பங்காளிங்க..

Thursday, November 14, 2013

விளங்காத "கை"யை வெட்டி எறிங்க!?!

காமன்வெல்த் மாநாட்டுல இந்திய கலந்துக்க கூடாதுனு சொன்னதும்....நம்ம பாரத பிரதமரு புத்திசாலி தனமா நான் போகலை, ஆனா இந்திய அரசு சார்பா சல்மான் குர்ஷித் போவாரு னு சொல்லி அனுப்பி வைக்கிறாரு....

அப்படீனா சல்மான் குர்ஷித் இந்திய நாட்டை சார்ந்தவறு கிடையாதா? யாரை கேனையனாக்குறாங்க னு தெரியலை????

இந்தியாவுலே இருந்து ஒருத்தனும் கலந்துக்க கூடாதுனு பேசிகிட்டு இருக்கும்போது இந்தியாவிலே இருந்து சல்மான் குர்ஷித் போவாராம்...நாம பேப்பரை படிச்சிகிட்டு பேசாம இருக்கணும்...

நம்ம தமிழ்நாட்டு காங்கிரஸ் காரங்க இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க....இன்னமும் இந்த கட்சி தமிழ்நாட்டுல இருக்குது பாருங்க, அதை சொல்லணும்....தமிழ் நாட்டு மக்களுக்கு இவனுங்க எந்த அளவுக்கு விசுவாசம இருக்கானுங்க னு வேடிக்கையாத் தான் இருக்கு...

தமிழக காங்கிரஸ் மந்திரிகளே, அமைச்சர்களே, எம்பிக்களே, வார்டு கவுன்சிலர்களே ...கொஞ்சம் கூட வெக்கம், மானம் சூடு இல்லாம தமிழ் நாட்டுல இருக்கீங்களே...அதை நினைச்சாத்தான் ஆச்சரியமா இருக்கு.....நம்ம மீனவனை சிங்கள ராணுவம் இன்னிக்கு காலை வரைக்கும் அடிச்சி, சித்திரவதை செஞ்சு அனுப்பிக் கிட்டுதானே இருக்கு, அந்த விஷயம் தெரியுமா? தெரியாதா? என்னாத்துக்கு நம்ம பிரதமரு ராஜபக்சேவுக்கு பயப்படுறாரு னு சந்தேகமாவே இருக்கு? இல்லைனா இவ்வளவு பெரிய நாட்டோட பிரதமரு....குட்டியோண்டு நாட்டு அதிபருக்கு பயப்படுவாரா? என்னமோ ஒரு வில்லங்கம் இருக்கு? ஒட்டுமொத்த காங்கிரஸ் காரனும் ராஜபக்சேவிற்கு பயப்படுதான்களே....அவனை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்கிறாங்களே? தமிழ் ஈழ மக்களை நீ காப்பாற்ற மாட்டாய் என்று நன்றாகவே தெரிந்து விட்டது....

கடந்த வாரம் நம்ம ஞானதேசிகன் அய்யா ஒரு வார்த்தை சொன்னாரு....மீதம் இருக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்றவே இந்தியா காமன்வெல்த் மாநாட்டுல கலந்துக்குமாம்....

ஈழத்தை விடுங்க...நம்ம ஊரு மீனவத் தமிழனை நாசமாக்கித்தானே அனுப்புது....அதுகூட உங்களுக்கு செய்தியா வரலையா!!!

முதல்ல இது அவங்க நாட்டு பிரச்சினைன்னு சொன்னீங்க...அப்புறம் ஏற்கனவே செத்து போனவனை விடுங்க...இனிமே இருக்கிறவனை சாகாமா காப்பத்துறோம்...அதுனாலதான் நாங்க சிங்களம் போறோம்னு சொல்றீங்க! எதுதான் உண்மை.???
"கை"யை "கை"யை காட்டி ஒட்டு வாங்குறீங்களே....அந்த கையை நம்பி ஈழத்து தமிழனும் இந்திய மீனவனும் (சாரி, சாரி) இந்திய மீனவன் சொன்னா உங்களுக்கு புரியாது...தமிழக மீனவனும் செத்துக்கிட்டு இருக்கானே....

ஒட்டு வாங்குறப்ப மட்டும் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியுது..ஒட்டு வாங்குன பிறகு இப்போ தென்னிந்தியாவே கண்ணுக்கு தெரியலையே...என்ன செய்யுறது....

தமிழக மக்களே "கை" நல்லா இருந்தா பயன்படுத்தலாம்....விளங்காம போன கையை வைச்சு ஒன்னும் செய்ய முடியாது....சீக்கிரம் அதை வெட்டி எறிஞ்சிட்டு  போவோம்....விளங்காத கை நம்ம உடம்புல இருந்தா என்ன? இல்லைனா என்ன? என்ன சொல்றீங்க! 

அடுத்த தேர்தல்ல அந்த "கை"யை எவனெல்லாம் "கை" பிடிக்கிறானோ அவனை எல்லாம் "கை" கழுவிடுங்க , நாம சீரும் சிறப்பும வாழ, நமது ஈழத்து உறவுகளும் நல்லா இருக்கும்.....போதுமய்யா ஏற்கனவே அவர்கள் பட்ட வேதனைகள்.! 
தயவு செய்து அந்த சானல் 4 காணொளியை எல்லாம் தடை பண்ணுங்க! எனது உறவுகள் சித்திரவதைப் பட்டு சாவதை இனியும் எங்களால் பார்க்க முடியவில்லை....உதவி செய்ய முடியாத தமிழர் உறவுகளாய் நாம்......

உதவிக் கரம் நீட்டிய நம் ஈழத்து சகோதர சகோதரிக்கு உதவ முடியாத உதவ விடாத வக்கற்ற நமது "கை"யாலாகத தமிழக காங்கிரஸ் தலைவர்கள்.!  இவர்களை வைத்து இந்தக் கையை வைத்து கொண்டு நாம் என்ன செய்யப் போகின்றோம்?  

Friday, October 18, 2013

ஊதியம் தராமல் ஏமாற்றும் நிறுவனங்கள் - அதிர்ச்சித் தரும் தகவல்கள்

தற்போது நிறைய ஐடி மற்றும் பிபிஒ நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றுள் எது நம்பிக்கைக்குரியது? எது போலித்தனமானது என்று கண்டுபிடிக்க முடியா சூழ்நிலை உருவாகி உள்ளது,.

ஒரு நிறுவனம் எப்படிப் பட்டது என்பதை தெரிய வேண்டுமானால் அதில் வேலைக்கு சேர்ந்த பின்புதான் நிறுவனத்தின் முழு விபரம் தெரிய வரும். எப்படியாவது வேலை கிடைத்து விடும் என்று நம்பிக்கையோடு போராடி வேலைக்கு வருபவர்களிடம் வேலையை வாங்கிக் கொண்டு கடைசியில் சம்பள நாள் அன்று அவர்களை அழைத்து நீங்கள் ஒரு மாதமாய் வேலை பார்க்கவில்லை, அதனால் சம்பளம் தர முடியாது என்று சொல்லி அவர்களுடைய வாழ்க்கையைச்சீரழிப்பது தற்போது வாடிக்கையாகி வருகின்றது.

அந்த ஊழியர் ஒரு மாதமாய் வேலை பார்க்கும் போது எதுவுமே வாய் திறப்பதில்லை. இறுதியாக சம்பள நாள் வரும்போது சம்பளம் வரும் என்று அந்த குடும்பமே எதிர்பார்க்கும் நாளில் அந்த ஊழியரை தரக்குறைவாக பேசி சம்பளம் இல்லை என்று சொல்லி வெளியேற்றும் கலாச்சாரம் பரவி வருகின்றது,

அந்த முதலாளி அந்த ஊழியரின் குடும்ப சூழ்நிலையை  பற்றிக் கவலைப் படாமல் வெளியேற்றுவது மிகவும் கண்டனத்துக்கு உரிய விசயமாகும். வேலை இல்லாமல் சென்னையில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருக்கின்றார்கள். இவர்களுடைய பலகீனத்தை தனது பலமாக கொள்வதை இந்த மாதிரியான கீழ்த்தரமான முதலாளிகள் வைத்து உள்ளார்கள். அவர்களைப் பொருத்தவரையில் வந்த வரை லாபம். என்ன கத்திவிட்டு, சாபம் விட்டுச் செல்வான், சாபம் விட்டால் சாபம் விடட்டும் என்று கண்டு கொள்ளாமல் செல்கின்றார்கள்.

