பங்காளிங்க..

Thursday, September 28, 2017

234 கேமிரா, 234 தொகுதி, பிக் பாஸ் மோடி வழங்கும் கமல் CM, ஓவியா கொபசெ......

ஆற்றினை தெர்மோகோலை வச்சு மூடுறானுங்க! துணிய துவைச்சிட்டே இருக்காதீங்க, நொய்யல் ஆத்துல சோப்பு நுரையா வருதிலே,  என்னடா நடக்குது தமிழ்நாட்டுலே,  இப்படியெல்லாம் உள்ள அறிவு மேதாவிகளை தமிழ் நாட்டு அமைச்சர்களாக்கி இருக்கிறோமே! எல்லாம் உங்களை சொல்லணும்! 
ஆக்கப்பூர்வமான அமைச்சர்களை நாம் ஆட்சி கட்டிலில் அமரவைத்திருக்கின்றோம் என்று நினைக்கும் போது உடம்பெல்லாம் பூரித்து போகின்றது. ஒரு வார்த்தை கூட கோர்வையாக பேசத் தெரியாத கட்சி எம்எல்ஏக்களை கட்டுப்படுத்த முடியாத ஒரு முதலமைச்சர், 

தமிழ்நாட்டு அரசியல் தகிடுதத்தம் போட்டு கொண்டிருக்கிறது! நாட்டு பிரச்சினைகள் தலைக்கு மேல் குவிந்து கிடக்க சீரழிந்து போனது தமிழகம்! 

மீண்டும் தலைதூக்கும் வழிப்பறி கொள்ளைகள், திருட்டு சம்பவங்கள், லைசன்ஸ் அசலை கொண்டு வாங்க, இதனால் நாடு பொருளாதாரம் உயர்ந்து விடும் என்று சொல்லும் அதிமேதாவிகள், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே உள்ள உறவு தினமும் சீரழிந்து வருகின்றது, 

இதுவரை எத்தனையோ விளக்கம் கேட்டும் விளக்கம் அளிக்க முடியாமல் தவிக்கும் அப்போல்லோ, மக்கள் தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், ஹாஸ்பத்திரியில் என்ன நடந்தது என்று உங்கள் ஜெயா தொலைக்காட்சியிலேயே போடலாமே? மக்கள்தானே உங்கள் கடவுள், மக்களுக்கு இதை போட்டு காட்ட வேண்டியதுதானே, தேவைப்படும் நேரத்தில் தேவையான இடத்தில் போட்டுக்காட்டுவோம் என்று சொல்கின்றீர்களே? 

ஏன் இன்னும் வீடியோ எடிட்டிங் செய்யபடவில்லையா? ஏதோ ஒரு மோசமான விவகாரம் நடந்தேறி இருக்கிறது? அது மட்டும் உறுதி! முன்னுக்கு பின் முரணான தகவல்கள், ஒரு நோயாளியாகத்தான் இருந்தாரா? அல்லது நோயாளி ஆக்கப்பட்டாரா? என்ன நடந்தது? 

நாட்டு பிரச்சினைகள் நாலா பக்கமும் நாறி கொண்டிருக்க இங்கே கேமிராக்கள் இருந்ததா இல்லையா, என்று விவாதக் களம் ஓடிக்கொண்டிருக்கிறது.  கேமிரா தட்டுப்பாடு என்றால் கமலஹாசனிடம் சொல்லி பிக் பாஸ் கேமிராவை வாடகைக்கு எடுத்திருக்கலாம்! ஒரு வீட்டிற்கு 30 கேமிராக்கள் தேவையா? 

அதுவும் கூத்தாடிகளை வைத்து கூத்தடித்து கொண்டிருப்பதையும் மக்கள் பார்த்து கொண்டுதானே இருக்கிறார்கள். கமல் ஆட்சிக்கு வந்தால் தெருவுக்கு 300 கேமிராக்கள் வைத்து சோதனை செய்வாரோ?  

ரஜினிக்கு பிஜேபி சரியாக இருக்கும், என்னோடு வராதீங்க என்று அவர் சொல்ல, ரஜினி வழக்கம் போல மவுனம் சாதிக்கின்றார், ஏதோ அடுத்த  வாரமே கட்சியை ஸ்டார்ட்  செய்யுற மாதிரி போட்டோவுக்கு போசெல்லாம் கொடுத்தாரு, 
ஆனா 30 கேமிரா வச்சு ஆட்சியை பிடிச்சிருவாரு போல கமலஹாசன், மக்களை சிந்திக்க விடாமல் செயல்பட்டு வருகிறது ஒரு குழு, கமல் வந்தா நல்லா செய்வாரு, என்று மக்களை பேச வைக்க முயற்சிகள் நடக்கிறது. அவர் பாயிண்ட்டா பேசுறாருன்னு ஒரு பில்ட்அப் வேற, தமிழ்மணத்திலே ஆயிரக்கணக்கில் வலைப்பூ வச்சிக்கிட்டு அருமையா பேசுறவங்க இருக்காங்க, 

மக்கள்தான் விழித்தெழனும், இழவு காத்த கிளி மாதிரி ஏகப்பட்ட கட்சிகள், காட்சிகள், ஈழத்தமிழன் பிரபாகரன் செத்த போதும் இப்படித்தான் இருந்தோம், ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் செத்த போதும் இப்படித்தான் இருந்தோம், இன்னிக்கு அம்மா செத்திட்டா, அனிதா செத்திட்டா, விஷ்ணுபிரியா செத்திட்டான்னு சொன்னா மட்டும் விழிச்சிடவா போறோம்!

