பங்காளிங்க..

Friday, June 21, 2013

செம்மொழியா இது?

நண்பர்களே, 
பிளாக்ஸ்பாட் போன்ற புதிய வசதி ஒன்றை சமீபத்தில் கண்டேன்....அது தமிழ்மொழி.காம்...உங்கள் பதிவுகளை அதனுள் ஏற்றுங்கள்...பெரும்பாலான கல்லூரி பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் திரைப்பட கதை எழுத்தாளர்கள் அதனை கவனித்து வருவதை அறிந்தேன்....

இணையதள முகவரி www.thamizhmozhi.com
அல்லது 

வாழ்த்துக்கள் !!!

Friday, June 14, 2013

காளஹஸ்தியில் களவாடும் கபோதிகள்!

சென்னையை அடுத்துள்ள காளஹஸ்தியில் தமிழர்களும், ஆந்திர மாநிலத்தவரும் வசிக்கின்றார்கள். ஸ்ரீ காளஹஸ்தி  ஆந்திர மாநில மற்றும் தமிழக எல்லையில் இருக்கின்றது. இது ராகு-கேது பரிகார பூஜைக்கு பெயர் பெற்ற கோயிலாகும். இங்கே ஸ்ரீ காள ஹத்தீஸ்வரர் மற்றும் ஞானபிரசுன்னாம்பிகை யும் வீற்றிருக்கின்றார்கள். இக்கோயிலில் சுமார் 500 வகையான லிங்கங்கள் காட்சியளிக்கின்றன. அது மட்டுமல்லாமல் ராகு-கேது ஸ்தலமும் இங்குதான் அமைந்திருக்கின்றது. வாழ்க்கையில் வேலையின்மை, திருமணத்தடை, கல்வித்தடை, சர்ப்ப தோஷம், குழந்தையின்மை மற்றும் எடுத்த காரியங்களில் எல்லாம் தடையாய் இருப்பவர்களுக்கு இங்கு பரிகாரம் செய்யப் படுகின்றது.

சரி நல்ல விசயம்தானே...இதில் என்ன களவாணித்தனம் என்று யோசிக்கின்றீர்களா? களவாணித்தனம் கோயிலுக்குள் அல்ல, கோயிலுக்கு வெளியே நடக்கின்றது. கோயிலுக்கு உள்ளே நுழையும் முன்னரே வெளியே இருக்கும் வியாபாரிகள் பூக்கள், அர்ச்சனைத் தட்டுகளை விற்கத் தொடங்குகின்றார்கள். இதில் என்ன தவறு வியாபாரம்தானே செய்கின்றார்கள் என்றுதானே யோசிக்கின்றீர்கள். வியாபாரம்தான் ஆனால் அடாவடியான வியாபாரம்...

இது யாரிடமும் கேட்டு எழுதும் கட்டுரை அல்ல..இது எனது சொந்த அனுபவமே..நானும் என் மனைவியும் கோயிலுக்கு சென்றோம். மிகுந்த வருத்தத்தில் நிதி பற்றாக்குறையில் மனவேதனையோடு இறைவனைத் தேடி சென்றோம். சென்னையில் இருந்து கிளம்பினோம். பேருந்து கட்டணம் ஒரு நபருக்கு 80 ரூ வீதம் 160 ரூ கொடுத்தோம். 

கோயிலுக்குள் நுழைந்ததும் ஒரு வயதான வியாபாரி எங்களிடம் பரிகார பூசையா அல்லது அர்ச்சனையா என்று கேட்க அப்பாவியாய் நாங்கள் பரிகார பூஜை என்று சொல்ல உடனே ஒரு அர்ச்சனைத் தட்டை எடுத்துக் கொடுத்து உள்ளே தீபம் ஏற்றுங்கள் ராகு, கேதுவிற்கு மாலை போடுங்கள் என்று சொல்ல நான் வேண்டாம் என்று சொல்ல கோயிலுக்கு வந்து மாலை வேண்டாம் என்று சொல்ல கூடாது, அப்புறம் நினைச்ச காரியம் நல்லபடியா முடியாது என்று அபசகுனமாய் சொல்ல நான் பதறிப் போய் வேறு வழியின்றி வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தோம். உள்ளே நுழைந்த மறு வினாடியே ஒருவர் எங்களிடம் வந்து வலது புறம் இருக்கும் விநாயகரை வழிபட்டு சென்றால் எல்லா பீடைகளும் விலகிச் செல்லும் என்று சொல்ல சரி பிள்ளையாரை கும்பிட்டு செல்வோம் என்று உள்ளே செல்லவும் ஒருவன் பின்னாடியே வந்து தாலி பாக்கியம் காக்கும் பிள்ளையார், அவருக்கு மஞ்சள் கயிறும், அருகம்புல் மாலையும் போடுங்கள் என்று சொல்லவும் எனது மனைவியும் நானும் இரண்டு  கயிறு வாங்கி மாலை சாத்தினோம் 

