பங்காளிங்க..

Thursday, February 14, 2013

தமிழகத்தில் இல்லை பாலியல்???

இப்போதெல்லாம் பேப்பரை திறந்தாலோ, டிவி பொட்டியை ஆன் செஞ்சாலோ எங்கன பார்த்தாலும் பாலியல் சம்பந்தப் பட்ட செய்திகள்தானே தவிர வேறு எதுவும் கிடையாது...நல்ல விசயத்தைப் பாருங்கய்யா...உங்க கண்ணுல கோளாறு...உங்க மனசுல கோளாறு...அதுனாலதான் இந்த பிரச்சினை எல்லாம்...என்று சப்பைக் கட்டு கொட்டுபவர்களும் இருக்கின்றார்கள்.

பாலியல் பலாத்காரத்துக்கு என்ன தண்டனை என்று விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்? பாலியல் தொந்திரவுகள் இருக்கின்றதே அதற்க்கு என்ன செய்யப் போகின்றது இந்த சமுதாயம்? எது பாலியல் தொந்திரவுகள்? எங்கே நடக்கின்றது? பெண்களுக்கு எதிராய் நடக்கும் அனைத்து உடல் ரீதியான தொந்திரவிர்க்கும் பெயர் பாலியல் தொந்திரவுதான்....

ஒரு ஆண் , ஒரு பெண் னிடம் தான் சீண்ட முடியும் என்று சிலர் வேடிக்கையாக சொல்வார்கள். ஒரு ஆண் , பெண்ணின் அனுமதியின்றி உடலை சீண்டினால் அதுவும் பாலியல் தொந்திரவிர்க்கு சமமானதே....

எங்கே நடக்கின்றது அந்த தொந்திரவுகள்?

கூட்டமான பகுதிகளில், சாலைகளில், பேருந்துகளில், புகைவண்டி நெரிசலில், அலுவலகங்களில், பள்ளிகளில், தனியார் நடத்தும் வகுப்புகளில், குடும்பங்களில் என்று தற்போது பரவி வருகின்றது. அந்த கொடூரங்கள் தற்போது பால்வாடி பள்ளிகளில் இருக்கும் பச்சிளங்  குழந்தைகளையும் குறிவைப்பதுதான் வேதனையின் சிகரம்....

என்ன காரணம்?
பாலியல் பலாத்காரம் என்பது பாலியல் தொந்திரவுகளின் உச்சக்கட்டம்....பாலியல் பலாத்காரம் தனிமையில் நடக்கின்றது, ஆனால் பெரும்பாலான பாலியல் தொந்திரவுகள் என்பது வெட்ட வெளிச்சத்தில் பகீரங்கமாகவே நடக்கின்றது...கூட்டமான பேருந்துகளில் அனைத்து மக்களுக்கும் முன்னிலையில் சாதாரணமாய் நடக்கின்றது. அவர்களுக்கு என்ன தைரியம் என்றால் கூட்டமாய் இருக்கும்போது பொதுவாய் பெண்கள், வெளியே சொல்ல வெட்கப்பட்டு அல்லது பயந்து பொய் மௌனமாக இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இதே நிலைதான் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திலும் நடைபெறுகின்றது. பெண்களின் பலகீனம் ஒரு சில காமுகர்களின் பலமாக மாறிப் போகின்றது. எப்படி தடுப்பது இதனை? பெண்களாக தைரியமாக குரல் கொடுக்காதவரை எதுவுமே செய்யமுடியாது....சில சமயங்களின் மற்ற பெண்களின் உள்ளாடைகள் வெளியில் தெரியும்...அதை சில வக்கிர மனம் கொண்ட ஆண்கள் ரசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அருகினில் நிற்கும் ஒரு சில பெண்கள்..அதனை சுட்டிக் காட்டவோ, தடுக்கவோ எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் நமக்கென்ன என்று இருப்பார்கள். அதுவே தனது மகள், சகோதரி..அம்மா என்று வரும்போது பரிதவிப்பார்கள். இதுதான் காரணம் என்று சொல்லவில்லை...இதுவும் ஒரு காரணம்  என்று சொல்லலாம்.

கூட்டத்தில் ஒரு ஆண் , ஒரு பெண்ணை இடிக்கும் போது  அல்லது உரசும்போது அருகில் நிற்கும் பெண் எதுவும் சொல்லாமல் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஒரு சில காமுகர்களுக்கு வசதியாகிப் போகின்றது. என்ன என்று குரல் கொடுத்தால் அல்லது முறைத்தாலே போதுமானது...ஆனால் அதை செய்யக் கூட தயக்கம் காட்டுவதும் பிரச்சினைகளுக்கு தூண்டுகோலாய் அமைகின்றது.

