பங்காளிங்க..

Tuesday, October 24, 2017

சிறந்த மாநகராட்சியாக திருநெல்வேலி???உண்மையா?

23.10.2017 திங்கள்கிழமை, வழக்கம் போல விடிந்தது, திங்கள்கிழமை பரபரப்பு மக்களிடையே ஒட்டிக்கொள்ள, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் பரபரப்போடு இயங்கி வருகின்றது. சிறு சிறு குழுக்களாக, தங்களின் ஏக்கங்கள், கனவுகள், லட்சியங்களை நெஞ்சில் சுமந்து கொண்டும், பலத்த எதிர்பார்ப்புகளோடும் கனத்த இதயங்களோடும் அலுவலக வளாகத்திற்குள் பொது மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக கூடத் தொடங்குகின்றார்கள். குறை தீர்க்கும் நாள் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நெல்லை மாவட்டத்தில் நடைபெறும், இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொள்வார். அந்த மனுக்கள் எல்லாம் முறையாக பரிசீலிக்கப்பட்டதா என்று ஆட்சியர் திரும்ப கவனத்தில் கொண்டு வருவாரா என்பது நேற்றைய சம்பவத்தில் இருந்து கேள்விக்குறிதான். மனுக்கள் பெறப்படுகின்றன. ஒரு சில மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன. அந்த ஒரு சில மனுக்களில் ஒரு சில மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. 

அதே வகையில் வழக்கமான பலத்த எதிர்பார்ப்புகளோடு நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து குடும்பத்தோடு வந்து ஏமாற்றத்தோடு கூடியிருந்த மக்களை ரத்த கண்ணீரை தந்து விட்டு சென்றார். இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1). இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளித்தனர். கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.

70% மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி காருண்யா, அட்சயா பரணிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார்.

முன்னதாக, தீக்குளிப்பு சம்பவம் குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் கோபி கூறும்போது, "என்னுடைய அண்ணன் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதை தங்கம்மா என்பவரிடம் கொடுத்திருந்தார். 8 மாதங்களுக்கு முன் வாங்கிய இந்தக் கடன் தொகைக்காக தங்கம்மா ரூ.2,34,000 வட்டி செலுத்தியிருக்கிறார். இந்நிலையில் அசல் தொகை ரூ.1.45 லட்சத்தை தருமாறு முத்துலட்சுமி என் அண்ணிக்கு நெருக்கடி கொடுத்தார். மிரட்டல் விடுத்துவந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் முகாமின்போது 6 முறை மனு கொடுத்தோம். மனுவை எஸ்.பி., அலுவலகத்துக்கு அவர்கள் மாற்றிவிட்டனர். எஸ்.பி. அலுவலகத்திலிருந்து அச்சன்புதூர் காவல்நிலையத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. ஆனால், அச்சன்புதூர் காவல்துறையினர் முத்துலட்சுமி தரப்புக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, மிகுந்த மன உளைச்சலோடு மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம். நான் கழிவறை சென்று திரும்புவதற்குள் என்னுடைய சகோதரர் குடும்பத்தினர் இந்தக் கோர முடிவை எடுத்துள்ளனர். என் சகோதரர் குடும்பத்தினர் உயிரிழந்தால் அதற்கு மாவட்ட ஆட்சியரேப் பொறுப்பேற்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.  இந்நிலையில், தீக்குளித்த 4 பேரில் 3 பேர் பலியாகினர்.

இது மிகத் துயரமான, கோரச் சம்பவம், இது சம்பந்தமாக பலரிடம் பல விஷயங்களை கேட்டறிந்தோம். கந்து வட்டிக்காரனுக்கு காசு எங்கே இருந்து வரும், பணத்தை வாங்குறப்ப பம்மியிருப்பான், பணத்தை வாங்கிட்டு கடனையோ, வட்டியையோ கேட்டால் கந்து வட்டி கொடுமை அது இதுவென்று எகத்தாளம் வேறு என்று கூறினார்கள். அப்படி கடன் வாங்கிட்டு கொடுக்காமல் ஏமாற்றி விட்டான் என்று எத்தனை வழக்குகள் இருக்கிறது என்று சொல்லட்டும் பார்க்கலாம்.  ஒரே ஒரு வழக்குதான் அதுவும் விஜய் மல்லையா மட்டும்தான், அந்த வழக்கும் நிலுவையில் இருக்கு, அதை பற்றி நாம பேச முடியாது? அவ்வளவுதானே? 

எங்கள் சிறுவயதுகளில் நாங்கள் கண்ட காட்சிகள் இன்னும் எனது மனதிற்குள் ரணமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. நான்காயிரம் ரூபாய் கடன் வாங்கினார் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் அப்பா. அந்த நான்காயிரம் ரூபாய்க்கு ஸ்பீட் வட்டி என்று சொன்னார்கள். நண்பரின் அப்பாவோ ஐஸ் வியாபாரி. ஐஸ் வியாபாரம் இல்லை, போராடிப்பார்த்தார், வட்டி மட்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது, அசல் அடைக்க முடியவில்லை என்றும் கடைசியில் ஐஸ் வியாபாரியின் மனைவி வட்டிக்காரனுக்கு ஆசை நாயகியாக வேண்டும் என்பது அவனது உத்திரவு. இதுவும் நடந்த வரலாறு உண்டு. இப்போது அவர்கள் அந்த ஊரை விட்டே வெளியேறி விட்டார்கள். மான ரோஷத்திற்கு பயந்து நிறைய பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் நாம் நாளிதழ்களில் படித்திருப்போம். 

இது வழக்கம் போல ஒன்றுதான் என்று சொன்னாலும், 23.10.2017 அன்று அந்த பிஞ்சின் கைகளில் தின்பண்டத்தோடு எரிந்து நிற்பது என்பது பார்ப்பவர்களை உலுக்கும் செயல் என்று நினைக்கின்றேன். அன்புச்சுவற்றை உருவாக்கிய ஆட்சித்தலைவருக்கு முதல் அடி, அவர் வாங்கும் மனுக்களை அசாதாரணமாக தூக்கியெறிந்த காவல்துறையினரை என்ன வென்று சொல்வது? 

காவல்துறையில் எத்தனையோ நேர்மையான அதிகாரிகள் இருக்க, இந்த மாதிரியான போலிகளால் காவல்துறையின் கண்ணியம் கலைந்து தான் போகின்றது. என்ன செய்வது? 

இப்போது விசயத்துக்கு வருவோம், இந்த துயரச் சம்பவம் அனைத்து மக்களுக்கும் காணொளியிலும், புகைப்படங்களில் அனைவருக்கும் சென்று சேர்ந்து விட்டது. நெல்லையில் கடந்த இரண்டு வருடங்களாக செயல்படுத்திய திட்டங்களுக்காக சிறந்த மாநகராட்சி விருது வாங்கி இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தோம்.  ஆனால் இந்த  சம்பவத்தில் ஐந்து விஷயங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்படவில்லை, அச்சன்புதூர் காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்ய வேண்டிய காவல்துறை அதிகாரிகள் எங்கே சென்றார்கள்? 

காவல்துறை சோதனை மிஸ்ஸிங்?????

1. ஒரு குடும்பம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்திற்குள்ளே எரிபொருளோடு நுழைந்ததை சோதனை போட ஆளில்லையே, அனைவருமே காணொளிகளை பாருங்கள், தீக்குளிக்கும் வரை எந்த காவல்துறை அதிகாரிகளையும் காணவில்லையே,  

தீ விபத்து தடுப்பு உபகரணங்கள் மிஸ்ஸிங்.??????

2. தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்க கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் எங்கே? பொதுமக்கள் தண்ணீரையும், மணலையும் தூக்கி எறிந்து தீயை அணைக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆயிரம் மக்கள் கூடுமிடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏன் பொருத்தி வைக்கப்படவில்லை? ஒரு சிறிய கண்காட்சி நடத்த வேண்டுமென்றாலும் ஒரு தீயணைக்கும் வண்டியை நிறுத்தவும், அதற்கு கட்டணம் வசூலிக்கவும் கவனம் செலுத்தும் அரசு,  ஏன் பொது மக்கள் கூடும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கவில்லை? 

ஆம்புலன்ஸ் வாகனத்தை காணோம்????????

3.  எல்லாவற்றிலும் கொடுமையான விஷயம், ஆம்புலன்ஸ் வண்டி உள்ளே இல்லை,. அவசர ஊர்தி வாகனமும் இல்லாமல், கடைசியில் காவல்துறை வாகனத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையாக இருந்தவர் ஒரு மருத்துவரும் அருகில் துணைக்கு இல்லாமல் இவங்களை நம்பினால் அவ்வளவுதான் என்பது போல முடிவெடுத்து அவராகவே எழுந்து நடந்து சென்று வாகனத்தில் ஏறிய காட்சி காணக் கண்கோடி வேண்டுமம்மா? 

அவசர சிகிச்சை மையத்தையும் காணோம்?????

4.  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் என்பது பல துறைகளை உள்ளடக்கியது, அங்கே நிரந்தரமாக ஏன் ஒரு மருத்துவத் துறை செயல்பட வில்லை? முதலுதவி செய்யக்கூட ஆள் கிடையாது, பிஞ்சு குழந்தை மண்ணில் குப்புற விழுந்து கிடக்கின்றது? ஆனால் முதலுதவி செய்வதற்கு எந்த ஆட்களும் இல்லை,


ஒத்திகை மட்டும் போதுமா????


5. யாருமே இல்லாத இடத்தினில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்று ஒத்திகை செய்து காண்பிக்கவும், புகைப்பட கண்காட்சி நடத்துவதற்கா இந்த தீயணைக்கும் படை இருக்கிறது? 

23.10.2017 நெல்லையின் கருப்பு தினம்? இன்னும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கந்து வட்டி தொடர்பான வழக்குகள், விசாரணைகள் எல்லாம் தடபுடலாக இருக்கும்?  அதன் பிறகு அடுத்த சம்பவம்? 


