பங்காளிங்க..

Friday, September 14, 2012

தமிழக போலீசாரால் உதயகுமார் சுற்றிவளைப்பு

கூடங்குளப் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கின்றது. பல திருப்பங்கள் வந்து சென்று கொண்டுதான் இருக்கின்றது. ஒரு கட்டத்தில் அமைதிப் பேரணி நடத்தியவர்கள் மீது காவல்துறை வன்முறையோடு கையாண்டு இறுதியில் ஒரு மீனவனின் பலியோடு ஆரம்பமாகி இருக்கின்றது இந்த போராட்டம். கடந்த ஒரு வருடமாக நடந்த போராட்டத்தின் முதல் பலி என்று கூட சொல்லலாம்.

ஒருவர் காலம் காலமாய் வாழ்ந்த இடம் அழியப் போகின்றது என்று பயம் வரும்போது எந்த மனிதனாக இருந்தாலும் போராடத் துணிவார்கள், அந்த நிலைதான் தற்போது இடிந்தகரை மக்களுக்கும்..இவ்வளவு ஏன், கொள்ளையடித்த நிலத்தை அரசு திரும்ப மீட்டதற்க்கே, மீட்பதற்க்கே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும்போது தான் ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்த பகுதி பறிபோகும்போது அவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

அதற்க்கு 13600 கோடி ரூவாய் செலவழித்த பின்னர் இப்போது கைவிட முடியாது என்று சொல்லும் மத்திய அரசே...சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டால் இதை போன்ற ஆயிரம் மின் திட்டங்களை உருவாக்க முடியுமே? அதற்க்கு முதலில் நடவடிக்கை எடுக்கலாமே? ஓட்டு கேட்கும் போது மட்டும் காலில் விழுந்து பிச்சை எடுக்கின்றீர்களே..இன்று அவர்கள் போட்ட பிச்சையில் வாழும் உங்களுக்கு மனசாட்சி என்பதே கிடையாதா? நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கேட்கவில்லை அவர்கள், உபத்திரவம் செய்யாமல் இருங்கள் என்றுதான் மடியேந்தி பிச்சை கேட்கின்றார்கள்.

உங்கள் ஆட்சியில் எத்தனையோ திட்டங்களை பாதியிலே கைவிட்டு இருக்கின்றீர்கள், அப்போதெல்லாம் எவ்வளவோ மக்கள் வரிப்பணம் நாசமாய்த் தான் போயிருக்கின்றது. தமிழ்நாட்டிற்கு கிடைக்கப் போகும் வெறும் 2 .4 சதவிகித மின்சாரத்திற்காக ஒரு ஊரையே காலி செய்யத் துடிப்பதற்கு நீங்கள் யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள் என்று உதயகுமார் தரப்பு கேள்வி கேட்பது நியாயமாக த்தான் இருக்கின்றது.

காங்கிரஸ் சந்தித்து வரும் "தினம் ஒரு  ஊழல்" பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு இந்த கூடங்குளம் ஒரு மிகப் பெரிய ஆயுதம். வேறு வழியே இல்லை எனில் இருக்கவே இருக்கின்றது பெட்ரோல், டீசல் விலை உயர்வு. உடனே எதிர்கட்சிகள் அதனை எதிர்த்து போராடும். இப்படியே காலத்தை ஓட்டும் காங்கிரசிற்கு இனிமேல் இந்தியாவில் இடம் இருக்காது என்றே நம்புவோமாக.
நேற்று கூடங்குளப் பிரச்சினையை பற்றி கலைஞரிடம் கேட்கப் போனால் அவருக்கு "கூடிய குலப்" பிரச்சினையே பெரிய தலைவலியாக இருக்கின்றது. இதில் எங்கிருந்து கூடங்குளத்தைப் பற்றி அவர் விவாதிப்பார்.? குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்றுதான் சொல்லி பார்க்கின்றார். முடியவில்லை.

அதனால் வெறுத்துப் போன உதயகுமார், கைது ஆகின்றேன், சரண் அடைகின்றேன் என்று பேட்டியளிக்க பரபரப்பு அடைந்தது கூடங்குளப் போராட்டக் களம். உதயகுமாருக்கு தானாகவே ஆதரவுகள் பெருகியது. காங்கிரசின் "கை" சற்று ஒடுங்கியே இருக்கின்றது. காரணம் இந்த சமயத்தில் ஞானதேசிகன் "உதயகுமார் கைது செய்யப் பட்டவுடன் அவரை ஆட்டுவித்த அந்த புள்ளி யார் என்று விசாரிக்க வேண்டும்? அவருக்கு பண உதவி செய்தவர் யார் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க சுதாரித்து கொண்ட மக்கள், 
இந்த நிலையில் அவர் சரண் அடைந்தால் அவரை விசாரணை என்ற பெயரில் போட்டுத் தள்ளி விடுவார்கள் என்ற விபரீதத்தை உணர்ந்து அவரை குண்டு கட்டாக தூக்கி சென்று பாதுகாப்பாய் வைத்துக் கொள்ள, தற்போது அவசரப்பட்டு உளறி விட்டோமே என்று கன்னத்தில் "கை" வைத்துக் கொண்டு இருக்கின்றார் அவர். இருந்தாலும் உதயகுமாருக்கு விழிப்புணர்வு கொடுத்து அவரை சரண் அடையும் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றிய ஞானதேசிகனுக்கு நாம் நன்றி கூறியே தீர வேண்டும். அவர் மட்டும் அப்படி எச்சரிக்காமல் இருந்திருந்தால் இன்று உதயகுமார் சரண் அடையக் கூட வாய்ப்புகள் இருக்கின்றது.

 இருந்தாலும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் உதயகுமார் சுற்றிவளைக்கப் பட்டிருக்கின்றார் என்ற செய்திகள் வந்தது. என்னவென்று பார்த்தால் இடிந்தகரை மக்களால் உதயகுமார் பாதுகாப்பாய் சுற்றி வளைக்கப் பட்டிருக்கின்றார் என்ற செய்தி சற்று ஆறுதலை தருகின்றது. 

1 comment:

  1. நிம்மதி. அது சரி எதுக்கு இப்படி ஒரு தலைப்பு !!

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...