பங்காளிங்க..

Saturday, May 25, 2013

அட்டூழியம் செய்யும் சில தனியார் கல்லூரிகள்...

சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் ஆயிரக்கணக்கான தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஒரு  சில கல்லூரி நிர்வாகம் செய்யும் அக்கிரமத்தால் எல்லா கல்லூரி நிர்வாகத்தின் மீது அவப் பெயர் உருவாகின்றது.

என்ன பிரச்சினை?

மாணவ, மாணவிகளுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுப்பதில்லை. இன்றைய சூழ்நிலைக்கு முக்கியமான பாதுகாப்பு பல மாணவிகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு சில இடங்களில் தகுதியற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றார்கள் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுகின்றது. ஏதேனும் ஒரு கல்வியில் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் வேறு ஒரு பாடத்திற்கு ஆசிரியராக பதவி வகிக்கின்றார்கள். இன்றைய மாணவ, மாணவிகள் பல்வேறு சந்தேகங்களைக் கேக்கும் போது அந்த ஆசிரியர்களால் பதில் அளிக்க முடியாமல் போகின்றது.

சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரியில் பார்த்தால் ஆங்கில பிரிவினில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் வணிகத் துறை பிரிவிற்கு தலைவராக இருக்கின்றார். ஆனால் அந்த கல்லூரி நிர்வாகம் எங்களிடம் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர் இருக்கின்றார் என்று விளம்பரம் செய்கின்றார்கள். இதனால் உண்மையாய் உழைத்து பட்டம் பெற்ற ஆசிரியர்கள் வெளியினில் வேலை இன்றி காத்திருக்கின்றார்கள்.

அடுத்தது ஒரு சில கல்லூரிகளில் ஆசிரியர்களும் மிக கேவலமாக நடத்தப் படுகின்றார்கள். உண்மையாய், உயிரைக் கொடுத்து நடத்தும் ஆசிரியர்கள் பலர் கொத்தடிமைகளாக நடத்தப் படுவது மிகவும் வேதனைக்குரிய விசயமே...செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடும் இந்த தமிழ்நாட்டில் எத்தனை ஆசிரியர்கள் கேவலமாக வாழ்ந்து வருகின்றார்கள் தெரியுமா?

டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்று உழைக்கும் ஆசிரியர்கள் மரியாதையாக நடத்தப் படுவதில்லை. காரணம் கேட்டால் சம்பளம் வாங்குறேல, வேலை பார்த்த என்ன உடம்பு தேஞ்சுருமா என்று எகத்தாளங்கள் வேறு? அவர்கள் மகள் அல்லது சகோதரியை இவ்வாறு சித்தரித்தால் அவர்கள் எப்படி கொதிப்பார்கள், அந்த நிலைதான் இன்று எல்லோருக்கும்...

பல கல்லூரிகளில் பெண் ஆசிரியர்கள் சொல்லொனாத் துயரத்தில் குடும்பச் சுமை குறைப்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பல கர்ப்பிணிப் பெண்கள் ஐந்தாவது தளம் அல்லது நாலாவது தளத்திற்கு படியேறி வேலைப் பார்க்கின்றார்கள். ஏதாவது எதிர்த்து கேட்டால் அல்லது மறுப்பு தெரிவித்தால் அன்றைய நாள் சம்பளம் கட். இதற்க்கு பயந்து போய்  அவர்களும் மௌனியாக வேலைக்கு போய் வருகின்றார்கள். அதையும் மீறி வேலையை விட்டு நின்று கொள்கின்றேன் என்று சொன்னால் 3 மாத சம்பளத்தை கொடுத்து விட்டு நடையை கட்டு என்று மிரட்டுகின்றார்களாம். ஒரு மாத சம்பளத்திற்கே வழி இல்லாமல் உழைக்கும் அவர்களுக்கு 3 மாத சம்பளம் எங்கிருந்து கொடுக்க முடியும்?

அது போல ஒரு சில கல்லூரிகளில் மற்ற பிரிவினில் வேலைப் பார்க்கும் ஆண்களாலும் பாலியல் தொந்திரவுகள் இருப்பதாக புகார்கள் வருகின்றது. ஆனால் புகார்களை அந்த நிர்வாகம் கண்டுகொள்ளாது என்றும் மாறாக புகார்களை மூடி மறைக்கவே முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றது.