சிறந்த மாநகராட்சி விருது திருநெல்வேலிக்கு கண்துடைப்பா? 

Thursday, October 5, 2017

அப்போல்லோவில்தான் அம்மா இருந்தாரா................??????

ஒரு மாபெரும் இயக்கத்தை வழிநடத்தி சென்றவர், இந்தியாவையே ஆளப்போகும் பதவிக்கும் தன்னை தயார்படுத்தியவர் இன்று தன்னுடைய மரணத்தை உலகிற்கே கேள்விக்குறியாக்கி விட்டு சென்றிருக்கின்றார், 

அம்மா இட்லி சாப்பிட்டார்கள், ஆப்பிள் பழம் சாப்பிட்டார்கள், இன்று நன்றாக பேசினார்கள், சிரித்தார்கள், என்று எத்தனை எத்தனையோ விபரங்கள் ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்யப்பட்டது, மாநிலத்தின் ஆளுநர் முதல் எதிர்க்கட்சி தலைவர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், இந்திய பிரதமர் என்று யாருமே பார்க்க முடியாத சூழல், ஒரு 50 அடி இடைவெளியில் சிறிய துவாரம் வழியாக கூட காண்பித்திருக்கலாமே! என்ன நடந்தது? 

அன்று சசிகலா சொன்னதைத்தான் நாங்கள் சொன்னோம், நாங்கள் யாருமே பார்க்கவில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் மன்னிப்பு கூறியிருக்கிறார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு ஆதரவு குரல் கொடுத்ததாக செய்தி வந்தது, தொண்டர்கள் அம்மா மீண்டும் வந்து விட்டார்கள், வந்து விடுவார்கள் என்று மகிழ்ச்சியோடு தேர்தல் பணியாற்றினார்கள், 

ஆனால் கடைசி வரை வரவே இல்லை, என்ன நடந்தது? உண்மையிலே அப்போல்லோ மருத்துவமனையில்தான் இருந்தார்களா? அப்படியெனில் நடந்தது என்ன? 
போயஸ் இல்லத்தில் இருந்து அப்போல்லோ மருத்துவமனைக்கு எடுத்து சென்றவர்கள் யார்?  அந்த ஊழியர்களும் பார்க்க வில்லையா? ஒருவருமே குரல் எழுப்பவில்லை, இதுவரை எந்த ஊடகமும் அதற்கு முன்மொழியவில்லை, கடைசி வரை யார் யார் பார்த்தார்கள், அவ்வளவு பெரிய அம்மாவை சசிகலா அம்மாவே தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் போட்டார்களா?  ஆம்புலன்சில் எடுத்து சென்றது யார்? ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றது யார்? 

அதான் அந்த அம்மா போயிருச்சுல்ல, இப்போ இதை பற்றி பேசினா மட்டும் அந்த அம்மா வந்திருமா என்ன? என்று சில மேதாவிகள் கேள்வி எழுப்பிக்கொண்டு தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அம்மா வராது, ஆனால் உண்மை வெளிவர வேண்டும்...

இயற்கை மரணமா? இந்த கேள்விகளை எல்லாம் நீதிமன்றமோ அல்லது எந்தவித பொதுநல வழக்கோ இதுவரை பதிவு செய்யப்படாதது ஏன்? நீதிமன்றத்திற்க்கே விருப்பம் இல்லையா? 

அம்மாவின் விசுவாசிகள் என்று வால்போஸ்டர் அடித்து ஒட்டியவர்கள், இப்போது காணாமலே போய் விட்டார்கள்...வேதா இல்லத்தில் வேலை பார்த்தவர்கள் எங்கே போனார்கள்? கொடநாடு காவலாளி கொலை செய்யப்பட வழக்கு என்னவானது? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர்களின் கோமாளித்தனமான பேச்சுக்கள்? 

அம்மாவின் மருத்துவ ரிப்போர்ட்டை இதுவரை அப்போல்லோ சமர்ப்பிக்காதது ஏன்? 
ஒரு நோயாளி அட்மிட் செய்யப்பட்டால் அவரது நோயின் தன்மை குறித்த முழு அறிக்கை வெளிவரவேண்டும், ஆனால் இதுவரை பைனல் ரிப்போர்ட் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே! 

நீதியும், நியாயமும் செத்து போய் விட்டதோ, ஒரு முதலமைச்சருக்கே இந்த கதியெனில், சாமானியனின் நிலை என்னவாகும்? பதவி ஆசையில் மாறி மாறி பேசி வரும் அமைச்சர்கள், தினகரனை, சசிகலாவை ஆதரித்தவர்கள், இன்று எடப்பாடியையும், ஓபிஎஸ் சை ஆதரித்து பேச காரணம் என்ன? இது அத்தனையும் வாட்சப்பில் வலம் வந்து கொண்டுதானே இருக்கிறது? பொதுமக்களும் இதை பார்த்து கொண்டுதானே இருக்கிறார்கள்?

உலகம் முழுவதும் சுற்றும் மோடிக்கு இதை விட அவமானம் இருக்க முடியாது, நாட்டில் இருக்கும் அப்போல்லோ மருத்துவமனைக்குள் நுழைய முடியவில்லை, இதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் வந்து சென்றிருக்கிறார்கள், அப்படி என்ன தீராத வியாதி? 

அத்தனை நாட்கள் பலம் பெற்றிருந்த துக்ளக் ஆசிரியர் சோ அடுத்த நாளே மரணித்து போனார், தோழியின் மரணத்தை சகிக்க முடியாத சோ வும் மரணமடைந்தார் என்று சொல்லப்பட்டது. நட்பிற்கு அடையாளம் என்று புகழாரம் சூட்டினார்கள். என்னதான் நடந்தது? அப்போல்லோ ஆஸ்பத்திரியில் அம்மா இல்லை என்று அவர் உலகிற்கு சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் காரணமாக அவரும் முடித்து வைக்கப்பட்டாரா? 

இந்த சந்தேகங்களுக்கு முக்கிய காரணம், உள்ளே என்ன நடந்தது என்ற முழு விபரம் தெரியவில்லை, நாங்கள் அம்மாவை பார்க்கவே இல்லை என்ற அமைச்சர்களின் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களே இத்தனை கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மூல காரணம், உனக்கென்ன அதிகாரம் இருக்கிறது, இது அப்போல்லோவை அவமானப்படுத்தும் செயல் என்று அப்போல்லோ நிர்வாகிகள் கூறினால் மகிழ்ச்சி, அப்படியெனில் விளக்கம் கொடுங்கள், சிசிடிவி கேமிராக்களில் பதிவு செய்த காட்சிகளை மக்களுக்கு ஒளிபரப்புங்கள், செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 5 வரை நடந்த சம்பவங்களின், கொடுத்த மருத்துவத்தின் ரிப்போர்ட்களை மக்களுக்கு தெரிவியுங்கள் பார்க்கலாம், 

இத்தனை எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்ட பிறகும், மவுனம் சாதிப்பது எதற்கு? அம்மா மருத்துவமனையில் எடுத்து கொண்ட டிரீட்மென்ட்டை நாங்கள் வீடியோ எடுத்து வைத்திருக்கின்றோம் என்று தினகரன் இப்போது கூறக்காரணம் என்ன? இதை ஏன் ஆரம்பத்திலேயே வெளியிடவில்லை! இதை ஏன் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யவில்லை?

இது மக்கள் ஆட்சிதானே, மக்களிடம் ஒளிபரப்பு செய்து காட்டலாமே! தேர்தல் வரும்போது அதை போட்டுக்காட்டி அனுதாப ஓட்டுக்கள் பெற எடுக்கும் முயற்சியா இது? எதிர்வரும் தேர்தலில்  வாக்குவாதங்கள் இருக்கிறதோ இல்லையோ, தீவிர பிரச்சாரங்கள் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் பண மழை கொட்டும் என்பதில் துளியும் ஐயமில்லை, 

அதிமுக 1, அதிமுக 2, அதிமுக 3, க்குள் இருக்கும் போட்டியில் திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும், தேமுதிக கட்சியும் போட்டி போட உள்ளது, இதில் புது கட்சியாக  கமல்முக வும் புதிதாய் வருமென்றால் மக்களின் வாக்கு எங்கிருக்கும்?  

சின்னம்மா நாட்டுக்காக தியாகம் செய்து சிறைக்கு சென்றது நிச்சயம் ஒரு மிகப்பெரிய அனுதாப ஓட்டாக இருக்கும்! ஆக மொத்தம் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு சென்று திரும்பி அதையே தியாகி போல அடையாளம் காட்டி வாக்குகள் பெறுவது என்பது நாகரீகமாகி விட்டது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகள் இன்னமும் தள்ளிப்போய்க்கொண்டேதான் இருக்கிறது, 

திகார் செயிலோ, பார்ப்பன அக்ரஹாரா சிறையாகட்டும், தியாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதானே இருக்கிறது? மம்தா, மாயாவதி, அத்வானி, மன்மோகன்சிங், சோனியா காந்தி என்று மத்தியில் யாருமே குரல் எழுப்பவில்லை, இந்த மரணத்தை அவர்கள் விரும்பினார்களா? அல்லது ஏற்றுக்கொள்கிறார்களா? குறைந்தது, தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு கண்டனக்குரல் கூட எழுப்பவில்லையே! 

கலைஞருக்கு மட்டும் திராணியிருந்திருந்தால் இன்று தமிழ்நாட்டில் புரட்சி வெடித்திருக்கும், அதிமுக அணியும் சின்னாபின்னமாயிருக்கும் என்பது ஊடகவியலாளர்களின் கூற்று! உண்மைதானே, ஆனால் திமுகவும் தற்போது பலமிழந்து போயிருப்பது நிதர்சன உண்மை! அவ்வப்போது குரல் கொடுத்து நான் இங்கே இருக்கிறேன் என்பது போல அட்டெண்டன்ஸ் போட்டு கொண்டிருக்கும் திமுக! 

