பங்காளிங்க..

Friday, August 26, 2011

போலீஸ் யூனியன் தலைவரு யாரு?


எல்லா துறைக்கும் சங்கம் வந்து விட்டது. இந்த காவல்துறைக்கு மட்டும் இன்னமும் சங்கம் வர வில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். காவல்துறை சங்கம் ஏற்கனவே அறிமுகமாகி விட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் முடிந்து விட்டது. தற்போது அதிமுக சங்கத்தை சார்ந்த காவல்துறையினர் பணிபுரிகின்றார்கள். கடந்த மே 14 வரை திமுக சங்கத்தை சார்ந்த காவல்துறையினர் பணிபுரிந்தார்கள். தற்போது காவல்துறையில் தினமும் நில அபகரிப்பு புகார்கள் ஆயிரக்கணக்கில் குவிகின்றன. இது கடந்த ஆண்டுகளில் ஏன் ஒரு செய்தி கூட வரவில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கின்றது. அலசி பார்த்தோம். தனது சங்கத்தை சார்ந்த எந்த மக்களின் மீதும் திமுக சங்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை. ஆனால் தற்போது உள்ள அதிமுக சங்கத்தை சார்ந்த காவல்துறை, கடந்த ஆண்டு புகார்கள் கொடுத்த வழக்குகளை எல்லாம் துருவி துருவி விசாரித்து வருகின்றது.

அதனால்தான் ஒவ்வொரு நாளும் இத்தனை வழக்குகள் பதிவாகின்றன என்பதே உண்மை. எல்லோருக்கும் சங்கம் இருக்கின்றது..எங்களுக்கு ஏன் இருக்க கூடாது என்று கேட்டு பார்த்தார்கள். யாரும் அனுமதி கொடுக்கவில்லை என்றதும் அவர்களாகவே முடிவெடுத்து சங்கத்தை தொடங்கி விட்டார்கள். விரைவில் தேமுதிக, மதிமுக, விசிக, பாமக, காங்கிரஸ், நாம் தமிழர், இந்திய ஜனநாயக கட்சி என்று பல சங்கங்கள் காவல்துறையிலும் உருவாகலாம். பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

திமுகவினர் மீது தொடர்ச்சியாய் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. இதில் ஏதாவது ஒரு நில அபகரிப்பு புகாரினை கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்த்திருக்கின்றீர்களா? ஒன்று கூட கிடையாது. அப்படி எனில் அந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி எப்படி மிரட்டப்பட்டு நடந்திருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். நில தரகர்களை விட ஒரு படி மேலாக சென்று காவல்துறை அதிகாரிகளே கட்டபஞ்சாயத்து செய்து அந்த புகார்களை பதிவு செய்யவில்லை என்பது உறுதியாகின்றது. இன்று ஒவ்வொரு திமுக மந்திரியாக கைது செய்யப்படுகின்றார்கள். ஒவ்வொரு திமுக பெரும்புள்ளிகளும் கைது செய்யப்படுகின்றார்கள். காரணம் என்ன?

கடந்த முறை புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினரும் தண்டிக்கப் பட வேண்டும். அப்போதுதான் தர்மம் தழைக்கும், நீதி காக்கப்படும். யார் புகார் அளித்தாலும் விசாரிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும். நீதி விசாரணைக்கு பிறகு உண்மையான குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு சில போலியான காவல்துறை அதிகாரிகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுகின்றது. காவல்துறை என்பது எந்த வித சாதி, மத, கட்சி கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நடக்க வேண்டும். ஆனால் இன்று அப்படி இல்லை, ஏதாவது ஒரு கட்சி, பெரும்புள்ளி அல்லது சாதியின் அடிப்படையில்தான் அது அமைகின்றது.

கடந்த கால திமுக ஆட்சியில் கைதிகளுக்கு கொடுத்த முன்னுரிமை குற்றவாளிகளை கைது செய்யும் காவல்துறைக்கு கொடுக்கப்படவில்லை. அதனால்தான் கடந்த கால ஆட்சியில் தினமும் வழிப்பறி, கொள்ளை, கொலை, கற்பழிப்பு புகார்கள் பெருகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையின் ஒருதலை பட்ச நடவடிக்கைக்கு காரணம் என்ன?

