பங்காளிங்க..

Saturday, September 2, 2017

அறிவுக்கெட்ட அனிதாவே,

 அறிவுக்கெட்ட அனிதாவே, 
"அம்மா" மரணத்திற்க்கே இதுவரை பதில் சொல்ல வக்கில்லாத, விசாரணை நடத்த  துணிவில்லாத அரசு,  அனிதாவின் மரணத்திற்க்கா, பதில் அளித்துவிடப்போகிறது?

அறிவுக்கெட்ட அனிதாவே, 
அரசியல்வாதிகளுக்கும், அகோர பசியில் காத்திருக்கும் டிஆர்பி யை விரும்பும் சானல்களுக்கும் அருமையான விருந்து அனிதா கொடுத்து விட்டு சென்றிருக்கிறாள்,  நாசமாக போகிறவர்கள் இனிமேல் அவள் ஆன்மா சொர்க்கம் செல்லும் வரை, அவளைப்பற்றி, பேசிவிட்டு அடுத்தது ஒரு குமுதா மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் கழுகுகள் இவர்கள்...

அறிவுக்கெட்ட அனிதாவே, 
ஒரு சிறுமி, மாணவி தனியாக உச்சநீதிமன்றம் நாடியிருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்? வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளை நம்பி பிரயோசனமில்லை என்றுதானே தன்னந்தனியே சாவினை சந்தித்திருக்கிறாள், 

அறிவுக்கெட்ட அனிதாவே, 
ஏழைப்பிள்ளைகள் மருத்துவம் படிக்க கூடாது என்ற பாசிச உணர்வு தலைதூக்கிறதோ என்ற அச்சம் எழுந்து கொண்டுதானே இருக்கிறது. தரமற்ற கல்வியை தமிழகம் படித்து கொண்டிருக்க, கேள்விகள் மட்டும் சர்வதேச அளவில் இருந்தால் எப்படி மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராவார்கள்? விடைகள் தெரியாத கேள்விகள் பல?
மக்களே சிந்திப்பீர், ஒருவேளை இவளின் மரணத்தை புளூவேல் தற்கொலை என்று கூட சொல்வார்கள், கொச்சைப்படுத்துவார்கள், இதற்கு முன்னர் எத்தனை, எத்தனை வழக்குகளை இப்படித்தான் முடித்திருக்கிறார்கள், இதுவென்றும் புதிதல்ல, 1200 க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு எத்தனை எத்தனை ஆசைகள் இருந்திருக்க வேண்டும்?  தனியே, தன்னந்தனியே தைரியமாக உச்சநீதிமன்றம் போனவள், எப்படி மரணத்தை தழுவினாள், எந்த சம்பவம் அவளை பாதித்தது? ஒருவேளை அவள் தற்கொலை செய்யாமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும், யாருமே குழுமூர் கிராமம் பக்கம் திரும்பி பார்த்திருக்க மாட்டார்களே! 

எங்கள் சகோதரி இறந்து விட்டாளே, என்று குமுறும் மாணவ இயக்கங்களுக்கும், அவளது உறவினர்களுக்கும், பெற்றோருக்கும் எங்களது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம்.   
அறிவுக்கெட்ட அனிதாவே,  காவல்துறை விஷ்னுபிரியா தற்கொலை, சுவாதி வழக்கு, இளவரசன், இளவரசி வழக்கு இப்படி எத்தனை, எத்தனையோ விடைகள் தெரியாமலேயே சீரழிந்து போயிற்று!

அறிவுக்கெட்ட அனிதாவே, இந்த நாசமாய் போன அரசியல்வாதிகளை நம்பி அவசரப்பட்டு உன் உயிரை விட்டு விட்டாயே! ஒருவேளை இவர்கள் ஆட்சியில் வாழ்வதை விட,  சாவதே மேல் என்று புரிந்து கொண்டு விட்டாயா?

அறிவுக்கெட்ட அனிதாவே, 

ஒரு கல்வி இல்லை என்றால் வேறு கல்வி என்று ஏன் உன்னால் கொள்கையை  மாற்றிக்கொள்ள முடியவில்லை, நம்ம ஊரு கட்சிக்காரர்களை பார்த்தும் உனக்கு அறிவில்லையா, ஒரு கட்சி, பதவி இல்லையென்றால் அடுத்த கட்சிக்கு கூச்சமே இல்லாமல் தாவுகின்றார்களே தவிர யாராவது தற்கொலை செய்து கொள்கின்றார்களா?