அப்போல்லோ முதல் ஐநா சபை வரை அனைத்துமே மர்மமாக இருக்கிறது.....

Thursday, September 28, 2017

234 கேமிரா, 234 தொகுதி, பிக் பாஸ் மோடி வழங்கும் கமல் CM, ஓவியா கொபசெ......

ஆற்றினை தெர்மோகோலை வச்சு மூடுறானுங்க! துணிய துவைச்சிட்டே இருக்காதீங்க, நொய்யல் ஆத்துல சோப்பு நுரையா வருதிலே,  என்னடா நடக்குது தமிழ்நாட்டுலே,  இப்படியெல்லாம் உள்ள அறிவு மேதாவிகளை தமிழ் நாட்டு அமைச்சர்களாக்கி இருக்கிறோமே! எல்லாம் உங்களை சொல்லணும்! 
ஆக்கப்பூர்வமான அமைச்சர்களை நாம் ஆட்சி கட்டிலில் அமரவைத்திருக்கின்றோம் என்று நினைக்கும் போது உடம்பெல்லாம் பூரித்து போகின்றது. ஒரு வார்த்தை கூட கோர்வையாக பேசத் தெரியாத கட்சி எம்எல்ஏக்களை கட்டுப்படுத்த முடியாத ஒரு முதலமைச்சர், 

தமிழ்நாட்டு அரசியல் தகிடுதத்தம் போட்டு கொண்டிருக்கிறது! நாட்டு பிரச்சினைகள் தலைக்கு மேல் குவிந்து கிடக்க சீரழிந்து போனது தமிழகம்! 

மீண்டும் தலைதூக்கும் வழிப்பறி கொள்ளைகள், திருட்டு சம்பவங்கள், லைசன்ஸ் அசலை கொண்டு வாங்க, இதனால் நாடு பொருளாதாரம் உயர்ந்து விடும் என்று சொல்லும் அதிமேதாவிகள், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே உள்ள உறவு தினமும் சீரழிந்து வருகின்றது, 

இதுவரை எத்தனையோ விளக்கம் கேட்டும் விளக்கம் அளிக்க முடியாமல் தவிக்கும் அப்போல்லோ, மக்கள் தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், ஹாஸ்பத்திரியில் என்ன நடந்தது என்று உங்கள் ஜெயா தொலைக்காட்சியிலேயே போடலாமே? மக்கள்தானே உங்கள் கடவுள், மக்களுக்கு இதை போட்டு காட்ட வேண்டியதுதானே, தேவைப்படும் நேரத்தில் தேவையான இடத்தில் போட்டுக்காட்டுவோம் என்று சொல்கின்றீர்களே? 

ஏன் இன்னும் வீடியோ எடிட்டிங் செய்யபடவில்லையா? ஏதோ ஒரு மோசமான விவகாரம் நடந்தேறி இருக்கிறது? அது மட்டும் உறுதி! முன்னுக்கு பின் முரணான தகவல்கள், ஒரு நோயாளியாகத்தான் இருந்தாரா? அல்லது நோயாளி ஆக்கப்பட்டாரா? என்ன நடந்தது? 

நாட்டு பிரச்சினைகள் நாலா பக்கமும் நாறி கொண்டிருக்க இங்கே கேமிராக்கள் இருந்ததா இல்லையா, என்று விவாதக் களம் ஓடிக்கொண்டிருக்கிறது.  கேமிரா தட்டுப்பாடு என்றால் கமலஹாசனிடம் சொல்லி பிக் பாஸ் கேமிராவை வாடகைக்கு எடுத்திருக்கலாம்! ஒரு வீட்டிற்கு 30 கேமிராக்கள் தேவையா? 

அதுவும் கூத்தாடிகளை வைத்து கூத்தடித்து கொண்டிருப்பதையும் மக்கள் பார்த்து கொண்டுதானே இருக்கிறார்கள். கமல் ஆட்சிக்கு வந்தால் தெருவுக்கு 300 கேமிராக்கள் வைத்து சோதனை செய்வாரோ?  

ரஜினிக்கு பிஜேபி சரியாக இருக்கும், என்னோடு வராதீங்க என்று அவர் சொல்ல, ரஜினி வழக்கம் போல மவுனம் சாதிக்கின்றார், ஏதோ அடுத்த  வாரமே கட்சியை ஸ்டார்ட்  செய்யுற மாதிரி போட்டோவுக்கு போசெல்லாம் கொடுத்தாரு, 
ஆனா 30 கேமிரா வச்சு ஆட்சியை பிடிச்சிருவாரு போல கமலஹாசன், மக்களை சிந்திக்க விடாமல் செயல்பட்டு வருகிறது ஒரு குழு, கமல் வந்தா நல்லா செய்வாரு, என்று மக்களை பேச வைக்க முயற்சிகள் நடக்கிறது. அவர் பாயிண்ட்டா பேசுறாருன்னு ஒரு பில்ட்அப் வேற, தமிழ்மணத்திலே ஆயிரக்கணக்கில் வலைப்பூ வச்சிக்கிட்டு அருமையா பேசுறவங்க இருக்காங்க, 

மக்கள்தான் விழித்தெழனும், இழவு காத்த கிளி மாதிரி ஏகப்பட்ட கட்சிகள், காட்சிகள், ஈழத்தமிழன் பிரபாகரன் செத்த போதும் இப்படித்தான் இருந்தோம், ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் செத்த போதும் இப்படித்தான் இருந்தோம், இன்னிக்கு அம்மா செத்திட்டா, அனிதா செத்திட்டா, விஷ்ணுபிரியா செத்திட்டான்னு சொன்னா மட்டும் விழிச்சிடவா போறோம்!

நீட் தேர்வுக்கு பரிந்துரைச்சவங்க, மீத்தேன் திட்டத்துக்கு பரிந்துரைச்சவங்களே அப்படி ஒரு சம்பவம் நடக்காத மாதிரி அவங்களே போராடுறாங்க பாருங்க, கலக்குறாங்க போங்க! சாமானியனை சட்டினியாக்காம விட மாட்டாங்க....

கேஸையும் போட்டுட்டு திருப்பி அதே கேஸுக்கு எதிராவே போராடுறதும் இருக்குது பாருங்க, அருமை, அருமை....

அந்த அம்மா இருக்கிறப்ப ஒருத்தன் கூட ஊருக்குள்ளே எட்டி பார்க்க முடியாது, அந்த அம்மா போயிருச்சானு கன்பார்ம் பண்ண பிறகுதான், சமாதிக்குள்ளே இருந்து வந்திருவாங்களோன்னு ஒரு பயம் இருந்துகிட்டுத்தான் இருந்துச்சு, 

அம்மா வாழும்போது ஆணவக்காரி, திமிர் பிடித்தவள் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று அந்த அம்மா இல்லாததை நினைத்து கண்ணீர் விட்டிருப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். 

அவள் சரியான தலைமையை அடையாளம் காட்டாமல் மரணமடைந்து விட்டார்கள்  என்று சொல்லும் நபர்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் மரணமடைய வில்லை, மரணமடைய செய்து விட்டார்கள். தங்க முட்டையிடும் வாத்து ஒவ்வொரு முட்டையாக இட்டு கொண்டிருந்தது, அதை ஒட்டுமொத்தமாக அறுத்து வாத்தையும் கொன்று விட்டார்கள், தங்க முட்டையையும் விட்டு விட்டார்கள். 

சாதாரண காய்ச்சலை கூட குணப்படுத்த முடியாத உலகத்தரம் வாய்ந்த அப்பொல்லா மருத்துவமனையா? 

கூத்தாடிகளை இனிமேல் கழட்டி விட்டுவிட்டு புதிய மன்னர்களை உருவாக்குவோம், தமிழ்நாடு கூத்தாடிகளின் பின்னால் நிற்பதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! 30 கேமிராக்கள் வேண்டாம், ஒரு மனசாட்சி இருந்தால் போதும்! 

Monday, September 25, 2017

அம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பாரா?


ஜெயலலிதா யாருமே அசைக்க முடியாத ஒரு கம்பீரம், வானத்தில் அவர் பறந்தாலும் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டவர்கள், அவர் சிறையில் இருக்கும் போது கூட அவர் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வரலாம் என்று அச்சம் இருந்ததால் கோவில் கோவிலாக சென்று மொட்டை போட்டு, மண் சோறு சாப்பிட்டு, காவடி தூக்கி களேபரம் செய்தவர்கள் இன்று அவர் இட்லி சட்னி வச்சு சாப்பிட்டாரா என்று கொச்சைப்படுத்தி வருவதும் மிகவும் வேதனையைத் தருகிறது.  

ஆக மொத்தத்தில் ஜெயலலிதாவின் மரணம் உண்மையிலேயே மிகப்பெரிய கேள்விக்குறிதான், ஒரு வரலாற்று சரித்திரம் படைத்த தங்கத்தாரகையின் மரணம் சாமானியனையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. உள்ளுக்குள் அவரது மரணத்தில் பேரானந்தம் அடைந்தவர்கள் போல காட்சியளிக்கிறது. ஊடகங்களும் அவரவர் டிஆர்பி ரேட்டிங்கிற்கு வசதியாக ஜெயலலிதாவின் மரணத்தில் அவரது பிணத்தை நடுவீதியில் வைத்து வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. நடந்தது என்ன? என்று எந்த நீதிமன்றமும் பொது வழக்காக வைத்து வாதாடத் தயாரில்லை, அதிமுக என்றாலே அலறியவர்கள் இன்று அதிமுக என்றாலே அருவறுக்கப்படும் ஒரு கட்சியாக மாறிவிட்டது என்பது நிதர்சன உண்மை. யார் எப்படி போனால் என்ன? தனக்கு பாதுகாப்பான பதவி கிடைத்து விட்டது, அது போதும் என்பது போல இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள், அம்மா இல்லாத இந்த பதவி தேவையில்லை, என்று யாராவது ஒரு அமைச்சர் கூறியிருப்பாரா? 

