பங்காளிங்க..

Wednesday, May 4, 2011

தலைப்பின் பின்னணி


இன்றைய காலகட்டத்தில் இத்தலைப்பு மிக மிக அவசியமான ஒன்று என்றே நான் நினைக்கின்றேன். உங்களுக்கும் இதில் உடன்பாடே என்று கருதுகின்றேன். 
தமிழ்நாடு இன்று தொழில்துறையில் முன்னேறி வருகின்றது என்பதை யாரும் மறுக்க இயலாது,. ஆனால் அந்த தொழில்துறைக்கு மூலதனமான மின்சாரம் தட்டுபாட்டினில் இருக்கிறது. 
கிராமங்களின் முக்கிய தொழில் என்பது விவசாயம், அடுத்தது சாயப்பட்டறை, தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் சிறு தொழில் களாகும். இவைகளுக்கு முக்கியமான தேவை மின் உற்பத்தி ஆகும். 
கடந்த 3 ஆண்டுகளில் எல்லா கிராமங்களிலும் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தி வைக்க பட்டதை கிராமத்து மக்கள் நன்கறிவார்கள். 
சமீபத்தில் அந்த 2 மணி நேரம் என்பதை 3 மணி நேரமாக உயர்த்தி வைத்து விட்டார்கள். 
இந்த லட்சணத்தில் இலவச மின்சாரம் என்று வேறு வழங்கினார்களாம். பொதுவாக விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் காலை மற்றும் மாலையில் இரண்டு மணி நேரம் தான் தண்ணீர் பாய்ச்சுவார்கள். இந்த நேரத்தில் மின் வெட்டு அமலுக்கு வரும் பட்சத்தில் எப்படி பயிர்கள் செழிக்கும்.? நண்பகல் அல்லது முற்பகலில் தண்ணீர் பாய்ச்சுவது பயிர்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்குமா? இருந்தாலும் கிடைக்கும் தண்ணீரை வீணடிக்க கூடாதென்று கிடைத்த நேரத்தில் பாய்ச்சிக்கொண்டார்கள். 
இப்படிப்பட்ட மின்சாரம் நகர்புறத்தில் வாழும் நகரவாசிகளுக்கு வெட்டு இல்லாமல் வழங்கப்பட்டது. காரணம் அரசியல்வாதிகள் அதிகம் வாழும் பகுதி இது. 
மேலும் நகரவாசிகளின் தொழில் மட்டும் அல்ல நகரத்தில் வாழும் அரசியல்வாதிகளின் தொழிற்ச்சாலைகளும் பாதிக்கப்படும் என்ற ஒரே நோக்கிலேயே நகரத்தில் மின் வெட்டு இல்லாமல் போனது என்பதுதான் எனக்கு புலப்பட்ட உண்மை. 
இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் நகரத்தை விட கிராமத்தில் தான் எப்போதும் வாக்குப்பதிவுகள் அதிகம் பதிவாகி இருக்கும். காரணம் ஒவ்வொரு முறையும் யாராவது  ஒருவர்  நமக்கு விடிவு காலம் கொடுக்க மாட்டார்களா என்ற நப்பாசையில் தான் அவர்கள் சிரத்தையோடு வாக்களிக்கின்றார்கள். ஆனால் வழக்கம் போல் எல்லா அரசியல்வாதிகளும் வாக்கு வாங்கியதை மறந்து வாக்கு அளித்தவர்களையும் மறந்து போகின்றார்கள். 

மின்சாரப்பற்றாக்குறையை எப்படி நீக்குவது? மாற்றாக என்ன செய்யலாம் என்று எந்த தலைவர்களும் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. மாற்றாக எப்படி இலவசங்கள் கொடுத்து ஏமாற்றுவது  என்றுதான் முயற்சி எடுக்கின்றார்கள். இலவச அரவை, இலவச காத்தாடி, இலவச இஸ்திரி, இலவச தொலைக்காட்சி பெட்டி எல்லாம் இருக்கிறது, ஆனால் இதை எல்லாம் பயன்படுத்த மின்சாரம் இல்லையே, 

இவைகளை வைத்து நான் என்ன செய்வது என்று அவர்கள் கூப்பாடு போடுவது யாருக்காவது கேட்கின்றதா? 