அறிவுக்கெட்ட அனிதாவே, 
அவசரப்பட்டு தற்கொலை செய்யும் முட்டாள்களே, கட்சி விட்டு கட்சி தாவுங்கள், அதை விட்டு விட்டு தற்கொலை செய்யாதீர்கள், கூடா நட்பு என்று சொல்வார்கள், கடைசி வரை அவர்களோடே கூட்டு வைப்பார்கள், பெற்ற மகளை திகார் செயிலுக்கே அனுப்பினாலும் பணமும், பதவியும் கொடுத்து விட்டால் அவர்களோடே கூட்டு வைப்பார்கள், கேட்டால் கொள்கை என்று சொல்வார்கள், என்ன கண்ராவி கொள்கை என்று அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்,

அறிவுக்கெட்ட அனிதாவே, 
சகோதரி அனிதா, இன்றிலிருந்து அடுத்த பிணம் இந்த மண்ணில் விழும் வரை நீதான் எங்களின் ஊடகங்களுக்கு தீனியாக இருக்கப்போகின்றாய்,

விவாத மேடை, நேர்பட பேசு, ஒரு ஆளுங்கட்சி, ஒரு எதிர்க்கட்சி, ஒரு நெறியாளர், ஒரு நடுநிலையாளர் எல்லோரும் இணைந்து உன்னை விமர்சித்து பேசுவார்கள், சம்பந்தமே இல்லாமல் ஒருவர் பேசிக்கொண்டிருப்பார், அவர்தான் ஆளும்கட்சி என்பதை எடுத்து கொள், இதெல்லாம் நடந்து என்ன பயன்? நீ எங்களிடம் திருப்பி வரவா போகின்றாய்? வெட்டி பேச்சுக்கள், இதோ எனது எழுத்து போல!

வழக்கம் போல வலைப்பூவினில் மனக்குமுறலை வெளியிடுவதை தவிர எங்களுக்கு எதுவுமே தோன்றவில்லை! வெட்கித் தலைகுனிகின்றோம்....அறிவுக்கெட்ட அனிதாவே, 

5 comments:

  1. அறிவு(க்)கெட்ட சிவாவே! இந்தியாவில் தற்கொலை அதிகமாக நிகழும் மூன்றாவது மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று தெரியுமா?
    அறிவு(க்)கெட்ட சிவாவே! 1200க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்த பெண்ணால், நீட் தேர்வு தேற முடியவில்லை என்றால், அதற்கு தமிழகத்தின் கல்வித்தரம் காரணம் என்று புரியவில்லையா?
    அறி......, சொல்லி ஒண்ணும் ஆகப்போறதில்லை. சும்மா பரபரப்புக்கு எழுதியிருக்கீங்க. அடிச்சு விளையாடுங்க. பாவம் அந்த ஏழைப்பெண்! எதிர்மறை அரசியல்வாதிகளின் விளையாட்டுக்குப் பலியாகி விட்டாள். அவளை நிந்திக்காதீர்கள். விட்டு விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அனிதாவின் மரணம் உங்களை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது என்று நினைக்கின்றேன், மேலும், நீங்கள் எதையும் முழுவதுமாக படிக்க வில்லை என்று நான் நம்புகின்றேன், கேடுகெட்ட அரசியல்வாதிகளால் முட்டாள்தனமாக ஒரு முடிவெடுத்து விட்டாள் என் உடன்பிறவா சகோதரி என்ற ஆதங்கத்தில் எழுதியிருக்கின்றேன், உங்களை விட அதிகமாக நேரிடையாக பாதிக்கப்பட்டது நான்தான், இந்த உண்மை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, இந்த அரசியல்வாதிகளை நம்பி தனது வாழ்க்கையை பாழடித்துவிட்டாளே என்ற கோபத்தில் நான் எழுதியிருக்கின்றேன் என்பதை பாவம் நீங்கள் அறிய வாய்ப்பில்லை, முதல் வார்த்தையை மட்டும் படித்து விட்டு இப்படி கொதித்தெழுகிண்றீர்கள், மிக்க சந்தோசம், உங்கள் ஆதங்கத்தை தெரிவித்ததற்கு.....அனிதா எங்கள் ஊர் பெண், எங்கள் உடன்பிறவா சகோதரி அவள்!