அம்மா இல்லாத அந்த கார் தேவையில்லை என்று திருப்பி அனுப்பிய நாஞ்சில் சம்பத், சசிகலாவை தலைமையாக ஏற்க மாட்டோம் என்று கூறிய நாஞ்சில் சம்பத் இன்று சசிகலாவின் தீவிர விசுவாசியாக மாறிய பின்னணி என்ன? அதிமுக தொண்டர்கள் தற்போது தான் எந்த கட்சியில், எந்த தலைமையின் கீழ் இருக்கிறோம் என்று புரியாத குழப்பத்தில் இருக்கிறார்கள், பதவி சுகம் கண்டவர்களுக்கு, பதவியை விட மனதில்லை, எடப்பாடி தலைமை அணியை மிக கேவலமாக விமர்சித்தவர்கள், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க போவதாகஅறைகூவல் விடுத்தவர்கள் இரண்டு பேரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற பட்டம் வாங்கிய பிறகு மவுனம் சாதிப்பது எதற்கு? தனக்கு பதவி கிடைக்கவில்லையே என்ற கோபத்தில் இருக்கும் தினகரன், தீபா அடுத்து என்ன செய்யபோகின்றார்கள்? என்ன நடக்கின்றது தமிழகத்தில், நாம் எந்த அதிமுக தலைமையில் நாட்டில் வாழுகின்றோம் என்று தெரியாமல் வாழும் தமிழக மக்கள்....

எப்படி பார்த்தாலும் நமக்கு முதல்வர் பதவி என்பது கானல் நீர்தானோ என்ற கவலையில் திமுக, திமுக தலைவரின் உடல்நிலை பற்றிய தகவலும் நமக்கு இல்லை, அவர் நன்றாக இருக்கின்றார் என்ற ஒரு தகவலை தவிர வேறு எந்த தகவலும் இல்லை, ஒருவேளை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது மீண்டும் துளிர்த்தெழுவாரா கலைஞர், அம்மா இல்லாத அதிமுகவும், அய்யா இல்லாத திமுகவும், 

அடுத்த தலைமுறையில் அதிமுக, திமுக நிலை என்ன? மீண்டும் அழகிரி போர்க்கொடி தூக்குவாரா? கனிமொழி கட்சிக்குள் நுழைவாரா? ஸ்டாலினுடன் இருக்கும் திமுக மூத்த தலைவர்கள் என்ன செய்வார்கள்? 

இரண்டு கட்சிகளை விட்டு விட்டு மூன்றாவது கட்சி தலைதூக்குமா? இந்த தேர்தலில் எப்படியாவது பாஜக தமிழகத்தில் இடம் பிடிக்குமா? தேமுதிக என்னவாகும்? கமலஹாசன் படையெடுப்பாரா? ரஜினிகாந்தும் அரசியலில் கமலுக்கு ஜாலரா அடிப்பாரா? விசிக, பாமக, மதிமுக நிலை என்ன? கம்யூனிஸ்ட்டுகள் இனி யாரோடு தேர்தல் நேரத்தில் கூட்டு சேர்வார்கள்? நாம் தமிழர் கட்சிக்கு பிரபாகரனின் மரணம் முக்கிய பாயிண்ட்டாக இருந்தது, இந்த அம்மாவின் மரணம் அவரது கண்களுக்கு தெரியவில்லையா? காங்கிரஸ் காமராஜர் ஆட்சி என்று இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறது, 

இப்படியாக ஓடுகிறது கட்சிகளின் நிலவரம்? இதற்கிடையில்  நீட் தேர்வு பிரச்சினை, மாணவர்களின் எதிர்காலம், மீண்டும் டாஸ்மாக் , ஜிஎஸ்டி வரி பிரச்சினை, மீத்தேன் திட்டம், நெடுவாசல் போராட்டம், ரேஷன் கடையை மூடிருவாங்களா, கேஸ் கு மானியம் கிடைக்குமா? பெட்ரோல் விலையை எப்போ குறைப்பாங்க, கல்வியின் நிலை என்னவாகும்? ஒரிஜினல் லைசன்ஸ கொண்டு வந்திட்டா ஆக்சிடென்ட் குறைஞ்சிருமா?  இப்படி மீண்டும் மீண்டும் ஏகப்பட்ட குளறுபடிகள், என்னவாக போகிறது தமிழகம்? 

வேலையில்லா திண்டாட்டம் அப்படியேதான் இருக்கிறது, இளைஞர்களின் வாழ்விற்கு என்ன எதிர்காலம், ஊழல் செய்த அரசியல் தலைவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? கருப்பு பணம் மக்களிடம் எப்போது வெள்ளைப்பணமாக மாறும்? ஆதார் அட்டையில் இந்த இளைய தலைமுறை, ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணை கொடுத்து அழைக்க போகின்றார்களா? யோவ் 420 என்று அழைக்கும் காலத்தில் மக்கள் இருக்கிறார்களே! மீண்டும் தொடங்குவோம், அம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பாரா? இந்த கேள்விக்கு விடையை சொல்லி விட்டு அடுத்த தலைப்புக்கு செல்லுங்கள்....ஹலோ ஊடகங்களே, உங்களுக்கு இந்த வார விவாத தலைப்பு கிடைத்து விட்டது, அம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பாரா?  ம்ம்ம்..எதுக்கு வெயிட்டிங், ஸ்டார்ட் பண்ணுங்க....

Monday, September 18, 2017

ஜாக்டோ-ஜியோ வீட்டுக்கு அனுப்புங்கள், வி ஆர் வெயிட்டிங்!!!












நீங்கள் எல்லோரும் என்ன சாதித்து விட்டீர்கள் என்று சம்பள உயர்வு கேட்க்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அரசு இயந்திரங்கள் செயல் இழந்து நிற்பதாக ஆங்காங்கே தகவல்கள் வருகின்றது. யார் குடும்பம் எப்படி சீரழிந்தால் என்ன? எனக்கு என் குடும்பமே பெரியது என்று போராடிக்கொண்டிருக்கும் உங்களது தியாக உணர்வினை நாங்கள் பாராட்டுகின்றோம். 
உங்கள் இயக்கம் வேண்டுமானால் மிக பெரியதாக இருக்கலாம். வகுப்பறையில் பாடங்கள், பாடத்திட்டங்கள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா? செயல்படுகிறதா? தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் வாங்கும் சம்பளத்தை விட மூன்றில் இருந்து நான்கு மடங்குகள் அதிகமாக வாங்குகிண்றீர்கள்? இன்னும் உங்களுக்கு போதவில்லையா? 

உங்களுக்கு நீங்கள் கேட்ட சம்பளங்களை வழங்க நாங்கள் மறுக்கவில்லை, தனியார் நிறுவனங்களில் நடப்பது போல ப்ரோமோஷனல் டெஸ்ட் வருடம்தோறும் வைத்தால் அதை எழுத நீங்கள் தயாரா? 

ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டுத்தேர்வு முடிந்த பிறகு அந்தந்த மாவட்டங்களில் அந்த வகுப்புகள் நடத்திய ஆசிரியர்களுக்கு ஒரு தேர்வு நடத்தப்படவேண்டும். ப்ரோமோஷனல் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதாவது (PET), Promotional Entrance Test இல் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு கல்வி எடுக்க அனுமதி வழங்கப்படுவார்கள் என்ற விதி அமலுக்கு வர வேண்டும். 
ஒவ்வொரு ஆசிரியருக்கும் 30 மாணவ, மாணவிகள் கொடுக்கப்பட வேண்டும். அந்த 30 மாணவ, மாணவியரும், அவர்கள் பாடங்கள் அனைத்திலும் 75% மேலாக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், அவர்களுக்கு அந்த மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும். இந்த விதிகளை அவர்கள் ஏற்க தயாரா? 

ஒருவர் கூட முன்வரமாட்டார்கள். எந்த ஒரு அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி, அவர்களின் நேர்மையான பணி என்பது நூற்றில் பத்து முதல் 30 விழுக்காடு வரையே நேர்மையாக பணியாற்றுகின்றார்கள், மீதமுள்ள அனைவருமே வாங்கும் சம்பளத்திற்கு கூட வேலை பார்ப்பதில்லை. 

அப்படி அவர்கள் பணியாற்றி இருந்தால், என்றைக்கோ அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் பலத்த வளர்ச்சி பெற்றிருப்பார்கள். அரசுப்பணியில் மந்தமாகி இருக்காதே!

நீட் தேர்வில் நீட் பாடப்பிரிவில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் மிக குறைவு! பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவியால் என்சிஇஆர்டி குழுவினரால் நடத்தப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ள பாடத்தில் மிக குறைந்த மதிப்பெண்கள் பெற்று அவமானப்பட்டு உயிரை மாய்த்தாலே, அது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சவுக்கடி என்றுதானே சொல்ல வேண்டும். உங்களால் அந்த மாணவியின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத போது, யாராவது ஒரு ஆசிரியர் அரசு பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ அளவிற்கு பாடத்திட்டங்களை மாற்றுங்கள் என்று குரல் கொடுத்து வீதியில் இறங்கி போராடியிருந்தால், உங்களுடைய சம்பள உயர்வுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்கி இருக்குமே!
மிக கேவலமான விஷயம் என்னவெனில், எங்கோ ஒரு இடத்தில் ஒரு அரசு ஆசிரியரோ, ஊழியரோ சிறப்பாக பணியாற்றிவிட்டால் அவர்களை வெற்றி நாயகனாக, நாயகியாக கொண்டாட வேண்டிய அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். இது அவர்கள்  சம்பளத்திற்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலை இது, ஆனால் அதையே நாம் மிகப்பெரிய விழாவாக கொண்டாடிய வேண்டிய இடத்தில் இருக்கின்றோம். 

