பங்காளிங்க..

Friday, April 19, 2019

திருந்த வேண்டியது தேர்தல் ஆணையமே?

17 வது நாடாளுமன்றத் தேர்தல் அலப்பறைகள் முடிந்து முடிவுகளுக்காக ஒட்டுமொத்த இந்திய தேசமும் காத்திருக்கிறது....

நவீன இந்தியா, வல்லரசு இந்தியா, இன்னும் என்னென்னவோ பெருமைகள்? எந்தெந்த துறைகளில் நாம் சாதித்து விட்டோம்? ஒன்றுமே கிடையாது, வெறும் வசனங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே தவிர வேறெதுவும் இல்லை....

இந்தியாவை பொறுத்தவரை எந்தெந்த துறைகள் எந்த கட்சியையும் அரசாங்கத்தையும் சாராதிருக்க வேண்டும் தெரியுமா?  நீதித்துறை, காவல்துறை, ராணுவத்துறை, ஊடகத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் இவையனைத்தும் என்று சுதந்திரமாக செயல்படுகிறதோ அன்றுதான் இந்தியா வல்லரசாகும்....

தற்போதைய அவசரத்தேவை என்பது அரசியல் விதிமுறைகள் மாற்றத்திற்கு வர வேண்டும்.

மற்ற துறைகளை அப்புறம் பார்ப்போம், தற்போது நாம் சிந்திக்க வேண்டியது தேர்தல் ஆணையம் மட்டுமே....எந்த அரசியல் சாராத நபர்கள் மட்டுமே தேர்தல் அதிகாரிகளாக வர வேண்டும்...அப்போதுதான் சரியான நியாயம் அனைவருக்கும் சமதர்மமாக கிடைக்கும்...

தேர்தல் விதிமுறைகளை இப்படி கையாண்டால் எல்லோருக்கும் பயம் வரும்!

1) ஒவ்வொரு கட்சிக்கும் தனித் தனி கொள்கைகள் இருக்க வேண்டும்,

2) தேர்தல் பரப்புரையில் வழங்கும் வாக்குறுதியானது ஓராண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். குறைந்தது அவர்கள் கூறும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்க வேண்டும்.

3) ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகள் மட்டுமே. அதன் பிறகு அதே வேட்பாளர் பதவிக்கு வரவோ, போட்டியிடவோ கூடாது.

4) ஓராண்டுக்குள் கூறும் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் இரண்டாமிடத்தில் வெற்றி பெற்ற நபர் அதே பதவிக்கு பணியமர்த்தப்படுவார்கள். அப்போது சுழற்சி முறையில் புது புது அரசியல் பணியாளர்கள் வருவார்கள்.

5) பிரதமர் வேட்பாளரின் பணிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. தொடர்ச்சியாக ஒரே பிரதமர் இரண்டாவது முறை வரக்கூடாது.

6) பிரதமரையும் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும். வட இந்தியாவிற்கு ஒரு பிரதமர், தென்னிந்தியாவிற்கு ஒரு பிரதமர் என்று அமைக்கப்பட வேண்டும்.

7) இரண்டு பிரதமர்களை நிர்வாகிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும்.

8) நாடாளுமன்ற வேட்பாளர்கள் ஆண்டுக்கொருமுறை தேர்வு எழுத வேண்டும். (தேர்வு என்பது அவர்கள் ஜெயித்து வந்த தொகுதியில் இருந்து கேட்கப்படும், தேர்வில் தோற்றுப்போகும் வேட்பாளர்கள் இடைநீக்கம் செய்யப்படுவர்,  இடத்திற்கு இரண்டாம் இடத்தில் இருக்கும் வேட்பாளர் பணியமர்த்தப்படுவார் )

9) தேர்தலில் கையூட்டு கொடுக்கும் வேட்பாளரை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் அடுத்த முறை அவர்கள் தேர்தலில் நிற்கும் தகுதி இழப்பார்கள். அந்த தேர்தலில் நிற்கவே முடியாது, அதோடு 5 ஆண்டு சிறைத்தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

10) முறைகேடாக தேர்தலுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

11) வாக்கு பதிவு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு ரிசல்ட் அன்று மாலையே தெரிவிக்கப்பட வேண்டும். (தனித்தனியாக நடத்தினால் வேட்பாளர்கள் ஒவ்வொரு  மாவட்டமாக பிரச்சாரம் செய்யவோ, போக்குவரத்திற்கு இடையூறாகவோ இருக்க, நிற்க வேண்டியதில்லை.)

12) அனைவருக்கும் பிரச்சார மேடை பொதுவானதாக இருக்க வேண்டும்,. ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறேன் என்ற பெயரில் பணம் கொடுப்பது, போக்குவரத்திற்கு, பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.

13) வாரிசு அரசியல் கண்டிப்பாக இருக்க கூடாது,

14) தேர்வு மற்றும் திருவிழாக்காலங்களில் தேர்தல் நடத்த கூடாது.

15) எல்லாருமே எங்கே வேண்டுமானாலும் அனைத்து மாவட்டங்களிலும் வாக்கு பதிவு செய்யலாம் என்ற சட்டம் வந்தால், நிச்சயம் ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டாம் என்ற நியதி உருவாக வேண்டும்.

இப்படியெல்லாம் செய்தால் மட்டுமே தேர்தல் நேர்மையானதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..எப்போது தேர்தல் ஆணையம் மேற்கூறியவாறு செயல்படுகின்றதோ அப்போதே நாட்டில் நல்லாட்சி மலரும்.

எப்போது தேர்தல் ஆணையம் திருந்துமோ?
அடுத்த பதிவில் 17வது நாடாளுமன்றத் தேர்தல் நாடகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடிப்பு:


No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...