பங்காளிங்க..

Tuesday, April 23, 2013

சில பத்திரிக்கைகாரங்க மட்டும் என்ன ஒழுங்கா?

டெல்லியில் மட்டுமா பாலியல் பலாத்காரம் நடக்குது....தமிழ்நாட்டிலும்தான்...உணர்வுபூர்வ தலைவர்கள் ஈழத்தில் நடந்த பாலியல் குற்றத்தைப் பகீரங்கமாய் எடுத்துரைத்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு யாருமே அந்த அளவிற்கு குரல் கொடுப்பதில்லையே....அது ஏன் என்றும் புரியவில்லை..

ஒரு தவறு என்று நடக்கும் போது டெல்லியில் நடந்தால்தான் அந்த பிரச்சினை பூதாகரமாக்கப் படுகின்றது. காரணம் கேட்டால் இந்தியாவின் தலைநகரத்தில் இந்த பிரச்சினை நடக்கின்றது என்று சொல்கின்றார்கள். ஒவ்வொரு முதலைமைச்சருக்கும் அவரவர் மாநிலம் முக்கியமானதே!

அவர்கள் மட்டும்தான் பெண்களா? குழந்தைகளா? நாம் பெற்றதெல்லாம் என்ன? ஆட்டு மந்தைகளா? நமது சகோதரிகள், குழந்தைகளும்தானே பாதிக்கப்படுகின்றார்கள்...அது ஏன் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஒரு பெண் இறந்த பிறகு அவளது போட்டோவிற்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மாலை போடுவதும், ஆறுதல் சொல்வதும் என்ன பிரயோசனம் ? டெல்லியில் நடந்த மருத்துவ மாணவி பாலியல் மரணத்திற்கு பிறகு அந்த பிரச்சினை முடிவு பெறவில்லை...அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள்....டெல்லி மருத்துவ மாணவி பாலியல் கொடுமை நடைபெற்ற அதே நேரத்தில் தமிழகத்தின் தூத்துக்குடியில் புனிதா கற்பழித்துக் கொல்லப் பட்டாள். அது ஏன் பத்திரிகை கண்களுக்கு பெரிய விசயமாக தெரியவில்லை?


ஒரு எழுத்தாளர், ஆளும்கட்சித் தலைவர் , எதிர்கட்சித் தலைவர் ஒருவர், மற்றும் சமூகநல ஆர்வலர். இவர்களை வைத்து விவாதம் நடத்தி வியாபாரம் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். பரபரப்பாய்  போகும் விவாதத்தில் ஒரு சிறிய விளம்பர இடைவேளை..என்று சொல்லிவிட்டு
ஒருவன் ஆக்ஸ் பெர்பியூம் போட்டதும் ஐந்தாறு பெண்கள் அந்த ஆணைத் துரத்திக் கொண்டு ஓடுவது போன்ற ஒரு கேவலமான விளம்பரம்...இப்படி பெண்ணை கேவலப்படுத்தும் விளம்பரங்களைப் போட்டுவிட்டு மீண்டும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களைப் பற்றிய விவாதம் தொடங்குகின்றது, எனது 6 வயது மகள் கேட்கின்றாள், ஏன் அவன் பின்னாடி எல்லோரும் ஓடுறாங்க? நான் என்ன பதில் சொல்லவேண்டும் அவளுக்கு, எனக்குத் தெரியவில்லை! ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுக் கொள்கின்றார்கள். எழுத்தாளர் மற்றும் சமூக நல ஆர்வலரை அதிகமாய் பேச விடுவதே கிடையாது. 

இதுவா இப்போது முக்கியம்.? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களை எப்படி காப்பாற்றுவது...அந்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பன போன்ற விவாதங்கள் மற்றும் அதற்க்கு முடிவுகள் கொடுத்தால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கிடைக்குமே!

காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது என்று குறைகூறும் பத்திரிகைகள் மட்டும் என்ன ஒழுங்கா? தூத்துக்குடி மாணவி பாலியல் பலாத்காரம், திருப்பூர் மாணவி பாலியல் பலாத்காரத்தை எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்த்தது?