காலணாவாக இருந்தாலும் அரசு உத்தியோகம் வேண்டும் என்ற காலம் மலையேறிவிட்டது. எப்போது கேட்டாலும், பஞ்ச பாட்டு பாடுவதே அவர்களின் வேலையாக இருக்கும். ஒரு அரசு அலுவலகம் மிக சுத்தமாக இருந்து விட்டால் ஏதோ அருங்காட்சியகத்தை பார்ப்பது போல பார்க்கின்றார்கள். 

உண்மையில் சுத்தமாக இருக்க வேண்டிய சுகாதாரத்துறை அலுவலகம் கூட சுற்றி குப்பைகளோடுதான் இருக்கின்றன. ஏன் இந்த அவலம்? அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை,  அவர்களுக்கு தேவை சம்பளம், ஊதிய உயர்வு முதலியவையே! 

இதுவரை நீங்கள் வாங்கிய சம்பளத்திற்கு உங்களின் சாதனைகள் என்ன? என்று கேட்டுப்பாருங்கள், அவர்கள் அன்றாடம் செய்யும் வேலையை மிகப்பெரிய சாதனையாக பட்டியலிடுவார்கள். இவர்களது வாக்கு வங்கிக்காக, தபால் ஓட்டுக்காக ஒருவர் செய்த கேவலமான காரியம், இன்று அவர்கள் வேலைகளை விட்டு விட்டு வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்பது நியாயமானதா? என்று ஒவ்வொரு தனியார் ஊழியரிடமும் கேட்டு பாருங்கள். தனியாரில் ஒருவர் செய்யும் வேலையை அரசுத்துறையில் 30 பேர் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் கடைசி வரை அந்த வேலை முடியவும் செய்யாது.

அதுதான் அரசிற்கு, தனியாருக்கும் உள்ள மாறுபாடு! இனிமேல் அரசுத்துறையில் இருப்பவர்கள் வருடத்திற்கு இவ்வளவு டார்கெட்டை முடித்து விட்டு போராடுங்கள் என்று சொல்லிப்பாருங்கள். ஒருவர் கூட வீதிக்கு வரமாட்டார்கள். அதுதான் உண்மை. 

ஆண்டுதோறும், அரசுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வைக்கப்படும் என்று ஏதாவது ஒரு அரசியல்வாதி சொல்லட்டும் பார்க்கலாம், அவர்களும் சொல்ல மாட்டார்கள், காரணம் வாக்கு வங்கி போய் விடுமே! என்ற அச்சமே! 

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சராசரி ஊழியனின் நூற்றில் ஒரு பங்கு வேலையை கூட அரசு ஊழியர்கள் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகின்றது.

மின்சார கட்டணம் கட்ட பெரிய கியூ நின்று கொண்டிருக்கிறது. சிஸ்டத்தில் F1 அடித்தால் உள்ளே செல்லலாம் என்று சொல்லி பாதியிலே நிற்கின்றது. ஆனால் அதை அடிக்காமல், சர்வர் டவுன் என்று சொல்லி அட்டையை தொங்கவிட்டுட்டு போனில் அரட்டை அடித்து கொண்டிருக்கிறது மின்வாரியம்.

ஒரு தவறு நடந்தால் அதை செய்ய கூடாது என்று இருக்கிறார்கள், எத்தனை அரசு ஊழியர்களுக்கு இன்று மின்னஞ்சல் அனுப்ப தெரியாது தெரியுமா? @ இந்த சிம்பலை சொல்லத் தெரியாத எத்தனை அரசு ஊழியர்கள் இன்று ஊதிய உயர்வை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் பட்டியலிடட்டுமா?

தொழில்நுட்பம் எத்தனை வளர்ந்தாலும் இன்னும் டாட்மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பிரிண்ட் எடுத்து கொண்டிருக்கும் அலுவலகங்களை அடையாளம் காட்டட்டுமா? காரணம் கேட்டால் மேலதிகாரிகள் இதைத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள். மேலதிகாரிகள் சம்பளம் கொடுக்க வில்லை, சம்பளம் பிடித்தம் செய்து விட்டார்கள் என்று சொன்னால் மட்டும் வீணாய் போன யூனியனை கைகளில் வைத்து கொண்டு போராடத் தெரியும் உங்களுக்கு மேலதிகாரிகளிடம் மக்களுக்கு தேவையானவற்றை வழங்க மட்டும் எரிச்சல் வருகின்றதா?

அரசுப்பேருந்துகள் ஓட்டை ஒடிசலாக இருந்தாலும் எடுத்து இயக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள், உங்களுக்கு வழங்கப்பட்ட கிழிந்த செல்லாத நோட்டுக்களை சம்பளமாக பெற்றுக்கொள்வீர்களா? மக்களால்தான் நீங்கள், மக்கள் உங்களை நாடி வராவிட்டால், உங்களால் மக்கள் சேவகனாக பணியாற்ற முடியாது என்பதை மறக்காதீர்கள், அரசு என்றாலே அதை இளக்ககாரமாக பார்க்கும் நிலை மாற வேண்டும். அதற்கு நீங்கள் எப்போது போராட்டம் செய்வீர்கள் என்று காத்துக்கொண்டிருக்கின்றோம் நாங்கள்.

இன்றைய தலைமுறை காத்துக்கொண்டிருக்கிறது, அரசு இயந்திரங்களை, பதவிகளை கைகளில் எடுக்க, ஜாக்டோ-ஜியோவை வீட்டுக்கு அனுப்புங்கள். தமிழகத்தில் ஆட்சியே நடக்கவில்லை, தமிழகம் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது, இந்த நேரத்தில் நீங்கள் போராட்டம் செய்யுங்கள், அப்போதுதான் ஆட்சி கவிழும், நமக்கு நடக்க வேண்டியது நடக்கும் என்று யாரோ தூண்டி விட்டதை நம்பி, வெட்டியாய் போராட்டம் நடத்துபவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்,

இளைஞர்களை அந்த பதவிகளுக்கு களமிறக்குங்கள், இன்னொரு அனிதா மரிக்க மாட்டாள், நாடும், நாட்டு மக்களும் சுபீட்சமாவார்கள். 

Thursday, September 7, 2017

அனிதா காட்டிக்கொடுத்த அக்கியூஸ்ட் நம்பர் 1


தமிழர்கள், தமிழ் மாணவ, மாணவிகள்  சகோதரி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க போராடிக்கொண்டிருக்க, இது ஒரு உணர்வுபூர்வமான போராட்டமாக அமைந்த வேளையில், அந்த நேரத்திலும் சுகம் தேட அலையும் ஒரு ஆண் வர்க்கம், செயலற்று போய் இருக்கும் பெண் வர்க்கம்,

கூட்ட நெரிசலை தடுக்க வேண்டிய நேரத்தில் இவனது கைகள் எங்கே செல்கிறது, கொடுமையிலும் கொடுமை, இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள், அவர்களது இலக்கு போராட்டக்களம், அதே நேரத்தில் இந்த உதவி ஆணையர் ஜெயராமனும் இலக்கை நிர்ணயித்து விட்டான், தவறு என்று மன்னிப்பு கேட்டு விட்டால் நீதிமன்றமும், காவல்துறையும் மன்னித்து விடுமோ! அந்த உடையின் மதிப்பு தெரியாத இவன், இவனது பணிக்காலத்தில் இவன் எப்படி கற்பழிப்பு வழக்குகளை கையாண்டிருப்பான், இவன் எப்படி பெண்களுக்கெதிரான வழக்குகளில் வழக்குகளை கையாண்டிருப்பான் என்பதற்கு இது ஒன்றே சாட்சியாக அமைகின்றது. 

இதை விட கேவலமான விஷயம் வேறு என்னவாக இருந்திருக்க முடியும்? நாடே பற்றி எரிந்தாலும் பரவாயில்லை, தனக்கு ஒரு ஐந்து நிமிட சுகம் வேண்டும் என்று காத்திருக்கும் பொறுக்கிகளுக்கு இன்னமும் காவல்துறை பதவி எதற்கு என்றுதான் புரியவில்லை, அவனை பணியிலிருந்து டிஸ்மிஸ்  செய்தாலும் தவறில்லையே! 

எவ்வளவு கீழ்த்தரமான விஷயம் இது, நம்மை சுற்றி ஆயிரம் கேமிராக்கள் இருக்கிறது என்று தெரியாமல் சேட்டை செய்யும் காமுகர்கள் இவர்கள்! 

இவருக்கு ஒரு பெண் மகள் இருந்தால் அவளது நிலைமை என்னவாகும் என்பது அந்த தாயிற்கே வெளிச்சம்...தான் ஒரு உயரதிகாரி என்பதால் அவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது பலநாள் ஆசையை அன்று தீர்த்து கொண்டாரா, சமயம் பார்த்து காத்திருந்தாரா? அது அவரது மனசாட்சிக்கே வெளிச்சம். 

இவர் மட்டுமல்ல இன்றும் பெண்கள் பணி செய்யும் இடங்களில் பல்லை இளித்து வேலை பார்த்தால் ஒரு கவனிப்பு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வேலை பார்த்தால் ஒரு கவனிப்பு என்றுதான் உலகம் நகர்கிறது. எல்லா பெண்களையும் சொல்லவில்லை, எல்லா ஆண்களையும் சொல்லவில்லை, 

ஒரு சில கார்பொரேட் நிறுவனங்களின் முதலாளிகள்  கண்ணுக்கு லட்சணமாய் மனைவி இருந்தாலும், அலுவலகத்தில் தனது இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கொள்கின்றார்கள். அவள் சொன்னால் அலுவலகத்தில் எதுவும் நடக்கும் என்பது போல ஒரு மாயை தோன்ற, அன்றிலிருந்து மற்ற ஊழியர்களிடம் இருந்து அந்த பெண் மட்டும் ஒதுக்கி வைக்கப்படுகின்றாள். தானும் ஒரு சராசரி பெண்ணே, தனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் என்பதை மறந்து அவளை மட்டும் சமுதாயமும், அவர்களை சுற்றியுள்ள அலுவலக ஊழியர்களும் அந்த பெண்ணை ஒதுக்கியே விடுவார்கள். 

