பங்காளிங்க..

Tuesday, November 1, 2011

சிஎம்டிஏ விற்கு ஆப்பு எப்போது?

சென்னையில் சிஎம்டிஏ இன்று பல வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைத்து உள்ளது.இன்னமும் தொடரும் என்றும் எச்சரித்து உள்ளது. எப்படி வந்தது அவர்களுக்கு திடீரென்று இந்த ஞானோதயம்? எந்த மரத்தடியில் அவர்களுக்கு புத்தி வந்தது?

என்ன காரணம் என்று விசாரித்த போது அனுமதி இல்லாமல் விதிமுறைகளுக்கு மீறி கட்டப்பட்டு உள்ளது என்று பத்து வருடங்களுக்கு பிறகு கண்டுபிடித்து உள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்வது சந்தோசம் என்றாலும் ஒரு மாளிகை கட்டி அது பல வருடங்கள் அனைத்து மக்களுக்கும் தெரியும் போது சி எம் டி ஏ விற்கு தெரியாமல் போனது ஆச்சரியம் அளிக்கின்றது.

ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுக்கும்போது கடையின் வாசலில் இருந்து அனைத்து பகுதிகளையும், அனைத்து தளங்களையும் படமெடுத்து காட்டுகின்றார்கள். அப்போதும் இவர்கள் கண்களுக்கு இது தெரியவில்லையா? அந்த நேரம் கூட அவர்களது கட்டிட வரைபடத்தை எடுத்து சோதனை செய்து பார்த்திருக்கலாமே, ஏன் அவ்வாறு செய்யவில்லை.

மாத சம்பளக்காரன் வீட்டிற்கு பாதுகாப்பாய் இருக்கட்டுமே என்று ஒரு கூரையோ அல்லது வேறு ஒரு சிறு தனி அறையோ கட்டும்போது மட்டும் எப்படி வந்து உடனே கவனித்து வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கின்றார்கள். அதுவே இந்த மாதிரியான வணிக நிறுவனங்கள் எழுப்பும் புது புது தளங்கள் மட்டும் இவர்கள் கண்களுக்கு பத்து வருடங்களாக தெரியாமல் போனது என்பது ஆச்சரியத்தை வரவழைக்கின்றது. அதுவும் இப்போது கூட அவர்களாக கண்டுபிடிக்கவில்லை.

சமுக நல சேவகர் திரு. டிராபிக் ராமசாமின் பொதுநல வழக்கின் தீர்ப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

நியாயப்படி எப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்க வேண்டும் எனில், எந்த வருடத்தில் இருந்து இந்த கட்டிடம் கட்டப்பட்டது, அப்போது அதிகாரிகளாக இருந்தவர்கள் யார்? யார்? அப்போது அந்த துறையின் மேலதிகாரிகள் யார்? அந்த நேரம் அந்த துறையின் அமைச்சர்களாக யார் இருந்தார்கள் என்பதை கண்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரங்கநாதன் சாலையில் இருக்கும் சரவணா ஸ்டோர்சில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உயிர் சேதம் ஏற்பட்டதாக கூட தகவல். ஆனால் அதை மூடி மறைத்து விட்டதாகவும் செய்திகள் கசிகின்றது. தீ விபத்து ஏற்பட்டால் அங்கே பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று அப்போது கூட இந்த சிஎம்டிஎ அங்கே இருக்கும் மொத்த கடைகளுக்கும் சோதனை நடத்தி இருக்கலாம். ஏன் செய்யவில்லை என்று அங்கே பணிபுரியும் ஊழியர்கள் கேள்விகள் கேட்கின்றார்கள். 

அதைவிட கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை என்பதை போல கட்டிடம் கட்டும்போதே கூட நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம். உனது கட்டிட வரைபடத்தை காட்டு, நாங்கள் பரிசீலித்த பின் வணிக வளாகம் எழுப்பலாம் என்பது போல உத்திரவு பிறப்பித்து இருக்கலாம். எதுவுமே செய்யாமல் இப்போது எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் வேடிக்கையாகவும், விந்தையாகவும் இருக்கின்றது.

சரி, இப்போது நடவடிக்கை எடுத்திருப்பது நல்ல விசயம்தானே...அதற்க்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் நினைக்கின்றார்கள். இவர்களை இப்படியே விட்டால் பல விதிமுறை மீறல் நடக்கும், அது நடக்காத வண்ணம் தடுக்கலாமே என்றும் ஆதங்கப்படுகின்றார்கள். நியாயமான சிந்தனைதான்.

ஆனால் இதனால் ஏற்படப் போகும் இழப்புகளையும் நாம் பார்க்க வேண்டி உள்ளது. என்ன இழப்பு? தப்பு செய்தவன் தணடனையை இழக்கின்றான் என்று பேசத் தோன்றுகின்றதா? அதற்க்கு முன்னால் இங்கே இருக்கும் ஒவ்வொரு கடைகளிலும் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நிலை என்னவாக போகின்றது? 

