பங்காளிங்க..

Wednesday, July 4, 2018

நீங்க நாசமா போயிருவீங்கடா.......

சத்தியமா சொல்றேன், நீங்க நாசமா போயிருவீங்கடா? எங்களை குடும்பத்தோட அழிச்சிட்டீங்களே டா, எங்களை அணு, அணுவாய் சிதைச்சு சின்னா பின்னமாக்கிட்டீங்கலேடா, உங்களுக்கு நாங்க என்னடா பாவம் செஞ்சோம்? உங்க குழந்தை குட்டிக்கெல்லாம் நாங்க நல்லதுதானே டா செஞ்சோம், ஈவு இரக்கமில்லாம எங்களை கொலை செய்யுறீங்களே, என்னோட பாட்டன், முப்பாட்டன், அப்பன், சித்தப்பன், சித்தி, பாட்டி, ஆத்தா, என் மருமகனுங்க, மருமகளுங்க எல்லோருமே உங்களுக்கு சேவகம் செஞ்சிருக்கோமே யடா? உங்க பிள்ளைங்களை, உங்க பொண்டாட்டிய, உங்க அப்பன், ஆத்தாளை, உங்க அக்கா, தங்கச்சிய, உங்க அண்ணன் தம்பியை கைய, காலை வெட்டினா நீங்க சும்மா இருப்பீங்களே டா, வெக்கங்கெட்ட, மானங்கெட்ட அயோக்கியனுன்களா, 

ஏண்டா, நீங்க பொறந்ததிலே இருந்து மண்ணுக்குள்ளே போறவரைக்கும் உங்களுக்கு நாங்க ஊழியம் செஞ்சிருக்கோம், அதுக்காவது ஒரு நன்றிக்கடன் இருக்கா? நன்றிண்ணா என்னான்னு தெரியுமா உங்களுக்கு, மரியாதைங்கிற பெயருக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு, சும்மா மேடை போட்டு வெட்டியா பேசுறதை விட்டுட்டு போட்டோக்கு செல்பி எடுக்கிறத விட்டுட்டு நீங்க மூடிகிட்டு போனாலே போதும். 


நாங்க அழுகுறது உங்க காதுக்கு கேக்கவே இல்லையாடா, செவிட்டு முண்டங்களா, ஒரு காலத்துல உங்க பாட்டன், முப்பாட்டனெல்லாம் எங்களை தெய்வமா கும்பிட்டானுங்க, எவனோ ஒரு நாதாரி பேச்சை கேட்டு தெய்வம் இல்லேன்னு சொன்னதுக்காக, எங்களை தெய்வமா பாக்காம, உங்க பப்ளிசிட்டிக்காகத் தானே பாக்குறீங்க, 

உன் ஆத்தா உனக்கு அவளோட ரத்தத்தை பாலா கொடுத்தா, உன் அப்பன் உனக்கு இந்த மினிக்கிகிட்டு திரியுற உடம்பை கொடுத்தான்,  ஆனா உனக்கு உயிரை கொடுக்கிறதே எங்க வம்சம்தானடா? 

உங்க மூச்சு காத்து நாங்க கொடுத்தது, அதை கூட மறந்திட்டீங்களே, நன்றி கெட்ட மடையர்களே, நீங்கல்லாம் டாக்டருக்கு படிச்சு என்ன பிரயோசனம், என்ஜினியருக்கு படிச்சு என்ன பிரயோசனம், என் பிள்ளை குட்டிகளை, பிஞ்சு மலர்களை கொத்து, கொத்தாய் ஆய்ஞ்சு சாறு எடுக்கிறீங்களே, நாங்க திருப்பி அடிக்க மாட்டோம்கிற ஆணவத்துலேதானே இப்படி ஆட்டம் போடுறீங்க, உண்மையிலேயே கடவுள் இருக்கானா இல்லையா ன்னு எங்களுக்கு தெரியலை, உங்களை வாழ வச்ச எங்களையே வெட்டி சாகடிக்கிறீங்களே, உங்களுக்கு மனசாட்சி உறுத்தாது, உங்களோட வாழுற விபச்சாரிய கூட வாழ வச்சு அனுபவிக்கிறீங்க, ஆனா, எங்களை வாழுறதுக்கு முன்னாடியே சீரழிக்கிறீன்களே, சின்னா பின்னமாக்குறீன்களே,
உன் குடும்பத்துலே வம்சம் விருத்தி அடையலேன்னா, கோவில், கோவிலா போறீங்க, டாக்டரை தேடி போறீங்களே, எங்களோட வம்சத்தை வேரோட அறுத்து உயிரோட கொலை செய்யுறீங்களே, இது நியாயமாடா? உங்க பொறப்புல இருந்து இறப்பு வரைக்கும் எங்க வம்சத்துக்காரங்க கூடவே இருக்காங்களே, நீங்க எவனாவது எங்க பிறப்புக்கு கூட வர்றீங்களா? இல்லேன்னா எங்களோட இழவு வீட்டுக்குத்தான் வர்றீங்களா?

எங்க கண்ணு முன்னாடியே எங்க வீட்டு பொம்பளை பிள்ளைங்களை அனுபவிக்கிறீன்களே, எப்படிடா உங்களுக்கு மனசு வருது? நாங்க கிடைச்சத வச்சு வாழுரவங்கடா, உங்களை மாதிரி பேராசை பிடிச்சு, அடுத்தவன் சொத்துக்கு அலையுற சோத்து கூட்டம் நாங்க இல்லேடா? தரையிலே தவழ்ந்துக்கிட்டு தத்தளிக்கிற எங்க இனத்து ஆட்களை கைபிடிச்சு தூக்கி விட்டுத்தாண்டா எங்களுக்கு பழக்கம், உங்களை மாதிரி ரிசார்ட்ல ரூம் போட்டு ஆளையே சோலி முடிக்கிற அரசியல் எங்களுக்குள்ளே கிடையாதுடா? நீங்க எப்படி இந்த பூமிக்கு வந்தீங்களோ, அதே மாதிரிதான் நாங்களும்  இந்த பூமிக்கு வந்தோம், உங்களுக்கு பூமி தான் கடவுள்னா, எங்களுக்கும் அவதாண்டா ஆத்தா, உங்களை மாதிரி நாற்காலிக்கு சண்டை போடுற, பதவிக்கு பல்லாக்கு தூக்குற பத்தாம்பசலிங்க நாங்க இல்லை, எங்களை நம்பி வந்தவங்களை நாங்க அரவணைச்சு பாதுகாப்புதான் கொடுத்திருக்கோம், உங்களை மாதிரி இட்லி சாப்பிட்டோம், குழம்பு குடிச்சோம் னு கதை விட்டுகிட்டு இருக்கலை, 

எப்பவுமே டாஸ்மாக்ல தண்ணியடிச்சிட்டு தண்ணியிலே இருக்க மாட்டோம், எங்களுக்கு நாகரிகம் தெரியும், எங்க வீட்டு பிஞ்சு பிள்ளைங்க தலையிலே அழகா பூ வச்சு டான்ஸ் ஆடினா உங்களுக்குத்தான் பொறுக்காதே, உடனே பூவையும் பிச்சு போட்டு அவங்க ஆட்டத்தையும் அடக்கிட்டு போவீங்க! ஆனா நாங்க எதையும் தட்டி கேட்க கூடாது, அப்படித்தானே! நாங்க திருப்பி அடிக்க மாட்டோம்கிற தைரியம்,   

எங்களை அழிச்சு பேரு வாங்கினவன் ஆயிரம் பேருன்னா, எங்களை வாழ வைக்கிறேன்னு சொல்லி கேவலப்படுத்துறவன் லட்சம் பேரு, நூறு கோடிக்கும் மேல நாங்க கூட்டம், கூட்டமா வாழ்ந்திட்டு இருக்கோம், எங்கயோ ஒரு இடத்துல ஆர்கே நகர்ல கொடுத்த மாதிரி கொடுத்திட்டு ஊருக்கே கொடுத்த மாதிரி எப்படிடா பினாத்த முடியுது உங்களால? 

ஒரே ஒரு நாள் எங்களை சுத்தி நின்னுட்டு அந்த பாழாய் போன செல்போன்ல வித, விதமா படம் பிடிச்சிட்டு அப்புறம் கண்டுக்காம போயிருவீங்க, நாங்க என்னை உங்களை நம்பி வந்த ஈழத்து அகதிங்க ன்னு நினைச்சீங்களா? நேத்திக்கு கூட ஒருத்தன் பத்திரிக்கைக்காரன் முன்னாடி அப்படி என்னை ஆகா ஓகோன்னு புகழ்ந்திட்டு வித, விதமா என்னோட தோள் மேல கைய போட்டு போட்டோ எடுத்திட்டு, போயிட்டான், நான் கூட  ச்சே நம்மையும் அவனோட ஒருத்தனா பேசுறானே, நம்மையும் மதிச்சு நம்ம கூட எல்லாம் சரி, சமமா நின்னு போட்டோ எடுக்கானே, இவன் நம்ம சாதிக்காரன்னு நினைச்சேன், ஆனா இன்னிக்கு காலையிலே என் கண் முன்னாடியே என்னோட பிள்ளையே கதற, கதற...ச்சே, என்ன மானங்கெட்ட மனுசனுங்கடா நீங்க, இதுக்குத்தான் நேத்து வளைஞ்சி, வளைஞ்சி போட்டோ எடுத்தியாடா? 

எங்க க்ரூப்ல இருக்கிறதுல, நல்லவன் யாரு, கெட்டவன் யாருன்னு நாங்க பார்த்துக்கிறோம், நீங்க முதல்ல உங்ககிட்டே இருக்கிற நல்லவனுங்களை அடையாளம் காமிங்கடா பார்ப்போம், கூட இருந்தே குழி பறிக்குறது, காலை வாரிவிடுறது, நம்பிக்கை துரோகம் செய்யுறது, இதெல்லாம் ஒரு பொழப்பாடா? ஒருத்தன் கூட யோக்கியனில்லை, எவனாவது ஒருத்தன் நாங்க யோக்கியன்னு சொல்லுங்க பாப்போம், 

சட்டைய அழுக்கா போட்டுக்கிட்டு, பங்கர பக்கிரி மாதிரி இருந்திட்டா நீ நல்லவன் கிடையாது, ஊர், உலகம் சொல்லணும், நீ நல்லவன்னு, இன்னிக்கெல்லாம் காசு கொடுத்து நல்லவன்னு சொல்ல சொல்றானுங்க, 

நினைச்ச நேரத்துலே நீங்கதானடா பொண்டாட்டியையும் மாத்துவீங்க, புருசனையும் மாத்துவீங்க, ஆனா எங்க வம்சம் என்னிக்கும் அப்படி மாறினது கிடையாது, அப்படி பார்த்தா உங்களை விட நாங்க ஆயிரம் மடங்கு உசந்த சாதிதாண்டா, 

கலாச்சாரத்தை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு, எங்களை மரபணுச் சோதனை ன்னு சொல்லி எங்களுக்குள்ளே கேவலமான உறவை உருவாக்கி பாக்குரீங்கலேயடா, த்தூ....இது கூடிக்கொடுக்கிற வேலை மாதிரிலா இருக்கு, நாங்க பாட்டுக்கு சிவனேன்னு போயிகிட்டு இருக்கோம், 

உங்களால எங்களோட அனுமதி இல்லாம ஒரு நொடி கூட வாழ முடியாது, ஆனா, நீங்க  எங்களை சாகடிக்க திட்டம் போடுறீங்க, இழவு எடுத்த நாய்களா, அரசியல்வாதி காசு பாக்குறதுக்கு உங்களை மாதிரி படிச்ச முட்டாள்களை கூப்பிட்டு திட்டம் போடுறான், அஞ்சு வருஷம் நாட்டை மேய போற நாய் பேச்சை கேட்டு ஐம்பத்தெட்டு வயசு வரைக்கும் வேலை செய்ய போற நீ அவனுக்கு ஜிங்-ஜாங் போட்டுக்கிட்டு திரியுற? 

