பங்காளிங்க..

Saturday, April 20, 2013

ஆம்னி பேருந்துகளின் அட்டூழியங்கள்...

சென்னை போன்ற பெருநகரங்களில் தனியார் வாகனங்கள் அரசுப் பேருந்துகளை விட அதிகம் இயங்கி வருகின்றது. இதில் இடைத்தரகர்கள் வேறு விடாப் பிடியாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். அது அவர்களது தினசரி வருமானம் என்றாலும் கூட சில சமயங்களில் பயணிகளுக்கு எரிச்சலையும், இடையூறுகளையும் உருவாக்கித்  தருகின்றது. எல்லோருக்கும் அந்த நேரத்தில் கோவம் வரும், ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததும் அதனை மறந்து போவார்கள்.

மக்களை கவரும் வகையில் வண்ண மயமான விளக்குகள், அரசுப் பேருந்துகளை விட வெகு விரைவினில் கொண்டு சேர்ப்போம் என்ற பொய்யான உத்திரவாதம், இப்படி நிறைய பித்தலாட்டங்கள்...வியாபார உத்திக்காக இப்படி செய்கின்றார்கள்..

ஆரம்பத்தில் இவர்கள் சொன்ன அத்தனை யும் தனியார் வாகனத்தில் இருந்தது. ஆனால் தற்போது அவர்களும் பயணிகளை மிக கேவலமாக நடத்துவதுதான் வேதனையாய் இருக்கின்றது. உடனே ஒரு சிலர் எங்கள் பேருந்து அப்படி இல்லை, நாங்கள் பயணிக்கும் பேருந்துதான் நம்பர் ஒன் , அவங்க அது தராங்க, இது தராங்க...என்று சொல்வார்கள். நான் சொல்வது அதனை தர மறுக்கும் ஓம்னி பேருந்துகளை மட்டுமே. அப்படி உங்களுக்கு திருப்தி தரும் வகையில் கொடுக்கின்றார்கள் என்றால் மிகவும் சந்தோசமே.

சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் அவரது மகளுக்கு உடல்நிலை சரி இல்லை என்று தகவல் வந்ததால் மதுரைக்கு கிளம்பி சென்றார். அரசுப் பேருந்தை விட ஆம்னி பேருந்து வேகமாய் போகும் என்று எண்ணி 9 மணிக்கு கிளம்பும் வண்டிக்கு சென்று அமர்ந்தார். நாங்களும் அவருக்கு உறுதுணையாய் இருக்க நாங்கள் அரசுப் பேருந்தில் மதுரைக்கு கிளம்பினோம்.

நாங்கள் வண்டி ஏறிய பிறகு பெருங்களத்தூரை தொட்டதும் அவருக்கு போன்  செய்தோம்., அப்போது அவர் தான் இன்னமும் கொயம்பெட்டிலேயே இருப்பதாக சொல்ல எங்களுக்கு ஆச்சரியம், நேரம் 10.10. 9மணிக்கு கிளம்ப வேண்டிய பேருந்து இன்னமும் கிளம்பவில்லை. ஆனாலும் தான் கரெக்டான நேரத்திற்கு மதுரை வந்து விடுவேன் என்று சொன்னார்

அதிகாலை 5.40க்கு நாங்கள் மதுரை சென்றடைந்தோம். பின்னர் நாங்கள் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து பேருந்து பிடித்து பெரியார் பேருந்து நிலையம் சென்று அடைந்தோம். 7.35க்கு அவரும் பெரியார் வந்து சேர்ந்தார். என்னவென்று விசாரித்தோம்...அவருடைய பேருந்து  லக்கேஜ் களை பேருந்து கூரை முழுவதும் ஏற்றிக் கொண்டு 10.30க்குத் தான் கிளம்பியதாம்.

ஒரு லக்கேஜ்கு கிடைக்கும் மரியாதை கூட பயணிகளுக்கு, பயணிகளின் உணர்வுகளுக்கு கொடுக்கப் படவில்லை என்று புலம்பினார். உண்மைதானே....இந்த வேதனையை அனுபவித்தவர்கள்  இதனை உணருவார்கள். அதிக கட்டணம், காலம் தாழ்த்திய பயணம், மன உளைச்சல் இதுதானே தற்போது தனியார் பேருந்துகளில் நடைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

வார இறுதி நாளாக இருந்தால் கூடுதலாய் 50 ரூவாய், பண்டிகை தினமாய் இருந்தால் அவர்கள் வாயில் எவ்வளவு வருகின்றதோ அதுதான் விலை. மக்களே கொடுக்கிறாங்க...நீ உன் வேலையை பார்த்து விட்டு போடா என்று சொல்கின்றீர்களா? ஒருநாள் உங்களுக்கும் அந்தப் பிரச்சினை வரும்...ஏனெனில் அவர்கள் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து சாதித்து விடுகின்றார்கள். பாதிக்கப்படுவது என்னவோ நாம்தானே...

