பங்காளிங்க..

Thursday, March 12, 2015

கலைஞர் அவர்களுக்கு ரிப்ளை கடிதம் !

தேர்தல் பணிக்காக தாரளமாக நிதி வழங்குமாறு கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

வழக்கம் போல கடுதாசி போட்டுட்டாரு, கூரியர் அனுப்புனா செலவு ஆகிடும், அந்த காசுல தேர்தல் செலவுக்கு வச்சிகலாமுனு ஐடியா பண்ணியிருக்காரு போல..

2016-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழக அரசின் பொதுத்தேர்தல் வரவுள்ளது. 5 ஆண்டு காலம் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படவிருக்கிறது. மக்கள் படும் வேதனைகளை எண்ணிப்பார்க்கும் போது, ஆளுங்கட்சிக்கு விடை கொடுத்து அனுப்பத் தயாராகி விட்டார்கள் என்ற போதிலும், "அவர்கள் இல்லாவிட்டால் நாம் தானே", என்ற மதமதப்போடு நாம் இருந்து விடக்கூடாது. 

இன்னும் அந்த நினைப்பு உங்க கிட்டே இருக்கு னு நினைக்கிறப்ப உங்க தன்னம்பிக்கைய பாராட்டாம இருக்க முடியாது.  இந்த தள்ளாத வயசிலும் அவருக்கு இருக்கும் தன்னம்பிக்கையை இளைஞர்கள் பார்த்து கத்துக்கணும் னு சொல்றேன். 

எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்ற எண்ணம் ஆளுங்கட்சியினரிடம் அதிகமாகவே உள்ளது. 

உண்மை அதுதானே..ஒற்றுமையாவா இருக்கீங்க? சொந்த குடும்பத்துக்குள்ளாகவே இல்லையே! 

அவர்களை எதிர்த்து போட்டியிட-வாக்குகளுக்கு அவர்களை போல நிதி கொடுக்க-ஆடம்பரச் செலவுகளைச் செய்திட நம்மிடம் நிதியில்லை என்ற போதிலும், 

கடைசி வரைக்கும் உங்கள் திறமைய சொல்லி ஓட்டு கேட்க போறதில்லே, காசு கொடுத்து தான் செயிக்க போறீங்க, அப்படித்தானே

அத்தியாவசியமான, அவசியமான செலவுகளைச் செய்திட ஓரளவு நிதியையாவது நாம் சேர்க்க வேண்டாமா? இன்னும் சரியாக ஓராண்டு தான்-ஆம் பன்னிரண்டே மாதங்கள். 

அத்தியாவசியம் னா யாருக்கு அத்தியாவசியம்? மக்களுக்கா, அல்லது உங்க குடும்பத்துக்கா? அவசியம் னா மக்களுக்கா, அல்லது உங்க தொலைகாட்சி நிறுவனத்துக்கா அது என்னான்னு கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா, வசதியா இருக்கும் (ஆ)சாமி ?

அதற்குள் நாம் ஆற்ற வேண்டிய ஜனநாயகப் பணிகள் ஏராளம்-அதிலே ஒன்று தான் தேர்தல் நிதி திரட்டும் பணி. 

ஜனநாயகப் பணியில் எப்போ தேர்தல் நிதி திரட்டும் பணியை சேர்த்தாங்க ? 

இப்பணி மட்டுமல்ல, கட்சி பணி எதுவாயினும் முகம் சுளிக்காமல் அதனை நிறைவேற்ற, கட்சி காளைகள் ஆயிரம் ஆயிரம் பேர் தயாராக இருக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். 

இவ்வளவு வருஷ உங்க முயற்சியிலே காளைகள் வெறும் ஆயிரம், ஆயிரம்தான் இருக்காங்களா? லட்சம், கோடி எல்லாம் சேரலையா? 

தி.மு.க. சார்பில் 65 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்களாக வந்துள்ள அனுபவம் பெற்ற மூத்த தளகர்த்தர்களும்-புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இளங்காளையரும் இந்த தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சியை போட்டியாகவே ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை. 

தேர்தல் நிதி திரட்டுரதுல அவங்க போட்டியா நினைச்சுக்குவாங்க..நீங்க நிதி திரட்டுரதுல மட்டும் போட்டியா நினைச்சுக்குவீங்க போல, 

தேர்தல் நிதிக்கான நன்கொடைச்சீட்டுகள் கட்சி தலைமையகத்தில் முறைப்படி அச்சிடப்பட்டு மாவட்ட செயலாளர்கள் வாயிலாக வழங்கப்படவுள்ளன. 

