பங்காளிங்க..

Friday, October 18, 2013

ஊதியம் தராமல் ஏமாற்றும் நிறுவனங்கள் - அதிர்ச்சித் தரும் தகவல்கள்

தற்போது நிறைய ஐடி மற்றும் பிபிஒ நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றுள் எது நம்பிக்கைக்குரியது? எது போலித்தனமானது என்று கண்டுபிடிக்க முடியா சூழ்நிலை உருவாகி உள்ளது,.

ஒரு நிறுவனம் எப்படிப் பட்டது என்பதை தெரிய வேண்டுமானால் அதில் வேலைக்கு சேர்ந்த பின்புதான் நிறுவனத்தின் முழு விபரம் தெரிய வரும். எப்படியாவது வேலை கிடைத்து விடும் என்று நம்பிக்கையோடு போராடி வேலைக்கு வருபவர்களிடம் வேலையை வாங்கிக் கொண்டு கடைசியில் சம்பள நாள் அன்று அவர்களை அழைத்து நீங்கள் ஒரு மாதமாய் வேலை பார்க்கவில்லை, அதனால் சம்பளம் தர முடியாது என்று சொல்லி அவர்களுடைய வாழ்க்கையைச்சீரழிப்பது தற்போது வாடிக்கையாகி வருகின்றது.

அந்த ஊழியர் ஒரு மாதமாய் வேலை பார்க்கும் போது எதுவுமே வாய் திறப்பதில்லை. இறுதியாக சம்பள நாள் வரும்போது சம்பளம் வரும் என்று அந்த குடும்பமே எதிர்பார்க்கும் நாளில் அந்த ஊழியரை தரக்குறைவாக பேசி சம்பளம் இல்லை என்று சொல்லி வெளியேற்றும் கலாச்சாரம் பரவி வருகின்றது,

அந்த முதலாளி அந்த ஊழியரின் குடும்ப சூழ்நிலையை  பற்றிக் கவலைப் படாமல் வெளியேற்றுவது மிகவும் கண்டனத்துக்கு உரிய விசயமாகும். வேலை இல்லாமல் சென்னையில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருக்கின்றார்கள். இவர்களுடைய பலகீனத்தை தனது பலமாக கொள்வதை இந்த மாதிரியான கீழ்த்தரமான முதலாளிகள் வைத்து உள்ளார்கள். அவர்களைப் பொருத்தவரையில் வந்த வரை லாபம். என்ன கத்திவிட்டு, சாபம் விட்டுச் செல்வான், சாபம் விட்டால் சாபம் விடட்டும் என்று கண்டு கொள்ளாமல் செல்கின்றார்கள்.

நான் ஏன் இதை எழுத வேண்டும்....நானும் சென்னையில் பாதிக்கப் பட்டேன்...நல்லவன் என்று நம்பி ஏமாந்து போனேன்...சேர்ந்த வுடனேயே எனக்கு நான் சேர்ந்ததற்கு அடையாளமாய் ஒரு கடிதம் கொடுங்கள் என்று சொன்னேன்...தரவில்லை...எப்போது கேட்டாலும் நாளை, நாளை என்று தள்ளிக் கொண்டே சென்றார்கள். கடைசியில் வேலை பார்த்து 16 நாட்கள் ஆனது.  அடுத்து 10 நாட்களும் ஆனது. ஆக 26 நாட்கள் ஆகி விட்டது. 1ம் தேதி முதல் சார் ஆப்பர் லெட்டெர் கொடுங்க வீட்டுல எதிர்பாக்குறாங்க, என்று கேட்டால் பிரிண்டர் ரிப்பேர் என்று சொல்ல அப்படியே தள்ளி தள்ளி போனார்கள். இறுதியில் தேதி 10 ஆனது...வீட்டினில் ஏற்பட்ட குடைச்சல் தாளாமல் நேராக சிஏஒ என்ற பெயரில் இருந்தவனிடம் சென்று கேட்ட போது ஆபர் லெட்டெர் வாங்கித்தான் வேலை பார்ப்பேன் என்றால் அப்படி ஒரு ஊழியன் எனக்குத் தேவை இல்லை என்று சொல்ல அப்படியே இடி வாங்கியதை போல உணர்ந்தேன், இந்த இழவை முன்னாடியே சொல்லி இருந்தால் நான் அன்றே வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு போயிருப்பேனே...

சரி பதினைந்து நாள் வேலைப் பார்த்த சம்பளத்தை கொடுங்கள், வீடு வாடகை கொடுக்க வேண்டும் என்று கேட்டால் எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கும் போது உனக்கும் கொடுப்பேன்...அது மட்டுமில்லாமல் நீ வேலை பார்த்த 15 நாளில் எனக்கு 2 லட்சம் வருமானம் வந்திருக்க வேண்டும், ஆனால் எனக்கு எதுவுமே வர வில்லை என்று சொல்லவும் இடி மேல் இடி விழுந்தது போல இருந்தது எனக்கு!

