பங்காளிங்க..

Sunday, January 29, 2012

அரசியல்வாதியா? அரசு அதிகாரிகளா?

இன்றைய சமுதாயத்தை, மக்களை ஏமாற்றுவது யார்? என்ற கேள்வி பெரும்பாலான மக்களுக்கு புரியவில்லை. என்னையும் சேர்த்துதான்.

அரசு ஒரு திட்டத்தை நிறைவேற்றும்போது அது முழுமையாய் மக்களை சென்று சேர்வது கிடையாது. அதை போன்ற ஒரு சூழ்நிலையில் இன்று நான் தள்ளப்பட்டேன். நிச்சயம் மற்றவர்களும் இந்த சூழ்நிலையை சந்தித்து இருப்பார்கள் என்று நம்புகின்றேன். 


நேற்று காலை நகரப் பேருந்தில் ஏறினேன். பச்சை நிற வண்ணம் கொண்ட பேருந்து அது. குறிப்பிட்ட ஸ்டாப்பிற்கு டிக்கெட் கேட்டேன். 5  ரூவாய் என்று சொன்னார்.
பின்னர் எனது வேலை முடிந்து மீண்டும் மாலை ஒரு பேருந்திலே வீட்டிற்கு செல்ல ஏறினேன். பேருந்தினுள் இருந்த சில அடையாளங்கள் நான் காலையில் ஏறிய அதே பேருந்துதான் என்பதனை எனக்கு நினைவு படுத்தியது. 

நான் வழக்கம் போல ஐந்து ரூவாயை எடுத்து நீட்ட கண்டக்டர் 9 ரூவாய் என்று சொல்ல நான் அதிர்ச்சி யடைந்தேன். விவரம் கேட்டேன். கண்டக்டர் மிக சலிப்போடு இது டீலக்ஸ் பஸ் யா? படிக்காதவன்தான் விவரம் கேட்கான்னு நினைச்சா? படிச்ச உனக்குமா தெரியல என்று கேட்டார். 

எனக்கு தூக்கி வாரி போட்டது..உடனே கோவத்தில் சார், காலையிலும் இதே பஸ்ல தான் வந்தேன்...அப்போது ஐஞ்சு ரூவாதான் வாங்கினாங்க...இப்போ கேட்டா 9  ரூவாய் சொல்றீங்க...என்ன வித்யாசம் னு கேட்டதுக்கு காலையிலே நீ ஏறினது வெள்ளை கலர் போர்டு, இப்போ ஏறி இருக்கிறது பச்சை கலர் போர்டு என்று சொல்லவும், உடனே கண்டக்டருக்கு சப்போர்ட்டா இரண்டு பேரு சவுண்டு விட்டாங்க

உடனே நான் கேட்டது அப்போ போர்டுக்குத்தான் சார்ஜா, ஏறின பஸ்ஸோட வசதியை வைச்சு கிடையாதா? என்று கேட்டதற்கு எதுவானாலும் ஆபீஸ்ல போய் கேட்டுக்கோயா, என் உயிரை வாங்காதே, வந்துட்டானுங்க.. இஷ்டம் இருந்தா ஏறு, இல்லேனா இறங்கி போய்க் கிட்டே இரு. அடுத்தாப்புல ஒயிட் போர்டு வருது, அதுல வா என்று முனங்க..எனக்கு கோவம் கோவமாய் வந்தது...அப்படியே இறங்கி போய் டிப்போவில் கேட்டுவிட வேண்டும் என்று அங்கே சென்றேன். 

அவரிடம் விவரத்தை கேட்கவும் அது என்ன இப்போ? இருக்கிற பஸ்லதான் போர்ட மாத்தி அனுப்ப முடியும், ஆ வூ னா பஸ் விடலைனு புகார் பண்றது? அப்படி பஸ்ஸ விட்டா பஸ்ல அது குறை இது குறைன்னு சொல்ல வேண்டியது, உங்களுக்கு வேற பொழைப்பே இல்லையா? னு அவர் அவர் பங்குக்கு கத்த எனக்கு கோவம் வந்தது. ஏன் சார், பஸ்ல ஒரு வசதியும் இல்லை, உக்காருற சீட் எல்லாம் கிழிஞ்சி உடைஞ்சி போய் இருக்கு, டக டக னு சத்தம் வேறு கேட்டுகிட்டு இருக்கு. காலையிலே வந்தப்ப இருக்கிற அதே டிஸ்தன்சுதான், அப்புறம் எதுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ், 

உனக்கு அப்படி சந்தேகம்னா இந்த துறை அமைச்சரை போய் கேளு..அவங்க எங்களுக்கு என்ன உத்திரவிடுரான்களோ, அதைத்தான் நானும் செய்ய முடியும்,. நீ ஒருத்தன் கேட்டு அங்கே ஒன்னும் புடுங்கிற முடியாது, புரியுதா, போய் வேலைய பாரு.