இதுக்கெல்லாம் உடனே நன்கொடை சீட்டு போடுறீங்க, எந்த கவுன்சிலரும், வட்ட செயலாளரும் தனிப்பட்ட முறையிலே கொள்ளையடிச்சிரக் கூடாதுங்கிற தொலைநோக்கு பார்வை...ஐ லைக் தேட் அப்ரோச்? 

நானோ, பொதுச்செயலாளரோ, பொருளாளரோ-கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் தேர்தல் நிதியளிப்பு அவசியம் இருந்திட வேண்டும். 

நீங்க வாங்க, வராம போங்க ஆனா கண்டிப்பா மொய்ப் பணம் கொண்டு வந்திடனும்...ஆகா நல்ல சிந்தனை, 

கட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது நேரிலோ எங்களைக் காண வருவோர்-வரும்போது மாலை ஒன்று கொண்டு வருவதற்கு பதிலாக-கைத்தறி ஆடை ஒன்று அணிவிப்பதற்கு பதிலாக-நூறோ, இருநூறோ என்று தேர்தல் நிதி கொண்டு வர வேண்டும். 

மாலை போடாதீங்க, கைத்தறி போர்வை எல்லாம் போடாதீங்க...அப்புறம் மாலை விக்கிறவன், கைத்தறி விக்கிறவன் எல்லாரும் நல்லா வாழ்ந்துட போறாங்க, 100, இருநூறு போதுமா, வெளிப்படையா 500, 1000 கேட்டிரவேண்டியதுதானே..

அதையும் ஒரு கவருக்குள் வைத்து, கவரின் மீது உங்களுடைய முகவரியும், எவ்வளவு ரூபாய் என்பதையும் தெளிவாக எழுதிக் கொண்டு வர வேண்டும். 

கல்யாண வீட்டுல கூட நிறைய பேரு மொய்ப் பணம் வேண்டாமுன்னு சொல்றாங்க, கட்சிக்காக தொண்டர்கள் இவ்வளவு செய்யுறாங்க...நீங்க என்ன செய்யப் போறீங்க? அப்படீன்னு பாமரன் கேட்குறான்?

வரும் தேர்தலில் ஜனநாயகத்திற்கு விரோதமாக சர்வாதிகாரமாக நடைபெறும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த தேர்தல் நிதி பயன்படும் என்ற எண்ணம் உனக்கு தோன்றிடும். 

சிட் பண்ட் ல பணத்தை போட்டதா நீங்க நினைச்சுகோங்க னு சொல்றாரு...புரிஞ்சிகோங்க..அந்த ஆட்சியை விரட்டுறதுக்கு நினைச்சு நீங்க கொடுத்திடனும்...அப்புறம் கணக்கு எல்லாம் கேட்க கூடாது..இப்பவே சொல்லிட்டேன்..

நான் எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். நீங்களும் வாரி வாரி வழங்கியிருக்கிறீர்கள். 

நான் நிறைய கடுதாசி போட்டிருக்கேன்...நீங்களும் ஏமாந்து கொடுத்திருக்கீங்க...தமிழ் நாட்டுல இப்போதைக்கு நம்ம பேருல ஒரு சானல் தான் இருக்கு, கூடிய சீகிரத்துல நம்ம பேருல பஸ் கம்பெனி, டிரைன் கம்பெனி, ஏரோபிளேன், அப்புறம் ரியல் எஸ்டேட் எல்லாம் ஆரம்பிக்கணும்...அது நீங்க கொடுக்கிற 100, 200 ல தான் இருக்கு.  

பணக்காரர்களிடம், பல கோடி வைத்திருப்போரிடம் கேட்டுப் பழக்கப்பட்டவனல்ல நான்

அவர்கள் நம்மை விட உசாரானவர்கள்..அவர்களிடம் அமவுண்ட் கேட்டால் உசாராயிடுறாங்க. கட்டுற பணத்துக்கு வீடியோ ஆதாரம் எல்லாம் எடுக்கிறாங்க..ரிசிப்ட் கேட்குறாங்க..