      Delete
    2. எனது ஆதங்கம் இன்னும் ஆழமானது; புரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தில் தற்கொலை அதிகம் நிகழ்வது என்பது எவ்வளவு வேதனக்குரியது என்பது சற்று விசாலமான அணுகுமுறையுடன் கையாளப்பட வேண்டிய முக்கியமான விஷயம். இது யார் வீட்டிலும் நிகழலாம் என்பது நம்மை அச்சுறுத்தவில்லையா? காரணம் எதுவாக இருந்தாலும், தற்கொலை என்ற விபரீத முடிவுக்குச் செல்லாமல் தடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டா இல்லையா? நோய்களுக்கான காரணங்கள் புதிது புதிதாய் முளைக்கும்; மருந்து கண்டுபிடிக்க வேண்டுமா அல்லது சாவோடு சமரசம் செய்ய வேண்டுமா? இந்த முக்கியமான கேள்வியை இந்தத் துயரமான நேரத்திலும் பலமுறை எழுப்பி, அதற்கான விடைதேடுகிற முனைப்பில் ஈடுபட்டாலொழிய, நோய்வரும் அபாயத்திலிருந்து தப்ப முடியாது. மற்றபடி, இடுகையின் தலைப்பிலிருந்து ஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் அறிவுகெட்ட அனிதா என்று பலமுறை எழுதிவிட்டு, முதல்வரியை மட்டும் படித்துவிட்டு ஆதங்கப்படுவதாக ஏன் விலக முயல்கிறீர்கள்? உங்கள் ஊரில் இன்னொரு உடன்பிறவா சகோதரி இந்த முடிவுக்கு வரக்கூடாது. இப்படியொரு இடுகையை நீங்கள் மீண்டும் எழுதாமல் இருப்பதற்காகவாவது இன்னொரு அனிதா வேண்டாம். நன்றி.

      Delete
  2. அறிவுக்கெட்ட நாம்...

    ReplyDelete
  3. மின்சாரம் சிவா சொல்வது சரிதான், நீட் தேர்வில் தமிழக அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றி விட்டார்கள், மாநிலமும்,மத்தியமும் சேர்ந்து தமிழக மக்களின் மருத்துவ கனவை குழி தோண்டி புதைத்து விட்டது! தமிழக மக்களின் கல்வியமைப்பு சிபிஎஸ்இ அளவு இல்லாத போது அவர்கள் அதை எதிர்த்திருக்க வேண்டும், பதவிக்கும், நாற்காலிக்கு ஆசைப்பட்டு தமிழக மக்களை இழிவுபடுத்தி விட்டார்கள்.

    சேட்டைக்காரன் அவர்களே, அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி விட்டீர்கள், அறிவுக்கெட்ட அனிதா என்பதில் எனது ஆதரவும் இருக்கிறது, அடிப்பாவி மகளே, இப்படி அநியாயமா போயிட்டியே என்பதுதானே அந்த வார்த்தை, அந்த உரிமை, அறிவுக்கெட்டவளே, இப்படி அவசரப்பட்டு போயிட்டியே என்பதுதானே அவரின் வெளிப்பாடு, அதற்கு அவரை வசைபாடுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை,

    இந்த மோசமான தலைவர்களின் செயல்களை பார்த்து நீ உன் வசந்த கால வாழ்வை தொலைத்து விட்டாயே என்றுதானே புலம்பியிருக்கிறார்! அவளை அறிவுக்கெட்டவள் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? இன்று அனிதாவுக்கு எதிராக குரல்கொடுத்த கிருஷ்ணசாமி அவர்களுக்கு மீண்டும் தேர்வு வைத்தால் அவரும் பூஜ்யம் மதிப்பெண்கள்தானே எடுப்பார், அப்போது குரல் கொடுப்பார், நீட் தேர்வு வேண்டாம் என்று!
    அவள் சாவிற்கு காரணம் நீட் தேர்வாக இருக்காது என்று கொச்சைப்படுத்தி யிருக்கின்றாரே! அவரை யாராவது ஒருவர் கேள்வி எழுப்ப முடிந்ததா? மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அப்பாவிகள் 17 பேர் இறந்த போது இவர் எங்கே காணாமல் போனார்? ஓடி ஒளிந்து கொண்டாரே! அன்று இவரல்லவா முன்னாடி நின்றிருக்க வேண்டும்?

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...