ஒரே ஊருக்கு செல்லும்போது ஒரே வசதிகளை கொடுக்கும் இரண்டு தனியார் பேருந்துகளின் கட்டணம் மாறுபட்டு இருக்கின்றது. அவர்கள் என்ன திடீரென்று வானத்தில் பறந்து செல்வார்களா? யார் இதனை தட்டிக் கேட்பது? கட்டண நிர்ணயம் கண்டிப்பாக செய்தல் வேண்டும்.. அதுபோல முன்பதிவு செய்யப் படும்போது பயணிகள் கேட்கும் இருக்கைகளை கொடுக்க வேண்டும். ஆனால் கடைசி இருக்கைகளை பதிவு செய்து கொடுத்து விட்டு, முதல் இருக்கைகளை வண்டி கிளம்பும்போது வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் பெற்று கொடுப்பதும் தடுத்து நிறுத்தப் பட வேண்டும்..

முறையாய் பதிவு செய்து வருபவர்கள் கடைசி இருக்கையில் தள்ளப் பட்டு கடைசி நேரத்தில் வருபவர்களுக்கு முதல் இருக்கையை வசதியாய் கொடுக்கும் போது  அந்த பயணிகளின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இதற்க்கு பெயர் வியாபார உத்தி அல்ல...சுத்த அயோக்கியத்தனம்! அதனைத் தான் அவர்கள் தைரியமாக செய்து கொண்டிருக்கின்றார்கள். யார் கேள்வி கேட்க முடியும்...அவர்கள் பேருந்து  வெளித் தோற்றம் மிக அழகாய் இருக்கும், உள்ளே ஏறியதும் ஜன்னல் கண்ணாடி மூடாது, சீட் பெல்ட் வேலை செய்யாது, அல்லது சாய்ந்து கொள்ள வசதியாக இருக்கும் பட்டன் வேலை செய்யாது....கூடுதலாய் ரூவாயும் கொடுத்து, வசதி குறைவுகளோடு பயணிக்கும் எத்தனையோ பயணிகளை நாம் பார்த்துக் கொண்டுதானே வருகின்றோம்....

வீடியோ கோச் என்று போட்டிருப்பார்கள்...சிறிது நேரம் வீடியோ பெட்டி வேலை செய்யாதது போல் அவர்களே எரிச்சல் பட்டுக் கொள்வார்கள். அதன் பின்னர் மொத்தமாய் அனைத்து விட்டு எதுவுமே நடக்காதது போல் அமர்ந்து கொள்வார்கள். இதுவும் பல பேருந்துகளில் நடக்கின்றது.   யார் இதனை தட்டிக் கேட்பது? எத்தனை பயணிகள் வாயைத் திறக்காமல் போய்க்  கொண்டு வருகின்றார்கள்..

அரசுப் பேருந்துகளில் குறைவான கட்டணம், கூடுதல் நேரம் என்று சொல்பவர்கள் கொஞ்சம் இதனையும் சிந்தித்து பார்க்க வேண்டும்!

6 comments:

  1. Your article is right, but there are very good private operators, as you also said. In my view, the big minus for Govt services are bad/no maintenance, poor cleanliness. I wont forget the day I travelled in a SETC ultra delux(??!!) which was infested with bed bugs!. There were so many of them!. Most of the PVT operators have clean vehicles, I appreciate that.

    ReplyDelete
    Replies
    1. அதிக கட்டணம், குறைவான இருக்கைகள் என்ற காரணத்தால் அவர்களது பேருந்து தூய்மையாக இருக்கின்றது. அரசுப் பேருந்துகளில் 52 இருக்கைகள் என்றால் தனியார் பேருந்துகளில் 26 இருக்கைகள். மொத்த வசூல் அதுவே. ஆரம்பத்தில் எல்லா தனியார் பேருந்துகளும் சிறப்பான வசதிகளையும், சௌகரியங்களையும் கொடுத்தது. ஆனால் தற்போது அவர்களுடைய வாடிக்கையாளர்கள் பலர் முகம் சுழிக்கின்றனர். காரணம் அவசரத்தை விரும்பும் அல்லது சௌகரியத்தை விரும்பும் பயணிகள் அது கிடைக்காமல் ஏமாற்றப் படுகின்றார்கள்.