எத்தனயோ ஊழியர்களின் வாழ்வாதாரம் சுக்கு நூறாகி போனதே, ஒரு அரசாங்கத்தால் தனிப்பட்ட முறையில் கொடுக்க முடியாத வேலையை, இம்மாதிரியான தனியார் ஆலைகளும், விற்பனை நிலையங்களும் கொடுக்கின்றது. அப்படிப்பட்ட முதலாளிகளின் தவறான சிந்தனையால், விதிமுறை மீறல் நடவடிக்கைகளால் பாதிக்கப்படப் போவது என்னவோ, அப்பாவி ஊழியர்கள் மட்டுமே. இதை போன்ற மாட மாளிகைகளை ஒரு நாளில் கட்டி முடிக்க முடியாது. அப்படி கட்ட தொடங்கி இருக்கும் போதே ஆதாரங்களை விசாரித்து தடுத்து இருக்கலாமே..ஏன் செய்யவில்லை, யார் செய்யவில்லை. அது யார் குற்றம்? 
இந்த சி எம் டி எ மற்றும் மற்ற குழுக்கள் ஆரம்பத்திலேயே இந்த குற்றங்களை தடுத்து இருந்தால் இன்று இந்த அப்பாவி ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குரியதாக இருந்திருக்காதே? 

எத்தனையோ ஊழியர்களின் குடும்பங்கள் இந்த வணிக நிறுவனத்தின் ஊதியத்தை நம்பி வாழ்க்கை நடத்துகின்றது. இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு யார் யார் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்ற பட்டியலை வெளியிட்டு அவர்கள் மீது முதலில் கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதற்கு அவர்கள் எல்லோரும் எவ்வளவு கையூட்டு வாங்கினார்கள் என்ற பட்டியலும் வெளியே வர வேண்டும். அப்போதுதான் இனிமேல் வரும் அரசு அதிகாரிகள் முதலிலேயே விதிமுறை மீறல் கட்டிடங்களை கண்டு தடுப்பார்கள். 

சரி, விதிமுறை மீறிய கட்டிடங்களை சீல் வைப்பதால் வேறு யாருக்கு என்ன பிரச்சினை? அந்த பெரிய நிறுவனங்களின் வாசலில் அன்றாடம் காய்ச்சிகள் சிறு சிறு வியாபாரங்களை செய்கின்றார்கள். நேற்று நடந்த "காலதாமத" அதிரடி நடவடிக்கைகளால் அவர்களது வாழ்க்கையும், ஒரு நாள் வருமானமும் வீணாகி போனது. ஒரு 2 ஜி வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஆ.ராசா தனக்கு முன்னால் இருந்தவர்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் நானும் செய்கின்றேன் என்று சொன்ன பிறகுதான் தயாநிதியின் பெயரும் செய்திகளில் அடிபட்டது. அதுபோல தற்போது உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தானாகவே பழைய குற்றம் செய்த அதிகாரிகளும் பிடிபடுவார்கள். 
முதலில் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்..அப்போதுதான் இனிமேல் இதுபோன்ற தவறுகள் தொடராமல் தடுக்கலாம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே, என்பது இந்த துறைக்கும் பொருந்துமே? 

அப்பாவி ஊழியர்களின் சார்பாக மின்சார சிவா...

6 comments:

  1. \\\தற்போது உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தானாகவே பழைய குற்றம் செய்த அதிகாரிகளும் பிடிபடுவார்கள். \\\ சரியான கருத்து

    ReplyDelete
  2. /// koodal bala said...

    \\\தற்போது உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தானாகவே பழைய குற்றம் செய்த அதிகாரிகளும் பிடிபடுவார்கள். \\\ சரியான கருத்து ///

    பகிர்விற்கு நன்றி தோழா ...

    ReplyDelete
  3. //உனது கட்டிட வரைபடத்தை காட்டு, நாங்கள் பரிசீலித்த பின் வணிக வளாகம் எழுப்பலாம் என்பது போல உத்திரவு பிறப்பித்து இருக்கலாம்//

    இது தான் நடைமுறை.. இதை கண்டும் காணாமல் இருக்க தான் சம்திங் சம்திங்.. எனக்கு அந்த தொழிலாளிகளின் ஒரு மாத சம்பளம் என்னாயிற்று என்று தான் கவலையாக இருக்கிறது...

    ReplyDelete
  4. சரியான முடிவு..

    மக்களின் பிரச்சனைக்கு இந்த அரசு இதுபோன்ற அதிரடி முடிவுகள் எடுக்கும் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  5. ஆதங்க பதிவு...அங்காடித்தெரு பார்க்கையில் இருந்த எண்ண ஓட்டங்கள் மறுபடியும்...

    ReplyDelete
  6. சரியான கருத்து

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...