நல்ல மரியாதை கிடைத்ததை நினைத்து சந்தோசப்பட்டேன். இதற்க்கு மேல் என்னால் போக முடியாதே. ஏனெனில் இன்று காலை 10.25  க்கு யார் போக்குவரத்துத்துறை அமைச்சர் என்று எனக்கும் தெரியாது...அந்த அமைச்சருக்கும் தெரியாதே? 

இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ஓடும் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து வசதியை வைத்து ஓடுவது இல்லை. பேருந்தில் வைக்கப்பட்டிருக்கும் பெயர்பலகைகளை வைத்துதானே இயங்குகின்றது. என்ன செய்வது?

இன்னமும் சொல்லப்போனால் அவர்கள் கிலோமீட்டரை வைத்து கூட காசு வாங்கவில்லை. வெளியே மக்களுக்கு சொல்வது கிலோ மீட்டர் கணக்கு. ஆனால் உண்மையில் பச்சை கலர் போர்டு மற்றும் வெள்ளை கலர் போர்டுக்குத்தான் அந்த கட்டண வசூல். இதனை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்த வேலையை செய்கின்றது, தொடர்ந்து செய்து  கொண்டுதான் இருக்கின்றது. கேள்வி கேட்கவேண்டிய எதிர்கட்சிகளும் தொடர்ந்து மௌனம் சாதித்து கொண்டுதான் இருக்கின்றது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் எதிர்கட்சிகளின் கேள்வியாக கூட இருக்கின்றது.

அடுத்தது வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளின் நிலை மிக கேவலமாக இருக்கின்றது. கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த விஷயம் இது, எனது நண்பனின் திருமணத்திற்கு சென்னையில் இருந்து கும்பகோணம் சென்றோம். அது முகுர்த்த நாள் என்பதால் அனைத்து தனியார் வண்டிகளும் ஏற்கனவே நிரம்பி விட்டது. அதனால் அரசுப் பேருந்தை தேர்ந்தெடுத்தோம். வண்டியில் ஏறியதில் இருந்து நாங்கள் கண்டுகொண்ட விஷயம் வண்டி இருக்கைகள் அனைத்திலும் மூட்டை பூச்சிகளின் சாம்ராஜ்யம். வெளியே வியர்வை எங்களை பிழிந்து கொண்டிருந்தது. உள்ளே மூட்டை பூச்சிகள் எங்கள் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் எங்களுக்கும் பேருந்து ஓட்டுனர், நடத்துனருக்கும் சண்டை முற்றி போய் விட்டது. கைக்குழந்தையோடு சென்று நாங்கள் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. நாங்கள் போய் வேறு பேருந்து எடுத்து வருகின்றோம் என்று சொல்லி எங்களை நடுகாட்டில் இறக்கி விட்டு விட்டு சென்றவர்கள் மீண்டும் வரவே இல்லை. கடைசியில் ஒரு லாரியில் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். எங்களிடம் மேற்கொண்டு பணம் இருந்தது, பணம் இல்லாதவர்கள் நிலை????

சரி திருமணத்திற்கு போகும் போதுதான் மரண அவஸ்தையை சந்தித்து விட்டோம், வரும்போது ஏசி பேருந்தை பிடித்து வந்தோம். அதுவும் அரசுப் பேருந்தே. கும்பகோணத்தை தாண்டவும் ஏசி நின்று விட்டது. என்னவென்று கேட்டதற்கு ஏசி வேலை செய்யவில்லை என்று கூலாக சொன்னார்கள், மேலும் வண்டி ரிப்பேர் ஆகி விட்டது என்று சொல்லி மாற்றுப் பேருந்தில் ஏற்றி விட்டார்கள். மாற்று பேருந்து ஒரு சாதாரண வண்டி. அந்த வண்டியில் ஏறி இரண்டு இருக்கைகளுக்கு நடுவினில் இருக்கும் வழித்தடத்தில் எனது கைக்குழந்தையை படுக்க வைத்து கொண்டு காற்றே இல்லாமல் அதிக கட்டணத்தில் சாதாரண பேருந்தில் பயணம் செய்து வந்தோம்.

