பங்காளிங்க..

Wednesday, November 28, 2012

மருத்துவர்களின் (அ )லட்சியமா ?

ஆயிரம் பேரைக் கொன்னாத்தான் அரை வைத்தியன் என்ற பழமொழியை ஒரு சிலர் எப்படி  நினைத்துக் கொண்டார்களோ என்னவோ? அது உண்மையில் அந்த காலத்தில் இருந்த மூலிகை மருத்துவத்தின் பெருமையை சொல்வதற்காக சொல்லப் பட்டதுதான் இந்த பழமொழி. அதாவது ஆயிரம் வேர்களை கொன்றாலும் அவர் அரை வைத்தியர் என்ற பெருமைக்காக சொல்லப் படுகின்றது. ஆனால் அதுவே இன்று திரிந்து வேர்களை என்பது பேர்களை என்று மாறிப் போனது.

இப்போது எங்கு பார்த்தாலும் 24 மணி நேர அவசர மருத்துவமனைகள் வந்து விட்டது. கடவுளுக்கு அடுத்தபடியாக நினைக்கப்படும் அந்த பெருமை மருத்துவர்களையே சாரும். எத்தனையோ பிரிவுகள், எத்தனையோ திறமைசாலிகள் இங்கே நம்மோடு பணி  செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் தற்போதெல்லாம் அவர்களுக்குள் போட்டிகள் வந்து விட்டது. நோயாளிகளை கவருவதற்காக அவர்கள் பல யுத்திகளை கையாளுகின்றார்கள். அழகான வேலைப்பாடு கொண்ட மருத்துவமனைகள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டிகள் , பஞ்சு மெத்தைப் போன்ற இருக்கைகள் என்று வைத்து நோயாளிகளை தங்கள் பக்கம் இழுக்கின்றார்கள். ஆனால் எது எப்படியாக இருந்தாலும் மருத்துவர் வரவில்லை என்றால் இத்தனை வேலைப்பாடுகள் செய்து என்ன பிரயோசனம்?

சென்னையில் பாதி மருத்துவமனைகளில் இப்படித்தான் நடக்கின்றது! அய்யோ வயிறு வலிக்கின்றது?அய்யோ நெஞ்சு எரிகின்றது என்று சொல்லிக் கொண்டு வரும் நோயாளிகள் மருத்துவரின் வருகைக்காக பல மணி நேரம் ஒதுக்கி அமர வேண்டி இருக்கின்றது. அந்த காத்திருக்கும் நேரத்தில் பல நோயாளிகளுக்கு அவர்களது எண்ண  ஓட்டங்கள் மேலும் வேதனையை தரும்..பலருக்கு ரத்த கொதிப்பு அதிகரித்து விடும்..சிலருக்கு காய்ச்சல் அதிகமாகி விடும்..மாலை 6 முதல் என்று போடப்பட்டிருக்கும், ஆனால் மருத்துவர் 8 மணிக்குத்தான் வருவார். இது எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம் அந்த நேரத்தில்தான் மருத்துவப் பிரதிநிதிகளும் மருத்துவரை காண்பதற்கு நேரம் ஒதுக்கி இருப்பார்கள். நிச்சயம் இது பல நோயாளிகளை முகம் சுழிக்க வைக்கும்.

வீட்டினில் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லை என்று வந்து இருப்பார்கள்? குழந்தையின் அப்பா வேலைகளை விட்டு விட்டு அல்லது அனுமதி வாங்கி கொண்டு வருவார்..இப்படி காத்துக் கொண்டிருக்கும் நேரம் அவர்களுக்கு அன்றைய நாள் வருமானமும் பறி  போகும் நிலை இருக்கின்றது. ஏன் மருத்துவர் 5 மணிக்கே வரக் கூடாதா? நோயாளிகள் காத்திராமல் உடனுக்குடன் பார்த்து சென்றால் இருவருக்குமே பலனுண்டு இல்லையா?

இதைப் பற்றி சமீபத்தில் ஒரு சில மருத்துவர்களிடம் ஆய்வு செய்த  போது, சில அதிர்ச்சி தகவல்கள்...