குடும்ப சூழ்நிலை, முதலாளிகளின் இச்சைகளுக்கு தன்னை பலிகடா ஆக்கி கொள்கின்றார்கள். அதன் பின்னர் அவர்கள் வாழ்வில் வெளிச்சம் என்பதே இல்லாமல் ஒளியற்று போய் நிர்கதியாகி நிற்கின்றார்கள். 

கடைசிவரை அவள் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையில், உள்ளேயும் சக ஊழியர்களோடு வேலை  செய்ய முடியாமல் கூனிக்குறுகி போகின்றாள், அனுபவித்தவன் சந்தோசமாக திரிவான், ஆனால் அனுபவிக்கப்பட்டவள் கடைசி வரை களங்கத்தோடு அவதிப்பட்டு செல்வாள். 

நம்மை நம்பி வந்தவளை நாம் சீரழித்து விட்டோமே என்ற வருத்தம் கொஞ்சம் கூட இல்லாத, கவலைப்படாத ஜென்மங்கள் இருப்பதால்தான்  இந்த மாதிரியான பெண்களுக்கெதிரான அநீதிகள் நடந்தேறி கொண்டிருக்கிறது. 

சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த மாதிரியான ஒரு சில கார்பொரேட் நிறுவனங்களின் அதிபர்கள்  ஏழை பெண்கள், விதவைகள், அனாதைகள், விவாகரத்து பெற்றவர்கள் என்று தேடிப்பிடித்து வேலைக்கமர்த்துகின்றார்கள். வெளியே இருப்பவர்களின் பார்வைக்கு, மிக நல்லவர்கள், பாவப்பட்ட ஜென்மங்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்றார் என்று சொல்வார்கள், சொல்ல வைப்பார்கள், ஆனால் உள்ளுக்குள் நடக்கும் பெண்களுக்கெதிரான அநீதிகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது. 

ஏன், இப்படி செயகிண்றீர்கள் என்று சக ஊழியர்கள் கேட்டால், எனக்கு திராணி இருக்கிறது, செய்கின்றேன், என்று சொல்வார்கள். எது திராணி, கையாலாகாத பெண்களிடம் உங்கள் ஆண்மையை காட்டுவதா திராணி? இன்னும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தீர்ந்தபாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது வேலியே வேலியை மேய்ந்திருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் அந்த காணொளி! வாட்ஸ்அப்பில் பரவுகிறது....காவல்துறையும், நீதித்துறையும் இன்னும் ஏன் அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது, எதற்கு தயக்கம் காட்டுகின்றது என்று தெரியவில்லை!  

அனிதா என்ற சகோதரி ஒரு காமுகனை சமுதாயத்திற்கு காட்டி விட்டு சென்றிருக்கிறாள்!   

என்றுதான் எங்கள் சகோதரிகளுக்கு விடுதலை கிடைக்குமோ! 

அம்மாவின் சமாதிக்கருகே உனக்கு ஒரு சமாதி வைத்தாலும் தவறில்லை, 

நீட் தேர்விற்கு அனுமதி மறுத்து எதிர்ப்பு தெரிவித்தவரும் மண்ணுக்குள்ளே,

நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவருக்கும்  இன்று மண்ணுக்குள்ளே! 
                                          

நீட் என்னும் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்தது யார் என்று நான் இனி சொல்லித்தெரிய வேண்டாம்! 

 

 நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள்...

ஏக்கத்துடன் உங்களில் ஒருவன்! 




Saturday, September 2, 2017

அறிவுக்கெட்ட அனிதாவே,

 அறிவுக்கெட்ட அனிதாவே, 
"அம்மா" மரணத்திற்க்கே இதுவரை பதில் சொல்ல வக்கில்லாத, விசாரணை நடத்த  துணிவில்லாத அரசு,  அனிதாவின் மரணத்திற்க்கா, பதில் அளித்துவிடப்போகிறது?

அறிவுக்கெட்ட அனிதாவே, 
அரசியல்வாதிகளுக்கும், அகோர பசியில் காத்திருக்கும் டிஆர்பி யை விரும்பும் சானல்களுக்கும் அருமையான விருந்து அனிதா கொடுத்து விட்டு சென்றிருக்கிறாள்,  நாசமாக போகிறவர்கள் இனிமேல் அவள் ஆன்மா சொர்க்கம் செல்லும் வரை, அவளைப்பற்றி, பேசிவிட்டு அடுத்தது ஒரு குமுதா மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் கழுகுகள் இவர்கள்...

அறிவுக்கெட்ட அனிதாவே, 
ஒரு சிறுமி, மாணவி தனியாக உச்சநீதிமன்றம் நாடியிருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்? வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளை நம்பி பிரயோசனமில்லை என்றுதானே தன்னந்தனியே சாவினை சந்தித்திருக்கிறாள், 

அறிவுக்கெட்ட அனிதாவே, 
ஏழைப்பிள்ளைகள் மருத்துவம் படிக்க கூடாது என்ற பாசிச உணர்வு தலைதூக்கிறதோ என்ற அச்சம் எழுந்து கொண்டுதானே இருக்கிறது. தரமற்ற கல்வியை தமிழகம் படித்து கொண்டிருக்க, கேள்விகள் மட்டும் சர்வதேச அளவில் இருந்தால் எப்படி மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராவார்கள்? விடைகள் தெரியாத கேள்விகள் பல?
மக்களே சிந்திப்பீர், ஒருவேளை இவளின் மரணத்தை புளூவேல் தற்கொலை என்று கூட சொல்வார்கள், கொச்சைப்படுத்துவார்கள், இதற்கு முன்னர் எத்தனை, எத்தனை வழக்குகளை இப்படித்தான் முடித்திருக்கிறார்கள், இதுவென்றும் புதிதல்ல, 1200 க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு எத்தனை எத்தனை ஆசைகள் இருந்திருக்க வேண்டும்?  தனியே, தன்னந்தனியே தைரியமாக உச்சநீதிமன்றம் போனவள், எப்படி மரணத்தை தழுவினாள், எந்த சம்பவம் அவளை பாதித்தது? ஒருவேளை அவள் தற்கொலை செய்யாமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும், யாருமே குழுமூர் கிராமம் பக்கம் திரும்பி பார்த்திருக்க மாட்டார்களே! 

எங்கள் சகோதரி இறந்து விட்டாளே, என்று குமுறும் மாணவ இயக்கங்களுக்கும், அவளது உறவினர்களுக்கும், பெற்றோருக்கும் எங்களது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம்.   
அறிவுக்கெட்ட அனிதாவே,  காவல்துறை விஷ்னுபிரியா தற்கொலை, சுவாதி வழக்கு, இளவரசன், இளவரசி வழக்கு இப்படி எத்தனை, எத்தனையோ விடைகள் தெரியாமலேயே சீரழிந்து போயிற்று!

அறிவுக்கெட்ட அனிதாவே, இந்த நாசமாய் போன அரசியல்வாதிகளை நம்பி அவசரப்பட்டு உன் உயிரை விட்டு விட்டாயே! ஒருவேளை இவர்கள் ஆட்சியில் வாழ்வதை விட,  சாவதே மேல் என்று புரிந்து கொண்டு விட்டாயா?

அறிவுக்கெட்ட அனிதாவே, 

ஒரு கல்வி இல்லை என்றால் வேறு கல்வி என்று ஏன் உன்னால் கொள்கையை  மாற்றிக்கொள்ள முடியவில்லை, நம்ம ஊரு கட்சிக்காரர்களை பார்த்தும் உனக்கு அறிவில்லையா, ஒரு கட்சி, பதவி இல்லையென்றால் அடுத்த கட்சிக்கு கூச்சமே இல்லாமல் தாவுகின்றார்களே தவிர யாராவது தற்கொலை செய்து கொள்கின்றார்களா?

அறிவுக்கெட்ட அனிதாவே, 
அவசரப்பட்டு தற்கொலை செய்யும் முட்டாள்களே, கட்சி விட்டு கட்சி தாவுங்கள், அதை விட்டு விட்டு தற்கொலை செய்யாதீர்கள், கூடா நட்பு என்று சொல்வார்கள், கடைசி வரை அவர்களோடே கூட்டு வைப்பார்கள், பெற்ற மகளை திகார் செயிலுக்கே அனுப்பினாலும் பணமும், பதவியும் கொடுத்து விட்டால் அவர்களோடே கூட்டு வைப்பார்கள், கேட்டால் கொள்கை என்று சொல்வார்கள், என்ன கண்ராவி கொள்கை என்று அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்,

அறிவுக்கெட்ட அனிதாவே, 
சகோதரி அனிதா, இன்றிலிருந்து அடுத்த பிணம் இந்த மண்ணில் விழும் வரை நீதான் எங்களின் ஊடகங்களுக்கு தீனியாக இருக்கப்போகின்றாய்,

விவாத மேடை, நேர்பட பேசு, ஒரு ஆளுங்கட்சி, ஒரு எதிர்க்கட்சி, ஒரு நெறியாளர், ஒரு நடுநிலையாளர் எல்லோரும் இணைந்து உன்னை விமர்சித்து பேசுவார்கள், சம்பந்தமே இல்லாமல் ஒருவர் பேசிக்கொண்டிருப்பார், அவர்தான் ஆளும்கட்சி என்பதை எடுத்து கொள், இதெல்லாம் நடந்து என்ன பயன்? நீ எங்களிடம் திருப்பி வரவா போகின்றாய்? வெட்டி பேச்சுக்கள், இதோ எனது எழுத்து போல!