வீடியோ கோச் என்று போடப்பட்டிருக்கும் பேருந்தினில் அதற்குரிய கட்டணத்தை வாங்கி கொண்டு வெறும் டிவியை கடைசி வரை காண்பிப்பார்கள். இன்னும் சில இடங்களில் ஜன்னல் கதவுகள் மூடாது, ஜன்னலோரம் சீட்டு கேட்டதற்கு நாங்கள் படாத பாடு பட்டுத்தான் வர வேண்டும்.

உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு எங்களுக்கு நல்ல பரிசு கொடுத்தீங்கடா? அடப்பாவிகளா? சபித்து கொண்டே வந்து சேர்ந்தோம்.

தவறு யார் மீது அரசியல்வாதிகள் மீதா? அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீதா? அல்லது உங்களை நம்பி ஏமாந்த எங்களை போன்ற சாதாரண குடிமகன்கள் மீதா?

இது உண்மையில் யாருடைய குற்றம்? அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கா? அல்லது அரசாங்கத்தை நடத்தும் அரசியல்வாதிகளின் சர்வாதிகாரப் போக்கா?

என்னை போன்று ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரச்சனைகளை சந்திக்கும் நம் மக்கள் அப்பாவி மக்களா? அல்லது அசராத மாக்களா? ஆண்டவனுக்கே வெளிச்சம்???!!!???

Saturday, January 21, 2012

எண்ணையை வச்சி காமெடி, கீமெடி பண்ணலையே!

ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.


தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.

நிரூபிக்கப்பட்ட உண்மை

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

வலி நிவாரணி

தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

எப்படி செய்வது ஆயில் புல்லிங்?

காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது

உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.


எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. 
 
முயற்சி செய்து பாருங்களேன்
 
நன்றி உங்களது ஓட்டிற்கு....

Thursday, January 19, 2012

நாங்க என்ன பாவம் செஞ்சோம்????

நான் கடந்த ஒரு வார காலமாய் பதிவிட முடியவில்லை. அதற்க்கு காரணம் எனக்கு திடீரென்று உடல்நலம் சரி இல்லாமல் போனதுதான். அந்த ஒரு வார காலத்தில் நான் மருத்துவமனையில் சென்று பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட புதிய அனுபவங்களை நான் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். இது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை பதிவாகவும் இருக்க வேண்டும் என்பதனாலே எனது நண்பர்களை கலந்தாலோசித்து இதனை வெளியிடுகின்றேன்.

கடந்த வாரம் முதல் எனக்கு தொண்டை கர கரப்பாய் இருந்தது. பின்னர் அன்று  காலையில் இருந்தே என்னால் எதையும் முழுங்க முடியவில்லை. உடனே அருகில் இருக்கும் 24 மணி நேர மருத்துவமனைக்கு சென்றோம். அவர் உடனே ஒரு மாத்திரை எழுதி கொடுத்து சாப்பிட சொன்னார். சாப்பிட்டு பார்த்தேன். அதை சாப்பிட்ட பிறகு ஜுரம் அதிகரித்தது. கை கால்கள் நடு நடுங்கியது. எதற்கும் அசராத என் அப்பாவே பயந்து அழத் தொடங்கி விட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த மாத்திரையை சாப்பிட்ட பிறகு என்னால் தண்ணீர் கூட முழுங்க முடியவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் என்னால் என் முக வாய்ப் பகுதியை முழுமையாய் திறக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் என்னால் ஒரு சின்ன கரண்டியின் பின் பகுதி மட்டுமே உள்ளே செல்லும் அளவிற்குத்தான் வாய் திறக்க முடிந்தது. உடனே அப்பா மருந்து சீட்டை எடுத்து கொண்டு மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். உடனே அவர், உங்க பையனுக்கு அந்த மருந்து ஒத்து கொள்ளவில்லை போலிருக்கு, நீங்க என்ன பண்ணுங்க, இந்த மாத்திரையை ட்ரை பண்ணுங்க என்று வேறு ஒரு மருந்தினை எழுதி கொடுத்தார். அதையும் என் அப்பா வாங்கி வந்து மதிய உணவிற்கு பிறகு கொடுத்தார். அவ்வளவுதான் உடல் தூக்கி தூக்கி போட்டது. யாருடைய மூச்சு காற்று பட்டால் கூட எனக்கு குளிர் காற்று அடிப்பது போன்ற உணர்வு. சாப்பிட்டது என்னவோ ரசம் சாதம். (மருத்துவரின் அறிவுரைப் படி) ஆனால் அதன் பின்னர் பேதி, வாந்தி நிற்கவே இல்லை. மாலையில் உடலில் தெம்பே இல்லாமல் சோர்ந்து போனேன். 

மீண்டும் மருத்துவரை அணுகியபோது ஒருவேளை அவருக்கு தைபாய்டா இருக்கலாம் என்று சொல்லிவிட்டு திருப்பியும் வேறு சில மருந்துகள் வாங்க சொன்னார். அதுவும் ஏற்று கொள்ளவில்லை. அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்து கொண்டுதான் இருந்தேன். காலை விடிந்ததும் மருத்துவரை சென்று பார்த்தோம். அவர் ஒருவேளை  ஜான்டிசா கூட இருக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். 

அப்போது பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் வந்து அந்த டாக்டர் உங்களை வச்சு பாடம் படிக்கிற மாதிரி இருக்கு, அவர் என்னெல்லாம் டெஸ்ட் எடுக்க சொன்னாரு? ஸ்கேன் எடுக்க சொன்னாரா? யூரின் டெஸ்ட் எடுத்தீங்களா? பிளட் டெஸ்ட் எடுத்தீங்களா? என்று கேட்கவும் அதை பற்றி அவர் எதுவுமே கேட்கவில்லையே என்று வீட்டினில் அனைவரும் யோசித்தார்கள். வேறு ஏதாவது பெரிய மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அந்த மருத்துவர் கொடுத்த மாத்திரை சீட்டுகள் அனைத்தையும் எடுத்து கொண்டு சற்று தொலைவில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு சென்றோம். அங்கே டூட்டி டாக்டர் மட்டுமே இருந்தார். அவர் மருந்து சீட்டுக்களை பார்த்து விட்டு பின்னர் என்னை வாய் திறக்க சொன்னார். முடிந்த வரை திறந்து காண்பித்தேன். அவர் உடனே என் அம்மா, அப்பாவிடம், தம்பி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, உடனே அட்மிட் பண்ணிடுங்க. அவருக்கு த்ரோட் கான்செர் உருவாக்கி இருக்கு. இன்னும் ஒரு நாள் நீடிச்சா கூட அவரோட உயிருக்கு ஆபத்து என்றார். அவ்வளவுதான் என் அம்மா அழுதே விட்டார்கள். என் அப்பாவும் தான். எனக்கு அந்த பக்கத்து வீட்டு அங்கிள் சொன்ன வாசகங்கள் நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பேப்பரை எடுத்து சார் நான் இதுவரைக்கும் எந்த டெஸ்ட் டுமே எடுக்கலை, எதை வைச்சு நீங்க எனக்கு த்ரோட் கான்செர் நு சொல்றீங்க நு கேட்டதும், நீ டாக்டரா, நான் டாக்டரா என்று கேட்டு விட்டு, என்ன வெயிட் பண்றீங்க, உடனே அட்மிட் பண்ணுங்க,. டெபொசிட் பணம் 3000 கட்டிடுங்க நு சொல்லவும் நான் என் அம்மாவிடம், அம்மா அண்ணன்கிட்டே கேட்டுகிட்டு சொல்லலாம், அவசரப்படாதீங்க நு எழுதி காட்டவும், என் அம்மா புரிந்து கொண்டு, எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை, என் பெரிய பையன்தான் பணம் கட்டனும், நாளைக்கு காலையிலே வந்து பணம் கட்டிட்டு அட்மிட் பண்ணிக்கிறோம்னு சொன்னதும், அவர் சரிம்மா, நீயும் உன் புருசனும் போயிட்டு நாளைக்கு காலையிலே பணத்தோட வந்திடுங்க..பேசண்ட அட்மிட் பண்ணிடுங்க நு சொல்லவும் சரின்னு சொல்லிட்டு நாங்க வெளியே சத்தம் போடாம ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்திட்டோம், அதுக்கப்புறம் என் நண்பர்களின் செல் போன் நம்பரை கொடுத்து என் அம்மாவை பேச சொன்னேன். அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் வந்து வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றோம்.