நீட் தேர்வுக்கு பரிந்துரைச்சவங்க, மீத்தேன் திட்டத்துக்கு பரிந்துரைச்சவங்களே அப்படி ஒரு சம்பவம் நடக்காத மாதிரி அவங்களே போராடுறாங்க பாருங்க, கலக்குறாங்க போங்க! சாமானியனை சட்டினியாக்காம விட மாட்டாங்க....

கேஸையும் போட்டுட்டு திருப்பி அதே கேஸுக்கு எதிராவே போராடுறதும் இருக்குது பாருங்க, அருமை, அருமை....

அந்த அம்மா இருக்கிறப்ப ஒருத்தன் கூட ஊருக்குள்ளே எட்டி பார்க்க முடியாது, அந்த அம்மா போயிருச்சானு கன்பார்ம் பண்ண பிறகுதான், சமாதிக்குள்ளே இருந்து வந்திருவாங்களோன்னு ஒரு பயம் இருந்துகிட்டுத்தான் இருந்துச்சு, 

அம்மா வாழும்போது ஆணவக்காரி, திமிர் பிடித்தவள் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று அந்த அம்மா இல்லாததை நினைத்து கண்ணீர் விட்டிருப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். 

அவள் சரியான தலைமையை அடையாளம் காட்டாமல் மரணமடைந்து விட்டார்கள்  என்று சொல்லும் நபர்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் மரணமடைய வில்லை, மரணமடைய செய்து விட்டார்கள். தங்க முட்டையிடும் வாத்து ஒவ்வொரு முட்டையாக இட்டு கொண்டிருந்தது, அதை ஒட்டுமொத்தமாக அறுத்து வாத்தையும் கொன்று விட்டார்கள், தங்க முட்டையையும் விட்டு விட்டார்கள். 

சாதாரண காய்ச்சலை கூட குணப்படுத்த முடியாத உலகத்தரம் வாய்ந்த அப்பொல்லா மருத்துவமனையா? 

கூத்தாடிகளை இனிமேல் கழட்டி விட்டுவிட்டு புதிய மன்னர்களை உருவாக்குவோம், தமிழ்நாடு கூத்தாடிகளின் பின்னால் நிற்பதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! 30 கேமிராக்கள் வேண்டாம், ஒரு மனசாட்சி இருந்தால் போதும்! 

Monday, September 25, 2017

அம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பாரா?


ஜெயலலிதா யாருமே அசைக்க முடியாத ஒரு கம்பீரம், வானத்தில் அவர் பறந்தாலும் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டவர்கள், அவர் சிறையில் இருக்கும் போது கூட அவர் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வரலாம் என்று அச்சம் இருந்ததால் கோவில் கோவிலாக சென்று மொட்டை போட்டு, மண் சோறு சாப்பிட்டு, காவடி தூக்கி களேபரம் செய்தவர்கள் இன்று அவர் இட்லி சட்னி வச்சு சாப்பிட்டாரா என்று கொச்சைப்படுத்தி வருவதும் மிகவும் வேதனையைத் தருகிறது.  

ஆக மொத்தத்தில் ஜெயலலிதாவின் மரணம் உண்மையிலேயே மிகப்பெரிய கேள்விக்குறிதான், ஒரு வரலாற்று சரித்திரம் படைத்த தங்கத்தாரகையின் மரணம் சாமானியனையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. உள்ளுக்குள் அவரது மரணத்தில் பேரானந்தம் அடைந்தவர்கள் போல காட்சியளிக்கிறது. ஊடகங்களும் அவரவர் டிஆர்பி ரேட்டிங்கிற்கு வசதியாக ஜெயலலிதாவின் மரணத்தில் அவரது பிணத்தை நடுவீதியில் வைத்து வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. நடந்தது என்ன? என்று எந்த நீதிமன்றமும் பொது வழக்காக வைத்து வாதாடத் தயாரில்லை, அதிமுக என்றாலே அலறியவர்கள் இன்று அதிமுக என்றாலே அருவறுக்கப்படும் ஒரு கட்சியாக மாறிவிட்டது என்பது நிதர்சன உண்மை. யார் எப்படி போனால் என்ன? தனக்கு பாதுகாப்பான பதவி கிடைத்து விட்டது, அது போதும் என்பது போல இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள், அம்மா இல்லாத இந்த பதவி தேவையில்லை, என்று யாராவது ஒரு அமைச்சர் கூறியிருப்பாரா? 