உன்னிடம் தான் திரும்பத் திரும்பக் கேட்கிறேன், நீயும் கொடுத்துக் கொண்டே இருக்கிறாய்; 

நீதான் இளிச்சவாயன்...கேட்டவுடனே கொடுக்கிறே...ஏன்னா எதுன்னு திருப்பி கேட்க மாட்டே...அதுனாலதான் உன்னிடமே கேட்கின்றேன்...

இப்போதும் கொடுப்பாய் என்ற நம்பிக்கையோடு தான் இருக்கிறேன். 
இவ்வாறு கருணாநிதி அதில் தெரிவித்துள்ளார்.

இந்த வாட்டியும் கண்டிப்பா கொடுக்கணும்னு கெஞ்சி கேட்டுகிறேன்...இதுதான் என்னோட கடைசி தேர்தல்...

-ஏமாந்த தொண்டன்

நன்றி : http://tamilnadu.indiaeveryday.in/fullnews--------1295-169063.htm

Thursday, January 29, 2015

திரு.சகாயத்துக்கு ஓர் எச்சரிக்கை!!!!

திரு. உ.சகாயம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. தந்தை பெயர் திரு.உபகாரம் பிள்ளை. அவர் தமிழகத்திற்கு தந்த மிகப் பெரிய உபகாரம் திரு. சகாயம். அவர்கள். 

தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் தனது பணியை சிறப்பாக செய்து முடிக்கின்றார். தற்போது கனிம வள ஊழலைப் பற்றிய கணக்கெடுப்பினில் பணியாற்றி வருகின்றார். மிகவும் பாராட்டுதலுக்குரிய விஷயம். தவறு செய்தவர்கள் ஒவ்வொருவரும் பதுங்கியும், தலைமறைவாகியும் வருகின்றார்கள். இவரின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பாராட்டு தேவையா? சம்பளம் வாங்கி கொண்டுதானே வேலை பார்க்கின்றார் என்று சொல்லலாம். 

ஆனால் மிகப் பெரிய உண்மை என்னவெனில் கிம்பளம் வாங்காமல் வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாய் நேர்மையாய் வேலை பார்த்து வருவதுதான் அவரின் நேர்மைக்கு அடையாளம். ஊடகங்கள் அவரது சாதனைகளை அன்றாடம் விளக்க வேண்டும். மூன்றாவது பக்கத்தில் ஒரு ஓரத்தில் அவரது செய்தி வெளி வருகின்றது. 

சினிமாவில் ஆண்ட்டி - கரப்ஷன் போர்ஸ் என்ற இயக்கத்தை கதாநாயகன் செய்வார். மற்றொரு படத்தினில் ஒரு நாள் முதலமைச்சர் அதிரடியாய் களமிறங்கி ஊழல்வாதிகளை ஆட்டம் காணச் செய்வார். அதற்கெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்யும் நம்மூர் ரசிகர்கள் ஒரு உண்மையான, நேர்மையான அதிகாரி பணியாற்றும் போது அவர்களுக்கு ஆதரவாய் என்ன செய்கின்றார்கள்??? உங்களுக்கு தொடங்கப்பட்டுள்ள ஆதரவு இயக்கத்தில் அவர்களுக்கு என்ன ஆதாயம் என்பதைத்தான் வியாபாரமாய் ஒரு சிலர் செய்கின்றார்கள்

அந்த ஆண்ட்டி - கரப்ஷன் போர்ஸ் கருத்தை கொண்ட படத்திற்கு எத்தனை ரசிகர்கள் பிளாக்கில் டிக்கெட் வாங்கி இருப்பார்கள்.? எத்தனை ஊழல் செய்தவர்கள் அந்த ஒரு நாள் முதலமைச்சர் படத்தை குழந்தைகளோடு கைதட்டி படம் பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு எங்காவது உறுத்தியிருக்குமா? என்றால் எதுவும் கிடையாது. சினிமா வேறு நிச வாழ்க்கை வேறு என்பதை நன்கு தெரிந்தவர்கள். 

அப்படி நிச வாழ்க்கையிலும் ஒரு ஹீரோ உருவாகும் போது எத்தனை பேர் அதனை ஏற்றுக் கொள்வார்கள்? அப்படி ஏற்று  கொள்ளாததன் வெளிப்பாடுதான் உ.சகாயம் அவர்களின் செயல்பாடுகள் எப்போதுமே மூன்றாம் பக்கத்தில் வருவதற்கு காரணம். முறையான உரிமம் வாங்காத கிரானைட் குவாரிக்கு யார் முறையாக தார்ச் சாலை போட்டுக் கொடுத்தது என்று கேட்டதாக செய்திகள் வெளி வந்தது!  அவ்வளவுதான், அதோடு சரி, அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? என்று எந்த பத்திரிக்கையாவது கேள்விக் கணை எழுப்பியதா? தகவல்கள் இல்லை. ஒரு கை தட்டினால் ஓசை வராது. ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மட்டும் உழைத்தால் போதுமா? நியாயம் கிடைத்து விடுமா? அனைத்து இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் இதைப் போன்ற நடவடிக்கையில் எப்போது துணிந்து இறங்குவார்கள்? வெறும் கேள்விக் குறிகள் மட்டுமே நமக்கு விடையாக வரும்! 


இப்போது மதுரையில் சகாயம் ஆதரவு இயக்கம் என்ற ஒன்று புதிதாய் தொடங்கப் பட்டிருக்கின்றது. வாழ்த்துக்கள். ஆனால் திரு. சகாயம் அவர்களே, உங்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் அதிமேதாவி கிடையாது. ஆனால் உங்களை பாராட்டும், ஆதரவு தெரிவிக்கும் எத்தனை பேர், உண்மையான தொண்டர்கள் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 

உங்களுக்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களை நீங்கள் அவ்வப்போது கவனிக்க வேண்டிய சூழலில் நீங்கள் இருக்கின்றீர்கள். ஒரு சிலர் அரசியல் கட்சிகளின் உளவாளிகளாகவும் இருப்பார்கள். இதுவே நாளை உங்களுக்கு பெரிய தலைவலியாய் வந்து முடியும்! கவனம் தேவை. 

உங்களுக்கு ஆதரவு அளிக்கும் இளைஞர்கள் எத்தனை பேர் லஞ்சம் கொடுத்து ஓட்டுனர் உரிமம் வாங்கி இருப்பார்கள்? எத்தனை பேர் லஞ்சம் கொடுத்து சாதி சான்றிதழ் வாங்கி இருப்பார்கள். எத்தனை பேர் லஞ்சம் கொடுத்து கல்வித் தகுதியை பெற்றிருப்பார்கள். அப்படி இல்லாத ஒரே ஒரு நபர் உங்களுக்கு ஆதரவாய் இருந்தாலும் அது உங்களுக்கு மிகப் பெரிய வெற்றியே. 


சமீபத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் தனது வாகனத்தில் சகாயம் ஆதரவு இயக்கத்தில் தான் ஒரு உறுப்பினர் என்று சொன்னார். அதற்கு அவருக்கு தகுதி இருக்கின்றதா? என்று கேட்டால் எதுவும் இல்லை. காரணம் அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை, ஓட்டுனருக்கான சீருடை இல்லை, வாகனத்தில் மீட்டரும் இல்லை. எதற்கு இந்த பந்தா என்று கேட்டால்? அப்பதான்யா டிராபிக் போலிஸ்காரங்கிட்டே இருந்து தப்பிக்க முடியும்? எல்லாம் ஒரு சேப்டிக்காகத்தான் என்று ஒரு போடு போட்டார். நான் வாயடைத்து போனேன். 

தங்களது குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு தனக்கு ஒரு அடையாளம் தேவை என்பதை இம்மாதிரியான உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்கள். உங்களது பெயருக்கு களங்கம் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 

நாட்டை வளப் படுத்த வேண்டும் என்று உண்மையான எண்ணத்தோடு இருப்பவர்களை அணி சேருங்கள். தலைவா, நீ அது செஞ்சிடு, இது செஞ்சிடு என்று குரல் கொடுத்து விட்டு உங்களை உசுப்பேத்தும் சுயநலக் கூட்டம் நம்மை சுற்றி வருகின்றது, கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் மீது எந்த நேரத்தில் பழி போடலாம், எப்படி போடலாம் என்று சில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மிகுந்த கவனம் தேவை! 

இது ஒரு உண்மையான குடிமகனின் அன்பான வேண்டுகோள்.! இது எச்சரிக்கை கடிதம் அல்ல, போலி தொண்டர்களிடம் இருந்தும், உளவாளிகளிடம் இருந்தும் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்ற அன்பான வேண்டுகோள்.  உங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகின்றேன்.