நவீன உலகம், மின்னணு உலகம்னு உங்களை கனவு காண வைச்சு எங்களோட வம்சத்தை கொஞ்சம் கொஞ்சமா அழிக்கிறீங்க, நாங்க ஏழைங்கதான், நாங்க பீசா, பர்கர் எல்லாம் பார்த்ததே கிடையாது, பலவருஷ காலமா கிடைக்குறத சாப்பிட்டுகிட்டு வாழுறவங்கதான், 

குறைஞ்ச சம்பளத்துக்கு உங்ககிட்டே காலம்பூரா அடிமையா இருக்கோம், இதை விட உங்களுக்கு என்னடா வேணும்? நீங்க எங்களுக்கு உதவி செய்யலேன்னாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாம இருங்கலேண்டா? 

தெரியாமத்தான் கேக்குறேன், ஒரு காலத்துலே ஒத்தையடி பாதையிலே போனீங்க, என்னத்த சாதிச்சீங்க? அப்புறமா ஜல்லிக்கல்லு போட்டு போனீங்க, என்னத்த சாதீச்சீங்க, அப்புறம் தார்ரோடு போட்டு சர், புர் னு பறந்தீங்க, வெறும் அலைச்சல்தான் இருந்துச்சு, ஆனா விஷயம் எதுவும் கிடையாது, அடுத்தது, இரண்டு வழி சாலை போட்டீங்க, அங்கே ஓரமா இருந்த எங்களோட வீடுகளை இடிச்சீங்க, சரி நீங்க நல்லா இருக்கட்டும், ஊருல இருக்கிற பொண்டாட்டி பிள்ளைய பார்க்க சீக்கிரமா போயிட்டு வரட்டும், ஊரு விட்டு ஊரு போயி வியாபாரம் செஞ்சு பெருகி நாட்டை காப்பாத்தட்டும், ஊரை காப்பாத்தட்டும்னு வழி விட்டு உக்காந்தோம்,  அப்பவும் உங்களுக்கு பேராசை விடலை, 

ஏண்டா தருதலைங்களா, இம்புட்டு வேகமா போயி அப்படி என்னதாண்டா சாதிக்க போறீங்க? நாலு வழி சாலை போட்டுட்டா, அப்படி மாசம் நாப்பது லட்சம் சம்பாதிச்சிருவீன்களா? கிழிப்பீங்க? உங்களால ஒரு ம****ம் முடியாதுன்னு எனக்கும் தெரியும்?

வேணும்னா ஒன்னு செய்வீங்க, வேகமா அந்த ஊருல இருக்கிற ஒய்ன்சாப்புல போயி உன் பொண்டாட்டி தாலியை அடகு வச்சு திருப்பி அதே ரோட்ல நடுரோட்ல நாய்கூட சீண்ட முடியாத அளவுக்கு செத்து சுண்ணாம்பா கிடப்பீங்க, ஏன்னு கேக்குறதுக்கு உன் பொண்டாட்டி, பிள்ளைங்க கூட பக்கத்துலே இருக்க மாட்டாங்க, 

ரோட்டை விரிவாக்கம் அப்புறமா பண்ணுங்க, முதல்ல உங்க மனச விரிவாக்கம் பண்ணுங்கடா கபோதிகளா? டிஜிட்டல் இன்டியாவாமே, விளங்கிரும், அடப்பரதேசி பக்கி பயலுகளா? நாங்க எல்லோரும் எங்க வேலையை நிப்பாட்டி ஸ்ட்ரைக் செஞ்சோம்னு வைங்களேன், அப்புறம் நீங்க டிஜிட்டல் பொணம்தாண்டா, ஒரு வாட்டி நாங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு காட்டவா? நாசமா போயிருவீங்க? 