விராலி மஞ்சள் கட்டிய ஒரு கயிறு எவ்வளவு இருக்கும் என்று நினைக்கின்றீர்கள். நீங்கள் 30 அல்லது 40 என்று நினைத்தால் என்னைப் போன்ற முட்டாள்கள் ஆகி விடுவீர்கள். அவன் கேட்டத் தொகை ஒரு (வில்வ இல்லை, ரோஜா இதழ்கள், மற்றும் பிள்ளையாருக்கு போட்ட மஞ்சள் கயிறு மற்றும் அருகம்புல் மாலைக்கு) ரூவாய். 150 என்று 300 கொடுங்கள் என்று சொல்ல அரண்டு போனோம். சென்னையில் இருந்து 99 கிலோமீட்டர் தூரம் கொண்ட கோயிலுக்கு பேருந்து கட்டணம் ரூ. 80. வெறும் இரண்டு பிளாஸ்டிக் பையினில் வாங்கிய பூ மற்றும் ஒரு மஞ்சள் கயிறுக்கு விலை 300.

சற்று அதட்டலாகவே கேட்டேன்...என்ன இது பகல் கொள்ளையாக இருக்கின்றதே...அவ்வளவு நேரம் தமிழில் பேசிக் கொண்டிருந்தவன் தெலுங்கினில் பேசத் தொடங்கினான். கோயிலுக்கு வந்திட்டு பணத்தை பார்க்காதே...அப்புறம் நீ நினைக்கிறது நடக்காமலே போயிடும்.... இதில் அவனது கூட்டாளியின் சாபம் வேறு? நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே இன்னொரு குடும்பம் மற்றும் ஒரு ஆந்திர தம்பதியினரும் அவனிடம் பூ வாங்கிவிட்டு நொந்து போய்  வந்தார்கள். வேறு வழி இல்லாமல் பூக்களை வாங்கிக் கொண்டு சந்நிதியை நோக்கி நடந்தோம். கோயிலின் உள்ளே தேவஸ்தான தகவல் பலகை ஒன்று எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதில் ராகு-கேது பரிகார பூஜை க்கு ரூவாய் 300, சிறப்பு ராகு-கேது பூஜை ரூ. 750 மற்றும் ஒரு சிறப்பு ராகு-கேது பூஜை ரூ. 1500 என்றும் ரூவாயை கட்டியதும் உள்ளேயே தேங்காய், எலுமிச்சை வெற்றிலை, நவதானியம் மற்றும் வெள்ளியால் ஆன ஐந்து தலை நாகம் மற்றும் ஒரு தலை நாகம் வழங்கப்படும் என்றும் கட்டாயமாக வெளியில் இருந்து கொண்டு வரைப்படம் பூக்கள் அர்ச்சனைக்கு அனுமதிக்கப் படமாட்டாது என்று போடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் உறைந்து போனோம். அப்படி எனில் வாங்கிய பூக்களை என்ன செய்வது? என்று கேட்டதற்கு வெளியில் இருந்து போடப்படும் பூக்களால் உங்கள் பரிகாரம் நிறைவேறாது என்று சொல்லவும் துக்கம் தொண்டையை அடைத்தது. 300 ரூவாயை சுளையாய் ஏமாற்றி விட்டார்களே...

சரி பூஜையை முடித்ததும் அவனிடம் போய்  சண்டை போட வேண்டும்  என்று நினைத்துக் கொண்டு கோயிலில் கொடுத்த பூக்களை வைத்து பரிகார பூஜை செய்தோம்...

இந்த வியாபார களவாணிகள் செய்யும் இந்த தொடர் வழிப்பறி கொள்ளை கோயில் நிர்வாகத்திற்கு தெரியாமல் இல்லை...ஆனாலும் கண்டு கொள்ளாதது போல் இருக்கின்றார்கள். பூஜை முடித்து வெளியே வந்து பார்த்த போது  அவர்களை காணவில்லை. அவர்களது நோக்கமானது வரும் பக்தர்களிடம் பொருட்களை விற்று விட்டு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு வெளியே வரமாட்டார்கள். காரணம் ஒரு மணிநேரத்தில் பூஜை முடிந்ததும் தலைமறைவாகி விடுகின்றார்கள் 

இந்த விவகாரம் கோயில் நிர்வாகத்திற்கும் தெரியாமல் இல்லை...ஆனால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி பக்தர்கள்தான்...பெண்களிடம் தாலி பாக்கியம் என்று பேசுகின்றார்கள், தம்பதியிரிடம் குழந்தை பாக்கியம் என்று சொல்கின்றார்கள்...இளைஞர்களிடம் திருமண மற்றும்  வேலை   வேண்டுமா, இல்லேனா கிடைக்காது என்பது போல மிரட்டி வியாபாரம் செய்கின்றார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இவர்களை கோயில் நிர்வாகம் இனிமேலாவது கண்டிக்க வேண்டும் அல்லது கோயில் அறிவிப்பு பலகையை கோயிலின் வெளியே மக்கள் பார்வை படும்படி வைக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை...