பங்காளிங்க..

Friday, January 24, 2014

செய்யுறதை ஒழுங்கா செய்யனுமா இல்லையா?

ஆகம விதிகளை கடை பிடிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கும் பக்த ஜனங்களே..கடவுள் சிவனுக்கு கொழுப்பு சத்து நீக்கிய தண்ணீர் கலந்த பால் பாக்கெட்டிலா அபிசேகம் செய்வது?

நான் எப்போ செஞ்சேன்? என்று யோசிக்கின்றீர்களா? நமது சவுகரியத்துக்கு ஆண்டவனையே மாற்றி விட்டோமே...கொஞ்சம் சிந்திக்க வேண்டும்..

பிரதோஷம் என்ற ஒன்றை கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? தாத்தா, பாட்டி எங்கே போறீங்க, இன்னிக்கு பிரதோசம்டா, அதான் கோயிலுக்கு போறோம்...இந்த கால பிள்ளைங்க கிட்டே என்னிக்கு பிரதோஷம் வரும்னு கேட்டுப் பாருங்க...நூத்துக்கு 90 சதவிகிதம் பேருக்கு தெரியாது...

அந்த வரலாறை பத்தி கொஞ்சம் சொல்றேன் கேட்டுக்கோங்க...நல்ல விசயம்தானே சொல்றேன்....

பிரதோஷம் எப்போது வரும்?

13வது சந்திர நாளன்று (திரயோதசை ) மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நீடிக்கும் அந்த வேளையில் பிரதோஷம் பூசை நடக்கும். 

அந்த நேரத்தில் சிவனை வழிபட்டால் நமது பாவங்கள் மறைந்து நாம் சொர்க்கத்திற்கு செல்ல வழி பிறப்பதாக முன்னோர்கள் தெரிவிக்கின்றார்கள். 

அந்த பூஜை முன்டிந்த தருணத்தில் பிரகாரத்தை சுற்றி வந்தால் நமக்கு நல்ல அனுக்கிரகங்கல் உண்டாகும் என்றும் அதற்க்கு பெயர் சோம சுற்ற ப்ரதக்சினம் என்றும் சொல்கின்றார்கள். 

பிரதோஷ வரலாறு...

பலர் பல விதமாக சொல்கின்றார்கள். நான் படித்த வரலாறை இங்கே சொல்கின்றேன்....

வாசுகி என்ற சர்ப்பத்தைக் கொண்டு திருப்பாற்கடலை மந்தாரா மலையை தேவர்களும், அசூரர்களும் கடைந்த போது முதலில் அதில் விஷம் வந்ததாகவும் அந்த விசத்தை சிவபெருமான் முழுங்க அதன் பின்னர் அமிர்தம் வந்ததாகவும் அதனை தேவர்கள் உண்டதாகவும் சொல்லப் படுகின்றது... சரி விசத்தை முழுங்கினால் என்ன செய்வது என்று அஞ்சிய பார்வதி தேவி சிவனின் கழுத்தை பிடித்து நெரித்து விஷம் மேலும் இறங்காமல் தடுக்க சிவனின் முகம் நீலமாய் மாறியதாகவும்....மேலும் அந்த விஷம் முழுவதும் இறங்காமல் நின்று போனதாகவும் வரலாறு சொல்கின்றது. 

இதனிடையே தனக்கு அமிர்தம் கிடைத்த சந்தோசத்தில் சிவனை மறந்து கொண்டாட சென்று விட்ட தேவர்கள் அடுத்த நாள் சிவனின் தியாகத்தை நினைத்து பதறிப் போய்  சிவனிடம் சென்று மன்னிப்பு கேட்டனராம். அந்த நாள்தான் திரயோதசி என்று சொல்லப்படும் 13வது நாளாகும். 

சிவனும் எளிதில் மன்னிக்க கூடிய மனதுடையவர் என்பதால் எல்லோருடைய பாவங்களை மன்னித்து அருள் புரிந்தார் என்றும்...தனக்கு விஷம் இறங்காமல் காப்பாற்றிய பார்வதியின் செயலில் மனமகிழ்ந்து ஆடியதாகவும் அதுவும் தனது வாகனமான நந்தியின் முன்பு ஆடியதாகவும் கூறப்படுகின்றது. 

ஆகையால்தான் இன்றும் சிவனை வணங்கும்போது நந்தியின் கொம்புகளுக்கு இடையில் பார்த்து வணங்கவேண்டும் என்றும் சொல்கின்றார்கள். 

சரி பக்தர்கள் சிவனை எப்படி வணங்க வேண்டும் அதனால் என்னென்ன பலன்கள் என்று தெரியுமா?

சிவபெருமானுக்கு பிடிக்காத பாக்கெட்!!!!

சுத்தமான பசும்பால் (முக்கியமா பால் பாக்கெட் கிடையாது) அதில் அபிசேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்குமாம்.