அப்போது நேரம் கிட்டத்தட்ட இரவு 9 ஆகி விட்டது. பனிக்காற்று வேறு பாடாய் படுத்தியது. உடல் 106 டிகிரி என்று காட்டியது. குளிரில் உடல் நடு நடுங்கியது. மரண பயம் என்னை ஆட்கொண்டு விட்டது. அவ்வளவுதான் என் வாழ்க்கை அஸ்தமித்து விட்டது என்று நினைத்தேன். என் அம்மா அழுது கொண்டிருந்தார்கள். நண்பர்கள் என் அம்மா, அப்பாவிற்கு தேநீர் வாங்கி கொடுத்து விட்டு, என்னை அந்த பெரிய மருத்துவமனைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்தார்கள். அந்த முக்கிய தலைமை மருத்துவர் என்னை பரிசோதித்து விட்டு நத்திங் டு வொர்ரி அம்மா, பயப்படாதீங்க, என்று ஆறுதல் சொன்னார். கடந்த இரண்டு நாட்களில் பயப்பட எதுவுமே இல்லை என்ற வார்த்தையை முதல் முதலாக கேட்டனர் என் பெற்றோர்.

அடுத்ததாய் அவர் கேட்டது இந்த தொண்டை கர, கரப்பு வருவதற்கு முன்னால் நீ என்ன சாப்பிட்டாய்? (இதுவரை இரண்டு டாக்டருமே கேட்காத கேள்வி, எனக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது) கொஞ்சம் யோசிச்சு சொல்லு என்று கேட்டார். நான் வெகு நேரம் யோசித்து லெமன் ஜூஸ் என்று சொன்னேன். நல்ல விசயம்தான், லெமன் ஜூஸ் ஐஸ் போட்டு குடிச்சியா என்று கேட்டார். நான் வேகமாய் ஆமாம் என்று தலையாட்டினேன். உடனே அவர் பிடித்து கொண்டார், லெமன் ஒகே, ஆனால் நீ போட்டு குடிச்ச ஐஸ் எந்த தண்ணியில் தயாராகுது தெரியுமா? அந்த ஐஸ் கட்டி போடறப்ப பார்த்தியா, வெள்ளையா இருந்துச்சா? கருப்பா இருந்துச்சா? என்று கேட்டார். கொஞ்சம் கருப்பாய் இருந்தது, சாக்கு பையினில் இருந்து எடுத்தான் என்று சொல்லவும், பரவாயில்லை, இனிமே ஐஸ் போடாமலே குடி, சரியா என்று சொல்லிவிட்டு, என் அம்மாவிடம் ஒரு ஐஸ் பாக்கினை கொடுத்து அம்மா, நீங்க இந்த பையனுக்கு நெற்றியிலே, கை அக்குலே, நெஞ்சிலே எல்லாம் வச்சு வச்சு எடுங்க, அவரோட உடம்பு சூடு தணியனும் என்று சொல்லிவிட்டு என் நண்பர்களையும், என் அப்பாவையும் தனியே வெளியே அழைத்து சென்று விட்டார். 

அதன் பிறகு என் அப்பாவிடம் பையனுக்கு யூரின், பிளட் டெஸ்ட் மற்றும் த்ரோட் ஸ்கேன் எடுத்து பார்த்திடுவோம், இது ஒரு சேப்டிகாக, அப்போதான் நான் எந்த இடத்துல இருந்து ஸ்டார்ட் பண்றதுன்னு முடிவு பண்ண முடியும், என்று சொல்லிவிட்டு சென்றிருக்கின்றார். பையன் ரொம்ப வீக்கா இருக்கான், ட்ரிப்ஸ் ஏத்துவோம் னு சொல்லவும் என் அப்பாவின் முகத்தினில் அப்போதுதான் நான் சற்று சின்ன புன்னகையை பார்த்தேன். மறுநாள் டாக்டரின் முதல் வேலை எனது முகவாயினை திறக்கும் முயற்சியில் இருந்தார். தம்பிக்கு சூவிங்கம் பிடிக்குமா என்று கேட்டு விட்டு வாயினில் ஒரு சூவிங்கத்தை போட்டு விட்டு சென்றார். மெல்ல அதை மென்னு என்று சொல்ல இப்போது அதன் பலனாக பழையபடி வாயினை நன்கு திறந்து மூட முடிகின்றது.

எல்லா டெஸ்டும் எடுத்த பிறகு நான் குடித்த அந்த லெமன் ஜூஸ் மற்றும் ஐஸ் இன் காரணமாகவே இந்த கொடூர தாக்குதல் என்று புரிந்து கொண்டேன். இப்போது நான் பழையபடி தெம்பாகவே இருக்கின்றேன்.