டெல்லி மருத்துவ மாணவியின் மரணத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தது...அந்த முக்கியத்துவம் ஏன் நம் சகோதரி, மகள் , நம் தமிழச்சி புனிதாவிர்க்கு வழங்கப் படவில்லை...அவள் ஏழைப் பெண் என்பதலா?


என்ன செய்யலாம் ?


காவல்துறையில் தனிக்குழு அமைத்து பெண்களுக்கு, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்...


எப்படி  செய்வது?


அந்தந்த பகுதி காவல்துறையினர் அருகினில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு காணொளிகள் மட்டும் குறும்படங்களை வெளியிட்டு அந்த பெண் குழந்தைகளுக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கு தனித் தனியாக சொல்லிக் கொடுக்க வேண்டும், இது கட்டாயமாக்குதல் வேண்டும்.


என்னென்ன சொல்லிக் கொடுக்கலாம்?


துண்டுப் பிரசூரங்கள் சுத்த ஏமாற்று வேலை...இந்த காலத்தில் துண்டுப் பிரசூரங்களை யாருமே முழுதாய் படிப்பதில்லை...பாதி படிக்கும் போதே தூக்கி எறிந்துவிடுவார்கள் அல்லது கிழித்து போட்டு விடுவார்கள். அதுவே பள்ளி ஆரம்பிக்கும் முன் கடவுள் வழிபாடு தொடங்குவதற்கு முன் பாலியல் துன்புறுத்தல் என்பது என்ன? எப்படி பெண் பிள்ளைகள், பெண்கள் விழிப்பாய் இருக்க வேண்டும்..ஆண் பிள்ளைகள் என்னென்ன செய்யக் கூடாது? அப்படி செய்தால் என்னென தண்டனை என்று சொன்னால் நிச்சயம் அவர்கள் மனதில் நன்கு பதியும்! இது சாத்தியமற்ற செயல் கிடையாது..இதை நிச்சயமாக செய்யலாம்..


ஒரு நாளைக்கு இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையை அலைக்கழிப்பதை விட உருப்படியாய் இந்த விசயங்களுக்கு செலவிடலாமே! இதனை சொல்வதால் எந்த விதத்திலும் இந்திய கலாச்சாரம், தமிழக கலாச்சாரம் கெட்டழியாது என்றே நம்புகின்றேன்...


ஆண் , பெண் சமம் என்று போதிக்கும் மகளிர் அமைப்புகள் பெண்ணிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் உயரிய கற்பினை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று அவர்களும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மிக்க நல்லது. அறிமுக மில்லாத நபர் அல்லது அப்பாவை த் தவிர வேறு ஒரு ஆண் நெருங்கினால், உடலைச் சீண்டினால் எப்படி தடுக்க வேண்டும் என்பதை ஒரு காணொளி மூலம் சொல்லிக் கொடுக்கலாம். உடனே அப்பா கூட தவறாய் அணுகி விட்டார் என்று பதிவு செய்வார்கள். அப்படி அப்பாக்கள் தப்பாய் நெருங்குவது நூற்றில் ஒரு சதவிகிதமே...


எல்லாவற்றையும் விட, செல் போன் மற்றும் மெமரி கார்ட் விற்பனையில் ஒழுங்கு நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். கேமரா செல் விற்பனையில் சில விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும்...அப்படி வந்தால் நாம் பல சைபர் குற்றங்களை தடுக்க முடியும், குறைந்த பட்சம் குறைக்க முடியும்!

தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள்...பெருச்சாளியாட, குரங்காட எல்லாம் சற்று புறந்தள்ளிவிட்டு தமிழக மக்களின் தலையாய பிரச்சினைகளுக்கு குரல் கொடுங்களேன்...உங்களுக்கு புண்ணியமா போகும்...இதுவரை பாலியல் குற்றங்கள் செய்தவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? என்பது உலகிற்கு தெரிய வேண்டும்...மருத்துவ மாணவி நிற்பயாவிர்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் போராட்டம் செய்து விட்டு இப்போது ஐபிஎல் மேட்சில் பிசியாகி விட்டார்கள் என்பதே உண்மை. ஐபிஎல் முடிந்ததும் மீண்டும் பாலியல் குற்றங்களை எதிர்த்து போராடுவார்கள் என்று நம்புகின்றோம். முதலில் இந்த ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும்..