அம்மா இல்லாத அந்த கார் தேவையில்லை என்று திருப்பி அனுப்பிய நாஞ்சில் சம்பத், சசிகலாவை தலைமையாக ஏற்க மாட்டோம் என்று கூறிய நாஞ்சில் சம்பத் இன்று சசிகலாவின் தீவிர விசுவாசியாக மாறிய பின்னணி என்ன? அதிமுக தொண்டர்கள் தற்போது தான் எந்த கட்சியில், எந்த தலைமையின் கீழ் இருக்கிறோம் என்று புரியாத குழப்பத்தில் இருக்கிறார்கள், பதவி சுகம் கண்டவர்களுக்கு, பதவியை விட மனதில்லை, எடப்பாடி தலைமை அணியை மிக கேவலமாக விமர்சித்தவர்கள், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க போவதாகஅறைகூவல் விடுத்தவர்கள் இரண்டு பேரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற பட்டம் வாங்கிய பிறகு மவுனம் சாதிப்பது எதற்கு? தனக்கு பதவி கிடைக்கவில்லையே என்ற கோபத்தில் இருக்கும் தினகரன், தீபா அடுத்து என்ன செய்யபோகின்றார்கள்? என்ன நடக்கின்றது தமிழகத்தில், நாம் எந்த அதிமுக தலைமையில் நாட்டில் வாழுகின்றோம் என்று தெரியாமல் வாழும் தமிழக மக்கள்....

எப்படி பார்த்தாலும் நமக்கு முதல்வர் பதவி என்பது கானல் நீர்தானோ என்ற கவலையில் திமுக, திமுக தலைவரின் உடல்நிலை பற்றிய தகவலும் நமக்கு இல்லை, அவர் நன்றாக இருக்கின்றார் என்ற ஒரு தகவலை தவிர வேறு எந்த தகவலும் இல்லை, ஒருவேளை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது மீண்டும் துளிர்த்தெழுவாரா கலைஞர், அம்மா இல்லாத அதிமுகவும், அய்யா இல்லாத திமுகவும், 

அடுத்த தலைமுறையில் அதிமுக, திமுக நிலை என்ன? மீண்டும் அழகிரி போர்க்கொடி தூக்குவாரா? கனிமொழி கட்சிக்குள் நுழைவாரா? ஸ்டாலினுடன் இருக்கும் திமுக மூத்த தலைவர்கள் என்ன செய்வார்கள்? 

இரண்டு கட்சிகளை விட்டு விட்டு மூன்றாவது கட்சி தலைதூக்குமா? இந்த தேர்தலில் எப்படியாவது பாஜக தமிழகத்தில் இடம் பிடிக்குமா? தேமுதிக என்னவாகும்? கமலஹாசன் படையெடுப்பாரா? ரஜினிகாந்தும் அரசியலில் கமலுக்கு ஜாலரா அடிப்பாரா? விசிக, பாமக, மதிமுக நிலை என்ன? கம்யூனிஸ்ட்டுகள் இனி யாரோடு தேர்தல் நேரத்தில் கூட்டு சேர்வார்கள்? நாம் தமிழர் கட்சிக்கு பிரபாகரனின் மரணம் முக்கிய பாயிண்ட்டாக இருந்தது, இந்த அம்மாவின் மரணம் அவரது கண்களுக்கு தெரியவில்லையா? காங்கிரஸ் காமராஜர் ஆட்சி என்று இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறது, 

இப்படியாக ஓடுகிறது கட்சிகளின் நிலவரம்? இதற்கிடையில்  நீட் தேர்வு பிரச்சினை, மாணவர்களின் எதிர்காலம், மீண்டும் டாஸ்மாக் , ஜிஎஸ்டி வரி பிரச்சினை, மீத்தேன் திட்டம், நெடுவாசல் போராட்டம், ரேஷன் கடையை மூடிருவாங்களா, கேஸ் கு மானியம் கிடைக்குமா? பெட்ரோல் விலையை எப்போ குறைப்பாங்க, கல்வியின் நிலை என்னவாகும்? ஒரிஜினல் லைசன்ஸ கொண்டு வந்திட்டா ஆக்சிடென்ட் குறைஞ்சிருமா?  இப்படி மீண்டும் மீண்டும் ஏகப்பட்ட குளறுபடிகள், என்னவாக போகிறது தமிழகம்? 

வேலையில்லா திண்டாட்டம் அப்படியேதான் இருக்கிறது, இளைஞர்களின் வாழ்விற்கு என்ன எதிர்காலம், ஊழல் செய்த அரசியல் தலைவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? கருப்பு பணம் மக்களிடம் எப்போது வெள்ளைப்பணமாக மாறும்? ஆதார் அட்டையில் இந்த இளைய தலைமுறை, ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணை கொடுத்து அழைக்க போகின்றார்களா? யோவ் 420 என்று அழைக்கும் காலத்தில் மக்கள் இருக்கிறார்களே! மீண்டும் தொடங்குவோம், அம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பாரா? இந்த கேள்விக்கு விடையை சொல்லி விட்டு அடுத்த தலைப்புக்கு செல்லுங்கள்....ஹலோ ஊடகங்களே, உங்களுக்கு இந்த வார விவாத தலைப்பு கிடைத்து விட்டது, அம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பாரா?  ம்ம்ம்..எதுக்கு வெயிட்டிங், ஸ்டார்ட் பண்ணுங்க....