ஏதாவது ஒரு காவல்துறை அதிகாரி நேர்மையாக நடக்க முயற்சித்தால் அவர்கள் படும் அவஸ்தைகள் என்ன, அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது அவர்களது குடும்ப உறுப்பினர்களே. அந்த காவல்துறை அதிகாரியின் பிள்ளைகளின் கல்வி கேள்வி குறியாகும். அடிக்கடி பள்ளியும், இடமும் மாற்ற வேண்டி இருக்கும், அல்லது பிள்ளைகள் தொலை தூரம் சென்று படிக்க வேண்டியிருக்கும். இந்த அவல நிலைக்கு அஞ்சியே பல நேர்மையான அதிகாரிகளும் இடத்திற்கு தக்கவாறு தங்களை மாற்றி கொள்கின்றார்கள். அல்லது தொடர் குற்றங்களை கண்டு கொள்ளாமல் செல்கின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும்.


டூட்டி டைம் ஓவர்:

இன்னும் ஒரு சில இடங்களில் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ஏதாவது பிரச்சினைகள் நடக்கும் போதோ அல்லது வன்முறை, சண்டைகள் நடக்கும் போதோ அதை கண்டுகொள்வதில்லை, காரணம் கேட்டால் எனக்கு டுட்டி டைம் முடிஞ்சிடுச்சி, வேற போலிஸ் காரங்க வருவாங்க என்று மிக சாதாரணமாய் சொல்லி செல்வார்கள். காவல் உடுப்பு அணிந்தாலும், அணியா விட்டாலும் அவர்கள் காவல்துறை அதிகாரிகள் தான் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றார்கள். அதனால் சில குற்றவாளிகள் கூட தைரியமாய் செயல்படுகின்றார்கள், சமீபத்தில் பேருந்தினில் ஒருவன் பிக்பாக்கெட் அடிக்க பொது மக்கள் அவனை பிடித்து விட்டார்கள். பேருந்தில் இருந்த காவல்துறை அதிகாரியிடம் அவனை ஒப்படைத்த போது அவர் மிக சாதாரணமாய் நான் இன்னிக்கு லீவு, அதனால போலிஸ் ஸ்டேசன்ல ஹான்ட் ஓவர் பண்ணிடுங்க என்று சொன்னார். அவர் நினைத்திருந்தால் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து அவனை கைது சொல்ல உத்திரவிட்டிருக்கலாம். இவர் இப்படி சொன்னதும், பொது மக்களே அவனை அடித்து நைய புடைத்து அனுப்பினார்கள்.


செக்போஸ்ட்

சில முக்கிய அரசு விழாக்களோ அல்லது பொது இடங்களில் சோதனை சாவடி மையங்கள் வைத்திருப்பார்கள். அதை கூட அவர்கள் சரியாக பார்ப்பது கிடையாது. பைகளில் பணம் அல்லது நகைகள் அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்திருக்கின்றார்களா என்று சோதனை போடும்போது முழுமையாக சோதிப்பது கிடையாது. கடமைக்கு பார்ப்பார்கள். எதுவும் இல்லை என்று அனுப்பி விடுவார்கள். ஆனால் அவர்கள் பைகளில் தீபாவளி வெடிகள் குவித்து வைத்திருப்பார்கள்.