நான் ஏன் இதை எழுத வேண்டும்....நானும் சென்னையில் பாதிக்கப் பட்டேன்...நல்லவன் என்று நம்பி ஏமாந்து போனேன்...சேர்ந்த வுடனேயே எனக்கு நான் சேர்ந்ததற்கு அடையாளமாய் ஒரு கடிதம் கொடுங்கள் என்று சொன்னேன்...தரவில்லை...எப்போது கேட்டாலும் நாளை, நாளை என்று தள்ளிக் கொண்டே சென்றார்கள். கடைசியில் வேலை பார்த்து 16 நாட்கள் ஆனது.  அடுத்து 10 நாட்களும் ஆனது. ஆக 26 நாட்கள் ஆகி விட்டது. 1ம் தேதி முதல் சார் ஆப்பர் லெட்டெர் கொடுங்க வீட்டுல எதிர்பாக்குறாங்க, என்று கேட்டால் பிரிண்டர் ரிப்பேர் என்று சொல்ல அப்படியே தள்ளி தள்ளி போனார்கள். இறுதியில் தேதி 10 ஆனது...வீட்டினில் ஏற்பட்ட குடைச்சல் தாளாமல் நேராக சிஏஒ என்ற பெயரில் இருந்தவனிடம் சென்று கேட்ட போது ஆபர் லெட்டெர் வாங்கித்தான் வேலை பார்ப்பேன் என்றால் அப்படி ஒரு ஊழியன் எனக்குத் தேவை இல்லை என்று சொல்ல அப்படியே இடி வாங்கியதை போல உணர்ந்தேன், இந்த இழவை முன்னாடியே சொல்லி இருந்தால் நான் அன்றே வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு போயிருப்பேனே...

சரி பதினைந்து நாள் வேலைப் பார்த்த சம்பளத்தை கொடுங்கள், வீடு வாடகை கொடுக்க வேண்டும் என்று கேட்டால் எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கும் போது உனக்கும் கொடுப்பேன்...அது மட்டுமில்லாமல் நீ வேலை பார்த்த 15 நாளில் எனக்கு 2 லட்சம் வருமானம் வந்திருக்க வேண்டும், ஆனால் எனக்கு எதுவுமே வர வில்லை என்று சொல்லவும் இடி மேல் இடி விழுந்தது போல இருந்தது எனக்கு!

15 நாளில் நான் இரண்டு லட்சம் வருமானம் கொடுப்பவனாக இருந்தால் நான் சிஏஒ ஆகிருக்க மாட்டேனா? உன்னை வந்தா தாங்கி இருப்பேன்....

சரி பொறுமையாக இருப்போம், பொறுமையாக கேட்போம் என்று எண்ணி கிளம்பினேன்...நான் பொறுமையாய் இருப்பேன்..எனது குடும்பம் எப்படி பொறுக்கும்? என் வீட்டினில் நிதமும் பிரச்சினை துவங்கியது, பக்கத்து வீட்டுக்காரர்கள் பஞ்சாயத்துக்கு வந்தார்கள், மீண்டும் அவரை தொடர்பு கொண்டு பேசினேன்...ஈ மெயில் அனுப்பினேன்...பதில் வரவில்லை....எனது நிலையை நொந்து என் நண்பனிடம் பகிர்ந்து கொள்ள அவர் என் சார்பாக மெயில் அனுப்பினார்...உடனே அவரிடம் நான் சம்பளம் தர மாட்டேன் என்று சொல்ல வில்லை, சிறிது காலம் வேண்டும் என்று சொல்லி பதில் அனுப்பினான் அவன். மீண்டும் சிறிது காலம் பொறுத்தேன்...என் மனைவி வழி குடும்பத்தார் , என் குடும்பத்தார் என் மீது சந்தேகப் படத் தொடங்கினார்கள்.

அதன் பின்னர் எனது உடன் பிறந்த சகோதரர் அவனை தொடர்பு கொண்டு பேச மறுநாளே சம்பளம் தருகின்றேன்...உங்கள் தம்பியை வர சொல்லுங்கள் என்று சொல்ல அலுவலகம் சென்றதும் அந்த சி ஏ ஒ வின் மனைவி பேசவும் நானும் பேசினேன்....எனக்காக பரிந்து பேசியவர்களை எல்லாம் மிக தரக்குறைவாய் பேசினாள். அண்ணனை பேசியபோது சுர்ரென்று இருந்தது. சம்பளம் என்று கேட்டதும் அவன் மனைவியை விட்டு பேச வைத்தான் அந்த ஆம்பிளை. 

அப்போது அவள் வேலையை விட்டு போனதும் சம்பளம் கொடுக்கணும்னு ரூல்ஸ் கிடையாது என்றாள்....இவ்வளவு  ரூல்ஸ் பேசும் அவள் வேலைக்கு சேர்ந்ததும் ஆபர் லெட்டெர் கொடுக்கணும், என்று அறிவில்லாமல் பேசியது வேடிக்கையாக இருந்தது....

அதுமட்டுமிலாமல் எனக்கு சம்பளம் வரவில்லை என்று நான் நிறுவனத்தில் வேறு யாரிடமும் பேசக் கூடாது என்று கத்தினாள், ஏமாந்தவர்கள் நிச்சயம் தனது பிரச்சினையை வேறு ஒருவரிடம் பகிர்வது என்பது இயல்புதானே. அதுமட்டுமில்லாமல் வேலையை விட்டு வந்த பிறகு அவளுக்கு என் சுதந்திரத்தில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பதை அவள் யோசிக்கவில்லை. 

முதலில் கேட்கும் போது |பிச்சை காசு அதை வச்சு நான் என்ன நாக்கா வழிக்க போறேன் என்று பேசியவள் இன்று எனது பிச்சை காசினில்தான் குடும்பம் நடத்துவது எனக்கு சந்தோசமாகவே இருக்கின்றது. வாழ்க அவள்....எனது பத்தாண்டு கால வேலை அனுபவத்தில் முதல் மோசமான அனுபவம்.....

நான் தற்போது சம்பளம் முறையாக கொடுக்கின்ற ஒரு நியாயமான நிறுவனத்தில் நல்லபடியாக பணிபுரிகின்றேன். எனது மோசமான அனுபவத்தை அந்த நிறுவனத்தில் சொன்ன போது  சென்னையில் இப்படி ஒரு நிறுவனமா என்று ஆச்சரியப்பட்டார்கள்....

எனக்காவது பரவாயில்லை, வெறும் 16 நாள் சம்பளம் மட்டுமே...நிறைய பேருக்கு 2 மாதம், 3 மாதம் வரை சம்பளம் வழங்கப் படவில்லை என்பதே வேதனைக்குரிய விஷயம்......

Saturday, September 7, 2013

ஒபட்சு மேன்??? - எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டிய வார்த்தை

அன்புள்ள நண்பர்களே... மிக மிக முக்கியமான செய்தி


ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் 

 
இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.

http://2.bp.blogspot.com/-orvnhqcTHf0/UhobK-QtuBI/AAAAAAAAAmc/8Wp6xSlMKwo/s320/atm.jpg
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.

அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.

அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.

அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }

சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை

TO READ MORE { Ombudsman }


PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS


Saturday, August 10, 2013

கடலை போடுவது எப்படி???கடலை போடுறது னா நீங்க நினைக்கிறது மாதிரி எல்லாம் ..கிடையாது.நான் சொல்றது நிலக்கடலை 

 நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாகஇருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகுஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நில...க்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்லஉதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம்விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும்பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.


நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது.குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடி யும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும்பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம்நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்துசாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும்கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலைஅதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில்குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலைஉண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கானமருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம்நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும்நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால்அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறானதகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலைசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறுஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும்தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100
கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் 0.85 கி
ஐசோலூசின் 0.85 மி.கி.
லூசின் 1.625 மி.கி.
லைசின் 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) 93.00 மி.கி.
காப்பர் 11.44 மி.கி.
இரும்புச்சத்து 4.58 மி.கி.
மெக்னீசியம் 168.00 மி.கி.
மேங்கனீஸ் 1.934 மி.கி.
பாஸ்பரஸ் 376.00 மி.கி.
பொட்டாசியம் 705.00 மி.கி.
சோடியம் 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து 6.50 கிராம்.

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பிஉள்ளது.


பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம்உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான்இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

நன்றி: அலுவலக மின்னஞ்சல்

Wednesday, July 10, 2013

முதல் ஆளாய்.....

ஜூனில் பள்ளி திறந்ததும் 
பெஞ்சு, டெஸ்க்கை நிரப்புவோம் 
முதல் ஆளாய்;

புத்தகக் கடையினில் 
போட்டி போட்டு வாங்கி அதில் வாசம் தேடுவோம் 
முதல் ஆளாய்;

பிரவுன் கலர் அட்டைப் போட்டு 
கிரிக்கெட் வீரர் படம் போட்டு லேபிள் ஓட்டுவோம் 
முதல் ஆளாய்;

வாரத்தில் இரண்டு ஞாயிறு தேடி 
திங்கள் காலையில் தெய்வத்தை தேடுவோம் 
முதல் ஆளாய்;

சிலேட் குச்சி, நடராஜ் பென்சில், மை பேனா,
பால் பாயிண்ட் பேனா, வாங்கினோம் 
முதல் ஆளாய்;

வாய்ப்பாடு புத்தகம், லாக் புக், 
அப்புறமா கால்குலேடர்  
இரவல் வாங்கிப் படித்தோம் 
முதல் ஆளாய்;

வகுப்பறையில் ஓடியாடி, பெஞ்சுமீது 
ஏறி இறங்கி வகுப்பில் சட்டை நனைந்து அமர்ந்தோம் 
முதல் ஆளாய்;

சாப்பாட்டை பெஞ்சிலும், மரத்தடியிலும்,
மைதானத்திலும், சில சமயம் சைக்கிள் செட்டிலும் உண்டோம் 
முதல் ஆளாய்;

சரியா படிக்கலைனா முழங்காலிட்டு,  
சந்தோசமாய் தண்டனை அனுபவிப்போம் 
முதல் ஆளாய்;

வாரத்தில் ஒருநாள் வரும் பி.டி வகுப்புக்கு 
வழிமீது விழி வைத்து காத்திருப்போம் 
முதல் ஆளாய்;

பரீட்சை அட்டையை மட்டையாக 
பேப்பர், சாக்ஸை பந்தாக வைத்து கிரிகெட் ஆடுவோம் 
முதல் ஆளாய்;

உச்சி வெயிலில் கபடி, கோ-கோ என்று 
வியர்வையில் குளித்தாடுவோம் 
முதல் ஆளாய்;

அடைமழை பெய்தாலும் புத்தக 
கிரிக்கெட் விளையாடுவோம்   
முதல் ஆளாய்;

பள்ளி விட்டதும் வெளியே பைகளை 
தூக்கி பறந்து செல்வோம்  
முதல் ஆளாய்;

நெல்லிக்காயா, இலந்தன்பழமா, நவாப் பழமா?
பத்து பைசாவில் பகிர்ந்து உண்போம் 
முதல் ஆளாய்; 

குல்பி ஐசோ, பிக் பன்னோ, நன்னாரி சர்பத்தோ 
பிடுங்கித் தின்போம்   
முதல் ஆளாய்;

காலாண்டு, அரையாண்டு, முழுவாண்டில் 
விழுந்து விழுந்து படிப்போம் 
முதல் ஆளாய்;

பரீட்சை டைம் டேபிளில் 
லீவு எத்தனை நாள் என்று தேடித் பிடிப்போம் 
முதல் ஆளாய்;
நாமும் 
படித்தோம் 
விளையாடினோம் 
அழுதோம் 
சிரித்தோம் 
வெற்றி கண்டோம், 
தோல்வி பெற்றோம் 
எத்தனை எத்தனை சந்தோசங்கள், 
எத்தனை எத்தனை துக்கங்கள் 
பால்ய கால  சண்டைகள் 
அத்தனையும் மறந்து போனதே இன்று ?

தோளில் கைபோட்டு சுற்றிய காலம் எங்கே?
செல்போன். எஸ்.எம்.எஸ், சில் தொலைந்து போனோம் இங்கே!

மரத்தடியில் சிரித்துப் பேசிய வசந்தம் எங்கே?
வெப்சைட்டில் மறைத்து பேசும் சாட் இங்கே?

கனத்து போன இதயங்களோடு 
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் 
முதல் ஆளாய்;
இன்று நம் புது உலகோடு, உறவுகளோடு!

Saturday, July 6, 2013

இன்று இளவரசன்??? நாளை??

இளவரசன், திவ்யா காதல் ஜோடிக்கு முற்றுப் புள்ளி வைச்சாச்சு....காதல் பறவையில் ஒன்றை கொன்று விட்டோம்...இனிமேல் திவ்யா வின் வாழ்க்கை???

இளவரசன், திவ்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.....அதுவும் பலவிதமான போராட்டத்தோடு...திருமணம் வெற்றி கண்டு எட்டு மாத வாழ்க்கையையும் ருசி கண்டாகி விட்டது.

மகள் வேறு சாதி பையனை திருமணம் செய்துகொண்டதை தாங்க முடியாத தந்தை தற்கொலையும் செய்து கொண்டு விட்டார்.   தனது காதல் கணவனை விட்டு விலகாத திவ்யா தற்போது இளவரசன் வேண்டாம் என்று சொல்ல இளவரசனின் மரணம் தற்போது நிகழ்ந்து உள்ளது.

இது கொலையா? தற்கொலையா? இதன் விபரம் எல்லாமே திவ்யா விற்கு மட்டுமே தெரியும்! 
அவள் வாய் திறந்து உண்மையை சொன்னால் மட்டுமே இளவரசனின் உண்மையான காதலின் அர்த்தம் உலகிற்கு புரியும்?

அவளாகவே விருப்பப்பட்டுத்தான் போராடித்தான் இந்த திருமணம் செய்து கொண்டாள். எந்த ஒரு சூழ்நிலையிலும் கணவரை விட்டுப் பிரியாதவள் இன்று யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தின் படி எனக்கு கணவரோடு வாழ விருப்பமில்லை, அம்மாவோடு வாழ விரும்புகின்றேன் என்று சொல்ல காரணம் என்ன?    இடையினில் நடந்தது என்ன?

யார் அவளை அப்படி பேசுமாறு நிர்பந்தித்தது? காதல் என்பது அவ்வளவு பாவமா? இன்று அம்மாவோடு போக வேண்டும் என்று எண்ணிய அவளுக்கு தன்னால் தனது கணவனின் வாழ்க்கைக்கு, உயிருக்கு ஆபத்து என்று தெரியவில்லையா அவளுக்கு? 

இதே திவ்யா அன்று நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவளை கணவரும் அவரது அம்மாவும் மிக நன்றாக பார்த்துக் கொள்கின்றார்கள் என்று சொன்னவள், அதன் பின்னர் எந்த பிரச்சினையிலும் நான் கணவரை விட்டு வர மாட்டேன் என்று சொன்னவள் இன்று திடீரென்று அம்மா தனிமையில் இருக்கின்றார்கள், அதனால் நான் அம்மாவோடு வாழப் போகின்றேன் என்று பேசுவதற்கு, அந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம்? இதைத்தான் அந்த திவ்யாவின் அம்மாவும் ஆசைப் பட்டார்களா? மகள் விதவையாய் வாழ்வதை எந்த தாயும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அதுவும் இந்த சமுதாயத்தில் நடந்தேறி விட்டது...