Monday, September 18, 2017

ஜாக்டோ-ஜியோ வீட்டுக்கு அனுப்புங்கள், வி ஆர் வெயிட்டிங்!!!












நீங்கள் எல்லோரும் என்ன சாதித்து விட்டீர்கள் என்று சம்பள உயர்வு கேட்க்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அரசு இயந்திரங்கள் செயல் இழந்து நிற்பதாக ஆங்காங்கே தகவல்கள் வருகின்றது. யார் குடும்பம் எப்படி சீரழிந்தால் என்ன? எனக்கு என் குடும்பமே பெரியது என்று போராடிக்கொண்டிருக்கும் உங்களது தியாக உணர்வினை நாங்கள் பாராட்டுகின்றோம். 
உங்கள் இயக்கம் வேண்டுமானால் மிக பெரியதாக இருக்கலாம். வகுப்பறையில் பாடங்கள், பாடத்திட்டங்கள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா? செயல்படுகிறதா? தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் வாங்கும் சம்பளத்தை விட மூன்றில் இருந்து நான்கு மடங்குகள் அதிகமாக வாங்குகிண்றீர்கள்? இன்னும் உங்களுக்கு போதவில்லையா? 

உங்களுக்கு நீங்கள் கேட்ட சம்பளங்களை வழங்க நாங்கள் மறுக்கவில்லை, தனியார் நிறுவனங்களில் நடப்பது போல ப்ரோமோஷனல் டெஸ்ட் வருடம்தோறும் வைத்தால் அதை எழுத நீங்கள் தயாரா? 

ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டுத்தேர்வு முடிந்த பிறகு அந்தந்த மாவட்டங்களில் அந்த வகுப்புகள் நடத்திய ஆசிரியர்களுக்கு ஒரு தேர்வு நடத்தப்படவேண்டும். ப்ரோமோஷனல் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதாவது (PET), Promotional Entrance Test இல் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு கல்வி எடுக்க அனுமதி வழங்கப்படுவார்கள் என்ற விதி அமலுக்கு வர வேண்டும். 
ஒவ்வொரு ஆசிரியருக்கும் 30 மாணவ, மாணவிகள் கொடுக்கப்பட வேண்டும். அந்த 30 மாணவ, மாணவியரும், அவர்கள் பாடங்கள் அனைத்திலும் 75% மேலாக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், அவர்களுக்கு அந்த மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும். இந்த விதிகளை அவர்கள் ஏற்க தயாரா? 

ஒருவர் கூட முன்வரமாட்டார்கள். எந்த ஒரு அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி, அவர்களின் நேர்மையான பணி என்பது நூற்றில் பத்து முதல் 30 விழுக்காடு வரையே நேர்மையாக பணியாற்றுகின்றார்கள், மீதமுள்ள அனைவருமே வாங்கும் சம்பளத்திற்கு கூட வேலை பார்ப்பதில்லை. 

அப்படி அவர்கள் பணியாற்றி இருந்தால், என்றைக்கோ அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் பலத்த வளர்ச்சி பெற்றிருப்பார்கள். அரசுப்பணியில் மந்தமாகி இருக்காதே!

நீட் தேர்வில் நீட் பாடப்பிரிவில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் மிக குறைவு! பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவியால் என்சிஇஆர்டி குழுவினரால் நடத்தப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ள பாடத்தில் மிக குறைந்த மதிப்பெண்கள் பெற்று அவமானப்பட்டு உயிரை மாய்த்தாலே, அது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சவுக்கடி என்றுதானே சொல்ல வேண்டும். உங்களால் அந்த மாணவியின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத போது, யாராவது ஒரு ஆசிரியர் அரசு பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ அளவிற்கு பாடத்திட்டங்களை மாற்றுங்கள் என்று குரல் கொடுத்து வீதியில் இறங்கி போராடியிருந்தால், உங்களுடைய சம்பள உயர்வுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்கி இருக்குமே!
மிக கேவலமான விஷயம் என்னவெனில், எங்கோ ஒரு இடத்தில் ஒரு அரசு ஆசிரியரோ, ஊழியரோ சிறப்பாக பணியாற்றிவிட்டால் அவர்களை வெற்றி நாயகனாக, நாயகியாக கொண்டாட வேண்டிய அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். இது அவர்கள்  சம்பளத்திற்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலை இது, ஆனால் அதையே நாம் மிகப்பெரிய விழாவாக கொண்டாடிய வேண்டிய இடத்தில் இருக்கின்றோம். 

