பங்காளிங்க..

Thursday, November 8, 2012

மதங்களை வெறுக்கும் 'சாமி'!!! உண்மைச் செய்தி

மனிதனை மட்டுமே படைத்த கடவுள்...தற்போது உள்ள மதங்களால் குழம்பி போனாலும் ஆச்சரியமில்லை.  

உங்களை இந்த உலகினில் படைத்து செழிப்பாய், சந்தோசமாய் வாழ வைக்கும் கடவுளுக்கு நாம் என்ன திருப்பி செய்யலாம்? நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?

முடி திருத்தும் கடையினில் நம் உடலில் அலங்கரித்த சிகையினை நம் கண் முன்னே அறுத்து எறிந்த பிறகு அதனை காலால் எட்டி உதைத்து 'உவ்வே' என்று முகம் சுழிக்கின்றோம். ஆனால் கடவுளுக்கு நேர்த்திக் கடன் என்ற பெயரில் நாம் ஒதுக்கும் அந்த முடிகளைத் தானே தானம் வழங்குகின்றோம். அதுவே எனக்கு மிகச் சிறந்த பார்வையை கொடுத்தாய்..அந்த பார்வையை உனக்கு வழங்குகின்றேன் என்று கடவுளுக்கு ஒரு கண்ணை தாரை வார்க்கலாமே? ஒரு சிலர் கடவுளுக்கு முடி இறக்குகின்றார்கள்? ஒரு சிலர் கடவுளுக்காக முடி வளர்க்கின்றார்கள்!!!


இந்த உலகமே அவனுடையது என்று சொன்னால் அதில் வளரும் மலர்கள் மட்டும் எப்படி தனிமனிதனுக்கு சொந்தமாகி விடும்.அதை விலை கொடுத்து வாங்கி அவனுக்கு சூடி அழகு பார்க்கின்றோம்..வண்ண வண்ண மலர்களையா? அவன் நம்மிடம் கேட்டான்?

மனிதனிடம்தான் ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு என்றால் இறைவனிடமும் கூட அது இருப்பது ஆச்சரியமாய் இருக்கின்றது. ஸ்ரீநிவாசன் பணக்காரன், நம்ம ஊரு கருப்பசாமி ஏழையா? ஹஜ், மெக்கா செல்வதற்கு எல்லோராலும் முடிகின்றதா? ஏன் இந்த பாகுபாடு..இறைவா உன்னை காணாமலே நான் கண்மூடி விடுவேனோ என்று ஏழை இசுலாமிய பெரியவர் இன்றும் எங்கள் வீட்டு முன் உள்ள சாலையில் அழுது புலம்பிக்கொண்டிருக்கின்றார்.

ஏன் இந்த பாகுபாடு? கடவுள் தன்னை திருப்பதியில் வந்து தான் பார்க்க வேண்டும் என்று சொன்னானா?  தங்கத் தட்டினில் பால் பாயாசம் கொடு என்று சொன்னானா? வெள்ளி மாலை போடு என்று கேட்டானா? வாடிகனில் இருப்பது பணக்காரன்...வாடிப்பட்டியில் இருந்தால் அவன் ஏழைக் கடவுளா? வெளிநாடு தேடி வந்து என்னை பார்த்து விட்டு செல் என்று உத்திரவிட்டானா? இல்லையே!!!

இருபத்திநான்கு மணிநேரமும் தன்னையே சிந்தித்து வழிபடு என்று உரக்க கேட்டானா? அவன் சொல்வதெல்லாம் ஒன்றே  ஒன்றுதான்!!!

நான் எப்போதுமே பணக்காரனாய் இருப்பதில்லை. நான் ஏழையாய், மாற்றுத்திறனாளியாய் , வயோதிக பெரியவராய், அநாதை குழந்தைகளாய், பிச்சைக்காரனாய், உங்களில் ஒருவராய் எப்போதும், வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன்...எங்கே துன்பம் இருக்கின்றதோ?.எங்கே வறுமை இருக்கின்றதோ? அங்கே நானிருப்பேன்!!!

