மாதிரி இல்லை...நீங்க என்ன சொல்றீங்க??
இதுக்கும் பேரு காதல்தானே?????

Saturday, November 17, 2012

கூகிள் என்பது ஆணா? பெண்ணா?

நம்ம வாழ்க்கையிலே ஒரு அங்கமா மாறிக்கிட்டு வர்ற கூகிளைப் பத்தி சில விஷயம் நாம தெரிஞ்சிக்கிறது ரொம்ப அவசியம்னு நான் நினைக்கிறேன்..நீங்க என்ன நினைக்கிறீங்க?

பிள்ளை பிறந்தா பேரு வைக்குரதுலே இருந்து கடைசியா ஈடுகாடு போற சடங்கு வரைக்கும் நாம கூகிள் குழுவை நம்பி இருக்கோம்..ஆனா அவங்க என்ன செய்யுறாங்க னு தெரியுமா? .
 கூகிள் என்பதே ஒட்டுமொத்த இணையதளம் என்று கிடையாது, ஆனால் நமது வாழ்க்கையில் இன்று கூகிள் தேடுதல், ஜிமெயில், யூ-டியூப், கூகிள் வரைபடங்கள் மற்றும் கூகிள் தயாரிப்புகளோடு ஐக்கியமாகி விட்டோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதன் படி அதைப் பற்றி விசாரிக்கையில் அவர்கள் உலகம் முழுவதும் பாதுகாப்பாக எட்டு இடங்களில் தகவல் பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்து நமது தகவல்கள் அனைத்தையும் சேகரித்து வருகின்றார்கள். இதில் உலகத்தினில் இருக்கும் அனைத்து மொழிகளும் இதனுள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது இடங்களைப் பார்வையிட அவர்கள் பிரத்யேக மிதிவண்டி ஒன்றை அளிக்கின்றார்கள். அதில் சென்று அங்கே அமைக்கப் பட்டிருக்கும் செர்வர் மற்றும் கேபிள் மற்றும் பைப் லைன்களை பார்த்து வரலாம்.


இது தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம், இந்த இடத்தின் உள்ளே கேமிராக்கள் அனுமதி இல்லை, நார்த் கரோலினாவில் இருக்கின்ற இந்த
படத்துல இருக்கிறது எந்திரன்  படத்துல வர்ற ரோபோ கிடையாது. இவர் கூகிள் தகவல் பெட்டகத்தை பாதுகாக்கும் காவலர். ஒருவேளை திடீருன்னு ஏதாவது ஆச்சுனா என்ன பண்றது...ஒட்டுமொத்த உலகமும் இதை நம்பித்தானே இருக்கு, அதுனால ஒவ்வொரு வினாடிக்கும் பாதுகாப்பா இன்னொரு பேக்கப் எடுத்து வச்சிக்கிட்டே இருக்கும். அதுக்குத்தான் இந்த தனி செர்வர். இதுதான் அப்லோடிங், டவுன்லோடிங் எல்லாத்துக்கும் இதுதான் மெயின் செர்வராம்.


ஏதோ பால் பண்ணையிலே எடுத்திட்டு நம்மளை ஏமாத்துறான் னு  நினைக்காதீங்க..இது லோவா என்ற பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்று. அந்த சிலிண்டர் எல்லாமே..சர்வர் இருக்கும் அறைகளை வெப்பம் தாக்காமல் குளிர்விப்பதற்காக கொடுக்கப்படும் கேஸ் மட்டுமே..சுற்றி குளுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மரம், பூங்காக்களை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.


இந்த கலர் பைப்பு எதுக்கு தெரியுமா? புளூ கலர் பைப்புல குளிர்ந்த தண்ணீர் ஓடிக் கிட்டு இருக்கும். அந்த சிவப்பு கலர்ல உள்ளே இருந்து வர்ற வேப்பத்துல வெந்நீரா வரும்.. திருப்பியும் அதே வெந்நீர் குளிர்ந்த நீர மாறி மஞ்சள் பைப்புல ஓடிக்கிட்டே இருக்குமாம். ஒரு சுழற்சி முறையிலே சுத்திகிட்டே இருக்குமாம்.


இது தீயில் வந்த புகை மூட்டம் கிடையாது. இது டல்லஸ் தகவல் பாதுகாப்பு பெட்டகத்தில் எடுக்கப்பட்ட ஒன்று. இது உள்ளே இருக்கும் வெப்பத்தை குளிர்வித்து வெளியே வரும் புகை மூட்டம். பார்த்தால் ஏதோ தீ கொழுந்து விட்டு எரிவது  போன்ற தோற்றத்தில் இருக்கும்.


