பங்காளிங்க..

Wednesday, July 10, 2013

முதல் ஆளாய்.....

ஜூனில் பள்ளி திறந்ததும் 
பெஞ்சு, டெஸ்க்கை நிரப்புவோம் 
முதல் ஆளாய்;

புத்தகக் கடையினில் 
போட்டி போட்டு வாங்கி அதில் வாசம் தேடுவோம் 
முதல் ஆளாய்;

பிரவுன் கலர் அட்டைப் போட்டு 
கிரிக்கெட் வீரர் படம் போட்டு லேபிள் ஓட்டுவோம் 
முதல் ஆளாய்;

வாரத்தில் இரண்டு ஞாயிறு தேடி 
திங்கள் காலையில் தெய்வத்தை தேடுவோம் 
முதல் ஆளாய்;

சிலேட் குச்சி, நடராஜ் பென்சில், மை பேனா,
பால் பாயிண்ட் பேனா, வாங்கினோம் 
முதல் ஆளாய்;

வாய்ப்பாடு புத்தகம், லாக் புக், 
அப்புறமா கால்குலேடர்  
இரவல் வாங்கிப் படித்தோம் 
முதல் ஆளாய்;

வகுப்பறையில் ஓடியாடி, பெஞ்சுமீது 
ஏறி இறங்கி வகுப்பில் சட்டை நனைந்து அமர்ந்தோம் 
முதல் ஆளாய்;

சாப்பாட்டை பெஞ்சிலும், மரத்தடியிலும்,
மைதானத்திலும், சில சமயம் சைக்கிள் செட்டிலும் உண்டோம் 
முதல் ஆளாய்;

சரியா படிக்கலைனா முழங்காலிட்டு,  
சந்தோசமாய் தண்டனை அனுபவிப்போம் 
முதல் ஆளாய்;

வாரத்தில் ஒருநாள் வரும் பி.டி வகுப்புக்கு 
வழிமீது விழி வைத்து காத்திருப்போம் 
முதல் ஆளாய்;

பரீட்சை அட்டையை மட்டையாக 
பேப்பர், சாக்ஸை பந்தாக வைத்து கிரிகெட் ஆடுவோம் 
முதல் ஆளாய்;

உச்சி வெயிலில் கபடி, கோ-கோ என்று 
வியர்வையில் குளித்தாடுவோம் 
முதல் ஆளாய்;

அடைமழை பெய்தாலும் புத்தக 
கிரிக்கெட் விளையாடுவோம்   
முதல் ஆளாய்;

பள்ளி விட்டதும் வெளியே பைகளை 
தூக்கி பறந்து செல்வோம்  
முதல் ஆளாய்;

நெல்லிக்காயா, இலந்தன்பழமா, நவாப் பழமா?
பத்து பைசாவில் பகிர்ந்து உண்போம் 
முதல் ஆளாய்; 

குல்பி ஐசோ, பிக் பன்னோ, நன்னாரி சர்பத்தோ 
பிடுங்கித் தின்போம்   
முதல் ஆளாய்;

காலாண்டு, அரையாண்டு, முழுவாண்டில் 
விழுந்து விழுந்து படிப்போம் 
முதல் ஆளாய்;

பரீட்சை டைம் டேபிளில் 
லீவு எத்தனை நாள் என்று தேடித் பிடிப்போம் 
முதல் ஆளாய்;
நாமும் 
படித்தோம் 
விளையாடினோம் 
அழுதோம் 
சிரித்தோம் 
வெற்றி கண்டோம், 
தோல்வி பெற்றோம் 
எத்தனை எத்தனை சந்தோசங்கள், 
எத்தனை எத்தனை துக்கங்கள் 
பால்ய கால  சண்டைகள் 
அத்தனையும் மறந்து போனதே இன்று ?

தோளில் கைபோட்டு சுற்றிய காலம் எங்கே?
செல்போன். எஸ்.எம்.எஸ், சில் தொலைந்து போனோம் இங்கே!

மரத்தடியில் சிரித்துப் பேசிய வசந்தம் எங்கே?
வெப்சைட்டில் மறைத்து பேசும் சாட் இங்கே?

கனத்து போன இதயங்களோடு 
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் 
முதல் ஆளாய்;
இன்று நம் புது உலகோடு, உறவுகளோடு!

2 comments:

  1. முதல் ஆளாய் கமெண்ட் போட்டாச்சுங்க..

    ReplyDelete
  2. வருகைப் பதிவேட்டில் முதல் ஆளாய் பதிவு செஞ்சதுக்கு நன்றிங்கோ...

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...