நாங்கள் காசு கொடுத்து வாங்கும் பேப்பர்ல கண்ட, கண்ட கபோதிகளோட பிறந்த நாள் வாழ்த்துப் படம் பாதிப் பக்கத்துக்கு வருது...
உனக்குப் பிறந்த நாள் னா நீ காசு கொடுத்து தனியா ஒரு பேப்பர் போடு...பெரிய பெரிய தலைவர்கள் பிறந்த நாளா? ரொம்ப சந்தோசம்...நாங்க தெரிஞ்சிக்கிறோம்....நாட்டு நடப்பு தெரியரதுக்குத் தான் பேப்பர்...அதுல பிறந்த நாள், சினிமா நடிகை படம் எல்லாம் எங்களுக்கு எதுக்கு? அதைத் தவிர வேற செய்தியே உங்களுக்கு கிடைக்கலியா?

கடுமையா மின்வெட்டு இருக்கு...ஆனா பெரும்பாலான தெருவுல, காலையிலே 10 மணிக்கு வரைக்கும் லைட்டு எரியுது....குடிநீர் குழாயிலே கக்கூஸ் தண்ணி வருது...ஊருக்குள்ளே கடுமையா போக்குவரத்து நெரிசல் இருக்கு....பள்ளி மாணவ, மாணவிங்க இலவச பஸ் பாஸ் வச்சிருக்கிறதால பஸ் ஸ்டாப்புல ஒரு பஸ்சும் நிக்க மாட்டேங்குது...இப்படி எத்தனையோ பிரச்சினை இருக்கே, அதையெல்லாம் போடுங்களேன்...போக்குவரத்து துறை யிலே நடக்கிற பிரச்சினையை எழுதுங்க..


இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருந்தா ங்கிறது எங்களுக்கு முக்கியமில்லை.....ஆனா அதைப் போட்டுத்தான் நீங்க கல்லா கட்டுறீங்க...நடிகை அஞ்சலியாம்...ஒரு பத்து நாளைக்கு பேப்பரு நல்லா சேல்ஸ் ஆகியிருக்கும்....கடைசியிலே அது என்ன ஆச்சு? இது இப்போ நாட்டுக்கு ரொம்ப தேவையா? எத்தனை குடும்பம் டாஸ்மாக்குல  தாலியை அறுத்திட்டு உக்காந்திருக்கு, அதைப் பத்தி செய்தி போடுங்களேன்....குடிச்சா எப்படி குடல் வெந்து போகும்னு படம் போட்டுக் காம்பிங்களேன்....நாட்டை திருத்துறதுக்கு பத்திரிகை நடத்துன காலமெல்லாம் எப்பவோ போயிடுச்சு! நேர்மையா இருக்கிற காவல்துறை அதிகாரிய பத்தி போடுங்க...சாதனை செஞ்ச அரசு மருத்துவரைப் பற்றி முதல் பக்கத்துல போடுங்களேன்...அரசு அதிகாரிய பத்தி போடுங்களேன்...மக்களும் தெரிஞ்சிக்குவான்களே...20 ரூவாய் லஞ்சம் வாங்குனத பேப்பருல போடுறீங்க...200 கோடி லஞ்சம் வாங்கினவங்கிட்டே போயி பிரஸ் மீட்டுக்கு பெர்மிசன் கேட்டுகிட்டு இருக்கீங்க...


பாலியல் குற்றம் செஞ்சவனுக்கு வாதாடுறதுக்கு ஒரு வக்கீல் கூட வரக் கூடாது....இந்திய கலாச்சாரம் ஈசிஆர் ரோட்டுல "ஈ"னு பல்லை இளிச்சிக்கிட்டு நிக்குது...அதை தடுக்க பத்திரிகை துறை முன்வரனும்....தமிழக கலாச்சாரம் டாஸ்மாக் குல தடம் புரண்டு தடுமாறிகிட்டு இருக்கு...இது எல்லாம் பத்திரிகை காரங்களுக்கு தெரியலையா?