கிராமத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் மின்சாரம் இல்லாமல், இரவு தூக்கம் இல்லாமல் தவித்து போகின்றார்கள்,. 

ஓரளவிற்கு படித்த பட்டதாரிகள் அவர்களுக்கு தெரிந்த கனரக பழுது பார்க்கும் நிலையம், நகலகம், கணினி பயிற்சி மையம், கணினி பழுது பார்க்கும் மையம் என்று திறந்து வைத்து விட்டு இன்னமும் வராத "மின்சாரத்திற்கு" வாசலில் காத்துக்கொண்டுதான் நிற்கின்றார்கள். கடன் வாங்கி தொடங்கிய தொழில் மின் வெட்டால் பாதிக்கப்பட்டு இறுதியில் செய்யாத தொழிலுக்கு வட்டி கட்டி கொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் ஒரு கிராமத்தில் மின்சக்தி கொண்ட தகன மேடையை ஒரு முக்கிய மந்திரி திறந்து வைத்தார். அந்த தகன மேடைக்கு கொண்டு செல்லும் பிணத்தை எரிக்க வேண்டுமெனில்  பகல் நேரத்தில் மட்டுமே செய்ய முடியும்.   காரணம் காலையும், மாலையும் மின்வெட்டு. இதற்கு நாங்கள் கைகளாலேயே எரித்து கொள்கின்றோம் என்ற முடிவிற்கு வந்து விட்டார்கள் மக்கள், இந்த உதவியை செய்வதற்கு வந்த அமைச்சருக்கு பளிங்கு கல்வெட்டில் பெயர் பொறித்தனர், பல லட்ச ரூபாயில் அலங்காரத் தோரணைகள். கைகளால் எரித்தால் சுற்றுப்புறம் மாசடைகின்றது என்றுதான் மின் மேடை அமைத்தார்கள்,. மின் மேடை அமைத்தும் பகல் நேரத்தில்தான் பயன்படுத்த வேண்டும் என்றால் அப்போது பொது மக்களின் சுவாசம் பாதிக்க படாதா?

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்று படித்தவர்கள் இன்று நெருப்பு என்பதை மட்டும் வயிற்றிலும், நெஞ்சிலும் சுமந்தது கொண்டு இருக்கிறார்கள். 

நேற்று பிறந்த குழந்தை விட்டத்தையே பார்த்து கொண்டு இருக்கிறது, 
எப்படி அந்த மின்விசிறி சுற்றும் என்று? 
எப்படி அந்த பெட்டியில் படம் ஓடும்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது. மின்சாரம் இருந்தால்தானே விளக்கு எரியும், காத்தாடி சுழலும். 
கிராம மக்களின் வீடுகளில் 
மின்விளக்கு எரியவில்லை, 
வயிறு எரிகின்றது , 
காத்தாடி சுற்றவில்லை, 
வாக்களித்த பாவத்திற்கு 
தலைகள் மட்டுமே சுற்றுகின்றது     
அதனாலேயே எனக்கு இந்த தலையங்கம் மிகவும் பிடித்து போனது. 
வராத பொருளுக்கும்,  கிடைக்காத வரத்திற்க்கும் எப்போதுமே எதிர்பார்ப்பு உண்டு. 

அது போல இப்போது வராத மின்சாரத்திற்கு எப்பவுமே தனி மரியாதை இருக்கும் என்று நம்புகின்றேன். 

மின் வெட்டால் இந்த தலைப்பினை முடிக்க எனக்கு 5 நாட்கள் ஆகிவிட்டது.

உஸ்ஸ்ஸ்ஸ்.............சுடன் 
சிவா..

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...