காலணாவாக இருந்தாலும் அரசு உத்தியோகம் வேண்டும் என்ற காலம் மலையேறிவிட்டது. எப்போது கேட்டாலும், பஞ்ச பாட்டு பாடுவதே அவர்களின் வேலையாக இருக்கும். ஒரு அரசு அலுவலகம் மிக சுத்தமாக இருந்து விட்டால் ஏதோ அருங்காட்சியகத்தை பார்ப்பது போல பார்க்கின்றார்கள். 

உண்மையில் சுத்தமாக இருக்க வேண்டிய சுகாதாரத்துறை அலுவலகம் கூட சுற்றி குப்பைகளோடுதான் இருக்கின்றன. ஏன் இந்த அவலம்? அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை,  அவர்களுக்கு தேவை சம்பளம், ஊதிய உயர்வு முதலியவையே! 

இதுவரை நீங்கள் வாங்கிய சம்பளத்திற்கு உங்களின் சாதனைகள் என்ன? என்று கேட்டுப்பாருங்கள், அவர்கள் அன்றாடம் செய்யும் வேலையை மிகப்பெரிய சாதனையாக பட்டியலிடுவார்கள். இவர்களது வாக்கு வங்கிக்காக, தபால் ஓட்டுக்காக ஒருவர் செய்த கேவலமான காரியம், இன்று அவர்கள் வேலைகளை விட்டு விட்டு வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்பது நியாயமானதா? என்று ஒவ்வொரு தனியார் ஊழியரிடமும் கேட்டு பாருங்கள். தனியாரில் ஒருவர் செய்யும் வேலையை அரசுத்துறையில் 30 பேர் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் கடைசி வரை அந்த வேலை முடியவும் செய்யாது.

அதுதான் அரசிற்கு, தனியாருக்கும் உள்ள மாறுபாடு! இனிமேல் அரசுத்துறையில் இருப்பவர்கள் வருடத்திற்கு இவ்வளவு டார்கெட்டை முடித்து விட்டு போராடுங்கள் என்று சொல்லிப்பாருங்கள். ஒருவர் கூட வீதிக்கு வரமாட்டார்கள். அதுதான் உண்மை. 

ஆண்டுதோறும், அரசுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வைக்கப்படும் என்று ஏதாவது ஒரு அரசியல்வாதி சொல்லட்டும் பார்க்கலாம், அவர்களும் சொல்ல மாட்டார்கள், காரணம் வாக்கு வங்கி போய் விடுமே! என்ற அச்சமே! 

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சராசரி ஊழியனின் நூற்றில் ஒரு பங்கு வேலையை கூட அரசு ஊழியர்கள் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகின்றது.

மின்சார கட்டணம் கட்ட பெரிய கியூ நின்று கொண்டிருக்கிறது. சிஸ்டத்தில் F1 அடித்தால் உள்ளே செல்லலாம் என்று சொல்லி பாதியிலே நிற்கின்றது. ஆனால் அதை அடிக்காமல், சர்வர் டவுன் என்று சொல்லி அட்டையை தொங்கவிட்டுட்டு போனில் அரட்டை அடித்து கொண்டிருக்கிறது மின்வாரியம்.

ஒரு தவறு நடந்தால் அதை செய்ய கூடாது என்று இருக்கிறார்கள், எத்தனை அரசு ஊழியர்களுக்கு இன்று மின்னஞ்சல் அனுப்ப தெரியாது தெரியுமா? @ இந்த சிம்பலை சொல்லத் தெரியாத எத்தனை அரசு ஊழியர்கள் இன்று ஊதிய உயர்வை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் பட்டியலிடட்டுமா?

தொழில்நுட்பம் எத்தனை வளர்ந்தாலும் இன்னும் டாட்மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பிரிண்ட் எடுத்து கொண்டிருக்கும் அலுவலகங்களை அடையாளம் காட்டட்டுமா? காரணம் கேட்டால் மேலதிகாரிகள் இதைத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள். மேலதிகாரிகள் சம்பளம் கொடுக்க வில்லை, சம்பளம் பிடித்தம் செய்து விட்டார்கள் என்று சொன்னால் மட்டும் வீணாய் போன யூனியனை கைகளில் வைத்து கொண்டு போராடத் தெரியும் உங்களுக்கு மேலதிகாரிகளிடம் மக்களுக்கு தேவையானவற்றை வழங்க மட்டும் எரிச்சல் வருகின்றதா?

அரசுப்பேருந்துகள் ஓட்டை ஒடிசலாக இருந்தாலும் எடுத்து இயக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள், உங்களுக்கு வழங்கப்பட்ட கிழிந்த செல்லாத நோட்டுக்களை சம்பளமாக பெற்றுக்கொள்வீர்களா? மக்களால்தான் நீங்கள், மக்கள் உங்களை நாடி வராவிட்டால், உங்களால் மக்கள் சேவகனாக பணியாற்ற முடியாது என்பதை மறக்காதீர்கள், அரசு என்றாலே அதை இளக்ககாரமாக பார்க்கும் நிலை மாற வேண்டும். அதற்கு நீங்கள் எப்போது போராட்டம் செய்வீர்கள் என்று காத்துக்கொண்டிருக்கின்றோம் நாங்கள்.