கற்பழிக்கப்பட்ட பெண்ணோட குடும்பத்தை வளைச்சு வளைச்சு படம் எடுக்கிறீங்களே..கற்பழிச்சவனோட குடும்பத்தை வளைச்சு வளைச்சு பேப்பருல போடுங்களேன்...அப்போதான் தண்டனை குறையும்...பாதி வழக்குல கற்பழிச்சவன் முகத்தை மூடிக்கிட்டு கூட்டிக் கிட்டு போறாங்க...இது கற்பழிச்சவன் அப்பா, இது கற்பழிச்சவன் அம்மா இது அக்கா, இது அண்ணன், னு  பேப்பருல போட்டாத்தான் அவனுங்க கொஞ்சமாவது பயப்படுவாங்க...எல்லாவத்தையும் விட இவர்தான் கற்பழிச்சவனுக்கு ஆதரவா வாதாடப் போற வழக்கறிஞர் நு காம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்..!


அதை எல்லாம் செய்வாங்களா? நம்ம பத்திரிகை நண்பர்கள்.....!

Saturday, April 20, 2013

ஆம்னி பேருந்துகளின் அட்டூழியங்கள்...

சென்னை போன்ற பெருநகரங்களில் தனியார் வாகனங்கள் அரசுப் பேருந்துகளை விட அதிகம் இயங்கி வருகின்றது. இதில் இடைத்தரகர்கள் வேறு விடாப் பிடியாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். அது அவர்களது தினசரி வருமானம் என்றாலும் கூட சில சமயங்களில் பயணிகளுக்கு எரிச்சலையும், இடையூறுகளையும் உருவாக்கித்  தருகின்றது. எல்லோருக்கும் அந்த நேரத்தில் கோவம் வரும், ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததும் அதனை மறந்து போவார்கள்.

மக்களை கவரும் வகையில் வண்ண மயமான விளக்குகள், அரசுப் பேருந்துகளை விட வெகு விரைவினில் கொண்டு சேர்ப்போம் என்ற பொய்யான உத்திரவாதம், இப்படி நிறைய பித்தலாட்டங்கள்...வியாபார உத்திக்காக இப்படி செய்கின்றார்கள்..

ஆரம்பத்தில் இவர்கள் சொன்ன அத்தனை யும் தனியார் வாகனத்தில் இருந்தது. ஆனால் தற்போது அவர்களும் பயணிகளை மிக கேவலமாக நடத்துவதுதான் வேதனையாய் இருக்கின்றது. உடனே ஒரு சிலர் எங்கள் பேருந்து அப்படி இல்லை, நாங்கள் பயணிக்கும் பேருந்துதான் நம்பர் ஒன் , அவங்க அது தராங்க, இது தராங்க...என்று சொல்வார்கள். நான் சொல்வது அதனை தர மறுக்கும் ஓம்னி பேருந்துகளை மட்டுமே. அப்படி உங்களுக்கு திருப்தி தரும் வகையில் கொடுக்கின்றார்கள் என்றால் மிகவும் சந்தோசமே.

சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் அவரது மகளுக்கு உடல்நிலை சரி இல்லை என்று தகவல் வந்ததால் மதுரைக்கு கிளம்பி சென்றார். அரசுப் பேருந்தை விட ஆம்னி பேருந்து வேகமாய் போகும் என்று எண்ணி 9 மணிக்கு கிளம்பும் வண்டிக்கு சென்று அமர்ந்தார். நாங்களும் அவருக்கு உறுதுணையாய் இருக்க நாங்கள் அரசுப் பேருந்தில் மதுரைக்கு கிளம்பினோம்.

நாங்கள் வண்டி ஏறிய பிறகு பெருங்களத்தூரை தொட்டதும் அவருக்கு போன்  செய்தோம்., அப்போது அவர் தான் இன்னமும் கொயம்பெட்டிலேயே இருப்பதாக சொல்ல எங்களுக்கு ஆச்சரியம், நேரம் 10.10. 9மணிக்கு கிளம்ப வேண்டிய பேருந்து இன்னமும் கிளம்பவில்லை. ஆனாலும் தான் கரெக்டான நேரத்திற்கு மதுரை வந்து விடுவேன் என்று சொன்னார்

அதிகாலை 5.40க்கு நாங்கள் மதுரை சென்றடைந்தோம். பின்னர் நாங்கள் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து பேருந்து பிடித்து பெரியார் பேருந்து நிலையம் சென்று அடைந்தோம். 7.35க்கு அவரும் பெரியார் வந்து சேர்ந்தார். என்னவென்று விசாரித்தோம்...அவருடைய பேருந்து  லக்கேஜ் களை பேருந்து கூரை முழுவதும் ஏற்றிக் கொண்டு 10.30க்குத் தான் கிளம்பியதாம்.