      அரசுப் பேருந்தோடு நான் ஒப்பிட்டு பேசவில்லை. அரசுப் பேருந்து ஒருவகையில் பயணிகளை மிரட்டுகின்றது, தனியார் பேருந்துகள் வேறு விதமாக மிரட்டுகின்றார்கள். வாகனம் சுத்தமாக இருக்கின்றதா என்பது முக்கியமல்ல, குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் சொன்ன சொல் படி வாகனங்கள் சேர வேண்டிய இடத்திற்கு சென்று சேர்கின்றதா என்பதே பிரச்சினை. அரசுப் பேருந்துகளில் நடத்துனர், ஓட்டுனருக்கு பயணிகளை பற்றி கவலையில்லை. ஆள் ஏற்றினாலும், எற்றாவிட்டாலும் அவர்களுக்கு சம்பளம் நிச்சயம். ஆனால் தனியார் ஆட்களை ஏற்றினால்தான் சம்பளம். அதற்காக பயணிகளின் உணர்வுகளுக்கு துளியும் மரியாதை அளிக்காத பேருந்து ஊழியர்களை என்னவென்று சொல்வது.. எல்லா பேருந்துகளும் அப்படி என்று சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் தற்போது இந்த லட்சணத்தில்தான் செயல்படுகின்றன என்பதே உண்மை.

      நான் இதனை நேரில் அனுபவித்ததால் இதனை சொல்கின்றேன்...மதுரையில் இருந்து ஒரு ஆம்னி பேருந்தில் ஏறி அமர்ந்தோம். ஒரு பெண்மணி முதன் முறையாக சென்னைக்கு வருகின்றார் போல. அவரை வரவேற்க சென்னை கோயம்பேட்டில் ஒருவர் காத்திருக்க, வண்டி கோயம்பேடு போகாது, எக்மோர் தான் போகும் என்று காலையில் ஓட்டுனர் சொல்ல, அந்த பெண்ணிற்கு பயம் வந்து விட்டது. காரணம் பேருந்தில் ஏறும்போது கோயம்பேடு என்று சொல்லி ஏற்றி விட்டு காலையில் எக்மோரில் இருக்கின்ற லக்கேஜை எல்லாம் இறக்கி விட்டு பதினோரு மணிக்குத் தான் கோயம்பேடு செல்லும் என்றும் வேண்டுமென்றால் ஆட்டோ பிடித்து போங்க என்று சொல்ல அந்த பெண் அழத் தொடங்கி விட்டார். இதற்க்கு என்ன சொல்கின்றீர்கள். அவர்களுக்கு அரசுப் பேருந்தில் போக முடியாது என்ன காரணம், வசதி குறைவு, பயணிகளை மதிக்க மாட்டார்கள் என்பதற்குத்தானே...

      Delete
  2. Very Very few private buses collect only correct amount. But most of the private buses collect more than huge price as a ticket.

    ReplyDelete
    Replies
    1. அரசாங்கம் எத்தனை அறிவிப்புகள் வெளியிட்டாலும் ஆம்னி பேருந்துகள் இன்று வரை கட்டணம் நிர்ணயம் செய்யவில்லை என்பது வெட்டவெளிச்ச மாகின்றது. காரணம் மக்களின் அவசரம், அவர்களுக்கு ஊறுகாயாக மாறுகின்றது. அதுதான் இடத்திற்கு தக்கவாறு வசூலிக்கின்றார்கள். யாராவது தட்டிக் கேட்டால் அசிங்க, அசிங்கமாய் திட்டுகின்றார்கள். இதுவும் கொயம்பெட்டினில் தினமும் நடக்கின்றது. நான் பாதிக்கப் படவில்லை என்று பெருமைப் படும் பயணிகள், நாளை நமக்கும் இந்த நிலை வரும் என்று சிந்திப்பதில்லை. அல்லது அவன் அசிங்கமாய் பேசி விடுவானே என்று பெருமைக்காக காசை இரைப்பவர்கலையும் கண்கூடாக பார்க்கலாம்.