இப்போதாவது திவ்யா வாய் திறந்து நடந்தது என்ன என்பதை சொன்னால்தான் இன்னும் பல சாவுகள், சாதி மோதல்கள் நடக்காமல் இருக்கும்.....அவள் காதல் உண்மை என்றால் அவள் வாய் திறப்பது மிக முக்கியம்....

சொல்லப் போனால் அவளது உயிருக்கும் இனி ஆபத்தே...எங்கே அவள் வாய் திறந்தால் உண்மைகள் வெளியே வந்து விடுமோ என்று அவளையும் அழிக்கத் தயங்க மாட்டார்கள் அந்த சாதி வெறி பிடித்த முதலைகள்....இனி காதல் வேண்டாம் என்று சொல்லவேண்டுமா? அல்லது சாதி பார்த்து காதலியுங்கள் என்று சொல்ல வேண்டுமா? அப்படி சொன்னால் அதற்க்கு பெயர் உண்மையான காதல்தானா? 

இரண்டு உயிர்களுக்கு உரிய காதல் பிரச்சினை, இரண்டு குடும்பங்களுக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அதைத் தாண்டி இரண்டு ஊர்கள், இரண்டு பிரிவு மக்கள் என்று பலதரப்பட்ட மக்களை தாண்டி இன்று ஒரு உயிரை காவு வாங்கி இருக்கின்றது...இதற்க்கு காரணம் யார்? 

விடைகளை இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம்......வினாக்கள் மட்டுமே பல உருவாகின்றன! 

Friday, June 21, 2013

செம்மொழியா இது?

நண்பர்களே, 
பிளாக்ஸ்பாட் போன்ற புதிய வசதி ஒன்றை சமீபத்தில் கண்டேன்....அது தமிழ்மொழி.காம்...உங்கள் பதிவுகளை அதனுள் ஏற்றுங்கள்...பெரும்பாலான கல்லூரி பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் திரைப்பட கதை எழுத்தாளர்கள் அதனை கவனித்து வருவதை அறிந்தேன்....

இணையதள முகவரி www.thamizhmozhi.com
அல்லது 

வாழ்த்துக்கள் !!!

Friday, June 14, 2013

காளஹஸ்தியில் களவாடும் கபோதிகள்!

சென்னையை அடுத்துள்ள காளஹஸ்தியில் தமிழர்களும், ஆந்திர மாநிலத்தவரும் வசிக்கின்றார்கள். ஸ்ரீ காளஹஸ்தி  ஆந்திர மாநில மற்றும் தமிழக எல்லையில் இருக்கின்றது. இது ராகு-கேது பரிகார பூஜைக்கு பெயர் பெற்ற கோயிலாகும். இங்கே ஸ்ரீ காள ஹத்தீஸ்வரர் மற்றும் ஞானபிரசுன்னாம்பிகை யும் வீற்றிருக்கின்றார்கள். இக்கோயிலில் சுமார் 500 வகையான லிங்கங்கள் காட்சியளிக்கின்றன. அது மட்டுமல்லாமல் ராகு-கேது ஸ்தலமும் இங்குதான் அமைந்திருக்கின்றது. வாழ்க்கையில் வேலையின்மை, திருமணத்தடை, கல்வித்தடை, சர்ப்ப தோஷம், குழந்தையின்மை மற்றும் எடுத்த காரியங்களில் எல்லாம் தடையாய் இருப்பவர்களுக்கு இங்கு பரிகாரம் செய்யப் படுகின்றது.

சரி நல்ல விசயம்தானே...இதில் என்ன களவாணித்தனம் என்று யோசிக்கின்றீர்களா? களவாணித்தனம் கோயிலுக்குள் அல்ல, கோயிலுக்கு வெளியே நடக்கின்றது. கோயிலுக்கு உள்ளே நுழையும் முன்னரே வெளியே இருக்கும் வியாபாரிகள் பூக்கள், அர்ச்சனைத் தட்டுகளை விற்கத் தொடங்குகின்றார்கள். இதில் என்ன தவறு வியாபாரம்தானே செய்கின்றார்கள் என்றுதானே யோசிக்கின்றீர்கள். வியாபாரம்தான் ஆனால் அடாவடியான வியாபாரம்...

இது யாரிடமும் கேட்டு எழுதும் கட்டுரை அல்ல..இது எனது சொந்த அனுபவமே..நானும் என் மனைவியும் கோயிலுக்கு சென்றோம். மிகுந்த வருத்தத்தில் நிதி பற்றாக்குறையில் மனவேதனையோடு இறைவனைத் தேடி சென்றோம். சென்னையில் இருந்து கிளம்பினோம். பேருந்து கட்டணம் ஒரு நபருக்கு 80 ரூ வீதம் 160 ரூ கொடுத்தோம். 

கோயிலுக்குள் நுழைந்ததும் ஒரு வயதான வியாபாரி எங்களிடம் பரிகார பூசையா அல்லது அர்ச்சனையா என்று கேட்க அப்பாவியாய் நாங்கள் பரிகார பூஜை என்று சொல்ல உடனே ஒரு அர்ச்சனைத் தட்டை எடுத்துக் கொடுத்து உள்ளே தீபம் ஏற்றுங்கள் ராகு, கேதுவிற்கு மாலை போடுங்கள் என்று சொல்ல நான் வேண்டாம் என்று சொல்ல கோயிலுக்கு வந்து மாலை வேண்டாம் என்று சொல்ல கூடாது, அப்புறம் நினைச்ச காரியம் நல்லபடியா முடியாது என்று அபசகுனமாய் சொல்ல நான் பதறிப் போய் வேறு வழியின்றி வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தோம். உள்ளே நுழைந்த மறு வினாடியே ஒருவர் எங்களிடம் வந்து வலது புறம் இருக்கும் விநாயகரை வழிபட்டு சென்றால் எல்லா பீடைகளும் விலகிச் செல்லும் என்று சொல்ல சரி பிள்ளையாரை கும்பிட்டு செல்வோம் என்று உள்ளே செல்லவும் ஒருவன் பின்னாடியே வந்து தாலி பாக்கியம் காக்கும் பிள்ளையார், அவருக்கு மஞ்சள் கயிறும், அருகம்புல் மாலையும் போடுங்கள் என்று சொல்லவும் எனது மனைவியும் நானும் இரண்டு  கயிறு வாங்கி மாலை சாத்தினோம் 

விராலி மஞ்சள் கட்டிய ஒரு கயிறு எவ்வளவு இருக்கும் என்று நினைக்கின்றீர்கள். நீங்கள் 30 அல்லது 40 என்று நினைத்தால் என்னைப் போன்ற முட்டாள்கள் ஆகி விடுவீர்கள். அவன் கேட்டத் தொகை ஒரு (வில்வ இல்லை, ரோஜா இதழ்கள், மற்றும் பிள்ளையாருக்கு போட்ட மஞ்சள் கயிறு மற்றும் அருகம்புல் மாலைக்கு) ரூவாய். 150 என்று 300 கொடுங்கள் என்று சொல்ல அரண்டு போனோம். சென்னையில் இருந்து 99 கிலோமீட்டர் தூரம் கொண்ட கோயிலுக்கு பேருந்து கட்டணம் ரூ. 80. வெறும் இரண்டு பிளாஸ்டிக் பையினில் வாங்கிய பூ மற்றும் ஒரு மஞ்சள் கயிறுக்கு விலை 300.

