பங்காளிங்க..

Friday, January 6, 2012

கடவுள்கள் ஸ்ட்ரைக்

இந்தியாவில் இந்த வகை கடவுள்களை வணங்காத மனிதர்களே இருக்க முடியாது, கடவுள் இல்லை என்று சொல்லும் மனிதர்கள் கூட இந்த கடவுளை வணங்கத்தான் செய்கின்றார்கள். அப்படி இருக்கும் போது எல்லாரையும் காப்பாற்றும் கடவுளே எனக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்டு ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவது அவ்வளவு உகந்ததாக தெரியவில்லை.

கடவுளே என்ன கொடுமை கடவுளே இது? எங்கோ தவறு நடந்ததற்காக எல்லாம் அறிந்த கடவுளே இந்த விபரீத முடிவினை எடுப்பது ஏற்புடையதாக இல்லையே. பல்லாண்டு காலமாக உங்களைத்தானே கடவுளாக வணங்கி வருகின்றோம்.


தொட முடியாத, உருவமில்லாத கடவுளை விட தொட்டு, உறவாடுகின்ற கடவுளான உங்களைத்தானே அதிகம் நம்புகின்றோம் நாங்கள். அப்படி இருக்கும் போது எங்களை இப்படி நட்டாற்றில் விட்டு செல்வது ஏனோ கடவுளே?

உனது ஒரு பக்தனின் தவறுக்காக எல்லா பக்தர்களையும் சோதிப்பது முறையா என் கடவுளே?

இயற்கை கூட அதற்க்கு கோவம் வரும்போது தமிழ்நாட்டின் ஒரு பகுதியை மட்டும் சீரழித்து சின்னா பின்னமாக்கியது. ஆனால் கடவுளே நீ ஒட்டு மொத்த தமிழக பக்தர்களை சீரழித்து சின்னா பின்னமாக்கு கின்றாயே.


இது கடும்பனி நேரம், இந்த நேரத்தில் உனது கருணையற்ற நடவடிக்கையால் எத்தனை எத்தனை கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், ஏழை எளியவர்கள், விபத்தில் சிக்கும் அப்பாவிகள், குழந்தைகள் என்று எல்லோரும் அவதிப் படுகின்றார்கள். உன்னை மதித்து கடவுளாய் ஏற்றதற்கு நீ கொடுக்கும் பரிசு இதுதானா?


உனக்கிருக்கும் சக்தி சாதாரணமானது அல்ல, மிகப் பெரிய சக்தி. அந்த சக்தியை ஏதோ, எங்கோ நடந்த சம்பவத்திற்காக பழி வாங்காதே. பழி வாங்கும் இடத்தில் நீ இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, நியாயமாய் வாதாடி தண்டனை பெற்று கொடு, தவறில்லை. எல்லாம் அறிந்த படித்தவர்களே புத்திகெட்டு போய் போராட்டத்தில் இறங்குவது எந்த விதத்தில் நியாயம். சரி இப்படி போராட்டம் செய்வதால் மட்டும் நியாயம் கிடைத்து விடுமா? உங்களுக்கு போதுமான பாதுகாப்பு கிடைத்து விடுமா? இதனால் மேலும் பல சாவுகள் அரங்கேறும், அந்த சாவுகளுக்கு மீண்டும் உங்களை சபிக்கும் அல்லது தாக்கும் முயற்சிகள்தானே நடக்கும். இது ஏன் அவர்களுக்கு புரியவில்லை. பெரும்பாலான இடங்களில் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படவே இல்லையாம். மனசாட்சியை அடகு வைத்து விட்டு வேலை செய்து கொண்டிருக்கும் இவர்களை என்ன வென்று சொல்வது? 


கடவுளை போன்று மருத்துவர்களை வணங்குகின்றார்கள் அப்பாவி பொது மக்கள். அப்படி பட்ட மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள். உயர்கல்வி முடித்த ஒரு மருத்துவருக்கு மற்றொரு பிரிவான சட்டத்தை மதிக்கத் தெரியவில்லை. நீங்கள் செய்யும் இந்த முட்டாள்தனமான போராட்டத்தால் எத்தனையோ அப்பாவி பொது மக்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.


கடவுளே நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்கவும்.

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...