வழக்கம் போல வலைப்பூவினில் மனக்குமுறலை வெளியிடுவதை தவிர எங்களுக்கு எதுவுமே தோன்றவில்லை! வெட்கித் தலைகுனிகின்றோம்....அறிவுக்கெட்ட அனிதாவே, 

Tuesday, August 29, 2017

தரைமட்டமான அதிமுக!

எம்ஜிஆர் தொடங்கிய மாபெரும் இயக்கம், இன்று தரைமட்டமானது! 
 ஒரு மாபெரும் இமயம் சரிந்து போனது, சரிந்து போன மாதம் யாருக்குமே தெரியாது! இந்த நாளில் இறந்தார் என்று யாரோ சொன்னார்கள், கேட்டுவிட்டு அதையே இறந்த நாளாக துக்கம் அனுஷ்டித்து வருகிறது, தமிழகம்....

அம்மாவிற்கு பிறகு அதிமுகவில் இருக்கும் ஒருவனுக்கு கூட கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை, பதவியை தக்க வைத்து கொள்ள ஒவ்வொரு லாட்ஜாக, ஒவ்வொரு ரிசார்ட்டாக சென்று கொண்டிருக்கிறான் என்பதே நிதர்சன உண்மை...

இந்திய பிரதமரில் இருந்து, தமிழக ஆளுநர் வரை யாருமே பார்க்க முடியாத அளவிற்கு அப்படி என்ன வியாதி அந்தம்மாவிற்கு! எதுவுமே நம்ப முடியாத தகவலாகி போய் விட்டதே!


அந்த அம்மா உயிரோடு இருக்கும் வரை, திரையுலகில் சத்தமே இல்லாமல் பஞ்ச் டயலாக் பேசியவர்கள் எல்லோரும் இன்று சமூக வலைத்தளங்களில் பஞ்ச் டயலாக் பேசி வருகின்றார்கள்.

அந்த அம்மா, பூரண குணமடைந்து விட்டார்கள் என்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாய்ஸ் மட்டும் வந்தது, இதுவரை பதில் இல்லை, உன்னை ஆள வேண்டாம் என்றுதானே சொன்னோம், வாழ வேண்டாம் என்று சொல்லவில்லையே என்ற வசனத்தின் மூலம் தம்மை நல்லவர் என்று அடையாள படுத்திக்கொண்டு விட்டது எதிர்க்கட்சி.

தமிழ் நாட்டில் இதுவரை ஐந்தாவது அணியாக வந்தவர்கள் இன்று வீதிக்கு வீதி உலா வருகின்றார்கள், ஒரு மாநிலத்திற்குள் நுழைய முடியாத ஒரு பிரதமர் இந்த நாட்டிற்கு தேவையா? அவருக்கு துணிச்சல் இல்லையா? அம்மாவின் மரணத்தின் உண்மை கதை பின்னணி என்ன?

யார் பார்த்தாலும் தொற்று பரவி விடும் என்று சொன்னார்கள், இன்று யாரும் பார்க்காமல் எப்படி தொற்று பரவியது? மருத்துவமனையில் நுழைந்த நாளில் இருந்து இன்று வரை உள்ள ரிப்போர்ட்டை இன்னும் வெளியிடாதது ஏன்? என்று பல, பல கேள்விகள் மக்களிடையே இருக்கத்தான் செய்கின்றது?

மருத்துவமனை கொடுத்த பதில்களை ஏற்க முடியவில்லையே! ஒரு முதலமைச்சருக்கே இந்த கதி எனில் பாமரனின், சாமானியனின் வாழ்க்கைக்கு என்ன உத்திரவாதம் கொடுத்திட முடியும்?

நாற்காலிக்கு சண்டை போட்டுக்கொண்டு கேவலப்பட்ட ஜென்மங்களாய் நம் முன்னாடி நிற்கின்றார்கள், தெர்மோகோலால் தண்ணீரை மூடும் அதிமேதாவிகள் அமைச்சர்களாய் உலா வரும் தமிழகம்! வெட்கக்கேடான விஷயம்...

எடப்பாடி முதலமைச்சர் ஆனதும், ஓபிஎஸ் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வைக்கப்படும் என்கிறார், இப்போதும் அதில் மாற்று கருத்து இருக்கிறதா? நீதி விசாரணை இருக்குமா?

இத்தனை ஆண்டு காலமாய் நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை, நாங்கள் நினைத்திருந்தால் அம்மாவுடன் இருந்த அன்றே எங்களது செல்வாக்கை பயன்படுத்தி அதிமுகவில் பதவிகள் பெற்று இருப்போம் என்று சசிகலா சொல்கிறார்,

ஏன் அன்றே பெற்று இருக்க வேண்டியதுதானே, அன்று பதவி பெறப்படவில்லையா? அல்லது பதவி கொடுக்கப்படவில்லையா? எது நிஜம்? அந்த பதவிகள் பெறப்படாமலே இவ்வளவு செல்வாக்கு எப்படி வந்தது?

இன்றும் ஒரு சிலர் தமிழகத்தில் அதிமுக விசுவாசிகள் என்று சொல்பவர்கள், அம்மா, இருந்தவரை அம்மா, அம்மா என்று நடித்தார்கள், அவரின் மறைவிற்கு பிறகு சின்னம்மா, சின்னம்மா என்று அழைத்தார்கள், சின்னம்மா ஜெயிலுக்குள் போனதும் இப்போது டிடிவி தினகரன் என்று அழைக்கிறார்கள்?

ஒரு கோடி தொண்டர்களில் இவர்களை விட்டால் அதிமுகவில் இவர்கள் நால்வரைத் தவிர வேறு தகுதியான ஆளே இல்லையா? எத்தனை, எத்தனையோ வழக்குகள்? எத்தனை, எத்தனையோ விவாதங்கள்?

ஒவ்வொரு ஊடகமும் தனது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக் கொள்ள நடத்தும் விவாதங்கள், அசிங்கங்கள் அரங்கேறி வருகின்றன...

ஜிஎஸ்டி கொள்கையை எதிர்த்து அந்த சட்டம் நிறைவேறாமல் தடுத்து வைத்திருந்தவர் அம்மா, ஆனால் அந்த சட்டம் நிறைவேறுவதற்கு உடன்கட்டை ஏறியவர்கள் அம்மாவின் விசுவாசத்தையும் சேர்த்து அம்மாவோடு குழி தோண்டி புதைத்து விட்டார்கள்,.

சரியான தலைமை இல்லாமல் தகிடுதத்தம் போடும் அரசாங்கம், எதிர்க்கட்சி சட்டையை கிழித்து கொண்டு நடத்தும் அசிங்கங்கள், அருவருப்பாய் உள்ளது தமிழக அரசியல்....

யாரும் எக்கேடு கெட்டு போங்கள், நாங்கள் நடத்துகிறோம் பிக் பாஸ் என்ற கேலிக்கூத்து, அடுத்தவர் அந்தரங்க அறைக்குள் 30 கேமிராக்கள் வைத்து படம் பிடிக்கும் கூத்துக்கள்...

அவர்களின் ஆடைகள் கலாச்சார சீர்கேடுகள் என்று தமிழகத்தை எல்லோராலும் எள்ளி நகையாட ச் செய்யும் அசிங்கங்கள்...இதுதான் இன்றைய தமிழகம்!

இது எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு, மக்களின் புரட்சி, சகிக்க முடியவில்லை இவர்களது கூத்துக்கள்! ஏதாவது ஒன்று ஏற்று கொள்ள முடிகின்றதா?

போட்டிபோட்டு கொண்டு நடத்தும் நகைச்சுவை அரசியல் கலாட்டாக்கள்! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று அசிங்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் திருடர்கள் முன்னேற்ற கழகமாக மாறி உள்ளது வெட்கக்கேடானது!

உண்மை உலகிற்கு தெரியுமா? அல்லது அம்மாவின் மரணத்தை போலவே அனைத்து நீதிகளும் குழிதோண்டி புதைக்கப்படுமா?

அம்மாவின் பிணத்தின் மீது நாடகம், பிணத்தை வைத்து நாடகம் அரங்கேற்றப்படுகின்றது! வெட்கக்கேடானது தமிழகம்! தலைகுனிந்து நிற்கிறது, தமிழகம்! 

புஷ்பா சசிகலா வின் பிரச்சினைகளில் தொடங்கியது, இன்று அம்மாவின் சமாதியில் முடிந்துள்ளது, முதன்முதலில் ஒரு பெண் எதிர்க்க தொடங்க, அம்மாவின் வேதா இல்லத்தில் என்ன நடந்தது? அப்பல்லோவில் என்ன நடந்தது? 

அம்மாவின் போயஸ் தோட்டத்து காவலாளி கொலை செய்யப்பட்டு விட்டார், விசாரணை என்னவாயிற்று? அம்மாவிடம் பணிபுரிந்த பெண்கள் எங்கே சென்றார்கள்? உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டவர் பிணமாகத்தானே வீடு  திரும்பினார்? எம்பால்மிங் ஏன் செய்யப்பட்டது, இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்? எதற்குமே பதில் இல்லையே! 

அம்மாவின் புகைப்படத்தை வைத்து கொண்டும், அம்மாவின் சமாதியை வைத்து கொண்டும் அரசியல் செய்யும் கீழ்த்தர அரசியல்வாதிகள், அதிமுகவை வைத்து அரசியல் செய்யும் கீழ்த்தர ஊடகங்கள்! 

தமிழக மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை உரிமைகள் என்னவாயிற்று? 
அய்யகோ! இமயம் சரிந்ததே! ஒன்று மட்டும் உறுதி! டாஸ்மாக் கடைகளை மூடிய வேகத்தில் திறந்திருக்கிறார்கள்..

டாஸ்மாக்கில் தாலி இழந்த பெண்களின் சாபம்தான் கட்சியே இல்லாமல் சீர்குலைந்து நிற்கிறது!  தமிழக மக்களுக்கு விடிவு காலம் எப்போது? 
- இது ஒரு சாமானியனின் குரல் 











Monday, August 21, 2017

மாட்டுக்கு கொடுத்த மரியாதைய விவசாயிக்கும் கொடுங்கப்பா!