இன்றைய தலைமுறை காத்துக்கொண்டிருக்கிறது, அரசு இயந்திரங்களை, பதவிகளை கைகளில் எடுக்க, ஜாக்டோ-ஜியோவை வீட்டுக்கு அனுப்புங்கள். தமிழகத்தில் ஆட்சியே நடக்கவில்லை, தமிழகம் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது, இந்த நேரத்தில் நீங்கள் போராட்டம் செய்யுங்கள், அப்போதுதான் ஆட்சி கவிழும், நமக்கு நடக்க வேண்டியது நடக்கும் என்று யாரோ தூண்டி விட்டதை நம்பி, வெட்டியாய் போராட்டம் நடத்துபவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்,

இளைஞர்களை அந்த பதவிகளுக்கு களமிறக்குங்கள், இன்னொரு அனிதா மரிக்க மாட்டாள், நாடும், நாட்டு மக்களும் சுபீட்சமாவார்கள். 

Thursday, September 7, 2017

அனிதா காட்டிக்கொடுத்த அக்கியூஸ்ட் நம்பர் 1


தமிழர்கள், தமிழ் மாணவ, மாணவிகள்  சகோதரி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க போராடிக்கொண்டிருக்க, இது ஒரு உணர்வுபூர்வமான போராட்டமாக அமைந்த வேளையில், அந்த நேரத்திலும் சுகம் தேட அலையும் ஒரு ஆண் வர்க்கம், செயலற்று போய் இருக்கும் பெண் வர்க்கம்,

கூட்ட நெரிசலை தடுக்க வேண்டிய நேரத்தில் இவனது கைகள் எங்கே செல்கிறது, கொடுமையிலும் கொடுமை, இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள், அவர்களது இலக்கு போராட்டக்களம், அதே நேரத்தில் இந்த உதவி ஆணையர் ஜெயராமனும் இலக்கை நிர்ணயித்து விட்டான், தவறு என்று மன்னிப்பு கேட்டு விட்டால் நீதிமன்றமும், காவல்துறையும் மன்னித்து விடுமோ! அந்த உடையின் மதிப்பு தெரியாத இவன், இவனது பணிக்காலத்தில் இவன் எப்படி கற்பழிப்பு வழக்குகளை கையாண்டிருப்பான், இவன் எப்படி பெண்களுக்கெதிரான வழக்குகளில் வழக்குகளை கையாண்டிருப்பான் என்பதற்கு இது ஒன்றே சாட்சியாக அமைகின்றது. 

இதை விட கேவலமான விஷயம் வேறு என்னவாக இருந்திருக்க முடியும்? நாடே பற்றி எரிந்தாலும் பரவாயில்லை, தனக்கு ஒரு ஐந்து நிமிட சுகம் வேண்டும் என்று காத்திருக்கும் பொறுக்கிகளுக்கு இன்னமும் காவல்துறை பதவி எதற்கு என்றுதான் புரியவில்லை, அவனை பணியிலிருந்து டிஸ்மிஸ்  செய்தாலும் தவறில்லையே! 

எவ்வளவு கீழ்த்தரமான விஷயம் இது, நம்மை சுற்றி ஆயிரம் கேமிராக்கள் இருக்கிறது என்று தெரியாமல் சேட்டை செய்யும் காமுகர்கள் இவர்கள்! 

இவருக்கு ஒரு பெண் மகள் இருந்தால் அவளது நிலைமை என்னவாகும் என்பது அந்த தாயிற்கே வெளிச்சம்...தான் ஒரு உயரதிகாரி என்பதால் அவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது பலநாள் ஆசையை அன்று தீர்த்து கொண்டாரா, சமயம் பார்த்து காத்திருந்தாரா? அது அவரது மனசாட்சிக்கே வெளிச்சம். 

இவர் மட்டுமல்ல இன்றும் பெண்கள் பணி செய்யும் இடங்களில் பல்லை இளித்து வேலை பார்த்தால் ஒரு கவனிப்பு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வேலை பார்த்தால் ஒரு கவனிப்பு என்றுதான் உலகம் நகர்கிறது. எல்லா பெண்களையும் சொல்லவில்லை, எல்லா ஆண்களையும் சொல்லவில்லை, 

ஒரு சில கார்பொரேட் நிறுவனங்களின் முதலாளிகள்  கண்ணுக்கு லட்சணமாய் மனைவி இருந்தாலும், அலுவலகத்தில் தனது இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கொள்கின்றார்கள். அவள் சொன்னால் அலுவலகத்தில் எதுவும் நடக்கும் என்பது போல ஒரு மாயை தோன்ற, அன்றிலிருந்து மற்ற ஊழியர்களிடம் இருந்து அந்த பெண் மட்டும் ஒதுக்கி வைக்கப்படுகின்றாள். தானும் ஒரு சராசரி பெண்ணே, தனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் என்பதை மறந்து அவளை மட்டும் சமுதாயமும், அவர்களை சுற்றியுள்ள அலுவலக ஊழியர்களும் அந்த பெண்ணை ஒதுக்கியே விடுவார்கள். 

