பங்காளிங்க..

Tuesday, August 29, 2017

தரைமட்டமான அதிமுக!

எம்ஜிஆர் தொடங்கிய மாபெரும் இயக்கம், இன்று தரைமட்டமானது! 
 ஒரு மாபெரும் இமயம் சரிந்து போனது, சரிந்து போன மாதம் யாருக்குமே தெரியாது! இந்த நாளில் இறந்தார் என்று யாரோ சொன்னார்கள், கேட்டுவிட்டு அதையே இறந்த நாளாக துக்கம் அனுஷ்டித்து வருகிறது, தமிழகம்....

அம்மாவிற்கு பிறகு அதிமுகவில் இருக்கும் ஒருவனுக்கு கூட கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை, பதவியை தக்க வைத்து கொள்ள ஒவ்வொரு லாட்ஜாக, ஒவ்வொரு ரிசார்ட்டாக சென்று கொண்டிருக்கிறான் என்பதே நிதர்சன உண்மை...

இந்திய பிரதமரில் இருந்து, தமிழக ஆளுநர் வரை யாருமே பார்க்க முடியாத அளவிற்கு அப்படி என்ன வியாதி அந்தம்மாவிற்கு! எதுவுமே நம்ப முடியாத தகவலாகி போய் விட்டதே!


அந்த அம்மா உயிரோடு இருக்கும் வரை, திரையுலகில் சத்தமே இல்லாமல் பஞ்ச் டயலாக் பேசியவர்கள் எல்லோரும் இன்று சமூக வலைத்தளங்களில் பஞ்ச் டயலாக் பேசி வருகின்றார்கள்.

அந்த அம்மா, பூரண குணமடைந்து விட்டார்கள் என்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாய்ஸ் மட்டும் வந்தது, இதுவரை பதில் இல்லை, உன்னை ஆள வேண்டாம் என்றுதானே சொன்னோம், வாழ வேண்டாம் என்று சொல்லவில்லையே என்ற வசனத்தின் மூலம் தம்மை நல்லவர் என்று அடையாள படுத்திக்கொண்டு விட்டது எதிர்க்கட்சி.

தமிழ் நாட்டில் இதுவரை ஐந்தாவது அணியாக வந்தவர்கள் இன்று வீதிக்கு வீதி உலா வருகின்றார்கள், ஒரு மாநிலத்திற்குள் நுழைய முடியாத ஒரு பிரதமர் இந்த நாட்டிற்கு தேவையா? அவருக்கு துணிச்சல் இல்லையா? அம்மாவின் மரணத்தின் உண்மை கதை பின்னணி என்ன?

யார் பார்த்தாலும் தொற்று பரவி விடும் என்று சொன்னார்கள், இன்று யாரும் பார்க்காமல் எப்படி தொற்று பரவியது? மருத்துவமனையில் நுழைந்த நாளில் இருந்து இன்று வரை உள்ள ரிப்போர்ட்டை இன்னும் வெளியிடாதது ஏன்? என்று பல, பல கேள்விகள் மக்களிடையே இருக்கத்தான் செய்கின்றது?

மருத்துவமனை கொடுத்த பதில்களை ஏற்க முடியவில்லையே! ஒரு முதலமைச்சருக்கே இந்த கதி எனில் பாமரனின், சாமானியனின் வாழ்க்கைக்கு என்ன உத்திரவாதம் கொடுத்திட முடியும்?

நாற்காலிக்கு சண்டை போட்டுக்கொண்டு கேவலப்பட்ட ஜென்மங்களாய் நம் முன்னாடி நிற்கின்றார்கள், தெர்மோகோலால் தண்ணீரை மூடும் அதிமேதாவிகள் அமைச்சர்களாய் உலா வரும் தமிழகம்! வெட்கக்கேடான விஷயம்...

எடப்பாடி முதலமைச்சர் ஆனதும், ஓபிஎஸ் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வைக்கப்படும் என்கிறார், இப்போதும் அதில் மாற்று கருத்து இருக்கிறதா? நீதி விசாரணை இருக்குமா?

இத்தனை ஆண்டு காலமாய் நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை, நாங்கள் நினைத்திருந்தால் அம்மாவுடன் இருந்த அன்றே எங்களது செல்வாக்கை பயன்படுத்தி அதிமுகவில் பதவிகள் பெற்று இருப்போம் என்று சசிகலா சொல்கிறார்,

ஏன் அன்றே பெற்று இருக்க வேண்டியதுதானே, அன்று பதவி பெறப்படவில்லையா? அல்லது பதவி கொடுக்கப்படவில்லையா? எது நிஜம்? அந்த பதவிகள் பெறப்படாமலே இவ்வளவு செல்வாக்கு எப்படி வந்தது?