ஒரு லக்கேஜ்கு கிடைக்கும் மரியாதை கூட பயணிகளுக்கு, பயணிகளின் உணர்வுகளுக்கு கொடுக்கப் படவில்லை என்று புலம்பினார். உண்மைதானே....இந்த வேதனையை அனுபவித்தவர்கள்  இதனை உணருவார்கள். அதிக கட்டணம், காலம் தாழ்த்திய பயணம், மன உளைச்சல் இதுதானே தற்போது தனியார் பேருந்துகளில் நடைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

வார இறுதி நாளாக இருந்தால் கூடுதலாய் 50 ரூவாய், பண்டிகை தினமாய் இருந்தால் அவர்கள் வாயில் எவ்வளவு வருகின்றதோ அதுதான் விலை. மக்களே கொடுக்கிறாங்க...நீ உன் வேலையை பார்த்து விட்டு போடா என்று சொல்கின்றீர்களா? ஒருநாள் உங்களுக்கும் அந்தப் பிரச்சினை வரும்...ஏனெனில் அவர்கள் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து சாதித்து விடுகின்றார்கள். பாதிக்கப்படுவது என்னவோ நாம்தானே...

ஒரே ஊருக்கு செல்லும்போது ஒரே வசதிகளை கொடுக்கும் இரண்டு தனியார் பேருந்துகளின் கட்டணம் மாறுபட்டு இருக்கின்றது. அவர்கள் என்ன திடீரென்று வானத்தில் பறந்து செல்வார்களா? யார் இதனை தட்டிக் கேட்பது? கட்டண நிர்ணயம் கண்டிப்பாக செய்தல் வேண்டும்.. அதுபோல முன்பதிவு செய்யப் படும்போது பயணிகள் கேட்கும் இருக்கைகளை கொடுக்க வேண்டும். ஆனால் கடைசி இருக்கைகளை பதிவு செய்து கொடுத்து விட்டு, முதல் இருக்கைகளை வண்டி கிளம்பும்போது வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் பெற்று கொடுப்பதும் தடுத்து நிறுத்தப் பட வேண்டும்..

முறையாய் பதிவு செய்து வருபவர்கள் கடைசி இருக்கையில் தள்ளப் பட்டு கடைசி நேரத்தில் வருபவர்களுக்கு முதல் இருக்கையை வசதியாய் கொடுக்கும் போது  அந்த பயணிகளின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இதற்க்கு பெயர் வியாபார உத்தி அல்ல...சுத்த அயோக்கியத்தனம்! அதனைத் தான் அவர்கள் தைரியமாக செய்து கொண்டிருக்கின்றார்கள். யார் கேள்வி கேட்க முடியும்...அவர்கள் பேருந்து  வெளித் தோற்றம் மிக அழகாய் இருக்கும், உள்ளே ஏறியதும் ஜன்னல் கண்ணாடி மூடாது, சீட் பெல்ட் வேலை செய்யாது, அல்லது சாய்ந்து கொள்ள வசதியாக இருக்கும் பட்டன் வேலை செய்யாது....கூடுதலாய் ரூவாயும் கொடுத்து, வசதி குறைவுகளோடு பயணிக்கும் எத்தனையோ பயணிகளை நாம் பார்த்துக் கொண்டுதானே வருகின்றோம்....

வீடியோ கோச் என்று போட்டிருப்பார்கள்...சிறிது நேரம் வீடியோ பெட்டி வேலை செய்யாதது போல் அவர்களே எரிச்சல் பட்டுக் கொள்வார்கள். அதன் பின்னர் மொத்தமாய் அனைத்து விட்டு எதுவுமே நடக்காதது போல் அமர்ந்து கொள்வார்கள். இதுவும் பல பேருந்துகளில் நடக்கின்றது.   யார் இதனை தட்டிக் கேட்பது? எத்தனை பயணிகள் வாயைத் திறக்காமல் போய்க்  கொண்டு வருகின்றார்கள்..

அரசுப் பேருந்துகளில் குறைவான கட்டணம், கூடுதல் நேரம் என்று சொல்பவர்கள் கொஞ்சம் இதனையும் சிந்தித்து பார்க்க வேண்டும்!