குடும்ப சூழ்நிலை, முதலாளிகளின் இச்சைகளுக்கு தன்னை பலிகடா ஆக்கி கொள்கின்றார்கள். அதன் பின்னர் அவர்கள் வாழ்வில் வெளிச்சம் என்பதே இல்லாமல் ஒளியற்று போய் நிர்கதியாகி நிற்கின்றார்கள். 

கடைசிவரை அவள் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையில், உள்ளேயும் சக ஊழியர்களோடு வேலை  செய்ய முடியாமல் கூனிக்குறுகி போகின்றாள், அனுபவித்தவன் சந்தோசமாக திரிவான், ஆனால் அனுபவிக்கப்பட்டவள் கடைசி வரை களங்கத்தோடு அவதிப்பட்டு செல்வாள். 

நம்மை நம்பி வந்தவளை நாம் சீரழித்து விட்டோமே என்ற வருத்தம் கொஞ்சம் கூட இல்லாத, கவலைப்படாத ஜென்மங்கள் இருப்பதால்தான்  இந்த மாதிரியான பெண்களுக்கெதிரான அநீதிகள் நடந்தேறி கொண்டிருக்கிறது. 

சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த மாதிரியான ஒரு சில கார்பொரேட் நிறுவனங்களின் அதிபர்கள்  ஏழை பெண்கள், விதவைகள், அனாதைகள், விவாகரத்து பெற்றவர்கள் என்று தேடிப்பிடித்து வேலைக்கமர்த்துகின்றார்கள். வெளியே இருப்பவர்களின் பார்வைக்கு, மிக நல்லவர்கள், பாவப்பட்ட ஜென்மங்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்றார் என்று சொல்வார்கள், சொல்ல வைப்பார்கள், ஆனால் உள்ளுக்குள் நடக்கும் பெண்களுக்கெதிரான அநீதிகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது. 

ஏன், இப்படி செயகிண்றீர்கள் என்று சக ஊழியர்கள் கேட்டால், எனக்கு திராணி இருக்கிறது, செய்கின்றேன், என்று சொல்வார்கள். எது திராணி, கையாலாகாத பெண்களிடம் உங்கள் ஆண்மையை காட்டுவதா திராணி? இன்னும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தீர்ந்தபாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது வேலியே வேலியை மேய்ந்திருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் அந்த காணொளி! வாட்ஸ்அப்பில் பரவுகிறது....காவல்துறையும், நீதித்துறையும் இன்னும் ஏன் அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது, எதற்கு தயக்கம் காட்டுகின்றது என்று தெரியவில்லை!  

அனிதா என்ற சகோதரி ஒரு காமுகனை சமுதாயத்திற்கு காட்டி விட்டு சென்றிருக்கிறாள்!   

என்றுதான் எங்கள் சகோதரிகளுக்கு விடுதலை கிடைக்குமோ! 

அம்மாவின் சமாதிக்கருகே உனக்கு ஒரு சமாதி வைத்தாலும் தவறில்லை, 

நீட் தேர்விற்கு அனுமதி மறுத்து எதிர்ப்பு தெரிவித்தவரும் மண்ணுக்குள்ளே,

நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவருக்கும்  இன்று மண்ணுக்குள்ளே! 
                                          

நீட் என்னும் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்தது யார் என்று நான் இனி சொல்லித்தெரிய வேண்டாம்! 

 

 நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள்...

ஏக்கத்துடன் உங்களில் ஒருவன்! 




Saturday, September 2, 2017

அறிவுக்கெட்ட அனிதாவே,

 அறிவுக்கெட்ட அனிதாவே, 
"அம்மா" மரணத்திற்க்கே இதுவரை பதில் சொல்ல வக்கில்லாத, விசாரணை நடத்த  துணிவில்லாத அரசு,  அனிதாவின் மரணத்திற்க்கா, பதில் அளித்துவிடப்போகிறது?

அறிவுக்கெட்ட அனிதாவே, 
அரசியல்வாதிகளுக்கும், அகோர பசியில் காத்திருக்கும் டிஆர்பி யை விரும்பும் சானல்களுக்கும் அருமையான விருந்து அனிதா கொடுத்து விட்டு சென்றிருக்கிறாள்,  நாசமாக போகிறவர்கள் இனிமேல் அவள் ஆன்மா சொர்க்கம் செல்லும் வரை, அவளைப்பற்றி, பேசிவிட்டு அடுத்தது ஒரு குமுதா மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் கழுகுகள் இவர்கள்...