சினிமாக்களும் இந்த மாதிரியான தவறுகளுக்கு சில சமயங்களில் உடந்தையாகி போகின்றது. உதாரணமாக நடிகர் வடிவேல் நடித்த ஒரு படத்தில் அவர் ஒரு திருமணமான பெண்ணின் இடுப்பை கிள்ளியதற்காக பஞ்சாயத்துக்கு அழைத்திருப்பார்கள்.. அதற்க்கு அவர் சொல்லும் பதில் இடுப்பு எடுப்பா இருந்ததாலே கிள்ளினேன்...இதுக்கு போய் இம்புட்டு பேரு வேலையை விட்டுட்டு உக்காந்திருக்கீகளே என்று சொல்வார்? இதைத்தானே இப்போதும் அந்த ஒரு சில காமுகர்களும் செய்கின்றார்கள்...காட்சியில் கூட இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்திருக்க வேண்டும்...

எங்கே ஆரம்பிக்குது? .

சென்னையைப் பொருத்தவரை நகரப் பேருந்துகளில் பெண்கள் படும் அவஸ்தைகள் சொல்லிமாளாது....அதிலும் இந்த மாதிரியான சில்மிசங்களில் ஈடுபடுவது பெரும்பாலும் 40 ஐத் தாண்டிய ஆண்களே....சிறு வயது இளைஞர்கள் கூட படிக்கட்டு பிரயாணங்களை மட்டுமே விரும்புகின்றார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் படிகட்டினில் தொங்கிக் கொண்டும், பெண்களைப் பார்த்து பாட்டு பாடுவதிலுமே இருக்கின்றது. அவர்கள் அந்த எல்லைகளை தாண்டுவதில்லை.

இந்த காமுகர்களின் வலைகளுக்குள் சிக்குவது பெரும்பாலும் கல்லூரி மாணவிகளும், பள்ளி மாணவிகளும் மட்டுமே....ஏனென்றால் அவர்கள்தான் எதிர்ப்புகள் தெரிவிக்க பயப்படுகின்றார்கள். ஒரு சில இடங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் சத்தம் போட்டு விடுகின்றார்கள். அதனால் அந்த காமுகர்கள் சின்னஞ்சிறு பிள்ளைகளை குறிவைக்கின்றார்கள்.

அடுத்தது வேலைக்கு செல்லும் பெண்கள்....இன்றைய சூழ்நிலையில் கணவனது சம்பளம் மட்டும் குடும்பம் நடத்த பத்தவில்லை...அதற்க்கு மனைவியும் வேலைக்கு செல்லும் நிர்பந்தம்...அவர்கள் குடும்ப சூழ்நிலைக்காக இந்த மாதிரியான காமுகர்களிடம் சிக்கி திணறி வேலைக்கு செல்கின்றார்கள். வேலை செய்யும் நிறுவனங்களில் தனது மூத்த அதிகாரிகள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் படும் பாடு இன்னமும் அதிகமாகின்றது. ஒரு சில மூத்த அதிகாரிகள் (காமுகர்கள்) அவர்களின் பதவியை தவறாய் பயன்படுத்தி பாவப்பட்ட பெண்களை அணுக முயற்சிக்கின்றார்கள். அவர்களது ஏழ்மை, குடும்ப சூழ்நிலை இவர்களுக்கு சாதகமாக போகின்றது. ஏதாவது எதிர்த்து பேசினால் என்ன செய்வார்கள்? சம்பளத்தை இழுத்தடிப்பார்கள், வேறொரு ஆணோடு தொடர்புபடுத்தி கிசுகிசுப்பார்கள், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றது செல் போன் கேமிரா, படம்பிடித்து ஆசைக்கு இனங்கசொல்லுவார்கள்....இதுதானே நடக்கின்றது...

அடுத்தது பள்ளி, கல்லூரிகளில் - அங்கே என்ன நடக்கும், ஒரு சில பெண்கள் பள்ளிகளில் ஆண்களும் வேலை செய்கின்றார்கள்...அவர்களில் ஒரு சிலர் பெண்களை தனது  அடிமையாக நடத்த வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அவர்களுக்கு தண்டனைகள் கொடுப்பது..அதையும் மீறும் பெண்களை தனிமைப்படுத்துவது அல்லது வீட்டிற்கு வர சொல்லுவது....மீறி சொன்னால் உன்னை அசிங்கபடுத்தி விடுவேன் அல்லது பெயிலாக்கி விடுவேன் என்று மிரட்டுவது இதற்கு பயந்து போய் பல குழந்தைகள் அவர்கள் மேலே தொடும்போதெல்லாம் உள்ளுக்குள் குமுறிக் கொண்டு பொறுத்துக் கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது...எங்கே அம்மா, அப்பாவிடம் சொன்னால் படிக்க அனுப்ப மாட்டார்களோ, என்ன, அவன் தொடுரப்ப பேசாம நின்னுட்டு போயிடுவோமே நு நினைக்கிறாங்க...இல்லேனா
பல்லை 
இளிச்சி  வழிஞ்சுகிட்டு நின்னா கையெழுத்து போட்டிருவான்னும் பல்லை இளிக்க ஆரம்பிக்கிறாங்க...இதுவும் ஒருவகையான பாலியல் தொந்திரவே...

இப்போ எல்லாம் பெண்கள் ரொம்ப விழிச்சிட்டாங்க...மேல கைய வைச்சா முறைக்கிறாங்க..ஒரு சிலர் போலீஸ்ல பிடிச்சிக் கொடுத்திறாங்க...அதுனால பேசாம குழந்தைகளை தொட்டுபாப்போம்...அதுங்களுக்கு ஒரு சாக்லேட் அல்லது பொம்மையை கொடுத்தா போதும்னு நினைச்சு பிஞ்சுகளை பிதுக்க ஆரம்பிச்சிருக்கு ஒரு கூட்டம்...வெளியில் தெரியாமல் எத்தனை, எத்தனையோ குழந்தைகள் அந்த துன்பங்களை அனுபவிக்கின்றன...என்ன கொடுமை எனில் நாம் பாலியல் தொந்திரவிர்க்கு ஆளாகின்றோம் என்று கூடத் தெரியாத பிஞ்சுகள் பல பாடாய் படுகின்றன....இனி வருங்காலம் எப்படி இருக்கப் போகின்றதோ என்ற அச்சம் எனக்குள் என்றோ உருவாகி விட்டது....

கூட்டத்திற்குள் வரும்போது உங்கள் ஆடைகளை பாதுகாப்பாய் அணிவித்து கொள்ளுங்கள்...உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் ஆடைகள் அணிய உரிமைகள், சுதந்திரங்கள் இருக்கின்றது...ஆனால் ஒரு சில ஆண்களுக்கு இன்னமும் கட்டுப்பாடுகள், கலாச்சாரங்கள் அவர்கள் அறிவிற்கு எட்டவில்லை....அதுவரை நீங்களும் பாதுகாப்பாய் ஆடைகள் அணியுங்கள்.....


மூடி இழுத்து போர்த்தி இருந்தால் கூட அவிழ்த்து பார்க்கும் வக்கிர கும்பலுக்கு நடுவினில் சில பெண்கள் அரைகுறை ஆடையோடு வலம் வந்தால் அந்த காமுகர்களுக்கு மிகவும் வசதியாகி போகின்றது..

அது போல பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆண்களின் தொடுதலைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும்.அந்த கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்...எந்தெந்த இடங்கள் ஆபத்தானவை....எந்தெந்த இடங்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டியவை என்பதை அவர்களுக்கு பெற்றவள் எடுத்து சொல்ல வேண்டிய கட்டயத்தினில் இருக்கின்றோம். 



தமிழகத்தில்
மட்டும் இல்லை பாலியல்
தொந்திரவுகள் ???
இந்தியா முழுவதுமே
இன்று
பரவிக் கிடைக்கின்றது...

3 comments:

  1. உங்கள் பதிவு எனக்கு உடன்பாடு இல்லை...பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆண்கள் மட்டும் காரணமல்ல பெண்களும் காரணம்....இது தெரிந்தும் பலர் வேண்டுமென்றே மறைக்கிறீர்கள்.... சிரிப்புசிங்காரம்

    ReplyDelete
    Replies
    1. வருக, சிரிப்புசிங்காரம் அவர்களே,

      நான் இந்த பதிவினில், ஒரு சில வக்கிர மனம் கொண்ட ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மட்டுமே எடுத்து சொல்ல வந்தேன்...அதனால் பெண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி இந்த பதிவினில் சொல்ல வர வில்லை. எனினும் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி....

      Delete
  2. நல்ல கருத்துகளை கூறியுள்ளீர்கள் .மக்கள் எப்போது திருந்துவார்கள் . சிலரது எதிர்ப்பின்மையே அந்த மாதிரி ஆட்களுக்கு சுலபமாகின்றது .

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...