சற்று அதட்டலாகவே கேட்டேன்...என்ன இது பகல் கொள்ளையாக இருக்கின்றதே...அவ்வளவு நேரம் தமிழில் பேசிக் கொண்டிருந்தவன் தெலுங்கினில் பேசத் தொடங்கினான். கோயிலுக்கு வந்திட்டு பணத்தை பார்க்காதே...அப்புறம் நீ நினைக்கிறது நடக்காமலே போயிடும்.... இதில் அவனது கூட்டாளியின் சாபம் வேறு? நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே இன்னொரு குடும்பம் மற்றும் ஒரு ஆந்திர தம்பதியினரும் அவனிடம் பூ வாங்கிவிட்டு நொந்து போய்  வந்தார்கள். வேறு வழி இல்லாமல் பூக்களை வாங்கிக் கொண்டு சந்நிதியை நோக்கி நடந்தோம். கோயிலின் உள்ளே தேவஸ்தான தகவல் பலகை ஒன்று எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதில் ராகு-கேது பரிகார பூஜை க்கு ரூவாய் 300, சிறப்பு ராகு-கேது பூஜை ரூ. 750 மற்றும் ஒரு சிறப்பு ராகு-கேது பூஜை ரூ. 1500 என்றும் ரூவாயை கட்டியதும் உள்ளேயே தேங்காய், எலுமிச்சை வெற்றிலை, நவதானியம் மற்றும் வெள்ளியால் ஆன ஐந்து தலை நாகம் மற்றும் ஒரு தலை நாகம் வழங்கப்படும் என்றும் கட்டாயமாக வெளியில் இருந்து கொண்டு வரைப்படம் பூக்கள் அர்ச்சனைக்கு அனுமதிக்கப் படமாட்டாது என்று போடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் உறைந்து போனோம். அப்படி எனில் வாங்கிய பூக்களை என்ன செய்வது? என்று கேட்டதற்கு வெளியில் இருந்து போடப்படும் பூக்களால் உங்கள் பரிகாரம் நிறைவேறாது என்று சொல்லவும் துக்கம் தொண்டையை அடைத்தது. 300 ரூவாயை சுளையாய் ஏமாற்றி விட்டார்களே...

சரி பூஜையை முடித்ததும் அவனிடம் போய்  சண்டை போட வேண்டும்  என்று நினைத்துக் கொண்டு கோயிலில் கொடுத்த பூக்களை வைத்து பரிகார பூஜை செய்தோம்...

இந்த வியாபார களவாணிகள் செய்யும் இந்த தொடர் வழிப்பறி கொள்ளை கோயில் நிர்வாகத்திற்கு தெரியாமல் இல்லை...ஆனாலும் கண்டு கொள்ளாதது போல் இருக்கின்றார்கள். பூஜை முடித்து வெளியே வந்து பார்த்த போது  அவர்களை காணவில்லை. அவர்களது நோக்கமானது வரும் பக்தர்களிடம் பொருட்களை விற்று விட்டு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு வெளியே வரமாட்டார்கள். காரணம் ஒரு மணிநேரத்தில் பூஜை முடிந்ததும் தலைமறைவாகி விடுகின்றார்கள் 

இந்த விவகாரம் கோயில் நிர்வாகத்திற்கும் தெரியாமல் இல்லை...ஆனால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி பக்தர்கள்தான்...பெண்களிடம் தாலி பாக்கியம் என்று பேசுகின்றார்கள், தம்பதியிரிடம் குழந்தை பாக்கியம் என்று சொல்கின்றார்கள்...இளைஞர்களிடம் திருமண மற்றும்  வேலை   வேண்டுமா, இல்லேனா கிடைக்காது என்பது போல மிரட்டி வியாபாரம் செய்கின்றார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இவர்களை கோயில் நிர்வாகம் இனிமேலாவது கண்டிக்க வேண்டும் அல்லது கோயில் அறிவிப்பு பலகையை கோயிலின் வெளியே மக்கள் பார்வை படும்படி வைக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை...

Saturday, May 25, 2013

அட்டூழியம் செய்யும் சில தனியார் கல்லூரிகள்...

சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் ஆயிரக்கணக்கான தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஒரு  சில கல்லூரி நிர்வாகம் செய்யும் அக்கிரமத்தால் எல்லா கல்லூரி நிர்வாகத்தின் மீது அவப் பெயர் உருவாகின்றது.

என்ன பிரச்சினை?

மாணவ, மாணவிகளுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுப்பதில்லை. இன்றைய சூழ்நிலைக்கு முக்கியமான பாதுகாப்பு பல மாணவிகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு சில இடங்களில் தகுதியற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றார்கள் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுகின்றது. ஏதேனும் ஒரு கல்வியில் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் வேறு ஒரு பாடத்திற்கு ஆசிரியராக பதவி வகிக்கின்றார்கள். இன்றைய மாணவ, மாணவிகள் பல்வேறு சந்தேகங்களைக் கேக்கும் போது அந்த ஆசிரியர்களால் பதில் அளிக்க முடியாமல் போகின்றது.

சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரியில் பார்த்தால் ஆங்கில பிரிவினில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் வணிகத் துறை பிரிவிற்கு தலைவராக இருக்கின்றார். ஆனால் அந்த கல்லூரி நிர்வாகம் எங்களிடம் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர் இருக்கின்றார் என்று விளம்பரம் செய்கின்றார்கள். இதனால் உண்மையாய் உழைத்து பட்டம் பெற்ற ஆசிரியர்கள் வெளியினில் வேலை இன்றி காத்திருக்கின்றார்கள்.

அடுத்தது ஒரு சில கல்லூரிகளில் ஆசிரியர்களும் மிக கேவலமாக நடத்தப் படுகின்றார்கள். உண்மையாய், உயிரைக் கொடுத்து நடத்தும் ஆசிரியர்கள் பலர் கொத்தடிமைகளாக நடத்தப் படுவது மிகவும் வேதனைக்குரிய விசயமே...செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடும் இந்த தமிழ்நாட்டில் எத்தனை ஆசிரியர்கள் கேவலமாக வாழ்ந்து வருகின்றார்கள் தெரியுமா?

டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்று உழைக்கும் ஆசிரியர்கள் மரியாதையாக நடத்தப் படுவதில்லை. காரணம் கேட்டால் சம்பளம் வாங்குறேல, வேலை பார்த்த என்ன உடம்பு தேஞ்சுருமா என்று எகத்தாளங்கள் வேறு? அவர்கள் மகள் அல்லது சகோதரியை இவ்வாறு சித்தரித்தால் அவர்கள் எப்படி கொதிப்பார்கள், அந்த நிலைதான் இன்று எல்லோருக்கும்...

பல கல்லூரிகளில் பெண் ஆசிரியர்கள் சொல்லொனாத் துயரத்தில் குடும்பச் சுமை குறைப்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பல கர்ப்பிணிப் பெண்கள் ஐந்தாவது தளம் அல்லது நாலாவது தளத்திற்கு படியேறி வேலைப் பார்க்கின்றார்கள். ஏதாவது எதிர்த்து கேட்டால் அல்லது மறுப்பு தெரிவித்தால் அன்றைய நாள் சம்பளம் கட். இதற்க்கு பயந்து போய்  அவர்களும் மௌனியாக வேலைக்கு போய் வருகின்றார்கள். அதையும் மீறி வேலையை விட்டு நின்று கொள்கின்றேன் என்று சொன்னால் 3 மாத சம்பளத்தை கொடுத்து விட்டு நடையை கட்டு என்று மிரட்டுகின்றார்களாம். ஒரு மாத சம்பளத்திற்கே வழி இல்லாமல் உழைக்கும் அவர்களுக்கு 3 மாத சம்பளம் எங்கிருந்து கொடுக்க முடியும்?

அது போல ஒரு சில கல்லூரிகளில் மற்ற பிரிவினில் வேலைப் பார்க்கும் ஆண்களாலும் பாலியல் தொந்திரவுகள் இருப்பதாக புகார்கள் வருகின்றது. ஆனால் புகார்களை அந்த நிர்வாகம் கண்டுகொள்ளாது என்றும் மாறாக புகார்களை மூடி மறைக்கவே முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றது.