அறிவுக்கெட்ட அனிதாவே, 
ஒரு சிறுமி, மாணவி தனியாக உச்சநீதிமன்றம் நாடியிருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்? வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளை நம்பி பிரயோசனமில்லை என்றுதானே தன்னந்தனியே சாவினை சந்தித்திருக்கிறாள், 

அறிவுக்கெட்ட அனிதாவே, 
ஏழைப்பிள்ளைகள் மருத்துவம் படிக்க கூடாது என்ற பாசிச உணர்வு தலைதூக்கிறதோ என்ற அச்சம் எழுந்து கொண்டுதானே இருக்கிறது. தரமற்ற கல்வியை தமிழகம் படித்து கொண்டிருக்க, கேள்விகள் மட்டும் சர்வதேச அளவில் இருந்தால் எப்படி மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராவார்கள்? விடைகள் தெரியாத கேள்விகள் பல?
மக்களே சிந்திப்பீர், ஒருவேளை இவளின் மரணத்தை புளூவேல் தற்கொலை என்று கூட சொல்வார்கள், கொச்சைப்படுத்துவார்கள், இதற்கு முன்னர் எத்தனை, எத்தனை வழக்குகளை இப்படித்தான் முடித்திருக்கிறார்கள், இதுவென்றும் புதிதல்ல, 1200 க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு எத்தனை எத்தனை ஆசைகள் இருந்திருக்க வேண்டும்?  தனியே, தன்னந்தனியே தைரியமாக உச்சநீதிமன்றம் போனவள், எப்படி மரணத்தை தழுவினாள், எந்த சம்பவம் அவளை பாதித்தது? ஒருவேளை அவள் தற்கொலை செய்யாமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும், யாருமே குழுமூர் கிராமம் பக்கம் திரும்பி பார்த்திருக்க மாட்டார்களே! 

எங்கள் சகோதரி இறந்து விட்டாளே, என்று குமுறும் மாணவ இயக்கங்களுக்கும், அவளது உறவினர்களுக்கும், பெற்றோருக்கும் எங்களது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம்.   
அறிவுக்கெட்ட அனிதாவே,  காவல்துறை விஷ்னுபிரியா தற்கொலை, சுவாதி வழக்கு, இளவரசன், இளவரசி வழக்கு இப்படி எத்தனை, எத்தனையோ விடைகள் தெரியாமலேயே சீரழிந்து போயிற்று!

அறிவுக்கெட்ட அனிதாவே, இந்த நாசமாய் போன அரசியல்வாதிகளை நம்பி அவசரப்பட்டு உன் உயிரை விட்டு விட்டாயே! ஒருவேளை இவர்கள் ஆட்சியில் வாழ்வதை விட,  சாவதே மேல் என்று புரிந்து கொண்டு விட்டாயா?

அறிவுக்கெட்ட அனிதாவே, 

ஒரு கல்வி இல்லை என்றால் வேறு கல்வி என்று ஏன் உன்னால் கொள்கையை  மாற்றிக்கொள்ள முடியவில்லை, நம்ம ஊரு கட்சிக்காரர்களை பார்த்தும் உனக்கு அறிவில்லையா, ஒரு கட்சி, பதவி இல்லையென்றால் அடுத்த கட்சிக்கு கூச்சமே இல்லாமல் தாவுகின்றார்களே தவிர யாராவது தற்கொலை செய்து கொள்கின்றார்களா?

அறிவுக்கெட்ட அனிதாவே, 
அவசரப்பட்டு தற்கொலை செய்யும் முட்டாள்களே, கட்சி விட்டு கட்சி தாவுங்கள், அதை விட்டு விட்டு தற்கொலை செய்யாதீர்கள், கூடா நட்பு என்று சொல்வார்கள், கடைசி வரை அவர்களோடே கூட்டு வைப்பார்கள், பெற்ற மகளை திகார் செயிலுக்கே அனுப்பினாலும் பணமும், பதவியும் கொடுத்து விட்டால் அவர்களோடே கூட்டு வைப்பார்கள், கேட்டால் கொள்கை என்று சொல்வார்கள், என்ன கண்ராவி கொள்கை என்று அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்,

அறிவுக்கெட்ட அனிதாவே, 
சகோதரி அனிதா, இன்றிலிருந்து அடுத்த பிணம் இந்த மண்ணில் விழும் வரை நீதான் எங்களின் ஊடகங்களுக்கு தீனியாக இருக்கப்போகின்றாய்,

விவாத மேடை, நேர்பட பேசு, ஒரு ஆளுங்கட்சி, ஒரு எதிர்க்கட்சி, ஒரு நெறியாளர், ஒரு நடுநிலையாளர் எல்லோரும் இணைந்து உன்னை விமர்சித்து பேசுவார்கள், சம்பந்தமே இல்லாமல் ஒருவர் பேசிக்கொண்டிருப்பார், அவர்தான் ஆளும்கட்சி என்பதை எடுத்து கொள், இதெல்லாம் நடந்து என்ன பயன்? நீ எங்களிடம் திருப்பி வரவா போகின்றாய்? வெட்டி பேச்சுக்கள், இதோ எனது எழுத்து போல!

வழக்கம் போல வலைப்பூவினில் மனக்குமுறலை வெளியிடுவதை தவிர எங்களுக்கு எதுவுமே தோன்றவில்லை! வெட்கித் தலைகுனிகின்றோம்....அறிவுக்கெட்ட அனிதாவே,