Friday, April 12, 2013

அப்பனுக்கும், பிள்ளைக்கும் அப்படி என்னதான்யா பிரச்சினை?

எப்போ பாரு ஏதாவது ஒரு விசயத்துல அப்பனுக்கும், பிள்ளைக்கும் ஆக மாட்டேங்குது....சமீபத்துல ஒரு குட்டிக் கதை படிச்சேன்....

எங்கே பிரச்சினை ஆரம்பிக்குதுனே தெரியலை?


அந்த கதையை படிங்க ....உங்களுக்கும் ஏதாவது புலப்படுதா னு சொல்லுங்க...


அப்பாவும் மகனும் பார்க் பெஞ்சுல உக்காந்திருக்காங்க...பையன் பேப்பரு படிச்சிக்கிட்டு இருக்கான்...அப்பா ரொம்ப வயசானவரு...கண் பார்வை வேற இல்லை...திடீருன்னு அந்த பார்க்குல ஒரு குருவி வந்து கீச், கீச் நு கத்துது..உடனே அப்பா பையன்கிட்டே என்னதுப் பா அது னு கேட்குறாரு...பையன் சிரிச்சுக்கிட்டே குருவி பா னு  சொல்ல அப்பா பேசாம உக்காந்திருக்காரு.திருப்பியும் அதே கீச், கீச் கேட்க அப்பா திருப்பியும் என்னதுப்பா அது? னு கேட்கவும் பையன் கொஞ்சம் ஏளனமா இப்போதானேப்பா  சொன்னேன்...குருவி பா, அதே குருவி திருப்பியும் கீச், கீச்னு கத்தவும் அப்பா திருப்பியும், மகனே ஏதோ சத்தம் கேட்குதுடா னு  சொல்ல மகன் சற்று எரிச்சலோடு குருவிப்பா, அதே குருவிதான் திருப்பி திருப்பி வருது....


அப்பாவிடம் மௌனம்....திருப்பியும் அதே சத்தம், அப்பாவிடம் இருந்து அதே கேள்வி? அவ்வளவுதான் மகனுக்கு கோவம் வந்தது...அறிவில்லை உனக்கு, ஒரு தடவை சொன்னா தெரியாதா? குருவி...இங்கிலீசுல ஸ்பாரோ னு  சொல்வாங்க..வயசாகிடுச்சே பேசமா உட்காருரியா என்று ஆத்திரத்தில் கத்தவும்....அப்பா எதுவுமே சொல்லாமல் வீட்டிற்குள் தட்டுதடுமாறி செல்கின்றார். போனவர் ஒரு டைரி யை எடுத்துக் கொண்டு வந்து மகனிடம் ஒரு பக்கத்தை காட்டி படிக்க சொல்கின்றார்.


மகனும் அதை படிக்கின்றான்., சத்தமா படி என்று சொல்ல, மகனும் அதனைப் படிக்கின்றான். அதில் அவர் எழுதி இருப்பது....நானும் எனது மூன்று வயது மகனும் பார்க் பெஞ்சில் அமர்ந்திருக்கும் போது அங்கே ஒரு குருவி வந்து அமர்ந்தது. அது கீச், கீச் ஒரு சத்தமிட்டது. ஒவ்வொரு முறையும் அது சத்தமிட்ட போது  எனது மகன் அது என்ன என்று கேட்க, நான் அவனை முத்தமிட்டு அது குருவி என்று சொன்னேன். அன்று மட்டும் அவன் 27 முறை கேட்டான்...நான் அந்த இருபத்தேழு முறையும் அவனை முத்தமிட்டு குருவி என்று பொறுமையாய் பதில் சொன்னேன். மனதிற்குள் மிக சந்தோசமாய் இருந்தது மீண்டும் அந்த நாள் எப்போது வருமோ என்று ஆவலை இருக்கின்றது என்று எழுதி இருந்தார்.


படித்த மகன் கண் கலங்கி விட்டான்..என்னை மன்னியுங்கள் அப்பா, என்று அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டான்...