நீங்கள் அனைவருமே இந்த துன்பங்களை எல்லாம் கடந்து என்னை வந்து பார்க்க வருகின்றீர்கள்...நான் வாசலில், உங்கள் வீட்டு கதவருகில், உங்கள் எதிரில் அன்றாடம் நடந்து வருகின்றேன்...என்னை யாருமே கவனிப்பதில்லை...கடவுள் என்றால் அவன் பணக்காரன்...அவனிடம் எல்லாம் இருக்கு...அங்கே சென்றுதான் அவனை பார்க்க வேண்டும் என்று என்னை கட்டாயப் படுத்துகின்றீர்கள்...யாருமே இல்லாத கோயிலில் யாருக்காக தினமும் பூசை செய்கின்றீர்கள்? என்று கேட்கின்றார் உண்மைதானே? 

அப்படி எனில் கடவுளுக்கு என்ன கொடுத்தால் அவர் உங்களை ஆசிர்வதிப்பார்?

நீங்கள் பூக்கள் கொடுக்கின்றீர்களா? அந்தப் பணத்தினில் ஒரு ஆதரவற்ற குழந்தைக்கு பிஸ்கட் கொடுங்கள்..
 
நீங்கள் உண்டியலில் காசு போடுகின்றீர்களா? அந்த பணத்தினில் ஒரு முதியவருக்கு ஆடைகள் கொடுங்கள்...
 
நீங்கள் கடவுளுக்கு பிரசாதம் செய்கின்றீர்களா? அந்த பணத்தினில் நூறு ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவு ஊட்டி விடுங்கள்..

 நீங்கள் கடவுளுக்கு ஆடை அணிவிக்கிண்றீர்களா? அந்த பணத்தினில் ஏழை மாணவன் அல்லது மாணவிக்கு கல்வித் தொகை கொடுங்கள்..
நீங்கள் கடவுளுக்கு தங்கம், வெள்ளி போடுகின்றீர்களா? அந்த பணத்தினில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு  உதவி குடும்பத்திற்கு வாழ்க்கை கொடுங்கள்...

நீங்கள் கடவுளுக்கு அளிக்கும் நகை, பணம், மலர்கள், மாலைகள் மற்றும் இவை கொடுக்க ஒதுக்கும் நேரத்தை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுங்கள்..கடவுளுக்கு தானாக சென்று சேரும், இவ்வனைத்தும்...

11 comments:

 1. நல்ல கருத்து நண்பரே.
  திருப்பதி, வேளாங்கண்ணி போன்ற இடங்களில் கொட்டும் பணத்தை, உழைக்கத் தயாராக இருக்கும் ஏழைகளுக்கு சிறுதொழில் ஆரம்பிக்க உதவினால், ஒரு சமூகத்திற்கே வாழ்வு கொடுத்த புண்ணியம் நம்மை வந்து சேரும்.

  ReplyDelete
  Replies
  1. எந்த ஒரு மதமாக இருந்தாலும் சரி, விளம்பரத்திற்காக செய்வது, புகைப்படத்திற்காக செய்வது, பத்திரிக்கைகளில் பெயர் வருவதற்காக கவர்ச்சி விளம்பரத்திற்காக தற்போது தான தர்மங்கள் செய்யப் படுகின்றது...

   Delete
 2. //ங்கள் கடவுளுக்கு அளிக்கும் நகை, பணம், மலர்கள், மாலைகள் மற்றும் இவை கொடுக்க ஒதுக்கும் நேரத்தை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுங்கள்..கடவுளுக்கு தானாக சென்று சேரும்//

  34. ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

  35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

  36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.

  37. அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?

  38. எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?

  39. எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.

  40. அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
  (மத்தேயு 25)

  ReplyDelete
  Replies
  1. கீதையிலும், திருக்குர்ரானிலும் இதைப் போன்ற கருத்துக்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன! அதை பின்தொடரத் தான் எந்த மக்களும் தயாராக இல்லை என்பதே எனது கருத்து...வெளியில் பிச்சைக்காரனுக்கு உதவி செய்ய மறுக்கும் நாம் ஆண்டவனை தரிசிக்க விஐபி தரிசனத்திற்கு 1000 வரை செலவு செய்யத் தயாராக இருக்கின்றோம் இது ஒரு மதத்தில் நடப்பவை அல்ல, எல்லா மதங்களிலும் ஆங்காங்கே இது நடக்கத் தான் செய்கின்றது. மக்களின் மனம் இன்று விளம்பரம் மற்றும் போலி கௌரவத்தில் முடங்கி போய் விட்டது என்பதே நிதர்சனமான உண்மை. தன்னை மிகப் பெரிய பணக்காரன்..மிகப் பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர் என்று காட்டிக் கொள்ள கோயில் (இந்து, முஸ்லிம் கிறித்துவ) நன்கொடைகள் உதவி செய்கின்றன.