15 நாளில் நான் இரண்டு லட்சம் வருமானம் கொடுப்பவனாக இருந்தால் நான் சிஏஒ ஆகிருக்க மாட்டேனா? உன்னை வந்தா தாங்கி இருப்பேன்....

சரி பொறுமையாக இருப்போம், பொறுமையாக கேட்போம் என்று எண்ணி கிளம்பினேன்...நான் பொறுமையாய் இருப்பேன்..எனது குடும்பம் எப்படி பொறுக்கும்? என் வீட்டினில் நிதமும் பிரச்சினை துவங்கியது, பக்கத்து வீட்டுக்காரர்கள் பஞ்சாயத்துக்கு வந்தார்கள், மீண்டும் அவரை தொடர்பு கொண்டு பேசினேன்...ஈ மெயில் அனுப்பினேன்...பதில் வரவில்லை....எனது நிலையை நொந்து என் நண்பனிடம் பகிர்ந்து கொள்ள அவர் என் சார்பாக மெயில் அனுப்பினார்...உடனே அவரிடம் நான் சம்பளம் தர மாட்டேன் என்று சொல்ல வில்லை, சிறிது காலம் வேண்டும் என்று சொல்லி பதில் அனுப்பினான் அவன். மீண்டும் சிறிது காலம் பொறுத்தேன்...என் மனைவி வழி குடும்பத்தார் , என் குடும்பத்தார் என் மீது சந்தேகப் படத் தொடங்கினார்கள்.

அதன் பின்னர் எனது உடன் பிறந்த சகோதரர் அவனை தொடர்பு கொண்டு பேச மறுநாளே சம்பளம் தருகின்றேன்...உங்கள் தம்பியை வர சொல்லுங்கள் என்று சொல்ல அலுவலகம் சென்றதும் அந்த சி ஏ ஒ வின் மனைவி பேசவும் நானும் பேசினேன்....எனக்காக பரிந்து பேசியவர்களை எல்லாம் மிக தரக்குறைவாய் பேசினாள். அண்ணனை பேசியபோது சுர்ரென்று இருந்தது. சம்பளம் என்று கேட்டதும் அவன் மனைவியை விட்டு பேச வைத்தான் அந்த ஆம்பிளை. 

அப்போது அவள் வேலையை விட்டு போனதும் சம்பளம் கொடுக்கணும்னு ரூல்ஸ் கிடையாது என்றாள்....இவ்வளவு  ரூல்ஸ் பேசும் அவள் வேலைக்கு சேர்ந்ததும் ஆபர் லெட்டெர் கொடுக்கணும், என்று அறிவில்லாமல் பேசியது வேடிக்கையாக இருந்தது....

அதுமட்டுமிலாமல் எனக்கு சம்பளம் வரவில்லை என்று நான் நிறுவனத்தில் வேறு யாரிடமும் பேசக் கூடாது என்று கத்தினாள், ஏமாந்தவர்கள் நிச்சயம் தனது பிரச்சினையை வேறு ஒருவரிடம் பகிர்வது என்பது இயல்புதானே. அதுமட்டுமில்லாமல் வேலையை விட்டு வந்த பிறகு அவளுக்கு என் சுதந்திரத்தில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பதை அவள் யோசிக்கவில்லை. 

முதலில் கேட்கும் போது |பிச்சை காசு அதை வச்சு நான் என்ன நாக்கா வழிக்க போறேன் என்று பேசியவள் இன்று எனது பிச்சை காசினில்தான் குடும்பம் நடத்துவது எனக்கு சந்தோசமாகவே இருக்கின்றது. வாழ்க அவள்....எனது பத்தாண்டு கால வேலை அனுபவத்தில் முதல் மோசமான அனுபவம்.....

நான் தற்போது சம்பளம் முறையாக கொடுக்கின்ற ஒரு நியாயமான நிறுவனத்தில் நல்லபடியாக பணிபுரிகின்றேன். எனது மோசமான அனுபவத்தை அந்த நிறுவனத்தில் சொன்ன போது  சென்னையில் இப்படி ஒரு நிறுவனமா என்று ஆச்சரியப்பட்டார்கள்....

எனக்காவது பரவாயில்லை, வெறும் 16 நாள் சம்பளம் மட்டுமே...நிறைய பேருக்கு 2 மாதம், 3 மாதம் வரை சம்பளம் வழங்கப் படவில்லை என்பதே வேதனைக்குரிய விஷயம்......