      Delete
  3. தங்கள் கூறுவதுபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும். இப்போது பெரும்பாலான முன்னணி கம்பெனி ஆம்னி பேருந்துகள் ஆன்லைன் புக்கிங் செய்கின்றனர். கட்டணம் அந்தந்த நாட்களுக்கேற்ப அவர்களே மாற்றிக்கொள்வது உண்மை. மற்றபடி சேவை என்று பார்க்கும்பொது தமிழகத்தில் இயங்கும் முன்னணி பேருந்து கம்பெனிகளுடன் எந்த விதத்திலும் போட்டியிடவோ ஏன்? ஒப்பிடவோ முடியாத சேவையை வழங்குவது அரசு விரைவு பேருந்துகழகம். சீட் வேலை செய்யாது, கண்ணாடி நகராது.. பயண நேரம் போன்ற எந்த பிரச்சினைகளும் பெரும்பாலும் முன்னணி ஆம்னி பேருந்துகளில் இருப்பதில்லை. ஆனால் அத்தனையும் அரசு பேருந்துகளில் இப்போதும் அதிகமாக உண்டு. வீடியோ பர்வீன் போன்ற சில பேருந்துகளில் கிடையாது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டத்திற்கேற்ப இயக்கப்படும் தற்காலிக பேருந்துகளில் மட்டுமே நீங்கள் சொல்லும் பிரச்சினைகள் இருக்கும்.. நான் வாரா வாரம் சென்னை மதுரை சென்று வருவதால் எனக்கு பல ஆண்டு அனுபவம் உண்டு. சென்னையில் 1 டூ 1 என்று போடப்பட்ட புதிய அரசுப்பேருந்தில் ஏறும்போது கண்டக்டர் பைபாஸ் மட்டும்தான்.. ஊருக்குள் போகாது என்று கூவிக்கூவி ஏற்றினார். 8 மணி என்று சொல்லி 7.20க்கு ஏறினேன். 8.25க்கு எடுத்தார்கள். திண்டிவனம், விழுப்புரம், திருச்சி எல்லா ஊர் பஸ் ஸடாண்டுக்கும் போனது. 3 பேர் மட்டுமே இந்த ஊர்களில் ஏறினர். 8.30க்கு மாட்டுத்தாவனி வந்தது. பயனிகள் சத்தம் போட, பைபாஸ் என்று உறுதியளித்த கண்டக்டர் (இடையில் அவரும் ஓட்டினார்) 10 மணி நேரத்தில் வரனும்னு ரூல்ஸ் எல்லாம் கிடையாது. எங்காவது ஆக்சிடெண்ட் ஆனால் உன் புள்ளகுட்டி எல்லாம் அநாதையா போகும்.. எங்க வேணும்னாலும் போயி பாரு.. ஒன்னும் புடுங்க முடியாதுன்னு.. இறங்கி போயா.. ஆளையும் மண்டையும் பாரு... இப்படி திருவாய் மலர்ந்து வாழ்த்தி வழியனுப்பினார்... (என்னை அல்ல.. சத்தம் போட்டவரை) . நான் சென்னை போகும்போது பயனித்த ஆம்னி பேருந்து கம்பெனியை மனதுக்குள் கும்பிட்டுக் கொண்டேன்....

    ReplyDelete
    Replies
    1. நான் அரசுப் பேருந்துகள் உசத்தி என்று சொல்லவில்லையே...அரசுப் பேருந்துகளில் உள்ள குறைகளில் இருந்து மீளவே தனியார் பேருந்துகளை நாடுகின்றோம். இப்போது தனியார் பேருந்துகள் நம்மை விட்டால் இவர்களுக்கு நாதியில்லை என்று எண்ணித்தான் அவர்கள் தற்போது மெத்தனப் போக்கை கையாளுகின்றார்கள். அதைத்தான் குறிப்பிட்டு சொல்லியிருக்கின்றேன்.

      காலம் தாழ்த்தி செல்தல், கூடுதல் கட்டணம் வசூலித்தல் என்ற நிகழ்வுகள் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொரு பேருந்திலும் 10 வாடிக்கையாளர்கள், பயணிகள் பாதிக்கப் படுகின்றார்கள். நல்லவேளை எனக்கு இல்லை என்று செல்வதோ, நடக்குது நமக்கென்ன கவலை என்று செல்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் அந்த பிரச்சினை நமக்கென்று வரும்போது அநியாயம், அக்கிரமம் என்று கூக்குரல் இடத்தான் செய்கின்றார்கள்.

      Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...