   Delete
 3. ரட்சிக்கும் கர்த்தர் தனக்கு படைக்க கட்டளையிட்ட உணவு லிஸ்ட்.. (MENU) இதோ!!!. படித்து சிந்தியுங்கள்.

  இங்கே அழுத்தி படிக்கவும்க‌ர்த்தருக்கு "இவ்ளோ" படைக்க‌னுமாம். பைபிள்.

  பிடிப‌ட்ட‌ கன்னிப்பெண்க‌ளிலும் அப‌கரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் கால்ந‌டைக‌ளிலும் கர்த்த‌ர் ஆணைப்படி க‌ர்த்தருக்குள்ள பங்கு.- பைபிள்

  இங்கே அழுத்தி படிக்கவும்
  32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா?


  .

  ReplyDelete
  Replies
  1. கீதையிலும், திருக்குர்ரானிலும் இதைப் போன்ற கருத்துக்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன! அதை பின்தொடரத் தான் எந்த மக்களும் தயாராக இல்லை என்பதே எனது கருத்து.

   Delete
 4. How dare a Hindu talk about Islam?
  Why I dont see anything about Christianity in this?

  Be prepared to answer such questions. :)

  ReplyDelete
  Replies
  1. நண்பரே,

   கிறித்துவத்தைப் பற்றி பேச வில்லை என்பது உங்கள் கோபமா? அல்லது ஒரு இந்து இசுலாமியத்தைப் பற்றி பேசுகின்றானே என்ற கோபமா? அல்லது என்ன வென்று எனக்கு புரியவில்லை. நான் இந்து, இசுலாமிய, மற்றும் கிறித்துவ நண்பர்களோடு இணைந்து பேசித்தான் இதனை வெளியிட்டு இருக்கின்றேன்..மேலும் கிறித்துவத்தைப் பற்றி குறிப்பிடவில்லை என்று கூறும் நீங்கள் அதனை முழுவதும், முழுதாக படிக்க வில்லை என்று தெரிகின்றது..நான் சொல்ல நினைப்பது ஏழைகளுக்கு உதவுங்கள் என்பதுதான்...அது நீங்கள் இந்துவாக இருங்கள், இசுலாமியராக இருங்கள்..அல்லது கிறித்துவராக இருங்கள்..ஆக மொத்தத்தில் கடவுள் என்பது பொதுப் பெயர் என்பதே எனது தாழ்மையான கருத்து..

   Delete
  2. What exactly do you mean by this long reply?
   Why should I be angry?
   I am an atheist and I dont need explanations regarding God.

   Re-read my comment once again carefully, along with the smiley at the end.

   P.S. 1 (if you have still not understood) : Your blog post was appreciated and not criticized. I was only saying that you may be asked questions similar to the one I mentioned.

   P.S 2 : Joke solratha vida, sonna joke puriathavar kitta explain panra kodumai irukke, appappappa. :) [Note the smiley again]

   Delete
 5. அவன் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!!!
  உங்களுக்கு மட்டும் எப்படி இதை சொன்னான்? எல்லாமே புளுகு தான், கற்பனை தான்.
  இயற்கை வலுத்தவன் வாழ்வான் என்ற தத்துவத்தை காட்டுகிறது.
  நல்லது கேட்டது சரி தவறு என்பதும் நம் மன கற்பனையே. இவை அவரவர் சுய லாபத்தை பொருத்து அமைகிறது.
  ஒருவர் இறக்கலாம், அதனால் பலர் துன்புறலாம், சிலர் இன்புறலாம்.
  மாமிசம் தின்பதை பலர் ஏற்பார்கள், அதற்கு கடவுள் அனுமதி உண்டு என்று நேரில் கேட்டது போல் விளக்கம் வேறு.. சாக அந்த உயிர் ஏற்குமா?
  சாதி, மத வேறுபாடு மறந்து, மறுத்து மனித நேயத்துடன் வாழ்ந்தால் போதும்.

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே..

   புரிதலுக்கு நன்றி..மனித நேயத்தை வளர்க்க கோயிலை பயன்படுத்துங்கள் என்பதே எனது எண்ணம்..

   Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...