இந்த புளூ கலர் லெட் எல்லாம் எரிஞ்சுதுனா எல்லாம் பெர்பெக்டா ஓடுதுன்னு அர்த்தமாம். இல்லேனா எங்கியோ பிரச்சினைன்னு பார்ப்பாங்களாம். லெட்  எதுக்கு யூஸ் பண்றீங்க? நல்லா பவர்புல் லைட்டா போட  வேண்டியதுதானே னு  கேட்டதுக்கு அதுதான் நல்ல எரியும்..கரண்ட்டு ரொம்ப ஆகாது, எதுக்கு பணத்தை வேஸ்ட்டு பண்ணனும்னு கேட்குறாங்க..


இது பின்லேண்டுல தகவல் பாதுகாப்பு பெட்டகத்துல எடுக்கப்பட்ட ஒண்ணுங்க..லாங் ஷாட்டுல எடுத்திருக்காங்க..குளிர் காலத்துல எடுத்தது. எப்படி பனி படந்திருக்கு பாருங்க..(புது வெள்ளை மழை, இங்கு பொழிகின்றது..அப்படீன்னு டூயட் பாடப் போறீங்களா?)


ஹாமினா, பின்லேண்டுல இந்த மிகப் பெரிய செர்வர் அமைச்சு வச்சிருக்காங்களாம். இதுக்காக ஒரு பழைய பேப்பர் மில்லை விலைக்கு வாங்கி புதுப்பிச்சு வச்சிருக்காங்களாம். எவ்வளவு மழை, வெள்ளம், புயல்னு வந்தாலும் தாங்குற மாதிரி இதை வச்சிருக்காங்களாம்.ஒவ்வொரு தகவல் பெட்டகத்திலும் இம்மாதிரியான மகிழ்வு மன்றங்கள் இருக்கும்...ஊழியர்கள் தனது நேரத்தை இங்கே செலவழித்து கொள்வார்கள். இது ஹாமினா என்ற பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இந்த அண்ணாச்சி பேரு, மைக் பர்ஹாம், இவர் என்ன செய்யுறாருணா , மதர் போர்டை பார்ட் பார்ட்டா கழட்டிக்கிட்டு இருக்காரு. முடிஞ்சவரைக்கும் ரிப்பேர் செய்வாங்களாம்...இல்லேனா இப்படி பார்ட் பார்த்தா கழட்டி அதை சுக்கு நூறா உடைச்சு நட்டு, போல்ட்டு, பிளாஸ்டிக் னு  தனி தனியா பிரிச்சு வச்சிருவாங்களாம். அவர் பனியன்ல கூட கூர்ந்து பாருங்க கூகிள் னு போட்டிருக்கு பாருங்க...
இந்த இடத்துல இருக்கிற ரவுட்டர் மற்றும் சுவிட்சாஸ் மூலமா எல்லா மக்களும் எல்லோர் கூடயும் பேச முடியுமாம். இதோட ஸ்பீடு எவ்வளவு தெரியுமா? சாதாரண வீடுகள்ல இருக்கிற கனெக்சன் ஸ்பீடை விட 2000,000 மடங்கு வேகமா இருக்குமாம். பின்னே இருக்காதா? ஆண்டிப்பட்டியிலே இருந்து அமெரிக்காவுக்கு பேசனுமினா இவ்வளவு ஸ்பீடு கொடுத்தாதானே முடியும்..

சரி வாங்க, இப்போ நம்ம ஊருக்கு போவோம்!!! 


கூகிள் என்பது ஆணா? அல்லது பெண்ணா? னு  தலைப்பு போட்டிருக்கேனே!

என்னைப் பொருத்தவரைக்கும் கூகிள் என்பது பொண்ணுதான், எப்படீன்னு யோசிக்கிறீங்களா?

கூகிள் செர்ச் ல போயி ஒரு வாக்கியத்தை அடிக்க ஆரம்பிங்க...உங்களை உங்க இஷ்டத்துக்கு அடிக்க விடாது...அது அதோட இஷ்டத்துக்கு பத்து யோசனை சொல்லும்...நாம 'வேலை' வேணும்னு கேட்டா அது 'வேளாண்மைய' பத்தி சொல்லும்..நம்ம இஷ்டத்துக்கு விடவே விடாது..அப்ப  அது பொண்ணுதானே..