எங்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றது, குடும்பம் இருக்கின்றது? அவர்களோடு நான் சில மணி நேரம் இருக்க வேண்டாமா? என்று கேட்டார்? நியாயம்தான்...ஆனால் இந்த துறைக்கு வரும்போது உங்களை நம்பி பல குடும்பங்கள் வாசலில் காத்துக் கொண்டு இருக்கின்றதே?

இன்னொருவர் இதை பற்றி சொல்லும் போது, ஒரு நல்ல மருத்துவரை பார்க்க வரும்போது பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்...அதற்க்கு எதுவும் செய்ய முடியாது என்று சொன்னார்.

மற்றொருவர் இதைப் பற்றி சொல்லும் போது  இதெல்லாம் வியாபார யுத்தி...என் மருத்துவமனை வாசலில் இத்தனை பேர் நிற்கும் போது  வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அடேங்கப்பா இந்த மருத்துவர் ரொம்ப கைராசிக்காரர், அதுதான் இவ்வளவு கூட்டம் என்று பேசப் படுவேன் என்று சொன்னார்.

மற்றொரு மருத்துவர் குறிப்பிடும்போது நான் அரசு மருத்துவர்...அரசாங்க மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சையை முடித்து விட்டு வருகின்ற நேரத்தில் தாமதமாகின்றது...எல்லா நேரத்திலும் இப்படி  நடப்பதில்லை..எப்போதாவது இப்படி நடக்கும், அதற்க்கு நான் என்ன செய்ய முடியும் என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

இது எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று..டோக்கன் சிஸ்டம்...ஒரு துண்டு சீட்டினில் எண்  எழுதிக் கொடுப்பார்கள். அந்த எண்ணை அழைக்கும் நபர் உள்ளே செல்ல வேண்டும். சற்று வசதியானவர்கள் அந்த டோக்கன் நபரை சற்றுக் கவனித்து முதல் ஆளாக மருத்துவரை சந்தித்து விட்டு செல்வார்கள். இதற்கு முழுக்க முழுக்க காரணம் அந்த வாசலில் நிற்கும் வழிகாட்டிதான். ஆனால் அந்த மருத்துவரின் பெயர்தான் கேட்டுப் போகுமே ஒழிய, அந்த உதவியாளரின் பெயர் அல்ல.

ஆகையால் அந்த குறிப்பிட்ட ஒரு சில மருத்துவர்கள் தயவு செய்து உங்களை நம்பி வரும் நோயாளிகளை காப்பாற்றுங்கள்..பணம் சம்பாதிப்பது முக்கியம்தான்...அதைவிட ஆயிரம் இதயங்களை சம்பாதியுங்கள்...ஒவ்வொரு நோயாளியும் குணமடைந்து உங்களை வாழ்த்தும்போது ஆயிரமாயிரம் ஆண்டு காலம் உங்கள் சேவை நிலைத்து நிற்கும் என்பதில் துளியும் சந்தேகமுமில்லையே..

4 comments:

 1. இவர்களின் அலச்சியத்திற்கு அளவே இல்லாமல் போகிறது..
  வெளியில் தெரிவது ஒரு சிலதான் தெரியாமல் நிறைய நடந்துக்கொண்டிருக்கிறது...

  என் கண்டனங்கள்...

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி..யாரோ ஒரு சிலர் செய்யும் தவற்றிற்கு மற்றவர்களும் பாதிக்கப் படுகின்றார்கள்.

   Delete
 2. மருத்துவப்படிப்புக்கு செய்யப்படும் செலவுகளே படித்தபின் அவர்களை இவ்வாறு செய்ய வைக்கிறது. என்னத்த சொல்ல

  ReplyDelete
  Replies
  1. இப்படி எல்லா துறையினரும் நான் படிப்பிற்கு இவ்வளவு செலவு செய்துவிட்டேன்.அதனால் இப்படி பழி வாங்குகின்றேன் என்று சொன்னால் பொது மக்களின் கதி அதோகதிதானே!!!

   Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...