ஒருவேளை நான் அந்த 24 மணிநேர மருத்துவமனை அல்லது அந்த பெரிய தனியார் மருத்துவமனைக்கு சென்று இருந்தால், அட்மிட் ஆகி இருந்தால் இன்று எனது நிலைமை என்னவாகி இருக்கும். நான் என் உயிரை கூட இழந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல், நீங்கள் அனைவருமே ஒரு சுமாரான பிளாக்கரை இழந்திருக்க வாய்ப்புகள் நிறையவே இருந்திருக்கும்.

மேலும் ஒருவேளை நான் உயிர் போகும் நிலையில் இருப்பதாகவே வைத்து கொள்வோம், அதை சொல்வதற்கு ஒரு நாகரிகம் இருக்கின்றதே, சொல்லும் விதமும் இருக்கின்றதே. அதை எல்லாம் விடுத்து நோயாளியிடமே நேரிடையாக நீ செத்து போயிடுவே என்று சொன்ன டாக்டர் எங்கே? தம்பி இதெல்லாம் சாதாரணமான ஒன்று, பயப்படத்தேவை இல்லை என்று சொன்ன டாக்டர் எங்கே? பெற்ற தாயிடம் உனது மகன் செத்து விடுவான் என்று சொன்னால் அவள் என்ன பாடு படுவாள்? இது ஏன் இவர்களுக்கு உரைக்கவில்லை.

கிராமங்களில் இதனை வாய் அம்மக்கட்டு என்று சொல்வார்களாம் ஒரு சிலர் இதை விளையாட்டு அம்மை என்றும் சொல்வார்களாம். இதையும் எனக்கு வாழ்வளித்த அந்த மருத்துவர்தான் சொன்னார். மேலும் அவர் கூறிய ஒரு சிலவற்றை உங்களுக்கு சொல்ல விருப்படுகின்றேன்.
  1. கடையினில் கூடுமானவரை ஐஸ் போடாமல் ஜூஸ் குடிக்க வேண்டுமாம்.
  2. பழங்கள் அழுகி இருக்கின்றதா என்பதை பார்த்து பயன்படுத்த வேண்டுமாம்.
  3. அப்படி ஐஸ் வேண்டுமென்றால் ஐஸ் வாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்து அதில் குடித்து கொண்டால் எதிர்காலத்தில் 40000  வரை செலவு செய்ய வேண்டி இருக்காது.
  4. இயற்கை பானங்களான இளநி, பதநீர், சாத்துக்குடி சாறு, கரும்பு, போன்றவற்றை குளிர்ந்த நீர் அல்லது பனிக்கட்டி இல்லாமல் குடிக்க வேண்டுமாம்.
  5. தெருவில் விற்கும் மோர், தயிர், ரஸ்னா போன்றவற்றையும் அறவே தவிர்த்தல் நல்லது.
  6. சீப்பா இருக்கேன்னு விற்கும் பாக்கெட் குளிர்பானங்களை மறப்பது மிக நல்லது.
  7. பழங்களை நேரிடையாக உண்ண வேண்டுமாம்.
  8. நடிகர், நடிகைகள் எப்போது பார்த்தாலும் குளிர்பான விளம்பரத்திற்கு வருகின்றார்கள், ஆனால் அவர்கள் குடிப்பது எப்போது ஆப்பிள், கிரேப், பைன்ஆப்பிள், சப்போட்டா பழ ஜூஸ்களை மட்டுமே.
மீண்டும் நாளை காலை எனக்கு தவறான சிகிச்சை கொடுத்த, கொடுக்க முற்பட்டவர்களை நான் சந்திக்க விருப்பபடுகின்றேன். நான் அவர்களை சந்திக்கலாமா அல்லது அப்படியே விட்டு விடலாமா? உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

Tuesday, January 17, 2012

புருன்டங்கா னா சும்மாவா?


என் பிரண்டோட சிஷ்டரு சூப்பரா கார் ஒட்டுவா. அவ கார் ஓட்ற அழகே தனிதான். வீட்டுல எந்த வேலையா இருந்தாலும் அவதான் காரு டிரைவ் பண்ணிட்டு போய் வாங்கிட்டு வருவா. போன மாசம் இப்படித்தான் அவ காரை ஓட்டிட்டு போறப்ப பெட்ரோல் தீர்ந்து போச்சு, உடனே பக்கத்துல இருக்கிற பெட்ரோல் பங்குல போய் பெட்ரோல் போட்டுக்கிட்டு இருந்தாளாம்.