நல்லவேளை என் வீட்டுல இதைப் பாக்கலை!!!!!

Friday, November 16, 2012

பசங்க, பொண்ணுங்க! உடம்பை பத்தி தெரிஞ்சிக்கோங்க!!

நிச்சயம் இது ஆபாசம் கிடையாது. நம்ம உடம்பை பத்தி நாம தெரிஞ்சுக்கிரதுல தப்பே கிடையாது. இதுல கூச்சப்பட எதுவுமே கிடையாது. எல்லோரும் இதை தெரிந்திருந்தால் நல்லது என்று நினைக்கின்றேன். 

இப்போ தெரிஞ்சிக்காம எப்போதான் அவங்க தெரிஞ்சிக்கிறது...உங்க பள்ளிக்கூடம் போற பிள்ளைங்களுக்கு இதைச் சொல்லிகொடுங்க..
எல்லாரும் சொல்றாங்க, நானும் சொல்றேன்..எல்லாரும் பேசுறாங்க, நானும் பேசுறேன் என்று இருப்பதை விட ஏன், எப்படி என்று சேர்த்து தெரிந்தால் உத்தமம்.
 
 


அதற்குத்தான் இந்த குறிப்புகள்..

மேலே, கீழே!


நீங்கள் தலைகீழாக அதாவது தரையில் தலை இருப்பது போல் இருந்து உணவு உட்கொண்டாலும் அது வயிற்றுக்குள் சென்று சரியாக சேரும் என்கின்றது ஆய்வு.  

கனவு காணவேண்டுமா?

நம்மில் 85 சதவிகிதம் பேர் மட்டுமே கலரில் கனவு காண்கின்றோம்..மற்றவர்கள் எல்லோரும் பிளாக் அன்ட் வொயிட் டுதானாம். நம்ப முடியவில்லையே..!!!

ரொம்ப ஸ்ட்ராங் பாடியா?

நம்ம உடம்புலேயே மிகவும் பலம் வாய்ந்த பகுதி எது தெரியுமா? எனாமல் என்று சொல்லப் படும் நமது பற்கள்தான்....

குழந்தை!

பொதுவாக குழந்தைகள் வசந்த காலத்தில்தான் உடளவில் வளர்ச்சி எற்படுகின்றதாம். எவ்வளவுதான் 'பிளான்' குடிச்சாலும் அவன் அல்லது வசந்த காலத்தில்தான் வளர்ச்சி இருக்குமாம்..


சாவு!!


ஒருவன் இயற்கையாய் சாகும்போது முதலில் சாவது அவன(ள )து கண்கள், கடைசியில் போவதுதான் அவன(ள )து கேட்கும் சக்தியாம்.


1900 வருடங்களில் யு எஸ் சில் ஒருவரது ஆயுட்காலம் அதிகப்படியாக 47 ஆக இருந்ததாக வரலாறு சொல்கின்றது.


இறப்பிற்கு அடுத்த நொடி தலைமுடி மற்றும் நகங்களின் வளர்ச்சி நின்று போய்  விடுமாம்.


செத்த பிறகு உடல் அறுவை நடக்கும் இடத்தினில் முதலில் தலையில் இருந்து கால் வரை அறுவை செய்வார்கள், பின்னர் காலில் தொடங்கி தலையில் முடித்து விடுவார்கள்.


துப்பாக்கி மற்றும் ஆயுதங்களில் சாகும் மனிதர்களை விட ஐந்து மடங்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்தவர்கள் அதிகம் என்கின்றது ஆய்வு.


உங்களை காற்று நுழையாத இடத்தினில் அடைத்து வைத்தால் நீங்கள் கார்பன்டை ஆக்சைட் விசத் தன்மையால்  இறப்பீர்கள்..ஆனால் அதற்க்கு முன்னரே ஆக்சிஜன் பற்றாக்குறையால் செயலிழந்து போவீர்கள்.டிரக்ஸ்


ஆஸ்பிரின் என்ற மருந்து மட்டுமே முதலில் மாத்திரை வடிவினில் உருவானதாக தகவல்கள் சொல்கின்றது.கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்..


கண்ணுக்குள்ளே இருக்கிற கறுப்பு  பந்துதான் ஆச்சரியம், அதிர்ச்சி, எரிச்சல் எதுவானாலும் சுருங்கி விரிகின்றது...