வணக்கம் இணையதள மற்றும் வலைப்பூ நண்பர்களே! 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உங்களோடு நானும் இணைகின்றேன். காலச்சக்கிரத்தின் கோலம், சில பொருளாதார பிரச்சினைகளில் சிக்கி தவித்து தற்போது மீண்டும் இச்சமுதாயத்தில் எனக்கான அடையாளத்தை உருவாக்கி கொண்டுள்ளேன். 

எத்தனையோ நாட்கள் எனது வலைப்பூவை திறந்து பார்த்து, ச்சே! எப்படியெல்லாமோ காலம் கடந்து விட்டதே என்று எனக்குள் நானே சபித்து கொள்வேன். 

இன்று சமுதாயம், நாடு மற்றும் சட்டம், நீதி அனைத்துமே செத்துப் போய்தான் இருக்கிறது. தமிழ் நாட்டை ஆளுவது யார், மாநிலமா? இல்லை மத்தியமா? என்று ஆயிரமாயிரம் கேள்விகள் மக்களுக்குள் உருவாகித்தான் இருக்கிறது. 

மறைந்த முதலமைச்சர் செயலலிதாவின் இழப்பு எவ்வளவு மோசமானது என்பதை மக்கள் இன்று நன்கு உணர்ந்திருப்பார்கள். அவரின் ஆளுமையில் அவரை திமிரு பிடித்தவர், ஆணவம் கொண்டவர், தலைக்கனம்  கொண்டவர் என்றெல்லாம் விமர்சித்தவர்கள் இன்று அந்த அம்மா இருந்திருந்தா இவனுங்க இப்படி ஆட்டம் போடுவானுங்களா, வாயைத்திறந்து பேசுவானுங்களா என்று வாய் விட்டே அறைகூவல் விடுத்து கொண்டிருக்கின்றார்கள். தொண்டனுக்கு இன்றும் தெரியவில்லை, யார் உண்மையான அம்மா விசுவாசி என்று, யாரை தலைமையாக ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை,

எதிர்க்கட்சியான திமுகவும் இன்று தலைமை இல்லாமல் சீரழிந்து போயிதான் இருக்கிறது. எத்தனையோ புரட்சிகள், போராட்டங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், இலவு காத்த கிளி போல இங்குமங்கும் போராடிக்கொண்டுதானே இருக்கிறார்கள். 

நாடே நாசமாய் போய்க்கொண்டிருக்கும் இவ்வேளையில் பிக் பாஸ் என்ற டீவி தொடர் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது, வெட்கக்கேடான விஷயம்! ஊடகங்கள் எல்லாமே வெட்கி தலைகுனிய வேண்டிய நேரம் இது, அஜித்தின் திரைப்படமும், விஜயின் திரைப்படமும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருக்கிறது. 

2ஜி, காமன்வெல்த் போட்டி ஊழல், நிலக்கரி ஊழல், கிரானைட் ஊழல், விஜய் மல்லையா ஊழல், கண்டெய்னர் லாரி கோடிக்கணக்கான பணம் விசாரணைகள் என்னவானது?   

மக்களை மறக்கடிக்க கொண்டு வந்ததே, 500 ரூவாய், 1000 ரூபாய் பண மாற்றம், ஜிஎஸ்டி ஆகியவையே, சாமானியன் இன்று வரை சாமானியனாகவே இருக்கின்றான், நாட்டை ஆக்கப்பூர்வமான கொண்டு செல்ல ஒருவனும் சிந்திக்கவே இல்லை! அதிமுகவில் உள்ள இரு அணிகள் இணையுமா? என்ற கேள்விகளை தினமும் டிஆர்பி க்காக விசாரிக்கும் ஊடகங்கள், வெட்கக்கேடான விஷயங்கள்! 

அம்மாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக 4 அணிகளாக உருவெடுத்திருப்பது, அந்த அம்மாவின் மரணத்தை வேண்டியிருப்பார்களோ என்ற சந்தேகத்தை மக்களிடம் கிளப்பி வருகிறது. 

பணம், பதவி மோகம் இல்லாத ஒரு தலைவனை இனி எப்போது நாம் காணப் போகின்றோம். ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்தும் கேவலங்கள் எப்போது நாட்டை விட்டு செல்ல போகின்றது?

கதிராமமங்கலம், நெடுவாசல் போராட்டம், விவசாயிகள் போராட்டம் எங்கே போனது? நாடு அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக வோ ஆட்சியை பிடிக்கும் வரை அவர்களை கைது செய்வேன், இவர்களை கைது செய்வேன் என்று ஊருக்கு ஊர் போய் பிச்சை எடுத்து பதவி பெற்றார்கள். இன்று பலகோடி கொள்ளையடித்த விஜய் மல்லையா கிரிக்கெட் போட்டியை ரசித்து பார்த்து கொண்டிருக்கின்றான். அவனை கைது செய்ய வக்கில்லாமல், அலைந்து கொண்டிருக்கிறது. கார்ப்பொரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக மத்திய  அரசும்,மத்திய அரசின் கைக்கூலியாக மாநில அரசும் இழுபறியில் இருக்கிறது. 

திருநெல்வேலி நகரத்தில் பெப்சி, கோக் குளிர்பான ஆலைகளை தண்ணீர் எடுக்க தாரை வார்த்து கொண்டிருக்கும் அன்றைய தமிழக அரசு, இன்று அதற்கு எதிராக போராட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. 

மீத்தேன் வாயுதிட்டத்தை அறிமுக படுத்தி அவசர சட்டத்தில் கையெழுத்திட்ட இயக்கங்கள்தான் இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்துகிறது. மக்களை இன்னமும் கேனப்பயல் லிஸ்ட்டில் வைத்திருக்கிறார்களே! என்ற கோபம் தலைக்கேறுகிறது. 

எத்தனையோ பிரச்சினைகள் நாட்டில் இருக்க, இங்கே நாற்காலிக்கு சண்டை போடும் நாதாரிகளை நினைத்தால் என்னவென்று சொல்ல? 

அம்மா இறந்த சந்தேகங்கள் ஆயிரம் இருக்க? ஏன் இளைஞர்கள் போராட்டம் செய்ய வில்லை என்று தெரியவில்லை! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாய் குரல் கொடுத்த இளைஞர்கள் ஏன் இந்த அம்மாவின் மரணத்தில் விசாரணைக்கு குரல் கொடுக்க வில்லை! 

அந்த அம்மா ஊழல் செய்ததாக இருக்கட்டும், ஆனால் நாட்டு மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் எதுவும் குறைவில்லையே! போகும் போது எதுவுமே கொண்டு போகப்போவதில்லை என்பதற்கு பணம் சேர்த்த முதலைகள் தெரிந்து கொள்ள வேண்டுமே! 

இது சாதாரண மரணம் அல்ல! கோடி ரூபாய் கையில்  பிணமாகத்தான் நம்மை விட்டு பிரிந்தார். மரண விளிம்பில் இருந்த அவரோடு யாருமே பேசவில்லை! யாரையுமே பேச விடவில்லை, ஒரு செய்தியின் உண்மை நிலை தெரியவில்லையெனில் ஆயிரமாயிரம் பொய் செய்திகள் பரவத்தான்  செய்யும்! அதற்கு முற்றுப்புள்ளி வைக்க உண்மைநிலை மக்களுக்கு தெரியவேண்டும்! 

தெரியுமா? இளைஞர்கள் இனியாவது விழித்து கொள்வார்களா? ஏதாவது ஒரு ஐடி நிறுவனம் விவசாயத்திற்கு, கதிராமமங்கலத்திற்கு, நெடுவாசலுக்கு குரல் கொடுக்குமா? அப்படி கொடுக்கும் போது அனைத்து ஐடி நிறுவனங்களும், இளைஞர்களும், இளைஞகளும் இணைவார்கள். 

சமுதாய பிரச்சனைகளை பேசும் ஊடகங்கள் என்று வெளிவரும் என்று உங்களைப்போலவே நானும் காத்திருக்கின்றேன். தமிழகத்தை சேர்ந்த ராணுவவீரன் வீரமரணம் செய்தி ஏழாவது பக்கத்தில் ஒரு குட்டி பெட்டி செய்தியாக வெளிவந்திருக்கிறது, முதல் பக்கத்தில் விவேகம் படத்தின் டீசரை 1 லட்சம் பேர் பார்த்தார்கள் என்று வெளிவந்திருப்பதே கேவலத்திற்குரிய விஷயமே!   

விடைகளே தெரியாத கேள்விகள் ஆயிரமாயிரம் நமக்குள் உருவாகிக்கொண்டிருக்கிறது! 

எப்போது கிடைக்கும் விடைகள்! ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கிடைத்த விடைகள் கூட மனிதனுக்கு நம் வாழ்வின் உயிர் விவசாயத்திற்கு கிடைக்காதது வேதனையளிக்கிறது...

விவசாயத்தை காப்போம் என்று வாட்சப்பில் லோகோ வைத்து விட்டால் நாம் போராளிகள் என்று அர்த்தம் கிடையாது. விஜய் மல்லையாவிற்கு கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். சாமானியன் ஒருவன் வீட்டிற்காக, திருமணத்திற்காக, கல்விக்காக வாங்கிய கடனுக்கு, அவனது வீட்டை ஜப்தி செய்யும் வங்கிகள், கல்வி சான்றிதழை பறிமுதல் செய்யும் வங்கிகள், நகைகளை ஏலத்தில் விற்கும் வங்கிகள், விஜய் மல்லையாவின் கால்களை கழுவி விட்டது எப்படி? 

எப்படி அவனை வெளிநாட்டிற்கு தப்ப வைத்தார்கள்? எப்படி இன்று வரை தலைமறைவாக இருக்கின்றான்? மக்கள் சிந்திக்க வேண்டும்?