அங்கே ஒரு பிச்சைக்காரன் அவளை துரத்தி பிச்சை கேட்டுகிட்டு இருந்திருக்கான். உடம்புதான் நல்லா இருக்கே, போய் வேலை செஞ்சு சாப்பிட வேண்டியதுதானே...இப்படி பிச்சை எடுக்கிறியே நு திட்டிட்டு வேறு பக்கம் திரும்பி போயிட்டா. உடனே அவன் அவ மேல கோபத்துல கைல வச்சிருந்த தண்ணிய தெளிச்சிட்டு ஓடி இருக்கான். அதை துடைச்சிட்டு வந்தப்ப அப்போ பக்கத்துல ஒரு சின்ன பையன் அழகழகா பலூன் வித்துக்கிட்டு இருந்திருகான். ஒரு சிலர் சூப்பர், சூப்பர் ஸ்டிக்கர்ஸ் எல்லாம் வித்துகிட்டு இருந்திருக்காங்க, அவனுங்க எல்லாம் அவளயே வெறிச்சு பார்க்க அவ பயந்து போய் திரும்பிட்டா. அப்போ பக்கத்துல  ஒருத்தி கார் கண்ணாடிய துடைச்சிவிட்டுடு காசு கேட்டுகிட்டு இருந்திருக்கா? இவளும் அந்த பொண்ணு கார் கண்ணாடி துடைக்கிற அழகை ரசிச்சுகிட்டு இருந்திருக்கா, அப்படியே அவளுக்கு ஒரு பத்து ரூவாய எடுத்து கொடுத்திட்டு காரை அந்த பெட்ரோல் பங்கு ஓரத்துல பார்க் பண்ணிட்டு பக்கத்துல இருக்கிற ரெஸ்டாரன்ட் போய் காபி சாப்பிட்டு விட்டு காருக்கு திரும்பி இருக்கா. அப்போ காருக்கு பின்னாடி ரெண்டு பசங்க நின்னு எல்லோருக்கும் ஏதோஅவங்க ப்ராடக்ட்ட பத்தி சொல்லிக்கிட்டே பிட் நோட்டிஸ் கொடுத்துகிட்டு இருந்திருக்காங்க. அவங்க என்ன பிராடக்ட்னு பக்கத்துல போய் பார்த்ததும் இவளுக்கும் பிட் நோட்டிஸ் கொடுத்திருக்காங்க. அதுக்குள்ளே இவளுக்கு செல் போனில் அழைப்பு வரவும் காரை கிளப்பிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டா.

வண்டி போய் கிட்டு இருக்கிறப்ப அந்த பொண்ணு துடைச்சு வைச்ச கண்ணாடிய பார்த்துகிட்டே...அந்த பிட் நோடிஸ்ஸ எடுத்து படிச்சிருக்கா..அந்த பிட் பேப்பர் வழுவழுன்னு அழகா இருக்கவும், இவளுக்கு இவளோட கல்யாண பத்திரிக்க நினைவுக்கு வந்திருக்கு, அடுத்த மாசம் இந்த நேரம் கல்யாணம் முடிஞ்சிருக்கும், கல்யாண பத்திரிக்கையை விட ரொம்ப சாப்டா இருக்கே, என்ன அழகா சாப்டா இருக்குனு நினைச்சுகிட்டு இருக்கிறப்பவே இவளுக்கு திடீர்னு மயக்கம் வரவும் அப்படியே வண்டிய நிப்பாட்டிவிட்டு ஸ்டீரிங்லயே தலை சாஞ்சு படுத்திட்டாளாம். கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா அவ தரையிலே கிடந்திருக்கா, 

போட்டிருந்த, நகை, கார் பின் சீட்டுல வச்சிருந்த நகை எல்லாம் காணோம். அவளோட காரையும் காணோம். இன்னும் சொல்லப்போனா இவளுக்கு ரொம்ப உடம்பு அசதியாவும் இருந்திருக்கு. அப்புறம் போலீஸ், அது இதுன்னு விசாரணை பண்ணி பார்த்து அந்த பெட்ரோல் பங்குல கார் துடைச்ச பொண்ணை பிடிச்சு  விசாரிச்சப்ப அந்த "பகீர்" உண்மை வெளியே வந்துச்சு.