நாம் கண்ணால் பார்ப்பது கிடையாது...மூளையால் மட்டுமே பார்க்கின்றோம்..கண்கள் மூளையின் கேமிராக்கள் என்று சொல்லப்படுகின்றது.


கண்ணுக்கு வெளியே இருக்கும் முடிகள் அனைத்தும் 3 இல் இருந்து 5 மாதங்களில் 200 முடிகள் உதிர்ந்து வளர்கின்றது.


என்ன? பசங்க, பொண்ணுங்க உங்க உடலைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சிருப்பீங்கனு நினைக்கிறேன்...நன்றி!!!

Friday, November 9, 2012

எல் பே ஆன் டி கோவ்டாப் - இது யாரோட பெயரு தெரியுமா?


கொலம்பியா விலே இந்த பெயரு ரொம்ப பேமஸ்....
யாரு இவ? கொலம்பியா நாட்டு பேரழகியா????
      ஒருவேளை  பெரிய பணக்காரனா இருப்பாரோ?

இல்லேனா ஏதாவது கடவுள் பெயரா இருக்குமோ?

அதுவும் இல்லேனா அங்கே சாபிடுற சாப்பாடு பெயரா இருக்குமோ?


அதுவும் இல்லையா? அப்படீனா  என்னதான் அதுபா? ஒண்ணுமே புரியலை னு  ரொம்ப டென்சன் ஆகாதீங்க...

இது அங்கே இருக்கிற ஒரு சுற்றுலாத்தலம்..என்னடா இது? இப்படி ஒரு பெயரா?

படத்தை பாருங்க.எனக்கு தெரிஞ்சதை நான் சொல்றேன்..உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லுங்க...

 650 அடி உயரம் கொண்டது இது. 1900 காலத்தில் தஹாமியர்கள் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகின்றது.

மொத்தம் 657 படிக்கட்டுகளுடன் இந்த பாறை விளங்குகின்றது. 1974 இல் இந்த படிக்கட்டுகள் கட்டப் பட்டது மொத்தம் 10 மில்லியன் டன்  எடை இருக்கலாம். இது ஒரே கல்லில் அமைந்திருக்கும் பாறை. இந்த பாறையில் ஒரு மிகப் பெரிய பிளவு இருக்கும். அந்த பிளவினைப் பயன்படுத்தி தான் இந்த படிக்கட்டுகளை உருவாக்கி இருக்கின்றார்கள்.

இங்கே சில மத சம்பந்தப்பட்ட இடங்களும்..பாறையின் உச்சியில் மூன்று அடுக்கு பார்வை கோபுரமும் அமைக்கப் பட்டுள்ளதாம்.


Thursday, November 8, 2012

மதங்களை வெறுக்கும் 'சாமி'!!! உண்மைச் செய்தி

மனிதனை மட்டுமே படைத்த கடவுள்...தற்போது உள்ள மதங்களால் குழம்பி போனாலும் ஆச்சரியமில்லை.  

உங்களை இந்த உலகினில் படைத்து செழிப்பாய், சந்தோசமாய் வாழ வைக்கும் கடவுளுக்கு நாம் என்ன திருப்பி செய்யலாம்? நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?

முடி திருத்தும் கடையினில் நம் உடலில் அலங்கரித்த சிகையினை நம் கண் முன்னே அறுத்து எறிந்த பிறகு அதனை காலால் எட்டி உதைத்து 'உவ்வே' என்று முகம் சுழிக்கின்றோம். ஆனால் கடவுளுக்கு நேர்த்திக் கடன் என்ற பெயரில் நாம் ஒதுக்கும் அந்த முடிகளைத் தானே தானம் வழங்குகின்றோம். அதுவே எனக்கு மிகச் சிறந்த பார்வையை கொடுத்தாய்..அந்த பார்வையை உனக்கு வழங்குகின்றேன் என்று கடவுளுக்கு ஒரு கண்ணை தாரை வார்க்கலாமே? ஒரு சிலர் கடவுளுக்கு முடி இறக்குகின்றார்கள்? ஒரு சிலர் கடவுளுக்காக முடி வளர்க்கின்றார்கள்!!!


இந்த உலகமே அவனுடையது என்று சொன்னால் அதில் வளரும் மலர்கள் மட்டும் எப்படி தனிமனிதனுக்கு சொந்தமாகி விடும்.அதை விலை கொடுத்து வாங்கி அவனுக்கு சூடி அழகு பார்க்கின்றோம்..வண்ண வண்ண மலர்களையா? அவன் நம்மிடம் கேட்டான்?