எனது அப்பாவை நானும் இந்த அவசர உலகத்தில் நேசிக்க தவறி விட்டேன். அவர் கேட்கும் போது  பொறுமை இல்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். எல்லோருமே கிட்டத்தட்ட அப்படித்தான் நடந்துக் கொண்டிருக்கின்றோம் என்று நினைக்கின்றேன் அப்படி நடப்பவர்களுக்கு இது ஒரு பாடம் என்றே நம்புகின்றேன்...


வயதானவர்களை குழந்தைகளாக பாவிக்க வேண்டுகின்றேன்...நன்றி....

தயவு செய்து இதை அரசியல் ஆக்காதீங்க...மேல இருக்கிற படத்தோட சம்பந்தப் படுத்தி பார்க்காதீங்க னு  நியாபகப் படுத்தவே அந்த புகைப்படம்...

Monday, April 1, 2013

தமிழக காங்கிரஸ் கூண்டோடு டிஸ்மிஸ்.....பரபரப்பு செய்தி!!!

இனி தமிழீழம் என்ற ஒன்று வேண்டுமெனில் முதற்கட்டமாய் காங்கிரசை வேரோடு களைந்தெடுக்க வேண்டும். டெசோ மாநாடு தீர்மானம் தொடங்கும்போது ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூடாது என்று மத்திய அரசு சொன்னதும் இரவோடு இரவாக ஒட்டிய சுவரொட்டியில் கருப்பு மை கொண்டு ஈழம் என்ற வார்த்தையை அழித்த வெட்கங்கெட்ட திமுக இன்று காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றது. என் நாட்டில் என் மக்களுக்காக நான் ஈழம் என்றுதான் சொல்வேன்...அப்படி ஒரு கூட்டணி எனக்கு தேவையில்லை என்று சொல்ல நாதியில்லை.
இன்று அதே "ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி ஞானதேசிகன் மற்றும் தமிழக காங்கிரஸ்,  மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்று சுவரொட்டி அடித்ததை என்ன வென்று சொல்வது??.....இதை விட வெட்ககேடான விஷயம் காங்கிரசிற்கு இருக்க முடியாது..

மாணவர்கள் தமிழீழம் என்ற பிரச்சினைக்கு மட்டும் போராடக் கூடாது...காங்கிரஸ் என்ற கட்சியை எப்படி வேரறுப்பது என்ற கோணத்திலும் போராட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம் வழிக்கு வருவார்கள்.


இப்போதும் கூட தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் வடஇந்திய மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. கேரளா, கருநாடக, ஆந்திர  மாணவர்கள் பங்குபெறவில்லை.


மாணவர்கள் அவர்களாகவே முன்வந்து  போராட்டத்தில் குதித்து உள்ளார்கள். அதை கொச்சைப் படுத்துவதற்காக சில கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு வீதியில் களமிறங்கி இருக்கின்றது. உண்மையில் சொல்லப் போனால் தமிழ் நாட்டில் பல பத்திரிகைகள் அமோக வசூலை தொட்டிருக்கின்றன என்பது கண்கூடாகவே தெரிகின்றது. பெரும்பாலும் பத்திர்க்கைகள் வியாபார நோக்கினில் மட்டுமே செய்திகளை வெளியிடுவது அப்பட்டமாகத் தெரிகின்றது. உணர்வுப்பூர்வமாய் யாரும் செய்திகள் வெளியிடவில்லை அப்படி பத்திரிகை, மாணவர்கள், மற்றும் அனைத்து துறையினரும் சேர்ந்து  போராடினால்தான் இந்த போராட்டம் வெற்றி பெறும்.


இந்த போராட்டத்தில் யாருக்கு தகுதி கிடையாது..

காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு சுத்தமாக தகுதியே கிடையாது என்பது பரவலாக பேசப் படும் செய்தி.   அதிமுக மட்டும் என்ன ஒழுங்கா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். ஆரம்பத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் சொன்னதும் இந்த செயலலிதாதான்...ஆனால் அதே செயலலிதா இன்று ராஜபக்சேவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அது அரசியல் நாடகமோ அல்லது நிசமோ??? ஆனால் அந்த நாடகத்தை கூட நடத்த வக்கில்லாமல் உதவி செய்வது போல் நம்பவைத்து கழுத்தருத்தது யார்? ஒரு கட்டத்தில் குடும்ப மானமா? கட்சி மானமா? என்ற கேள்வி வந்த போது என்ன செய்தது திமுக என்பது உலகறிந்த விசயமே? இப்போது கூட ஜெனீவாவில்  நடந்த தீர்மானத்திற்கு இந்திய தெரிவித்த விருப்பமில்லா ஆதரவு கூட மாணவர்கள் போராட்டத்தின் வெளிப்பாடுதானே தவிர கலைஞர் நடத்திய டெசோ காமெடி மாநாட்டிற்கு அல்ல...என்பதை மாணவர்கள் நன்கறிவார்கள். அவர் என்னமோ நான் டெசோ மாநாடு நடத்தினதாலே தான் இந்த ஆதரவு என்று படம் காட்டிக் கொண்டிருக்கின்றார்.


இன்னமும் டி.ஆர் பாலு எங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றார்? ராஜினாமா செய்துவிட்டாரா என்று தெரியவில்லை...அழகிரி தனியாக சென்று ராஜினாமா செய்கின்றார். அவர்களுக்குள்ளாகவே ஒரு குழப்பம், தலைவர் வழக்கம் போல ராஜினாமா என்று சொல்வார், ஆனால் செய்யமாட்டார் என்று எதிர்பார்த்து காத்திருப்பது போல் ஒரு பரிதவிப்பு.

இன்று ஈழத்தமிழம் மலர வேண்டுமெனில் அதற்க்கு முதலில் ராஜபக்சேவிற்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும்...மத்தியில் ஒரு கூமுட்டை அரசியல்வாதி விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று இலங்கைக்கு வக்காலத்து வாங்கி  அவர்கள் ஏன் பாகிஸ்தான் இந்திய மண்ணில் விளையாட அனுமதிக்க வில்லை???


தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும், போராடும் மாணவர்கள் சிந்திக்க வேண்டும்...மாணவர்களே....உங்கள் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க சில சாதித் தலைவர்கள் வருவார்கள்...உங்கள் எதிர்காலத்தில் அக்கறை உள்ளவர்கள் போல, உங்கள் கல்வியில் அக்கறை உள்ளவர்கள் போல நடிப்பார்கள். நாம் அறவழிப் போராட்டத்தில் இறங்கி இருக்கின்றோம். அது தொடர வேண்டும். எந்த நாய் வந்து தடுத்தாலும் உங்கள் முயற்சியில் இருந்து பின் வாங்காதீர்கள்.. நீங்கள் சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றீர்கள். நமது மீனவ சகோதரர்களை காப்பாற்றுவோம்...குறைந்தது உங்கள் போராட்டம் அங்கே முள்வேலிக்குள் இருக்கும் நமது சகோதர, சகோதரிகளுக்கு ஆறுதலாய் இருக்கும்...எல்லா மாணவர்களும் சானல் 4 வெளியிட்ட வீடியோ காட்சிகளை சுவரொட்டிகளாக எடுத்து ஓட்டுவோம். சினிமா சுவரொட்டிகளோ, ஐபிஎல் சுவரொட்டிகளை புறந்தள்ளுவோம்...ஈழத் தமிழச்சி மார்பு அறுந்து துடித்த காட்சிகளை கண்களுக்குள் கொண்டு வாருங்கள்...காங்கிரசை நிரந்தரமாய் அழிப்போம்...காங்கிரசிற்கு துணை போய் தமிழகத்தை அசிங்கப்படுத்திய, ஈழத் தமிழனை நம்பவைத்து ஏமாற்றிய திமுகவிர்ற்கு பாடம் புகட்டுவோம்..


உங்களுக்குள்  சாதி வெறியினை தூண்டுவார்கள், பணக்கார கல்லூரி, ஏழை கல்லூரி என்று பிரித்து பார்ப்பார்கள்...உங்களுக்குள் திடீரென அவதாரமெடுக்கும் மனிதர்களை கண்காணியுங்கள்...நிச்சயம் மத்தியில் இருந்து வெளியே வந்திருக்கும் திமுக போன்ற கட்சிகள் உங்களோடு கலந்து வன்முறையை தூண்டுவார்கள். உங்கள் போராட்டம் இதுவரை உலகமக்களை திரும்பி பார்க்க செய்திருக்கின்றது. மாணவர் சக்தி மகத்தான சக்தி...