ஆனா, நாங்க அதை செய்ய மாட்டோம், ஏன்னா, உங்களை மாதிரி ஈனப்புத்தி எங்களுக்கு கிடையாது, எங்க வம்சம் எப்படி வேரருத்தாலும் சரி, உங்களை காப்பாத்துரதுக்காவே இறைவன் எங்களை படைச்சிருக்கான், அவன் சொன்ன வேலையை நாங்க கண்டிப்பா செய்வோம், உங்களை மாதிரி மனுசங்க ஜாதி கிடையாது, நாங்க "மர" சாதி டா! 

ஏண்டா, உன் சாதிக்கு ஒரு பிரச்சினைனா, எங்களை ரோட்ல வெட்டி போடுறியே, எங்க சாதிக்கு ஒரு பிரச்சினைனா, நாங்க ஒரு ஆயிரம் பேரு ஆயிரம் வீட்டுல சாயட்டுமா? நசுங்கி நாறி போயிருவீங்க? 

உங்களை மாதிரி ஈனப்பிறவி மனுசப்பிறவி நாங்க கிடையாது, மனுசங்களையும் காப்பாத்துற மானமுள்ள "மர" சாதீ டா! 

சமீபத்தில் நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை, தங்க நாற்கர சாலை என்று விவாதித்து கொண்டிருக்கிறோம், ஆனால் ஒரே ஒரு நிமிடம் இதை யாருமே சிந்திக்கவில்லையே, நூற்றிஎன்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்று அங்கே என்ன புடுங்க போகிறோம் என்று தெரியவில்லை, போகும் வழியில் இயற்கையை, இயற்கை அன்னையின் பிள்ளைகளை ரசித்து கொண்டே மெல்ல சென்றால் என்ன? ஏன் அத்தனை வேகம்? அவ்வளவு பெரிய சாலை? வேகமாக சென்று கடந்த இரண்டு தலைமுறைகளில் நாம் சாதித்தது என்ன? ஒன்றுமே இல்லையே, அரசியல்வாதியின் அவசர தேவைக்கு அகலமான ரோடு? அன்றாடங்காய்ச்சிக்கு அல்வாவா? 

மரங்களை வளர்ப்போம், அனைத்து உயிர்களையும் காப்போம்!  

சாலைகள் போடுவதற்கு ஐயாயிரம் மரங்களை வெட்டி சாய்க்கின்றோம்,  இதற்குள் அம்பதாயிரம் மரங்களை உருவாக்கியிருக்க வேண்டுமே? அதை யாருமே செய்யவில்லையே! இனிமேல் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு மரத்தை நட்டு வைத்து விட்டு (அன்று ஒரு நாள் மட்டும் தண்ணீர் ஊற்றி விட்டு) அப்புறம் கண்டு கொள்ளாமல் செல்வதெல்லாம் ஒரு பொழைப்பா? வெட்டுறது ஈசி, ஆனால் வளர்ப்பது கஷ்டம், ஆனால் நமக்காக தானாகவே வளரும் அந்த வம்சத்தை, தலைமுறையை நாமே அழிப்பது நியாயமா? 

கீச்! கீச்! கீச்! ஊரின் ஒதுக்குபுறத்தில் தூக்க கலக்கமானதால், வண்டியை புளியமரத்தடியில் நிறுத்தி விட்டு காற்று வாங்கி கொண்டே அசந்து தூங்கி போனேன்! கனவில் மரம் கொடுத்த பேட்டியை தான் மேலே கூறியிருக்கிறேன், என்ன ஒரு தீர்க்கம், என்ன ஒரு கோபம் அந்த "மர" சாதிக்கு? உண்மைதானே! 

(இதில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல )  

1 comment:

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...