லஞ்ச லாவண்யங்கள்


ஒரு சில காவல்துறை அதிகாரிகள் சிறு வியாபாரிகள், தேநீர் விடுதிக்களில் சென்று சாப்பிட்டு விட்டு அல்லது பொருள்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்கின்றார்கள். ஏன் இந்த அல்பத்தனம்? அவர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்க வில்லையா? ஒரு முழம் பூ, ஒரு காபி, டீ, சமோசா என்ன விலை இருக்கும்? பெரிய கடைகளில் அந்த தொகை ஒன்றும் பெரிது கிடையாது. ஆனால் அன்றாடம் 100 ரூவாய் சம்பாதிக்கும் வியாபாரிக்கு அந்த ஒரு காபி, டீ மிக விலை உயர்ந்த பொருள்தானே. இதற்கு காரணம் என்ன? நடைபாதையில் கடை போடகூடாது என்று சட்டம் இருந்தாலோ அல்லது நோ பார்கிங்கில் வண்டி நிறுத்த கூடாது என்று சட்டம் இருந்தாலோ அதை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். அது தவறும் பட்சத்தில் காவல்துறை நேர்மையாய் நடந்து கொள்ளல் வேண்டும். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்வதில்லை, அதற்கு பதிலாக அவனிடம் கடை போடுவதற்கு அனுமதி அளித்தும், வண்டி நிறுத்த அனுமதி அளித்தும் பின்னர் அவனிடம் வசூல் செய்வதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆக ஐம்பது ரூவாய் கொடுத்தால் வண்டி நிறுத்தலாம், நடைபாதையில் கடை போடலாம். அந்த வியாபாரியும் தினமும் 50 ரூவாய் கொடுத்து விட்டு தைரியமாக கடையினை விரிவு படுத்துகின்றான்...பொது மக்களுக்கு பல இடைஞ்சலை உருவாக்குகின்றான். இது எல்லாம் விரைவில் மாற வேண்டும். ஆனால் எப்போது?

சினிமாவில் எப்போதுமே காவல்துறை அதிகாரிகள் கொச்சை படுத்தப்படுவார்கள். ஒரு சில நேரத்தில் அது உண்மைதான் என்பது பொது மக்களுக்கும் தெரிகின்றது. வடிவேலு ஒரு படத்தில் சிரிப்பு போலீசாக வருவார். அதில் இரண்டு ரூபாய்க்கும், ஐம்பது காசுக்கும் பிச்சை எடுப்பது போன்று படமாக்கி இருக்கின்றார்கள். அது பல இடங்களில் சாதாரணமாய் நடக்க கூடிய ஒன்றே. சென்னை கோயம்பேட்டில் ஒரு வயதான பாட்டி நெல்லிக்காய், இலந்தன்பழம் விற்று கொண்டிருந்தார். அவரால் மிஞ்சி போனால் அன்று முழுவதும் விற்றால் கூட 50 ரூபாய்தான் சம்பாதிக்க முடியும். அந்த பாட்டியிடம் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சென்று ஒரு பாக்கெட் இலந்தன்பழம் மற்றும் இரண்டு மாங்காய்களை எடுத்து சென்றனர். அங்கே கூடி இருந்த அத்தனை மக்களும் முகம் சுளித்தனர். அதை பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அந்த பாட்டி அவர்களிடம் ஐஞ்சு ரூபாய் கொடு என்று கெஞ்சி கொண்டு இருந்தது பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. அப்போது இரண்டு கல்லூரி மாணவிகள் அந்த பாட்டிக்கு 10 ரூபாய் கொடுத்து அனுப்பினார்கள். எத்தனை கேவலமான விஷயம்? இப்படியும் ஒரு பிழைப்பா? காவல்துறையையே களங்கப்படுத்தி விட்டார்கள்.
இது எல்லாம் விரைவில் மாற வேண்டும். ஆனால் எப்போது? சில இடங்களில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆபத்துக்கள், பிரச்சினைகள் வரும்போது சக அதிகாரிகள் கூட கண்டுகொள்வதில்லை. ஏன் இந்த அவல நிலை???

வால்டர் வெற்றிவேல், சேதுபதி ஐபிஎஸ், வைஜெயந்தி ஐபிஎஸ், சாமி, காக்க, காக்க என்று படத்தில் மட்டுமே சில உன்னதமான காவல்துறை அதிகாரிகளை பார்க்க முடிகின்றது. நிஜ வாழ்வில் அது மிக மிக குறைவாகவே இருக்கின்றதே? என்ன காரணம்?

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...