சமீபத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு கர்ப்பிணி ஆசிரியை ஏறிக் கொண்டிருந்தார். அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் மிக மெதுவாக ஏறிக்கொண்டிருக்க அந்த கல்லூரிப் பேருந்து ஓட்டுனர் சிறிதும் மனிதாபமின்ரி வேகமாக வண்டியை எடுக்க அந்த பெண் தடுமாறி விழுந்தார். அதோடு மட்டுமல்லாமல் கீழே விழுந்த அந்த ஆசிரியைப் பார்த்து மிக கேவலமாக தகாத வார்த்தைகளில் வேறு திட்டிக் கொண்டிருந்தார் அந்த ஓட்டுனர்.  அதனால் அங்கே நின்று இருந்த பொது மக்கள் அந்த ஓட்டுனரை நன்றாக புடைத்து  அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகே இந்த கட்டுரை  எழுதப் படுகின்றது. அதனைத் தொடர்ந்து ஒரு சில பெண் ஆசிரியைகளிடம் விசாரித்த போது சேகரித்த தகவல்களே இவை...

நிறைய ஆசிரியைகள் அழுது புலம்பிவிட்டனர். யாருமே தனது பெயரையோ அல்லது தனது கல்லூரிப் பெயரையோ வெளியிடக் கூடாது என்றுக் கேட்டுக் கொண்டதால் வெளியிடப் படவில்லை. நிறைய கல்லூரிகள் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பதாக சொல்லும் முன் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு தரமான ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வியை வழங்குகின்றார்கள் என்று அவர்களால் உறுதி அளிக்க முடியுமா?

பாதி நிறுவனங்கள் முதலில் கல்லூரியை தொடங்கி விட்டு அதன் பின்னரே அரசாங்கத்திடம் அனுமதி விண்ணப்பம் கூறுகின்றார்கள். இன்றும் சென்னை மற்றும் சுற்றுபுரங்களில் இயங்கி வரும் பல கல்லூரிகளில் பாதி வசதிகள் கிடையாது. ஒரு மாணவி அவர்கள் கல்லூரியில் கழிப்பறை வசதி பாதுகாப்பாய் இல்லை என்று சொன்னார். ஆனால் மாணவி என்றோ ஒருநாள் ஐந்து நிமிடங்கள் காலதாமதமாய் வந்தால் கூட

இன்னொரு கல்லூரியில் கல்லூரிப் பேருந்து தாமதமாக சென்றதாம். ஆனால் அந்த பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் அரைநாள் விடுப்பு கொடுக்கப்பட்டதாம். கேட்டால் நாங்கள் நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்று சொன்னதாம் நிர்வாகம். பல கல்லூரிகளில் பெண் ஆசிரியைகளுக்கு மற்ற பிரிவில் வேலை பார்க்கும் ஆண்களால் பாலியல் தொந்திரவுகள் அதிகம் இருப்பதாக சொல்லி வேதனைப்படுகின்றார்கள். குறிப்பாக ஒவ்வொரு வகுப்பாக அலைக்கழிப்பது, சம்பளம் குறைத்து கொடுப்பது, விடுப்பு எடுக்க விடாமல் தடுப்பது, பாடம் எடுப்பதைத் தவிர அதிக வேலைகளை கொடுத்து அவர்களை வீட்டிற்கு நேரத்திற்கு செல்ல விடாமல் தடுப்பது போன்ற குறுகலான மனத்தோடு நடக்கும் சைக்கோ களும் இருப்பதாக சொல்கின்றார்கள்...

இவை எல்லாம் நிர்வாகத்திற்கும் தெரியாமல் இருக்காது....ஆனால் அவர்கள் இதில் எல்லாம் கண்டுகொள்வதில்லை...காரணம் அவர்களுக்கு கல்வியில் லட்சியம் என்பது முக்கியமல்ல, கல்வியால் லட்சம் என்பதையே விரும்புகின்றார்கள்.

Tuesday, May 14, 2013

பாமக = பாமாகா

பாமக  தன் இன மக்களுக்காக தோன்றிய வெட்ட வெளிச்சமான சாதி கட்சி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது,

இவர்களோடு தேர்தல் நேரத்தில் மட்டும் ஜால்ரா போட்டுக் கொண்டு திமுகவும் அதிமுகவும் இணைத்துக் கொண்டது...அது திமுக, மற்றும் அதிமுக வின் சாமர்த்தியம்....

ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது அந்த குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளுக்கு ஆசைப்பட்டு அவர்களுக்கு உதவுவது போல் ஒரு மாயையை உருவாக்கி அவர்களோடு கூட்டணியை பெற்று வாக்குகளையும் பெற்றுக் கொண்டு தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களுக்குள் கூட்டணியில் இருந்து தானாகவே விலகச் செய்துவிடுவார்கள்.

ஆனால் கடந்த தேர்தலில் தான் யாரோடும் கூட்டு இல்லை, அதிமுக, திமுக இரண்டுமே மக்களை ஏமாற்றும் கட்சி என்று அறிவித்து கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டி என்று அறிவித்து இருந்தார் அதன் நிறுவனர்.

இதற்க்கு இடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வோ ஒரு படி மேலாக சென்று மருத்துவர் ராமதாசுக்கு பெரியார் விருது, அம்பேத்கார் விருது என்றெல்லாம் அறிவித்து சிறப்பு செய்தார். ஆனால் பிரச்சினை எப்படி, எப்போது உருவானது என்று தெரியவில்லை....திடீரென்று இரண்டு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பழிபோட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். எங்கே எப்படி இந்த பிரச்சினை என்று தெரியவில்லை....

சாதி  கணக்கெடுக்க வேண்டும் என்று அவர் சொன்னதில் தவறுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி ஒருபக்கம்சொல்லி விட்டு சென்றாலும் இன்னமும் நாம் சாதி அடிப்படையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதே அதிர்ச்சியான வேதனையான நிதர்சன உண்மை.....

சென்னையில் பல பகுதிகளில் இன்னமும் சாதி அடிப்படையில்தான் குழுவாய்  வசித்து வருகின்றார்கள். இதை நான் சொல்லவில்லை, விஜய் தொலைக்காட்சியில் நீயா?நானா நிகழ்ச்சியில் கோபிநாத் தெரிவித்த கருத்து இது...

இன்றும் வீடு வாடகைக்கு கொடுக்கும் பல வீட்டு உரிமையாளர்கள் வருகின்றவர்கள் என்ன சாதி என்பதை நாசூக்காய் கேட்டு கொடுக்கும் சம்பிரதாயம் அரங்கேறி வருகின்றது....

அதனால் சாதி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாசு சொன்னதில் அர்த்தம் இருக்கின்றது...அடுத்தது தமிழில் பெயர்பலகைகள் வைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்..இதுவும் அவசியமான ஒன்றே....மும்பை போன்ற மற்ற மாநகரங்களுக்கு செல்லும்போது உங்களால் ஆங்கில மொழியைக் கூட பெயர்பலகைகளில் பார்க்க முடியாது...அனைத்துமே அவரவர் தாய்மொழியினில் மட்டுமே இருக்கும்...மீறி வைத்தால் அவர்கள் அந்த மாநில பெருந்தலைகளிடம் அடிபட்டு சாவார்கள்..ஆனால் சென்னையில் இன்றும் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாள பெயர்பலகைகளை நாம் பார்க்கலாம்...ஆனால் தமிழில் பெயர்பலகை வைக்க அவன் கூச்சப் படுகின்றான். அப்படிப் பட்ட இடங்களில் சற்று கடுமையாக கையாளுவது முக்கியம்தான் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