மனிதனிடம்தான் ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு என்றால் இறைவனிடமும் கூட அது இருப்பது ஆச்சரியமாய் இருக்கின்றது. ஸ்ரீநிவாசன் பணக்காரன், நம்ம ஊரு கருப்பசாமி ஏழையா? ஹஜ், மெக்கா செல்வதற்கு எல்லோராலும் முடிகின்றதா? ஏன் இந்த பாகுபாடு..இறைவா உன்னை காணாமலே நான் கண்மூடி விடுவேனோ என்று ஏழை இசுலாமிய பெரியவர் இன்றும் எங்கள் வீட்டு முன் உள்ள சாலையில் அழுது புலம்பிக்கொண்டிருக்கின்றார்.

ஏன் இந்த பாகுபாடு? கடவுள் தன்னை திருப்பதியில் வந்து தான் பார்க்க வேண்டும் என்று சொன்னானா?  தங்கத் தட்டினில் பால் பாயாசம் கொடு என்று சொன்னானா? வெள்ளி மாலை போடு என்று கேட்டானா? வாடிகனில் இருப்பது பணக்காரன்...வாடிப்பட்டியில் இருந்தால் அவன் ஏழைக் கடவுளா? வெளிநாடு தேடி வந்து என்னை பார்த்து விட்டு செல் என்று உத்திரவிட்டானா? இல்லையே!!!

இருபத்திநான்கு மணிநேரமும் தன்னையே சிந்தித்து வழிபடு என்று உரக்க கேட்டானா? அவன் சொல்வதெல்லாம் ஒன்றே  ஒன்றுதான்!!!

நான் எப்போதுமே பணக்காரனாய் இருப்பதில்லை. நான் ஏழையாய், மாற்றுத்திறனாளியாய் , வயோதிக பெரியவராய், அநாதை குழந்தைகளாய், பிச்சைக்காரனாய், உங்களில் ஒருவராய் எப்போதும், வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன்...எங்கே துன்பம் இருக்கின்றதோ?.எங்கே வறுமை இருக்கின்றதோ? அங்கே நானிருப்பேன்!!!

நீங்கள் அனைவருமே இந்த துன்பங்களை எல்லாம் கடந்து என்னை வந்து பார்க்க வருகின்றீர்கள்...நான் வாசலில், உங்கள் வீட்டு கதவருகில், உங்கள் எதிரில் அன்றாடம் நடந்து வருகின்றேன்...என்னை யாருமே கவனிப்பதில்லை...கடவுள் என்றால் அவன் பணக்காரன்...அவனிடம் எல்லாம் இருக்கு...அங்கே சென்றுதான் அவனை பார்க்க வேண்டும் என்று என்னை கட்டாயப் படுத்துகின்றீர்கள்...யாருமே இல்லாத கோயிலில் யாருக்காக தினமும் பூசை செய்கின்றீர்கள்? என்று கேட்கின்றார் உண்மைதானே? 

அப்படி எனில் கடவுளுக்கு என்ன கொடுத்தால் அவர் உங்களை ஆசிர்வதிப்பார்?

நீங்கள் பூக்கள் கொடுக்கின்றீர்களா? அந்தப் பணத்தினில் ஒரு ஆதரவற்ற குழந்தைக்கு பிஸ்கட் கொடுங்கள்..
 
நீங்கள் உண்டியலில் காசு போடுகின்றீர்களா? அந்த பணத்தினில் ஒரு முதியவருக்கு ஆடைகள் கொடுங்கள்...
 
நீங்கள் கடவுளுக்கு பிரசாதம் செய்கின்றீர்களா? அந்த பணத்தினில் நூறு ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவு ஊட்டி விடுங்கள்..

 நீங்கள் கடவுளுக்கு ஆடை அணிவிக்கிண்றீர்களா? அந்த பணத்தினில் ஏழை மாணவன் அல்லது மாணவிக்கு கல்வித் தொகை கொடுங்கள்..
நீங்கள் கடவுளுக்கு தங்கம், வெள்ளி போடுகின்றீர்களா? அந்த பணத்தினில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு  உதவி குடும்பத்திற்கு வாழ்க்கை கொடுங்கள்...

நீங்கள் கடவுளுக்கு அளிக்கும் நகை, பணம், மலர்கள், மாலைகள் மற்றும் இவை கொடுக்க ஒதுக்கும் நேரத்தை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுங்கள்..கடவுளுக்கு தானாக சென்று சேரும், இவ்வனைத்தும்...