பங்காளிங்க..

Sunday, January 29, 2012

அரசியல்வாதியா? அரசு அதிகாரிகளா?

இன்றைய சமுதாயத்தை, மக்களை ஏமாற்றுவது யார்? என்ற கேள்வி பெரும்பாலான மக்களுக்கு புரியவில்லை. என்னையும் சேர்த்துதான்.

அரசு ஒரு திட்டத்தை நிறைவேற்றும்போது அது முழுமையாய் மக்களை சென்று சேர்வது கிடையாது. அதை போன்ற ஒரு சூழ்நிலையில் இன்று நான் தள்ளப்பட்டேன். நிச்சயம் மற்றவர்களும் இந்த சூழ்நிலையை சந்தித்து இருப்பார்கள் என்று நம்புகின்றேன். 


நேற்று காலை நகரப் பேருந்தில் ஏறினேன். பச்சை நிற வண்ணம் கொண்ட பேருந்து அது. குறிப்பிட்ட ஸ்டாப்பிற்கு டிக்கெட் கேட்டேன். 5  ரூவாய் என்று சொன்னார்.
பின்னர் எனது வேலை முடிந்து மீண்டும் மாலை ஒரு பேருந்திலே வீட்டிற்கு செல்ல ஏறினேன். பேருந்தினுள் இருந்த சில அடையாளங்கள் நான் காலையில் ஏறிய அதே பேருந்துதான் என்பதனை எனக்கு நினைவு படுத்தியது. 

நான் வழக்கம் போல ஐந்து ரூவாயை எடுத்து நீட்ட கண்டக்டர் 9 ரூவாய் என்று சொல்ல நான் அதிர்ச்சி யடைந்தேன். விவரம் கேட்டேன். கண்டக்டர் மிக சலிப்போடு இது டீலக்ஸ் பஸ் யா? படிக்காதவன்தான் விவரம் கேட்கான்னு நினைச்சா? படிச்ச உனக்குமா தெரியல என்று கேட்டார். 

எனக்கு தூக்கி வாரி போட்டது..உடனே கோவத்தில் சார், காலையிலும் இதே பஸ்ல தான் வந்தேன்...அப்போது ஐஞ்சு ரூவாதான் வாங்கினாங்க...இப்போ கேட்டா 9  ரூவாய் சொல்றீங்க...என்ன வித்யாசம் னு கேட்டதுக்கு காலையிலே நீ ஏறினது வெள்ளை கலர் போர்டு, இப்போ ஏறி இருக்கிறது பச்சை கலர் போர்டு என்று சொல்லவும், உடனே கண்டக்டருக்கு சப்போர்ட்டா இரண்டு பேரு சவுண்டு விட்டாங்க

உடனே நான் கேட்டது அப்போ போர்டுக்குத்தான் சார்ஜா, ஏறின பஸ்ஸோட வசதியை வைச்சு கிடையாதா? என்று கேட்டதற்கு எதுவானாலும் ஆபீஸ்ல போய் கேட்டுக்கோயா, என் உயிரை வாங்காதே, வந்துட்டானுங்க.. இஷ்டம் இருந்தா ஏறு, இல்லேனா இறங்கி போய்க் கிட்டே இரு. அடுத்தாப்புல ஒயிட் போர்டு வருது, அதுல வா என்று முனங்க..எனக்கு கோவம் கோவமாய் வந்தது...அப்படியே இறங்கி போய் டிப்போவில் கேட்டுவிட வேண்டும் என்று அங்கே சென்றேன். 

அவரிடம் விவரத்தை கேட்கவும் அது என்ன இப்போ? இருக்கிற பஸ்லதான் போர்ட மாத்தி அனுப்ப முடியும், ஆ வூ னா பஸ் விடலைனு புகார் பண்றது? அப்படி பஸ்ஸ விட்டா பஸ்ல அது குறை இது குறைன்னு சொல்ல வேண்டியது, உங்களுக்கு வேற பொழைப்பே இல்லையா? னு அவர் அவர் பங்குக்கு கத்த எனக்கு கோவம் வந்தது. ஏன் சார், பஸ்ல ஒரு வசதியும் இல்லை, உக்காருற சீட் எல்லாம் கிழிஞ்சி உடைஞ்சி போய் இருக்கு, டக டக னு சத்தம் வேறு கேட்டுகிட்டு இருக்கு. காலையிலே வந்தப்ப இருக்கிற அதே டிஸ்தன்சுதான், அப்புறம் எதுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ், 

உனக்கு அப்படி சந்தேகம்னா இந்த துறை அமைச்சரை போய் கேளு..அவங்க எங்களுக்கு என்ன உத்திரவிடுரான்களோ, அதைத்தான் நானும் செய்ய முடியும்,. நீ ஒருத்தன் கேட்டு அங்கே ஒன்னும் புடுங்கிற முடியாது, புரியுதா, போய் வேலைய பாரு.

நல்ல மரியாதை கிடைத்ததை நினைத்து சந்தோசப்பட்டேன். இதற்க்கு மேல் என்னால் போக முடியாதே. ஏனெனில் இன்று காலை 10.25  க்கு யார் போக்குவரத்துத்துறை அமைச்சர் என்று எனக்கும் தெரியாது...அந்த அமைச்சருக்கும் தெரியாதே? 

இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ஓடும் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து வசதியை வைத்து ஓடுவது இல்லை. பேருந்தில் வைக்கப்பட்டிருக்கும் பெயர்பலகைகளை வைத்துதானே இயங்குகின்றது. என்ன செய்வது?

இன்னமும் சொல்லப்போனால் அவர்கள் கிலோமீட்டரை வைத்து கூட காசு வாங்கவில்லை. வெளியே மக்களுக்கு சொல்வது கிலோ மீட்டர் கணக்கு. ஆனால் உண்மையில் பச்சை கலர் போர்டு மற்றும் வெள்ளை கலர் போர்டுக்குத்தான் அந்த கட்டண வசூல். இதனை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்த வேலையை செய்கின்றது, தொடர்ந்து செய்து  கொண்டுதான் இருக்கின்றது. கேள்வி கேட்கவேண்டிய எதிர்கட்சிகளும் தொடர்ந்து மௌனம் சாதித்து கொண்டுதான் இருக்கின்றது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் எதிர்கட்சிகளின் கேள்வியாக கூட இருக்கின்றது.

அடுத்தது வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளின் நிலை மிக கேவலமாக இருக்கின்றது. கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த விஷயம் இது, எனது நண்பனின் திருமணத்திற்கு சென்னையில் இருந்து கும்பகோணம் சென்றோம். அது முகுர்த்த நாள் என்பதால் அனைத்து தனியார் வண்டிகளும் ஏற்கனவே நிரம்பி விட்டது. அதனால் அரசுப் பேருந்தை தேர்ந்தெடுத்தோம். வண்டியில் ஏறியதில் இருந்து நாங்கள் கண்டுகொண்ட விஷயம் வண்டி இருக்கைகள் அனைத்திலும் மூட்டை பூச்சிகளின் சாம்ராஜ்யம். வெளியே வியர்வை எங்களை பிழிந்து கொண்டிருந்தது. உள்ளே மூட்டை பூச்சிகள் எங்கள் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் எங்களுக்கும் பேருந்து ஓட்டுனர், நடத்துனருக்கும் சண்டை முற்றி போய் விட்டது. கைக்குழந்தையோடு சென்று நாங்கள் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. நாங்கள் போய் வேறு பேருந்து எடுத்து வருகின்றோம் என்று சொல்லி எங்களை நடுகாட்டில் இறக்கி விட்டு விட்டு சென்றவர்கள் மீண்டும் வரவே இல்லை. கடைசியில் ஒரு லாரியில் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். எங்களிடம் மேற்கொண்டு பணம் இருந்தது, பணம் இல்லாதவர்கள் நிலை????

சரி திருமணத்திற்கு போகும் போதுதான் மரண அவஸ்தையை சந்தித்து விட்டோம், வரும்போது ஏசி பேருந்தை பிடித்து வந்தோம். அதுவும் அரசுப் பேருந்தே. கும்பகோணத்தை தாண்டவும் ஏசி நின்று விட்டது. என்னவென்று கேட்டதற்கு ஏசி வேலை செய்யவில்லை என்று கூலாக சொன்னார்கள், மேலும் வண்டி ரிப்பேர் ஆகி விட்டது என்று சொல்லி மாற்றுப் பேருந்தில் ஏற்றி விட்டார்கள். மாற்று பேருந்து ஒரு சாதாரண வண்டி. அந்த வண்டியில் ஏறி இரண்டு இருக்கைகளுக்கு நடுவினில் இருக்கும் வழித்தடத்தில் எனது கைக்குழந்தையை படுக்க வைத்து கொண்டு காற்றே இல்லாமல் அதிக கட்டணத்தில் சாதாரண பேருந்தில் பயணம் செய்து வந்தோம்.

வீடியோ கோச் என்று போடப்பட்டிருக்கும் பேருந்தினில் அதற்குரிய கட்டணத்தை வாங்கி கொண்டு வெறும் டிவியை கடைசி வரை காண்பிப்பார்கள். இன்னும் சில இடங்களில் ஜன்னல் கதவுகள் மூடாது, ஜன்னலோரம் சீட்டு கேட்டதற்கு நாங்கள் படாத பாடு பட்டுத்தான் வர வேண்டும்.

உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு எங்களுக்கு நல்ல பரிசு கொடுத்தீங்கடா? அடப்பாவிகளா? சபித்து கொண்டே வந்து சேர்ந்தோம்.

தவறு யார் மீது அரசியல்வாதிகள் மீதா? அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீதா? அல்லது உங்களை நம்பி ஏமாந்த எங்களை போன்ற சாதாரண குடிமகன்கள் மீதா?

இது உண்மையில் யாருடைய குற்றம்? அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கா? அல்லது அரசாங்கத்தை நடத்தும் அரசியல்வாதிகளின் சர்வாதிகாரப் போக்கா?

என்னை போன்று ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரச்சனைகளை சந்திக்கும் நம் மக்கள் அப்பாவி மக்களா? அல்லது அசராத மாக்களா? ஆண்டவனுக்கே வெளிச்சம்???!!!???

1 comment:

  1. ///அரசியல்வாதியா? அரசு அதிகாரிகளா? ///
    மக்களாகிய நாம்தான் காரணம்...

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...