சமீபத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு கர்ப்பிணி ஆசிரியை ஏறிக் கொண்டிருந்தார். அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் மிக மெதுவாக ஏறிக்கொண்டிருக்க அந்த கல்லூரிப் பேருந்து ஓட்டுனர் சிறிதும் மனிதாபமின்ரி வேகமாக வண்டியை எடுக்க அந்த பெண் தடுமாறி விழுந்தார். அதோடு மட்டுமல்லாமல் கீழே விழுந்த அந்த ஆசிரியைப் பார்த்து மிக கேவலமாக தகாத வார்த்தைகளில் வேறு திட்டிக் கொண்டிருந்தார் அந்த ஓட்டுனர்.  அதனால் அங்கே நின்று இருந்த பொது மக்கள் அந்த ஓட்டுனரை நன்றாக புடைத்து  அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகே இந்த கட்டுரை  எழுதப் படுகின்றது. அதனைத் தொடர்ந்து ஒரு சில பெண் ஆசிரியைகளிடம் விசாரித்த போது சேகரித்த தகவல்களே இவை...

நிறைய ஆசிரியைகள் அழுது புலம்பிவிட்டனர். யாருமே தனது பெயரையோ அல்லது தனது கல்லூரிப் பெயரையோ வெளியிடக் கூடாது என்றுக் கேட்டுக் கொண்டதால் வெளியிடப் படவில்லை. நிறைய கல்லூரிகள் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பதாக சொல்லும் முன் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு தரமான ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வியை வழங்குகின்றார்கள் என்று அவர்களால் உறுதி அளிக்க முடியுமா?

பாதி நிறுவனங்கள் முதலில் கல்லூரியை தொடங்கி விட்டு அதன் பின்னரே அரசாங்கத்திடம் அனுமதி விண்ணப்பம் கூறுகின்றார்கள். இன்றும் சென்னை மற்றும் சுற்றுபுரங்களில் இயங்கி வரும் பல கல்லூரிகளில் பாதி வசதிகள் கிடையாது. ஒரு மாணவி அவர்கள் கல்லூரியில் கழிப்பறை வசதி பாதுகாப்பாய் இல்லை என்று சொன்னார். ஆனால் மாணவி என்றோ ஒருநாள் ஐந்து நிமிடங்கள் காலதாமதமாய் வந்தால் கூட

இன்னொரு கல்லூரியில் கல்லூரிப் பேருந்து தாமதமாக சென்றதாம். ஆனால் அந்த பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் அரைநாள் விடுப்பு கொடுக்கப்பட்டதாம். கேட்டால் நாங்கள் நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்று சொன்னதாம் நிர்வாகம். பல கல்லூரிகளில் பெண் ஆசிரியைகளுக்கு மற்ற பிரிவில் வேலை பார்க்கும் ஆண்களால் பாலியல் தொந்திரவுகள் அதிகம் இருப்பதாக சொல்லி வேதனைப்படுகின்றார்கள். குறிப்பாக ஒவ்வொரு வகுப்பாக அலைக்கழிப்பது, சம்பளம் குறைத்து கொடுப்பது, விடுப்பு எடுக்க விடாமல் தடுப்பது, பாடம் எடுப்பதைத் தவிர அதிக வேலைகளை கொடுத்து அவர்களை வீட்டிற்கு நேரத்திற்கு செல்ல விடாமல் தடுப்பது போன்ற குறுகலான மனத்தோடு நடக்கும் சைக்கோ களும் இருப்பதாக சொல்கின்றார்கள்...

இவை எல்லாம் நிர்வாகத்திற்கும் தெரியாமல் இருக்காது....ஆனால் அவர்கள் இதில் எல்லாம் கண்டுகொள்வதில்லை...காரணம் அவர்களுக்கு கல்வியில் லட்சியம் என்பது முக்கியமல்ல, கல்வியால் லட்சம் என்பதையே விரும்புகின்றார்கள்.

3 comments:

  1. எல்லா இடங்களிலும் இதே கதைதான்... என்ன செய்வது...

    ReplyDelete
    Replies
    1. உயர்ந்த மரியாதைக்குரிய பதவியான ஆசிரியப் பணிக்கே இந்த கதிதான் என்றால்???

      Delete
  2. கல்வியை வியாபாரமாக்கி விட்ட அரசியல் வியாதிகள் வாழ்க !!!

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...