சுத்தமான பசு நெய் - மோட்சம் கிடைக்குமாம் 

சுத்தமான பசுந்தயிர் - குழந்தைப் பேறு கிடைக்குமாம் 

சுத்தமான தேன் - நல்ல இனிமையான குரல் கிடைக்குமாம் 

அரிசி மாவினில் செய்தால் - கடனில் இருந்து விடுபடலாமாம்...

கரும்புச்சாரினில் அபிசேகம் செய்தால் - நல்ல உடல்நிலை கிடைக்குமாம் 

பஞ்சாமிர்தத்தில் அபிசேகம் செய்தால் செல்வங்கள் வந்து குவியுமாம் 

எலுமிச்சையில் செய்தால் மரண பயம் விட்டு விலகிச் செல்லுமாம்...(இப்போ புரியுது எதுக்கு வண்டியிலே எலுமிச்சை பழத்தை கட்டி வைக்கிறாங்கன்னு)

சர்க்கரையில் செய்தால் எதிரிகள் உருவாக மாட்டார்களாம்...

இளநீரில் அபிசேகம் செய்தால் வாழ்க்கையில் வசந்தம் வருமாம் 

வேகவைத்த அரிசியில் செய்தால் (அன்னம்) கட்டழகுடைய தேகம் கிடைக்குமாம் 

சந்தனத்தில் அபிசேகம் செய்தால் லட்சுமி கடாட்சம் வந்து சேருமாம்....

ஆனால் நாம் எல்லாவற்றையும் போலியான பொருட்களால் இன்று செய்து வருகின்றோம்...

சிவனுக்கு உகந்தது வில்வ இலைகளும் நாகலிங்க மலர்களும்...மார்கெட்டுல இப்போ எல்லாம் பிளாஸ்டிக் குலே கிடைக்குது....அதை கொடுத்திட்டு நானும் செஞ்சேன், சிவன் என்னை கண் திறந்து பாக்கலையே னு புலம்பிகிட்டு இருக்கோம்...

செய்யுறதை ஒழுங்கா செய்யனுமா இல்லையா? பஸ்சுல உக்காந்துகிட்டே சாமிக்கு டாட்டா காண்பிக்கிறது, அப்புறம் சிவன் கண்டுக்கலைன்னு சொல்ல வேண்டியது....

ரோட்டுல போலிஸ் காரனை பார்த்தா வேட்டியை கீழே இறக்கி விடுவீங்க...சைக்கிளை விட்டு இறங்கி போவீங்க...ஆனா கடவுளுக்கு மட்டும் உக்காந்துகிட்டே பிளையிங் கிஸ் கொடுப்பீங்க....

என்னென்ன பிரதோஷம் இருக்கு?

1.மாச பிரதோஷம் 
2.பக்ஷ பிரதோஷம் 
3. சனி பிரதோஷம் 

பிரதோஷம் அன்று அலங்கரிக்கப்பட்ட சிவனை பிரகாரம் சுற்றி வந்து வழிபட்டால் அது  கும்பாபிசேகம் செய்த 3 கோயில்களை வழிபட்டதற்கு சமமாம்...இதை விட நமக்கு வேறு என்ன பாக்கியம் இருக்க முடியும்....

பிரதோஷம் அன்று பக்தர்கள் செய்ய வேண்டியது என்னென்ன ?

1. அதிகாலையில் குளித்து கோயிலுக்கு சென்று வலம் வர வேண்டும்...
2. உண்ணாநிலையை கடைபிடித்தல் வேண்டும் 
3. தேவாரம், திருவாசகம், ருத்ர சமகா மந்திரங்கள் ஓத வேண்டும், அல்லது படிக்க வேண்டுமாம்...இது அறிவியலோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றது 
4. நந்திக்கு அருகம்புல்லும், சிவனை தாங்கி நிற்கும் காளைக்கு மலர்களும், சிவனுக்கு வில்வ இலைகளும் கொண்டு வணங்க வேண்டுமாம் 
5. நெய் தீப மேற்ற வேண்டுமாம்...(சுத்தமான, சுத்தமான பசும் நெய்)
6. திருவாசகம், தேவாரம் படிக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது...
7. சூடானா பசும் பாலை அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு வழங்க வேண்டுமாம்...(அதுக்கு பதிலாத்தான் அவா காசு வாங்குறாளே, அப்புறம் என்னாத்துக்கு) 
8.முக்கியமான விஷயம் என்னவெனில் அன்று கடவுளின் எந்த ஒரு விக்கிரகத்தையும் கைகளால் தொடக்கூடாதாம்...அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்குமாம்.

9. இது எல்லாவற்றையும் விட சிவனை நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நின்று வழி படுத்தல் மிக முக்கியமான ஒன்றாகும்.....

எங்கே, கோயில்ல நிக்கவே இடமில்லை...நேரா நின்னு கும்பிடவே விடமாட்டாளே! நேக்கு புரியறது....ஆனால் இப்படி செய்தால் புண்ணியமாம்... செய்யுறதை ஒழுங்கா செய்யனுமா இல்லையா?

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...