இன்றும் ஒரு சிலர் தமிழகத்தில் அதிமுக விசுவாசிகள் என்று சொல்பவர்கள், அம்மா, இருந்தவரை அம்மா, அம்மா என்று நடித்தார்கள், அவரின் மறைவிற்கு பிறகு சின்னம்மா, சின்னம்மா என்று அழைத்தார்கள், சின்னம்மா ஜெயிலுக்குள் போனதும் இப்போது டிடிவி தினகரன் என்று அழைக்கிறார்கள்?

ஒரு கோடி தொண்டர்களில் இவர்களை விட்டால் அதிமுகவில் இவர்கள் நால்வரைத் தவிர வேறு தகுதியான ஆளே இல்லையா? எத்தனை, எத்தனையோ வழக்குகள்? எத்தனை, எத்தனையோ விவாதங்கள்?

ஒவ்வொரு ஊடகமும் தனது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக் கொள்ள நடத்தும் விவாதங்கள், அசிங்கங்கள் அரங்கேறி வருகின்றன...

ஜிஎஸ்டி கொள்கையை எதிர்த்து அந்த சட்டம் நிறைவேறாமல் தடுத்து வைத்திருந்தவர் அம்மா, ஆனால் அந்த சட்டம் நிறைவேறுவதற்கு உடன்கட்டை ஏறியவர்கள் அம்மாவின் விசுவாசத்தையும் சேர்த்து அம்மாவோடு குழி தோண்டி புதைத்து விட்டார்கள்,.

சரியான தலைமை இல்லாமல் தகிடுதத்தம் போடும் அரசாங்கம், எதிர்க்கட்சி சட்டையை கிழித்து கொண்டு நடத்தும் அசிங்கங்கள், அருவருப்பாய் உள்ளது தமிழக அரசியல்....

யாரும் எக்கேடு கெட்டு போங்கள், நாங்கள் நடத்துகிறோம் பிக் பாஸ் என்ற கேலிக்கூத்து, அடுத்தவர் அந்தரங்க அறைக்குள் 30 கேமிராக்கள் வைத்து படம் பிடிக்கும் கூத்துக்கள்...

அவர்களின் ஆடைகள் கலாச்சார சீர்கேடுகள் என்று தமிழகத்தை எல்லோராலும் எள்ளி நகையாட ச் செய்யும் அசிங்கங்கள்...இதுதான் இன்றைய தமிழகம்!

இது எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு, மக்களின் புரட்சி, சகிக்க முடியவில்லை இவர்களது கூத்துக்கள்! ஏதாவது ஒன்று ஏற்று கொள்ள முடிகின்றதா?

போட்டிபோட்டு கொண்டு நடத்தும் நகைச்சுவை அரசியல் கலாட்டாக்கள்! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று அசிங்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் திருடர்கள் முன்னேற்ற கழகமாக மாறி உள்ளது வெட்கக்கேடானது!

உண்மை உலகிற்கு தெரியுமா? அல்லது அம்மாவின் மரணத்தை போலவே அனைத்து நீதிகளும் குழிதோண்டி புதைக்கப்படுமா?

அம்மாவின் பிணத்தின் மீது நாடகம், பிணத்தை வைத்து நாடகம் அரங்கேற்றப்படுகின்றது! வெட்கக்கேடானது தமிழகம்! தலைகுனிந்து நிற்கிறது, தமிழகம்! 

புஷ்பா சசிகலா வின் பிரச்சினைகளில் தொடங்கியது, இன்று அம்மாவின் சமாதியில் முடிந்துள்ளது, முதன்முதலில் ஒரு பெண் எதிர்க்க தொடங்க, அம்மாவின் வேதா இல்லத்தில் என்ன நடந்தது? அப்பல்லோவில் என்ன நடந்தது? 

அம்மாவின் போயஸ் தோட்டத்து காவலாளி கொலை செய்யப்பட்டு விட்டார், விசாரணை என்னவாயிற்று? அம்மாவிடம் பணிபுரிந்த பெண்கள் எங்கே சென்றார்கள்? உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டவர் பிணமாகத்தானே வீடு  திரும்பினார்? எம்பால்மிங் ஏன் செய்யப்பட்டது, இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்? எதற்குமே பதில் இல்லையே! 

அம்மாவின் புகைப்படத்தை வைத்து கொண்டும், அம்மாவின் சமாதியை வைத்து கொண்டும் அரசியல் செய்யும் கீழ்த்தர அரசியல்வாதிகள், அதிமுகவை வைத்து அரசியல் செய்யும் கீழ்த்தர ஊடகங்கள்! 

தமிழக மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை உரிமைகள் என்னவாயிற்று? 
அய்யகோ! இமயம் சரிந்ததே! ஒன்று மட்டும் உறுதி! டாஸ்மாக் கடைகளை மூடிய வேகத்தில் திறந்திருக்கிறார்கள்..

டாஸ்மாக்கில் தாலி இழந்த பெண்களின் சாபம்தான் கட்சியே இல்லாமல் சீர்குலைந்து நிற்கிறது!  தமிழக மக்களுக்கு விடிவு காலம் எப்போது? 
- இது ஒரு சாமானியனின் குரல் 











No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...