மூன்றாவது மதுவிலக்கை அமல்படுத்த கோரி ராமதாசு எடுத்த போராட்டம்....இதில் அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.....டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு, புகையிலை பொருட்களை தடை செய், பொது இடங்களில் சிகரெட் குடிக்க  கூடாது, நியாயமான கோரிக்கை..ஆனால் அதனை அவர்களது தொண்டர்களே மதிக்கவில்லையே..அவர்கள் நடத்தும் மாண்டுகளில் வருபவர்களில் எத்தனை பேர் மதுப்பாடில்களோடு வந்தார்கள், எத்தனை பேர் பான், குட்கா என்று பாக்கெட்டோடு வந்தார்கள் என்பதற்கு அந்த பகுதி பெட்டிக் கடைகளில் கேட்டால் தெரியும்...இதனைப் பார்க்கும் போது பொது மக்கள் முகம் சுழிக்கின்றார்கள்......
இவங்க கட்சி ஆளுங்களே ஒழுங்கு இல்லை...இதுல இவர் நாட்டை திருத்தப் போறாராம் என்று பேசிக் கொள்கின்றார்கள்..தற்போது நடந்த பிரச்சினையில் தனக்கு அதிக பலம் இருக்கின்றது என்பதனை காண்பிக்கவே அவரது தொண்டர்கள் பேருந்துகளை எரித்து, கடைகளை அடைத்து போராட்டம் வன்முறையில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்கள்...பாமக இன்று எல்லோராலும் முகம் சுழிக்கப்படும் கட்சியாக மாற்றப் பட்டு இருக்கின்றது....நாளை ஒருவேளை இவர்களிடம் ஆட்சி வந்தால் மக்களுக்கு இவர்களாலேயே பாதுகாப்பு இல்லாமல் போகும் நிலையைத் தான் இப்போது நாம் காண்கின்றோம்..

சித்திரை திருநாளில் நான் பதினோரு மணிக்கு மேல பேசுறேன்..முடிஞ்சா என்மேல வழக்கு போடு என்று தானாகவே வாக்குமூலம் கொடுத்தார்.இன்னொருவரோ நாம ரத்தம் பார்க்காமல் போக மாட்டோம் என்று மேடையில் ஆர்ப்பரித்தார்.....இதுவெல்லாம் தவறில்லையா? தவறாக தெரியவில்லையா? என்னைக் கைது செய், வழக்குப் போடு என்று கேட்டது யார்? அப்படிக் கேட்டதற்கு இணங்க கைது செய்த பிறகு அவர் மீது பொய் வழக்கு போட்டுவிட்டார்கள் என்று வன்முறையில் ஈடுபடுவது ஏன்?

ஆக இன்று தெரிந்தோ தெரியாமலோ பாமக,  "பாதை மாறிய காட்சியாய்  இருக்கின்றது...பா - மா - கா"

Tuesday, April 23, 2013

சில பத்திரிக்கைகாரங்க மட்டும் என்ன ஒழுங்கா?

டெல்லியில் மட்டுமா பாலியல் பலாத்காரம் நடக்குது....தமிழ்நாட்டிலும்தான்...உணர்வுபூர்வ தலைவர்கள் ஈழத்தில் நடந்த பாலியல் குற்றத்தைப் பகீரங்கமாய் எடுத்துரைத்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு யாருமே அந்த அளவிற்கு குரல் கொடுப்பதில்லையே....அது ஏன் என்றும் புரியவில்லை..

ஒரு தவறு என்று நடக்கும் போது டெல்லியில் நடந்தால்தான் அந்த பிரச்சினை பூதாகரமாக்கப் படுகின்றது. காரணம் கேட்டால் இந்தியாவின் தலைநகரத்தில் இந்த பிரச்சினை நடக்கின்றது என்று சொல்கின்றார்கள். ஒவ்வொரு முதலைமைச்சருக்கும் அவரவர் மாநிலம் முக்கியமானதே!

அவர்கள் மட்டும்தான் பெண்களா? குழந்தைகளா? நாம் பெற்றதெல்லாம் என்ன? ஆட்டு மந்தைகளா? நமது சகோதரிகள், குழந்தைகளும்தானே பாதிக்கப்படுகின்றார்கள்...அது ஏன் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஒரு பெண் இறந்த பிறகு அவளது போட்டோவிற்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மாலை போடுவதும், ஆறுதல் சொல்வதும் என்ன பிரயோசனம் ? டெல்லியில் நடந்த மருத்துவ மாணவி பாலியல் மரணத்திற்கு பிறகு அந்த பிரச்சினை முடிவு பெறவில்லை...அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள்....டெல்லி மருத்துவ மாணவி பாலியல் கொடுமை நடைபெற்ற அதே நேரத்தில் தமிழகத்தின் தூத்துக்குடியில் புனிதா கற்பழித்துக் கொல்லப் பட்டாள். அது ஏன் பத்திரிகை கண்களுக்கு பெரிய விசயமாக தெரியவில்லை?


ஒரு எழுத்தாளர், ஆளும்கட்சித் தலைவர் , எதிர்கட்சித் தலைவர் ஒருவர், மற்றும் சமூகநல ஆர்வலர். இவர்களை வைத்து விவாதம் நடத்தி வியாபாரம் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். பரபரப்பாய்  போகும் விவாதத்தில் ஒரு சிறிய விளம்பர இடைவேளை..என்று சொல்லிவிட்டு
ஒருவன் ஆக்ஸ் பெர்பியூம் போட்டதும் ஐந்தாறு பெண்கள் அந்த ஆணைத் துரத்திக் கொண்டு ஓடுவது போன்ற ஒரு கேவலமான விளம்பரம்...இப்படி பெண்ணை கேவலப்படுத்தும் விளம்பரங்களைப் போட்டுவிட்டு மீண்டும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களைப் பற்றிய விவாதம் தொடங்குகின்றது, எனது 6 வயது மகள் கேட்கின்றாள், ஏன் அவன் பின்னாடி எல்லோரும் ஓடுறாங்க? நான் என்ன பதில் சொல்லவேண்டும் அவளுக்கு, எனக்குத் தெரியவில்லை! ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுக் கொள்கின்றார்கள். எழுத்தாளர் மற்றும் சமூக நல ஆர்வலரை அதிகமாய் பேச விடுவதே கிடையாது. 

இதுவா இப்போது முக்கியம்.? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களை எப்படி காப்பாற்றுவது...அந்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பன போன்ற விவாதங்கள் மற்றும் அதற்க்கு முடிவுகள் கொடுத்தால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கிடைக்குமே!

காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது என்று குறைகூறும் பத்திரிகைகள் மட்டும் என்ன ஒழுங்கா? தூத்துக்குடி மாணவி பாலியல் பலாத்காரம், திருப்பூர் மாணவி பாலியல் பலாத்காரத்தை எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்த்தது?


டெல்லி மருத்துவ மாணவியின் மரணத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தது...அந்த முக்கியத்துவம் ஏன் நம் சகோதரி, மகள் , நம் தமிழச்சி புனிதாவிர்க்கு வழங்கப் படவில்லை...அவள் ஏழைப் பெண் என்பதலா?


என்ன செய்யலாம் ?


காவல்துறையில் தனிக்குழு அமைத்து பெண்களுக்கு, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்...


எப்படி  செய்வது?


அந்தந்த பகுதி காவல்துறையினர் அருகினில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு காணொளிகள் மட்டும் குறும்படங்களை வெளியிட்டு அந்த பெண் குழந்தைகளுக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கு தனித் தனியாக சொல்லிக் கொடுக்க வேண்டும், இது கட்டாயமாக்குதல் வேண்டும்.


என்னென்ன சொல்லிக் கொடுக்கலாம்?