இவளுக்கு ஒரு சந்தேகம், காருக்குள்ளே எப்படி மயங்கி விழுந்தோம்னு, குடிச்ச காபியிலே ஏதாவது கலந்தாங்களா?  இல்லேனா அந்த பிச்சைக்காரன்,  தெளிச்ச மையிலே ஏதாவது இருக்குமா? இல்லேனா ஏசி காருல ஏதாவது லீக் ஆகிடுச்சா? எப்படி மயங்கிநோம்னு யோசிக்க போலீஸ் அவங்க தரப்பு விசாரணையா ஆரம்பிச்சுது. கடைசியா உண்மையான குற்றவாளியான அந்த பசங்களை கைது பண்ணினாங்க...எல்லோருக்கும் பயங்கர சாக். 

அவங்க கொடுத்த பிட் நோடீஸ் ல தான் எல்லா விசயமும் இருக்கு, அந்த கார்டுல "புருன்டங்கா"  னு ஒரு பவுடர் கலந்திருக்கு, அந்த பவுடர்தான் வழுவழுன்னு இருந்திருக்கு. அதை தேய்ச்சதும் அந்த கொஞ்ச நேரத்துல அவளுக்கு மயக்கம் வந்திருக்கு. அந்த பசங்களும் அவளை பாலோ பண்ணி அவகிட்டே இருக்கிற நகை, பணம் எல்லாத்தையும் கொள்ளையடிச்சிட்டு போயிருக்காங்க..இந்த புருன்டங்கா வைப் பத்தி சொல்லனுமினா இது மற்ற மயக்க மருந்தை விட நாலு மடங்கு பவர் ஜாஸ்தியா இருக்கிற ஒன்னு. எப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறாங்க பா? ஆகையாலே பொது இடத்துல ரொம்ப ஜாக்கிரத்தையா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். 
 
உங்கள் பொறுமைக்கு நன்றி. மேலும் விவரங்களுக்கு கூகிள் இணையத்தில் படிக்கவும். ஆங்கில வார்த்தை - BURUNDANGA.     

Tuesday, January 10, 2012

இதெல்லாம் நடக்கிற காரியமா என்ன?

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?


1. வருமானம்                              2. ஒத்துழைப்பு                           3. மனித நேயம்

4. பொழுதுபோக்கு                  5. ரசனை                                       6. ஆரோக்கியம்

7. மனப்பக்குவம்                      8. சேமிப்பு                                     9. கூட்டு முயற்சி

10. குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக் கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை        
          வைத்து சந்தோசப்பட வேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்         
          மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க
           கூடியவள் மனைவி.

28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
 
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.

2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.

3. எப்போதும் சிரித்த முகம்.

4. நேரம் பாராது உபசரித்தல்.

5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

8. அதிகாரம் பணணக் கூடாது.

9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.

10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

11. கணவனை சந்தேகப்படக் கூடாது.

12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.

13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.

15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.

20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக்
           கொள்ளக் கூடாது.

21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை,
     அலங்காரம்  செய்ய வேண்டும்.

26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை
        அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில்
         எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.

33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? 'என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.

பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்.

பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.

2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.

3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.

4. விரும்பியதைப் பெற இயலாமை.

5. ஒருவரையொருவர் நம்பாமை.

6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.

7. உலலாசப் பயணம் போக இயாலாமை.

8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

9. விருந்தினர் குறைவு.

10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.

12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.

13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.

14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

உங்கள் பங்கு என்ன?
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.

1. அன்பாகப் பேசுவது

2. பிறர் மீது அக்கறை காட்டுவது.

3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.

4. குறை கூறாமல் இருப்பது.

5. சொன்னதைச் செய்து கொடுப்பது.

6. இன்முகத்துடன் இருப்பது.

7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.

8. பிறரை நம்புவது.

9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.

10. பணிவு

11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.

12. பிறர் வேலைகளில் உதவுவது.

13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.

14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.

15. சுறுசுறுப்பு

16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.

17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.

18. நகைச்சுவையாகப் பேசுவது.

19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.

20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.

21. நேரம் தவறாமை.

22. தற்பெருமை பேசாமல் இருப்பது.

23. தெளிவாகப் பேசுவது.

24. நேர்மையாய் இருப்பது.

25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.


எதற்கும் யார் பொறுப்பு?
நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை?

நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள ...

பத்து கட்டளைகள்

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான
       சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8.  ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம்,
     விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்

10. ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

"வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்