துண்டுப் பிரசூரங்கள் சுத்த ஏமாற்று வேலை...இந்த காலத்தில் துண்டுப் பிரசூரங்களை யாருமே முழுதாய் படிப்பதில்லை...பாதி படிக்கும் போதே தூக்கி எறிந்துவிடுவார்கள் அல்லது கிழித்து போட்டு விடுவார்கள். அதுவே பள்ளி ஆரம்பிக்கும் முன் கடவுள் வழிபாடு தொடங்குவதற்கு முன் பாலியல் துன்புறுத்தல் என்பது என்ன? எப்படி பெண் பிள்ளைகள், பெண்கள் விழிப்பாய் இருக்க வேண்டும்..ஆண் பிள்ளைகள் என்னென்ன செய்யக் கூடாது? அப்படி செய்தால் என்னென தண்டனை என்று சொன்னால் நிச்சயம் அவர்கள் மனதில் நன்கு பதியும்! இது சாத்தியமற்ற செயல் கிடையாது..இதை நிச்சயமாக செய்யலாம்..


ஒரு நாளைக்கு இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையை அலைக்கழிப்பதை விட உருப்படியாய் இந்த விசயங்களுக்கு செலவிடலாமே! இதனை சொல்வதால் எந்த விதத்திலும் இந்திய கலாச்சாரம், தமிழக கலாச்சாரம் கெட்டழியாது என்றே நம்புகின்றேன்...


ஆண் , பெண் சமம் என்று போதிக்கும் மகளிர் அமைப்புகள் பெண்ணிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் உயரிய கற்பினை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று அவர்களும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மிக்க நல்லது. அறிமுக மில்லாத நபர் அல்லது அப்பாவை த் தவிர வேறு ஒரு ஆண் நெருங்கினால், உடலைச் சீண்டினால் எப்படி தடுக்க வேண்டும் என்பதை ஒரு காணொளி மூலம் சொல்லிக் கொடுக்கலாம். உடனே அப்பா கூட தவறாய் அணுகி விட்டார் என்று பதிவு செய்வார்கள். அப்படி அப்பாக்கள் தப்பாய் நெருங்குவது நூற்றில் ஒரு சதவிகிதமே...


எல்லாவற்றையும் விட, செல் போன் மற்றும் மெமரி கார்ட் விற்பனையில் ஒழுங்கு நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். கேமரா செல் விற்பனையில் சில விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும்...அப்படி வந்தால் நாம் பல சைபர் குற்றங்களை தடுக்க முடியும், குறைந்த பட்சம் குறைக்க முடியும்!

தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள்...பெருச்சாளியாட, குரங்காட எல்லாம் சற்று புறந்தள்ளிவிட்டு தமிழக மக்களின் தலையாய பிரச்சினைகளுக்கு குரல் கொடுங்களேன்...உங்களுக்கு புண்ணியமா போகும்...இதுவரை பாலியல் குற்றங்கள் செய்தவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? என்பது உலகிற்கு தெரிய வேண்டும்...மருத்துவ மாணவி நிற்பயாவிர்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் போராட்டம் செய்து விட்டு இப்போது ஐபிஎல் மேட்சில் பிசியாகி விட்டார்கள் என்பதே உண்மை. ஐபிஎல் முடிந்ததும் மீண்டும் பாலியல் குற்றங்களை எதிர்த்து போராடுவார்கள் என்று நம்புகின்றோம். முதலில் இந்த ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும்..

நாங்கள் காசு கொடுத்து வாங்கும் பேப்பர்ல கண்ட, கண்ட கபோதிகளோட பிறந்த நாள் வாழ்த்துப் படம் பாதிப் பக்கத்துக்கு வருது...
உனக்குப் பிறந்த நாள் னா நீ காசு கொடுத்து தனியா ஒரு பேப்பர் போடு...பெரிய பெரிய தலைவர்கள் பிறந்த நாளா? ரொம்ப சந்தோசம்...நாங்க தெரிஞ்சிக்கிறோம்....நாட்டு நடப்பு தெரியரதுக்குத் தான் பேப்பர்...அதுல பிறந்த நாள், சினிமா நடிகை படம் எல்லாம் எங்களுக்கு எதுக்கு? அதைத் தவிர வேற செய்தியே உங்களுக்கு கிடைக்கலியா?

கடுமையா மின்வெட்டு இருக்கு...ஆனா பெரும்பாலான தெருவுல, காலையிலே 10 மணிக்கு வரைக்கும் லைட்டு எரியுது....குடிநீர் குழாயிலே கக்கூஸ் தண்ணி வருது...ஊருக்குள்ளே கடுமையா போக்குவரத்து நெரிசல் இருக்கு....பள்ளி மாணவ, மாணவிங்க இலவச பஸ் பாஸ் வச்சிருக்கிறதால பஸ் ஸ்டாப்புல ஒரு பஸ்சும் நிக்க மாட்டேங்குது...இப்படி எத்தனையோ பிரச்சினை இருக்கே, அதையெல்லாம் போடுங்களேன்...போக்குவரத்து துறை யிலே நடக்கிற பிரச்சினையை எழுதுங்க..


இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருந்தா ங்கிறது எங்களுக்கு முக்கியமில்லை.....ஆனா அதைப் போட்டுத்தான் நீங்க கல்லா கட்டுறீங்க...நடிகை அஞ்சலியாம்...ஒரு பத்து நாளைக்கு பேப்பரு நல்லா சேல்ஸ் ஆகியிருக்கும்....கடைசியிலே அது என்ன ஆச்சு? இது இப்போ நாட்டுக்கு ரொம்ப தேவையா? எத்தனை குடும்பம் டாஸ்மாக்குல  தாலியை அறுத்திட்டு உக்காந்திருக்கு, அதைப் பத்தி செய்தி போடுங்களேன்....குடிச்சா எப்படி குடல் வெந்து போகும்னு படம் போட்டுக் காம்பிங்களேன்....நாட்டை திருத்துறதுக்கு பத்திரிகை நடத்துன காலமெல்லாம் எப்பவோ போயிடுச்சு! நேர்மையா இருக்கிற காவல்துறை அதிகாரிய பத்தி போடுங்க...சாதனை செஞ்ச அரசு மருத்துவரைப் பற்றி முதல் பக்கத்துல போடுங்களேன்...அரசு அதிகாரிய பத்தி போடுங்களேன்...மக்களும் தெரிஞ்சிக்குவான்களே...20 ரூவாய் லஞ்சம் வாங்குனத பேப்பருல போடுறீங்க...200 கோடி லஞ்சம் வாங்கினவங்கிட்டே போயி பிரஸ் மீட்டுக்கு பெர்மிசன் கேட்டுகிட்டு இருக்கீங்க...


பாலியல் குற்றம் செஞ்சவனுக்கு வாதாடுறதுக்கு ஒரு வக்கீல் கூட வரக் கூடாது....இந்திய கலாச்சாரம் ஈசிஆர் ரோட்டுல "ஈ"னு பல்லை இளிச்சிக்கிட்டு நிக்குது...அதை தடுக்க பத்திரிகை துறை முன்வரனும்....தமிழக கலாச்சாரம் டாஸ்மாக் குல தடம் புரண்டு தடுமாறிகிட்டு இருக்கு...இது எல்லாம் பத்திரிகை காரங்களுக்கு தெரியலையா?


கற்பழிக்கப்பட்ட பெண்ணோட குடும்பத்தை வளைச்சு வளைச்சு படம் எடுக்கிறீங்களே..கற்பழிச்சவனோட குடும்பத்தை வளைச்சு வளைச்சு பேப்பருல போடுங்களேன்...அப்போதான் தண்டனை குறையும்...பாதி வழக்குல கற்பழிச்சவன் முகத்தை மூடிக்கிட்டு கூட்டிக் கிட்டு போறாங்க...இது கற்பழிச்சவன் அப்பா, இது கற்பழிச்சவன் அம்மா இது அக்கா, இது அண்ணன், னு  பேப்பருல போட்டாத்தான் அவனுங்க கொஞ்சமாவது பயப்படுவாங்க...எல்லாவத்தையும் விட இவர்தான் கற்பழிச்சவனுக்கு ஆதரவா வாதாடப் போற வழக்கறிஞர் நு காம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்..!


அதை எல்லாம் செய்வாங்களா? நம்ம பத்திரிகை நண்பர்கள்.....!